Saturday, February 11, 2012

புராணங்களில் சூரியன்

ஞாயிறு என்றால் என்ன?

சூரியனுக்குரிய கிழமை ஞாயிறு. "ஞா' என்றால் "நடுவில் தொங்கிக் கொண்டு'. "யிறு' என்றால் "இறுகப் பற்றிக் கொண்டுள்ள கிரகங்கள்'. "எல்லா கிரகங்களையும் தொங்கியபடியே பற்றிக் கொண்டுள்ள சூரியன்' என்று அர்த்தம்.

புராணங்களில் சூரியன் 
பிரம்மாவின் புத்திரரான நாரதர் சூரியனை வழிபட்டு சித்தி பெற்றதாக ஸ்காந்த புராணம் கூறுகிறது. பவிஷ்ய, சவுர புராணங்கள் சூரியனைப் பரதேவதை என்று வர்ணிக்கின்றன. காட்டில் திரிந்த தர்மர் சூரியனை வழிபட்டு அள்ள அள்ளக் குறையாத அட்சய பாத்திரத்தைப் பெற்றார். இதற்கு நன்றி செலுத்தும் விதத்தில், சூரியனின் 108 திருநாமங்களைச் சொல்லி வணங்கினார். ராமாயணத்தில் ராமரும் அகத்தியரிடம் ஆதித்ய ஹ்ருதயம் உபதேசம் பெற்றார். அதை மூன்றுமுறை ஜெபித்து ராவணனை வெல்லும் ஆற்றல் பெற்றார். துவாரகையைச் சேர்ந்த மன்னன் சூரியனை வழிபட்டு தினமும் தங்கம் வழங்கும் சியாமந்தகமணி என்னும் உயர்ந்த ஆபரணத்தைப் பெற்றான்.
ஆதித்ய ஹ்ருதயம்'

ராமபிரான் ராவணனுடன் போரில் ஈடுபட்டு அவனுடைய பத்துதலைகளையும் வெட்டி வீழ்த்தினார். ஆனால், மீண்டும் மீண்டும் தலைகள் முளைத்தெழுந்தன. அசுர சக்தியான ராவணனின் கொட்டத்தை அடக்க வழியறியாது ராமன் திகைத்து நின்றார். அப்போது அகத்தியர், ""ராமா! ராவணன் ஒரு சிவபக்தன்! அவனைப் போரில் வெல்வது சுலபம் அல்ல. தவத்தால் சிவபெருமானிடம் பலவரங்களைப் பெற்றதால் செருக்குடன் அலைகிறான். உன் குலதெய்வமான சூரியனை வழிபாடு செய். நான் சொல்லும் "ஆதித்ய ஹ்ருதயம்' மந்திரத்தை ஜெபித்துவிட்டு பாணத்தை அவன் மீது தொடு. போரில் வெற்றி கிடைக்கும்,'' என்று அருள்புரிந்தார். ராவணனின் மார்பில் அமுதகலசம் இருந்தது. அந்த அமுதத்தின் பயனால் தான் மீண்டும் மீண்டும் அறுபட்ட தலைகள் முளைத்தன. அதனால், அம்பினை அவன் மார்பினை இலக்காகக் கொண்டு விடும்படி ஆலோசனைசொன்னான் விபீஷணன். ராமனும் சூரியனுக்குரிய ஆதித்ய ஹ்ருதயம் ஜெபித்து ராவணன் மார்பை நோக்கி அம்பு விட்டார். <உடனே ராவணன் உயிர் பிரிந்தது. ஆதித்யஹ்ருதயத்தை தொடர்ந்து ஜெபித்தால் எதிரிபயம் நீங்கும். வழக்கில் வெற்றி உண்டாகும்.


சூரியத்தத்துவம்
சூரியன் ஓரிடத்தில் நிலையாக இருக்கிறான். இது ஆன்மாவுக்கு அழிவில்லை என்பதைக் காட்டுகிறது. காலையில் தோன்றி மாலையில் மறைகிறான். தோன்றி அழிவது உடல் என்பதை இது காட்டுகிறது.


எப்படி வந்தது ஏழு நாள்?
ரிக் வேதத்தில் சூரியன் ஏழு குதிரைகள் பூட்டிய ரதத்தில் பவனி வருவதாக கூறப்பட்டுள்ளது. இந்த ரதத்தின் சக்கரங்களே காலச்சக்கரம். ஏழு குதிரைகள் வாரத்தின் ஏழு நாட்களாகக் கணக்கிடப்படுகிறது.



சூரியனின் வயது 
சூரியன் தோன்றி 476 கோடி ஆண்டுகள் ஆகிறது. 13 லட்சத்து 90 ஆயிரம் கி.மீ., விட்டத்தைக் கொண்டது. கோள்கள் அனைத்தும் சூரியனைச் சுற்றுவது போல் சூரியனும் பால்வீதியில் (நட்சத்திரக் கூட்டத்தில்) வலம் வருகிறது. இதனால் ஒட்டு மொத்த சூரிய குடும்பமும் இந்த பால்வீதியில் உலா வருகின்றன. பிரபஞ்சத்தில் சூரியக் குடும்பத்தைப் போல் உயிர்க்குடும்பம் எங்காவது இருக்கிறதா என்பதை வானியலார் ஆய்வு செய்து வருகின்றனர்.



புகழ்தரும் சூரியன்
உலகம் தோன்றிய போது முதன்முதலாக நாதமாகிய "ஓம்' என்னும் பிரணவ மந்திரம் தோன்றியது. ஓம்காரத்தில் இருந்து சூரியன் தோன்றியது. அதனால், சூரியனைப் "பிரணவசொரூபம்' என்பர். மார்க்கண்டேய புராணம் சூரியனின் பிறப்பை விளக்குகிறது. காஷ்யப முனிவரின் பிள்ளையாக அவதரித்தார் சூரியன். மாரீசி முனிவரின் பேரன் இவர். தேவதச்சனான விஸ்வகர்மாவின் புதல்வி ஸுவர்சலாவைத் திருமணம் செய்தார். வைவஸ்தா மனு, எமதர்மராஜன், யமுனா என்னும் குழந்தைகள் பிறந்தனர். இவர் தன் இரு கைகளிலும் செந்தாமரை மலர் ஏந்தி காட்சியளிப்பார். நவக்கிரகங்களின் நாயகரான இவருடைய ரதம் ஒற்றைச் சக்கரத்தைக் கொண்டது. வானவில்லின் ஏழு வர்ணங்களைப் போல, ஏழு குதிரைகள் பூட்டிய தேரில் வலம் வருகிறார். சூரியனை வழிபட்டால் ஆரோக்கியம், புகழ், நிர்வாகத்திறன் உண்டாகும் என்று ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.



சூரியநமஸ்காரம்
உடலுக்கு ஆரோக்கியம் தருபவராக சூரியன் விளங்குகிறார். இதனை, "ஆரோக்யம் பாஸ்கராதிச்சேத்' என்று ரிக்வேதம் குறிப்பிடுகிறது. நாம் உயிர் வாழ காற்று, நீர், உணவு போல சூரியஒளியும் அவசியம். எனவே, அன்றாடக் கடமையில் ஒன்றாக சூரியநமஸ்காரம் செய்யவேண்டும் என்று முன்னோர் ஏற்படுத்தினர். குளித்ததும் கிழக்கே நின்று கைகூப்பி வணங்குவதை சூரியநமஸ்காரம் என்று எண்ணுகின்றனர். ஆனால், இப்பயிற்சி யோகசாஸ்திரப்படி செய்யவேண்டிய ஒன்றாகும். சூரியோதய வேளையில் மட்டுமல்லாமல், மறையும்போதும் இதனைச் செய்யலாம். இப்பயிற்சியை அதற்குரிய மந்திரம் ஜெபித்து செய்வது இன்னும் சிறப்பு. காலையில் சூரியக்கதிர்கள் உடம்பில் படரும் விதத்தில் குறைந்தபட்சம் ஐந்துநிமிடமாவது நிற்கவேண்டும். இதற்கு சூரியக்குளியல் என்று பெயர். மேலைநாட்டினர் "சன்பாத்' என்று சொல்வதும் ஒருவகை சூரியநமஸ்காரம் தான்.



சூரியனுக்கு பிடித்த ராசி
கார்த்திகை, உத்திரம், உத்திராடம் நட்சத்திரங்களுக்கு சூரியபகவான் அதிபதி. பிடித்த ராசிகள் மேஷம், சிம்மம். இந்த நட்சத்திரம், ராசியினருக்கு சூரியதசை நடக்கும் போது ஏற்படும் கெடு பலன் குறைவாக இருக்கும்.


ஆதித்ய ஹ்ருதயம் சொல்வதன் பலன்!
ஆதித்ய ஹ்ருதய ஸ்லோகத்தை மனத்தை சிதறவிடாமல் சொன்னால் சூரியபகவானின் மனம் திருப்தியாகி, நோயற்ற வாழ்வை அளிப்பார். இதை சொல்பவர்களுடைய புண்ணியம் எல்லையில்லாமல் விருத்தி அடையும். எதிரிகளை நாசம் செய்யும். சகல செயல்களிலும் வெற்றி தரும் அழிவில்லாத பலத்தைத் தருவதுடன் மனித மனங்களை பரிசுத்தம் செய்யும். எல்லா நலன்களும் உண்டாகும். இதற்கு முன் செய்த பாவங்களையும் அழிக்கும். மனக்கவலை நீங்கும். ஆயுள்காலம் விருத்தியாகும்.



கோதுமை தானம்
பொங்கலன்று ஏழைகளுக்கு கோதுமை தானம் செய்வது சிறந்தது. ஏனெனில், சூரிய பகவானுக்கு கோதுமை மிகவும் பிடிக்கும். கோதுமை பண்டங்களை அவருக்கு நைவேத்யம் செய்யலாம்.



No comments:

Post a Comment