Thursday, April 19, 2012

பொய் சொல்ல வேண்டாம்


கிருஷ்ணர் துர்வாச முனிவரிடம் வந்து, பாண்டவர்களை அவருடைய பாதுகாப்பில் வைத்துக் கொள்ளும்படி கேட்டுக் கொண்டார். அதற்கு சம்மதித்த முனிவர், "அவர்களுக்கு அடைக்கலம் கொடுப்பதில் எனக்கு ஆட்சேபனை இல்லை. ஆனால், யாராவது வந்து கேட்டால் என்னால் பொய் சொல்ல முடியாது." என்றார்.

"நீங்கள் பொய் சொல்ல வேண்டாம். ஆனால் யாராவது வந்து கேட்டால், சற்று உரத்த குரலில், கோபம் தெரியும்படி பதில் சொல்லுங்கள். போதும்" என்று கிருஷ்ணர் கேட்டுக் கொண்டார்.
துரியோதனனின் ஆட்கள் பாண்டவர்களைத் தேடி வருவதை அறிந்த துர்வாசர், பாண்டவர்களை ஒரு பெரிய பள்ளத்தில் இறங்கியிருக்கச் சொல்லி அந்தப் பள்ளத்தின் மேல் ஒரு மரப்பலகையைப் போட்டு அமர்ந்து கொண்டார்.
அவர் எதிர்பார்த்ததைப் போலவே பாண்டவர்களைத் தேடி வந்தவர்கள் துர்வாசரிடம் விபரம் கேட்டார்கள்.
துர்வாசரும் கிருஷ்ணரின் யோசனைப்படி சற்றே உரத்த குரலில், "பாண்டவர்களா? இங்கே இருக்கிறார்கள்!" என்று தான் அமர்ந்திருந்த இடத்திற்குக் கீழே கையைக் காட்டினார்.
அதைக் கேட்டவர்கள் பயந்து போனார்கள்.
முனிவர் ஏதோ கோபமாக இருக்கிறார். இல்லாவிட்டால் எதற்காகக் கோபமாகவும், ஏதோ நம்மைக் கேலி செய்வது போலவும் கீழேக் கையைக் காட்ட வேண்டும்? என்று எண்ணியபடி அவரைத் தொந்தரவு செய்ததற்காக மன்னிப்புக் கேட்டுக் கொண்டு அங்கிருந்து சென்று விட்டனர். 

No comments:

Post a Comment