தெய்வ வழிபாட்டில் நிலையான நம்பிக்கையான பக்தி இருக்க வேண்டும். வீண்
விளம்பரத்துக்கான போலி பக்தி கூடாது. நம் குலதெய்வத்தை ஒருபோதும் மறக்கக்கூடாது.
மாதந்தோறும் குலதெய்வத்திற்கு நம்மால் இயன்ற அளவு வழிபாட்டிற்கு பணம் அனுப்ப
வேண்டும். மாதா, பிதா, குரு, தெய்வம் என்பதனை நிலையாகக் கொள்ள வேண்டும். தாயிடம்
காட்டுகின்ற பக்தி இம்மைக்கும், தந்தையிடம் காட்டுகின்ற பக்தி மறுமைக்கும்
புண்ணியத்தைச் சேர்க்கும்.
குருவிடம் காட்டுகின்ற பக்தி பிரம்ம பதவியைத் தரும். இறைவனிடம் பக்தி
இருப்பதுடன், இறைவனிடம் பயமும் இருத்தல் வேண்டும். இறைவனின் அடியார்களை, சித்தர்களை
சத்புருஷர்களைச் சித்தத்திலே கொண்டு வழிபடுவோர்க்கு இறைவனின் கிருபா கடாட்சம்
வெகுவிரைவில் கிடைக்கும்.
வேதத்தினால் ரிஷிகளையும் ஹோமத்தினால் தேவர்களையும், சிரார்த்த
காரியங்களினால் பித்ருக்களையும், அன்னத்தினால் அதிதிகளையும், மலரினால்
பஞ்சபூதங்களையும், தியானத்தினால் தெய்வத்தையும் ஆராதிப்போர்க்கு அஷ்ட
ஐசுவரியங்களும் பொங்கிப் பெருகும். நாம் தினமும் நீராடி நெற்றியில்
திருநீறு - தரித்துத் கோயில்களுக்குச் செல்ல வேண்டும்.
மார்கழி மாதம் மட்டும் காலையில் எழுவது என்ற நிலை இல்லாமல் எல்லா மதங்களிலும்,
அதிகாலையில் எழுந்து குளித்துத் தெய்வ தரிசனம் செய்யும் பழக்கத்தைக் கடைப்பிடிக்க
வேண்டும். ஆலயங்களுக்குச் செல்லும் நாம், சில முக்கியமான தூய நெறிகளைக்
கடைப்பிடிக்க வேண்டும். கோயிலுக்குச் செல்லும் போது நமக்கு அகத்தூய்மையும்,
புறத்தூய்மையும் வேண்டும். நித்ய கர்மானுஷ்டானங்களை முடித்து, அவரவர்கள்
குலவழக்கப்படி நெற்றிக்கு இட்டுக் கொள்ளுதல் அவசியமாகும்.
வெறும் நெற்றியுடன் கோயிலுக்குச் செல்லுதல் ஆகாது. கோயில் அருகே வந்ததும்
உச்சிமீது கைகளை உயர்த்தி, கூப்பி உயர்ந்து காணப்படும் கோபுரத்தைத் தரிசிக்க
வேண்டும். கோபுர தரிசனம் கோடி புண்ணியம் என்பார்கள். கோயிலுக்கு உள்ளே சென்றதும்
முதலில் துவஜ ஸ்தம்பத்தின் முன்னால் நின்று, பகவானைப் பிரார்த்தித்து சாஷ்டாங்கமாக
நமஸ்காரம் செய்ய வேண்டும்.
நமஸ்காரம் செய்யும் பொழுது வடக்கு நோக்கி நமஸ்காரம் செய்ய வேண்டும்.
உள்பிராகாரங்களில் வீழ்ந்து வணங்குதல் கூடாது. ஆண்கள் நமஸ்காரம் செய்யும்பொழுது
அஷ்டங்கமும், பெண்கள் நமஸ்காரம் செய்யும்பொழுது பஞ்சங்கமும் தரையில் படும்படியாக
நமஸ்கரிக்க வேண்டும். கோயிலில் தரும் குங்குமம், விபூதி, துளசி போன்ற பிரசாதத்தை,
கீழே சிந்துவதும் வேறெங்காவது கொட்டுவதும், சண்டீசுவரர் மீது நூல் இடுவதும்
அபசாரமாகும்.
சிவலிங்கத்திற்கு நந்தி தேவருக்கும் நடுவே செல்லுதல் கூடாது. நிவேதனங்களை
சாப்பிட்டு விட்டுத் தூண்களில் துடைக்கக்கூடாது. மறக்காமல் துவார பாலகர்களை வணங்க
வேண்டும். கோயிலுக்குச் செல்லும் போது தர்மம் செய்வது தான் முறை. தரிசனம்
முடித்துத் திரும்பி வரும்போது தர்மம் செய்வதால் கோயிலில் நாம் சம்பாதித்த
புண்ணியங்களை அவர்களுக்குத் தாரை வார்த்துக் கொடுப்பது போலாகிவிடும் என்றொரு
கருத்து நிலவுகிறது.
ஆனால் சிலர் தானம் செய்யலாம் என்கிறார்கள். கோயிலில் படுத்து உறங்குபவர்கள்
மறுபிறப்பில் மலைப்பாம்பாகப் பிறப்பார்கள் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன.
கர்ப்பகிரகத்தில் இறைவனை இரு கண்களாலும் பார்த்து மகிழ வேண்டும். அவனது திருவடி
முதல் அலங்கார வைபங்களைப் பார்த்துப் பார்த்து அவனுடன் ஐக்கியமாக வேண்டும்.
அவ்வாறு இல்லாமல் இறைவன் முன்னாள் கண்ணை மூடிக் கொண்டு ஜபிப்பதோ, தியானம்
செய்வதோ முறையாகாது. கோயில் வழிபாடு முடிந்த பின்னர் சண்டிகேசுவரரிடம் விடைபெற்றுப்
புறப்பட வேண்டும். கொடி மரத்தின் அருகே சென்று வடக்கு முகமாக அமர்ந்து தியானம்
செய்ய வேண்டும். பின்னர் வடக்கு நோக்கி நமஸ்காரம் செய்ய வேண்டும். கோயிலுக்குச்
சென்று வீடு திரும்பும் வரை இறைவனின் திருநாமத்தை சொல்லிக் கொண்டே வர வேண்டும்.
No comments:
Post a Comment