Sunday, March 4, 2012

சரஸ்வதியின் சிறப்பும் வழிபாடும்!


சரஸ்வதியின் வாகனங்கள்: சரஸ்வதிக்கு ஞான சரஸ்வதி, ஆகமச் செல்வி, ஆகமசுந்தரி, ஞானச்செல்வி என்று பல பெயர்கள் உண்டு. சரஸ்வதியை வேதங்கள் அன்னத்தின் மீது அமர்ந்திருப்பவளாகப் போற்றுகின்றன. அன்ன வாகனத்துடன் உள்ள சரஸ்வதியை அம்சவல்லி என்பர். அன்னம், அப்பழுக்கற்ற வெண்மை நிறமுடையது. அதுபோல், ஒருவர் கற்கின்ற கல்வியும் மாசு மருவற்றதாக இருக்க வேண்டும் என்பதையும், படித்தவர்கள் வெள்ளை மனதினராக இருக்க வேண்டும் என்பதையும் குறிக்கிறது. அவளது வெள்ளைப்புடவை, அவள் அமர்ந்துள்ள வெள்ளைத் தாமரை ஆகியவையும் இதையே உணர்த்துகின்றன. தென்னகத்தில் கலைமகளை மயில் வாகனம் கொண்டவளாகப் போற்றுகின்றனர். ரவிவர்மாவின் ஓவியங்களில் சரஸ்வதிக்கு மயிலே வாகனமாக குறிக்கப் பட்டுள்ளது. மயில் தோகை விரிப்பதும், மடக்கிக் கொள்வதும் ஒருவன் கற்ற கல்வி பரந்து விரிந்ததாக இருக்க வேண்டும் என்பதையும், அவனுக்கு அடக்கம் வேண்டும் என்பதையும் குறிப்பிடுகிறது.
சரஸ்வதிக்கு கொண்டைக்கடலை: தெட்சிணாமூர்த்திக்கு கொண்டைக்கடலை மாலையும், சரஸ்வதிக்கு கொண்டைக்கடலை நைவேத்யமும் முக்கியம். இதற்கு காரணம் என்ன தெரியுமா? சரஸ்வதி,தெட்சிணாமூர்த்தி இருவருமே ஞானத்தை அருள்பவர்கள். இருவருமே ஜபமாலை, ஏட்டுச்சுவடிகளை ஏந்தியுள்ளனர். மனத்தூய்மை, சாந்தம், மெய்ஞானம் ஆகிய உயர்குணங்களை உணர்த்தும் வகையில் ஸ்படிக மாலை, ஜடாமகுடம், சந்திரக்கலை ஆகியவற்றை இருவரும் பெற்றிருப்பதைக் காணலாம். கொண்டைக் கடலை உ<யிர் காக்கும் சத்துக்களைக் கொண்டது. ஒருவரது ஜாதகத்தில் குரு பலம் இல்லையென்றால், அவரது <<உயிருக்கு பாதகம் வரலாம். எனவே, குரு பார்வை வேண்டி நவக்கிரகங்களில் குருவுக்கும், குருவின் அம்சமான தெட்சிணாமூர்த்திக்கும் கொண்டைக்கடலை மாலை படைத்து தீர்க்காயுள் கிடைக்க வேண்டுகின்றனர். மனித வாழ்வின் உயிர்நாடி கல்வி. அந்த <கல்வியில் சிறந்து விளங்க, சரஸ்வதிக்கு கொண்டைக்கடலை (சுண்டல்) நைவேத்யம் செய்கிறோம்.
சொல் கிழவியைத் தெரியுமா?
ஒட்டக்கூத்தர் கலைமகளின் பக்தராக விளங்கினார். நாமகளின் அருளால் பாடும் திறம் பெற எண்ணினார். இதற்காக ஹரிநாதேஸ்வரம் என்னும் கூத்தனூரில் ஓடும் அரசலாற்றில் நீராடி கலைவாணியின் திருவடிகளை சிந்தித்து தியானத்தில் ஆழ்ந்தார். கலைவாணி அவர் முன் தோன்றி, தன் வாயிலிருந்த தாம்பூலத்தை (வெற்றிலை) கூத்தருக்கு கொடுத்தாள். அப்போதிருந்து பேரறிவும், ஞானமும் பெற்றார் ஒட்டக்கூத்தர். கூத்தருக்கு கலைமகள் காட்சி கொடுத்து அருளிய திருத்தலம் என்பதால் கூத்தனூர் என்ற பெயர் ஏற்பட்டது. தாம் பாடிய தக்கயாகப்பரணியில் இத்தேவியை ஆற்றங்கரை சொற்கிழத்தி வாழியே என்று பாடியிருப்பது இவரின் பக்தியை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது. கிழத்தி என்பதற்கு கிழவி என்றும், தலைவி என்றும் பொருளுண்டு. சொல்லுக்கு (வாக்கு) தலைவி என்பதால் இவளை ஒட்டக்கூத்தர் இப்பெயரிட்டு அழைத்தார். இவளுக்கு வாக்தேவி என்றும் பெயருண்டு.
கல்விக்கோயில்: சிவபெருமானை அலட்சியப்படுத்தும் விதமாக தட்சன் ஒரு யாகம் நடத்தினான். சிவன், தன் அம்சமான வீரபத்திரரை அனுப்பினார். அவர், யாகத்தை அழித்ததுடன், யாகத்தை முன்னின்று நடத்திய பிரம்மதேவனையும் தண்டித்தார். மேலும், அவரது மனைவியான கலைமகளின் மூக்கினையும் அரிந்தார். பயந்து நின்ற அவள் தன் கணவன் பிரம்மனுடன் சீர்காழிக்குச் சென்று சிவனை வழிபட்டாள். இந்த நிகழ்ச்சியை திருஞானசம்பந்தர், நாவினாள் மூக்கரித்த நம்பர் என்று குறிப்பிடுகிறார். மேலும், நாவியலும் மங்கையொடு நான்முகன் தான் வழிபட்ட நலங்கோயில் என்றும் பாடியுள்ளார். சீர்காழி ஒரு கல்வித்தலம் ஆகும். மாணவர்கள் ஒருமுறையேனும் சீர்காழி சென்று, அங்கு அருள்புரியும் தோணியப்பரையும், அம்பாளையும், திருஞானசம்பந்தரையும் வணங்கி வந்தால் கல்வியில் சிறப்பிடம் பெறலாம். இவ்வூரில் அவதரித்த சம்பந்தருக்கு, இத்தலத்தில் தான் அம்பிகை தாயாக இருந்து பால் புகட்டினாள்.

No comments:

Post a Comment