மகாபாரதத்தில் வரும் ஒரு சிறுகதை. கிருஷ்ண பரமாத்மா தர்மர் மற்றும் துரியோதனன்
இருவர் வீட்டிற்கும் வர ஒத்துக் கொண்டார். ஆனால் ஒரு நிபந்தனையுடன். அந்த நிபந்தனை
அவர் வரும்போது தங்கள் இல்லம் முழுவதையும் ஏதாவது ஒரு பொருளால் நிறைத்து வைக்க
வேண்டும் என்று. துரியோதனன் வைக்கோலை வாங்கி தன் வீடு முழுவதும் நிறைத்து வைத்தான்.
கிருஷ்ண பரமாத்மா வந்தபோது அவர் இல்லத்துள் நுழைய முடியாமல் அப்படியே வெளியே
இருந்து விட்டு திரும்பி விட்டார். அவர் தர்மர் வீட்டிற்கு சென்றபோது அந்த
இல்லத்தின் மையத்தில் அழகிய குத்துவிளக்கை ஏற்றி வைத்து இருந்தார். அதன் ஒளியானது
இல்லம் முழுவதும் ஒளியூட்டியது. அங்கே வந்த ஸ்ரீகிருஷ்ணர், தர்மரின் அறிவை மெச்சி
அவரை வாழ்த்திச் சென்றார்.
இவ்வாறு தீபம் எல்லா திசைகளிலும் பரவி ஞானம் என்னும் ஒளியை பாய்ச்சி அஞ்ஞானம்
என்னும் இருளை அகற்றுகின்றது. எனவேதான் அருணகிரி நாதரும் இறைவனை தீப மங்கள சோதி நமோ
நமோ! என்று பாடுகின்றார். வள்ளலார் சுவாமிகளும் அருட்பெருஞ் ஜோதி! அருட்பெருஞ்
ஜோதி! தனிப்பெருங்கருணை! தனிப்பெருங்கருணை! என்று பாடுகிறார்.
தீபச்சுடரில் லட்சுமி தேவியும், ஒளியில் சரஸ்வதி தேவியும், சுடரில்
வெளிப்படும் வெப்பத்தில் பார்வதி தேவியும் எழுந்தருளுவதாக ஐதீகம். எனவே தீப தரிசனம்
செய்வதன் மூலம் மூன்று தேவியர்களின் அருளையும் பெற்று கல்வி, செல்வம், வீரத்தில்
சிறப்பிடம் பெறலாம் என்பது நம்பிக்கை. தீப வழிபாடு நெறியை சங்க நூல்களும்,
தேவாரமும் சிறப்பாக கூறுகின்றன.
தீபங்களை வரிசையாக வைத்து வழிபாடு செய்யும் மரபு சங்க காலத்திலேயே
இருந்திருக்கின்றது. மழைக்கூறு நீங்கிய தெளிவான வான மண்டலத்தில் ஆறு நட்சத்திரங்கள்
அருகில் தோன்றும் முழு நிலா நாளில் வீதிதோறும் விளக்கேற்றியும், மலை உச்சியில்
விளக்கு வைத்தும் கார்த்திகை விழா கொண்டாடியதை அகநானூறு கூறுகின்றது.
இவ்விளக்கின் ஒளிவெள்ளம் எப்படி இருந்ததென்றால், இலவ மரத்தின் மொட்டுகள் இதழ்
விரித்த மலர்ச்சியைப் போல் இருந்ததாக அகநானூறு கூறுகின்றது. எனவே கார்த்திகை
மாதத்தில் அக்னியை மானசீகமாக பூசித்து, வீடுகளில் விடியற்காலையிலும், மாலையிலும்
தீபம் ஏற்றி வந்தால் நன்மை பயக்கும் என்று மஹரிஷிகள் கூறியுள்ளனர்.
குறிப்பாக, பரணி தீபம் அன்றும், கார்த்திகை தீப தினம் அன்றும் நம் வீடுகளில்
மாலையில் தீபங்களை ஏற்றி வைத்து இறைவனை வழிபட வேண்டும். இம்மாதத்தில்
திருக்கோவில்களில் சென்று தங்கள் கையினால் தீபம் ஏற்றி வைப்பது அவசியம்.
குழந்தைகளையும் ஏற்றச் சொல்லவும். ஏனென்றால் திருக்கோவில்களில் தீபம் ஏற்றி வைப்பது
அனைத்து தோஷங்களுக்கும் உடனடியாக நிவாரணம் அளிக்கும் சக்தி கொண்ட ஒரு எளிய
பரிகாரமாகும்.
கொடிய பாவங்களினாலும், கடினமான மருத்துவ, அறுவை சிகிச்சைகளினாலும் ஒருவர்
துன்புறும்போது, உடனடியாக அவருக்காக திருக்கோவில் ஒன்றில் தீபம் ஏற்றி வைப்பது,
அவரது உடல் உபாதைகளை உடனடியாக குறைக்கும். மேலும் வசதியில்லாத திருக்கோவில்களுக்கு
கார்த்திகை மாதத்தில் அவரவர் சக்திக்கேற்ப, நெய் அல்லது எண்ணெய் மற்றும் திரி
வாங்கி கொடுத்தால் குடும்பத்தில் துன்பங்கள் நீங்கி இன்ப ஒளிவீசும்.
No comments:
Post a Comment