பாரத யுத்தத்தின் கதைச்சுருக்கம்:
ஹஸ்தினாபுரத்தில் விசித்திரவீரியன் என்ற மஹாராஜாவிற்கும் அம்பிகா என்ற அவர் மனைவிக்கும் பிறந்தவர் த்ருதராஷ்டடிரன். த்ருதராஷ்டிரருக்கும் அவர் மனைவி காந்தாரிக்கும் பிறந்த 100 புத்திரர்கள் கௌரவர்கள் என்று அழைக்கப் பெற்றார்காள். அதே விசித்திரவீரிய மஹாராஜாவிற்கும் அம்பாலிகா என்ற இன்னொரு மனைவிக்கும் பிறந்தவர் பாண்டு. பாண்டுவுக்கும் அவர் மனைவி குந்தீ தேவிக்கும் பிறந்த 5 பிள்ளைகள் பாண்டவர்கள் என அழைக்கப் பெறறார்கள். த்ருதராஷ்டிரர் மூத்தவரானாலும் பிறாவிக் குருடனானதால் அவருக்கு பதில் பாண்டு அரசரானார், பாண்டுவின் மூத்த மகன் தருமபுத்திரன் யுவராஜாவானார். இதனால் த்ருதராஷ்டிரனின் மூத்த மகன் துர்யோதனன் பாண்டவர்கள் மேல் பொறாமை கொண்டு அவர்களுக்குப் பல இன்னல்களை விளைவித்தான். இடையில் பாண்டு இறந்து தருமபுத்திரர் பால்ய பருவத்திலிருந்ததால் ராஜ்யப் பொறுப்பை ஏற்ற த்ருதராஷ்டிரன் தருமபுத்திரர் இந்த்ரப்ரஸ்தம் எனும் ராஜ்யத்தை ஆளுமாறும் துரியோதனன் ஹஸ்தினாபுரத்தை ஆளுமாறும் அமைத்தார். ஒரு சமயம் கௌரவர்களுக்கும் பாண்டவர்களுக்கும் இடையே. சூதாட்டப் போட்டி நடைபெற்றது. அதில் துர்யோதனன், தன் மாமா சகுனியின் சொற்படிக்கு சூதாட்டத்தில் சூழ்ச்சியால் தருமபுத்திரரைத் தோற்கடித்து அவர்பால் உள்ள ராஜ்யத்தையும், சதுரங்கப் படைகளையும், எல்லா சொத்துக்களையும், தம்பிகளாகிய பீமன், அர்ஜுனன், நகுலன், சகாதேவன் என்பவர்களையும், தன்னையும் இழக்கச் செய்தார். கடைசியில் தருமபுத்திரர் தங்களது மனைவி பாஞ்சாலியைப் பணயமாக வைத்து அதிலும் தோற்கடிக்கப் பெற்றார். பாஞ்சாலியை ராஜ சபைக்கு தலைமுடியைப் பிடித்து இழுத்துவந்து மானபங்கப்படுத்த முயற்சித்தார்கள் கௌரவார்கள். அப்போது பஞ்சாலி ஸ்ரீ கிருஷ்ண பகவானை வேண்டி சரணாகதி அடைந்தபோது, ஸ்ரீ கிருஷ்ணன் வஸ்திரத்தைக் கொடுத்து பாஞ்சாலியின் மானத்தைக் காப்பாற்றினார். பிறகு தங்களது ராஜ்யங்கள் கௌரவர்களிடம் சிக்கியதால் ராஜ்யமில்லமால் பாண்டவர்கள் மீண்டும் ஆடிய சூதாட்ட நியதிப்படி 12 வருடம் வனவாசமும் 1 வருடம் அஞ்ஞாத வாசமும் செய்தார்கள். ஆனால் அந்த 13 வருடங்களில் அவார்களை வாழ விடாமல் கௌரவர்கள் இடையூறுகள் பல செய்தார்கள். ஆனாலும் பாண்டவர்கள் நியதிப்படி 13 வருடங்களை முடித்து வந்து ராஜ்யத்தைத் திரும்பக் கேட்டபொழுது தர மறுத்து விட்டார்கள் கௌரவர்கள். முடிவில், பாண்டவர்களின் மித்திரராகிய ஸ்ரீ கிருஷ்ண பகவான், கௌரவர்களிடம் பாண்டாவர்களுக்காகத் தூது சென்று பாண்டவர்களுக்கு ஒரு ராஜ்யமோ, ஒரு தேசமோ, ஐந்து கிராமமோ தருமாறு வேண்டினார். பயனில்லை. துர்புத்தி படைத்த துர்யோதனன், மாமா சகுனியின் போதனையால் ஒரு ஊசி குத்துவதற்குக் கூட இடம் தர மறுத்துவிட்டார். இதனால் சினமூண்டு பாண்டவர்கள் போருக்கு வந்தார்கள். அந்தப் போர் 18 நாட்கள் நீடித்தது.
கீதோபதேசம்:
பாண்டவர்களின் மூன்றாமவனான அர்ஜுனன் மிகப் பெரிய வில்லாளி. அர்ஜுனனுக்குத் தேரோட்டியாக வந்தார் ஸ்ரீ கிருஷ்ண பகவான். யுத்த களத்தின் மத்தியில் அர்ஜுனன் எதிரியின் ஸேனையைப் பார்த்து அதில் தன்னுடைய சுற்றத்தார்கள் இருப்பதையும் யுத்தத்தில் எல்லோரும் மரணமடையத் தான் காரணமாகப் போவதையும் சுட்டிக்காட்டி, தன்னால் இந்த பாபத்தை செய்ய முடியாது. அப்படி எல்லோரையும் வதைத்துக் கிட்டும் இராஜ்யம் தமக்கு வேண்டாம் எனப் புலம்பினான். அப்பொழுது ஸ்ரீ கிருஷ்ணன் அர்ஜுனனின் விஷாதத்தைக் கண்டு அவன் அஞ்ஞானத்தைப் போக்க அவனுக்கு போர்க் களத்திலேயே, இரண்டு ஸேனைகளுக்கு மத்தியில் தந்த வாழ்வின் இரகசியம், வாழ்க்கை என்பது என்ன, அதில் மனிதனின் தருமம் என்ன, நம் ஜன்ம இரகசியம் என்ன, வாழ்க்கை எப்படி தருமப் பிரகாரம் வாழ வேண்டும், மனிதனின் கடமை என்ன முதலிய கருத்துக்களை எடுத்துரைத்து அர்ஜுனனுக்கு திவ்ய திருஷ்டியைத் தந்து தன் விஸ்வரூப தரிசனத்தைக் காண்பித்து, வாழ்க்கையின் தத்துவத்தை விளக்க, அர்ஜுனன் மாயை நீங்கிப் போர்க்களத்தில் யுத்தம் செய்து பாண்டவர்கள் விஜயிக்குமாறு செய்தான். அந்த உபதேசம்தான் இங்கு கீதோபதேசமாகத் தரப்பட்டுள்ளது. இது, அர்ஜுனனுக்கு மட்டுமல்லாமல், நம் எல்லோருக்கும், கால, தேச, சமய, ஜாதி, மத வித்தியாசம் இல்லாமல் வாழ்க்கை எப்படி தருமத்துடன் வாழ வேண்டும் என்ற தத்துவம், ஸனாதன தருமத்தின் ஸாரம், வேத வேதாந்தக் கருத்துகளடங்கிய உபதேசமாகக் கருத வேண்டும். இதை ஐந்தாவது வேதமாகப் பெரியோர்கள் கருதுகிறார்கள். அத்துணைத் தத்துவங்கள் இதில் உள்ளடங்கியுள்ளன. இது மஹரிஷி வேதவியாஸரால் இயற்றப்பட்டு மஹாபாரத கிரந்தத்தின் மத்தியில் தரப்பட்டுள்ள ஒரு மஹா காவ்யம். இதைப் படித்து இதன்படி வாழ்ந்தால் நமக்கு முக்தி நிச்சயம்.
கலிகாலத்தில் கீதோபதேசத்தின் மதிப்பு என்ன?
பாரத யுத்த்ததிற்குக் காரணமாக நிகழ்ந்த விஷயங்கள் இன்றும் நம்மிடையே தோன்றுகின்றன. எத்தனை அனாசாரங்கள், எவ்வளவு கொலை கொள்ளைகள், எப்பேர்ப்பட்ட துராசாரங்கள்? அந்தக் காலத்தில் நடந்த எல்லா விதமான் துர் நடவடிக்கைகளும் இப்பொழுதும் நடைபெறுகின்றன. குடும்ப சச்சரவு, ராஜ்யத்தில் கலகம், சமூஹத்தில் அனாசாரம், நீதியின்மை, பலாத்காரம், உயிர்ப் பொருள் சேதங்கள் என்னென்ன? எல்லோரும் தங்கள் சுகத்தை நாடியே வாழ்கிறோம். மற்றவருக்கு இழைக்கப்படும் தீங்கைப் புறக்கணிக்கிறோம். இதைவிட துஷ்கர்மாக்கள் வேறு என்ன வேண்டும்? அதர்மம் தலைவிரித்தாடுகிறது.. இந்த சமயத்தில் இந்த கீதோபதேசம் மிக ஆதரவாக அமைந்துள்ளது. இதில் சொன்ன ஒவ்வொரு நீதியும் இந்தக் கலியுகத்திலும் கடைபிடிக்கக் கூடியதாக உள்ளது. இந்தக் காலத்திற்கும் அவை மிகப் பொருத்தமாகத் திகழ்கின்றன. அர்ஜுனனை வியாஜமாக வைத்து நமக்கு இந்தக் காலத்தில் நடக்க வேண்டிய தரும வ்ருத்திகளைப் பறைசாற்றுகின்றன. ஆகையால் தான் கீதாஸாரம் எல்லாக் காலத்திலும் எல்லா இடத்திலும் எல்லோராலும் எப்பொழுதும் பின்பற்றக் கூடிய, பின்பற்ற வேண்டிய ஒரு பெரும் உபதேசமாகக் கருதப்படுகிறது. விவேகத்தால் காம, க்ரோத, லோப, மோஹ, மத, மாத்ஸ்ர்யாதி துஷ்ட குணங்களை வென்று, மனதை ஓர் நிலையில் வைத்து, தருமம், ப்ரேமை, கருணை, ஸமபாவம், பரோபகாரம், வைராக்யம், த்ருட நிச்சயம் என்ற நல்வழியில் வாழ்ந்து, அஹம் என்ற பாவத்தை விட்டு, பகவானிடம் பூரண சரணாகதி அடைந்து, பக்தியெனும் ஓடத்தில் ஞானமெனும் துழவுகோலின் உதவியால், ஸம்ஸாரம் எனும் மஹா சமுத்திரத்தைக் கடந்து ப்ரம்ம நிலையை அடைய உதவி புரியும் மஹா காவியம் இந்த பகவத்கீதை.
No comments:
Post a Comment