Tuesday, April 10, 2012

திருவாதிரை


மிழ்மொழியில் திருவாதிரை என்று கூறப்படும் நட்சத்திரத்திற்கு வடமொழியில் ஆர்த்ரா என்று பெயர். இதுவே ஆருத்ரா எனப் படுகிறது.

மார்கழி மாத திருவாதிரை நட்சத்திர நாளில் சிவாலயங்களில் ஆருத்ரா தரிசனம் சிறப்பாக நடைபெறும்.

ராமனுக்கு ஜென்ம நட்சத்திரம் புனர்பூசம்; பரதனுக்கு பூசம்; லட்சுமணனுக்கு ஆயில்யம்; சத்ருக்னனுக்கு மகம்; கிருஷ்ண னுக்கு ரோகிணி; முருகனுக்கு விசாகம். இவையாவும் இவர்கள் பிறந்த நட்சத்திரங்கள்.


பிறப்பே எடுக்காத சிவபெருமானுக்கு
பிறந்த நட்சத்திரம் திருவாதிரை என்கிறார் கள். "பிறவா யாக்கைப் பெரியோன்' என்று சங்க இலக்கியமான சிலப்பதிகாரம் சிவ பெருமானைக் குறிக்கிறது. சிவபெருமானின் நட்சத்திரம் திருவாதிரை ஆனதுபற்றி மூன்று புராணச் செய்திகள் உள்ளன.

சேந்தனார் ஒரு விறகு வெட்டி. அவர் சிதம்பரம் அருகேயுள்ள ஒரு சிறிய ஊரில் வாழ்ந்து வந்தார். தீவிர சிவபக்தரான இவர் தினமும் ஒரு சிவனடியாருக்கு உணவளித்த பின்தான் உண்பார்.

ஒருநாள் அதிக மழை பெய்து விறகுகள் ஈரமானதால், அவரால் விறகு விற்க முடியவில்லை. அதனால் அரிசி வாங்க காசு இல்லாததால் வீட்டிலிருந்த கேழ்வரகில் களி செய்து சிவனடியார் வரவை எதிர்பார்த்திருந்தார். ஆனால் யாரும் வராத நிலையில் மனம் நொந்து போனார். அவரது பக்தியை உலகிற்கு உணர்த்த விரும்பிய நடராஜப் பெரு மான், ஒரு சிவனடியார் வேடத்தில் சேந்தனார் வீட்டுக்கு வந்தார்.

அவரைப் பார்த்து அகமகிழ்ந்த சேந்தனார் கேழ்வரகுக் களியை அவ ருக்கு அளித்தார். அந்த சிவனடியார் களியை விரும்பி உண்டதுடன், எஞ்சி யிருந்த களியையும் தனது அடுத்த வேளை உணவுக்குத் தருமாறு கேட்டு வாங்கிக் கொண்டு சென்றுவிட்டார்.

மறுநாள் காலையில் வழக்கம்போல் தில்லைவாழ் அந்தணர்கள் சிதம்பரம் கோவில் கருவறையைத் திறந்தனர். என்ன ஒரு அதிசயக் காட்சி! நடராஜப் பெருமானைச் சுற்றி களிச் சிதறல்கள்! உடனே இந்த விவரம் மன்னருக்குத் தெரிவிக்கப்பட்டது. நடராஜப் பெருமான் தான் களியுண்ணச் சென்றதை கனவில் தோன்றி ஏற்கெனவே மன்னருக்குத் தெரிவித்திருந்தார்.

சேந்தனார் எங்கிருக்கிறார் என்று கண்டு பிடிக்கும்படி அமைச்சருக்கு ஆணையிட்டார் மன்னர். அன்று நடராஜப் பெருமானின் தேர்த் திருவிழா. அதற்கு சேந்தனாரும் சென்றிருந்தார்.

பெருமானைத் தேரில் அமர்த்தியபின் மன்னர் உள்பட எல்லாரும் தேரை வடம் பிடித்து இழுத்தனர். மழை காரணமாக தேர்ச் சக்கரங்கள் சேற்றில் அழுந்தியிருந்ததால் தேர் சிறிதும் நகரவில்லை. இதைக் கண்டு மன்னர் மனம் வருந்தியிருக்கும்போது, "சேந்தா! நீ பல்லாண்டு பாடு' என்று ஒரு அசரீரி கேட்டது.

அங்கிருந்த சேந்தனார் இறைவனை வேண்டி அவர் அருளால், "மன்னுக தில்லை வளர்க நம் பக்தர்கள் வஞ்சகர் போயகல' என்று தொடங்கி, "பல்லாண்டு கூறுதுமே' என்று முடித்து இறைவனை வாழ்த்தி 13 பாடல்களைப் பாடினார். உடனே தேர் நகர்ந்தது.

சேந்தனாரை அடையாளம் கண்ட மன்னர், தாம் கண்ட கனவை அவரிடம் கூறினார்.

சேந்தனார் வீட்டுக்கு களியுண்ண நடராஜப் பெருமான் வந்த அந்த தினம் ஒரு மார்கழி மாத திருவாதிரை நாள். இதை உணர்த்தும் வகையில் இன்றும் ஆதிரை நாளில் தில்லை நடராஜப் பெருமானுக்கு களி படைக்கப்படுகிறது. இதனால் சிவபெருமானின் நட்சத்திரம் திருவாதிரை ஆனது.


திருமணமான பெண்கள் தங்கள் தாலிபாக்கியம் நிலைக்கக் காண வேண்டிய விழா ஒன்று உண்டு. அதுதான் ஆருத்ரா தரிசனம்.

இதற்காக ஏற்கெனவே திருமணமானவர்கள், புதுமணத் தம்பதிகள் கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள புண்ணிய ஸ்தலமான சுசீந்திரம் வரவேண்டும். இங்குள்ள அறம் வளர்த்த நாச்சியார் கோவில் பிரசித்தமானது.

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள், ஸ்ரீரங்கம் அரங்கனையே மணப்பேன் என்று உறுதி கொண்டாள்; மணந்தாள். இதேபோல சிவபெருமானையே மணப்பேன் என்று அடம்பிடித்து அவரையே மணந்து கொண்டாள் அறம்வளர்த்த நாச்சியார்.

சுசீந்திரத்தில் இருந்து இரண்டு கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது தேரூர் என்னும் சிறிய கிராமம். 550 ஆண்டுகளுக்கு முன் இவ்வூரில் பள்ளியறை நாச்சியார் என்ற பெண்மணி வாழ்ந்து வந்தாள். இவளது மகள்தான் அறம் வளர்த்த நாச்சியார். இவள் சிறுமியாக இருந்தபோதே சிவனை வழிபடுவதில் அதிக பற்றுடைய வளாக இருந்தாள்.

தினமும் சுசீந்திரம் வந்து சிவனை வழிபட்டு வந்தாள். இவள் பருவ மங்கை ஆனதும் அக்கால வழக்கப்படி வீட்டை விட்டு வெளியே வரமுடியவில்லை. இவளுக்கோ சுசீந்திரம் சென்று சிவனை தரிசிக்க ஆசை. ஆனால் வீட்டாரின்

அனுமதி கிடைக்கவில்லை. இதனால் சிவனையே நினைத்து நினைத்து, அவர் மீது கொண்ட பக்தி காதலாக மாறியது.

ஒருநாள் குறத்தி ஒருத்தி அவள் கையைப் பார்த்து, "நீ சிவனையே மணப்பாய்' என்று கூற, சிவன் மீதிருந்த காதல் மேலும் அதிகரித்தது.

சிவனை எண்ணி எண்ணியே சாப்பிடாமல், தூங்காமல் பித்து பிடித்தவள் போல் தன் அறையிலேயே சுற்றிச் சுற்றி வந்தாள் அறம்வளர்த்த நாச்சியார். இதைக் கண்ட அவளது தாய் பள்ளியறை நாச்சியார் அவளை ஒரு கூண்டு வண்டியில் ஏற்றிக் கொண்டு சுசீந்திரம் வந்தாள். வண்டியில் இருந்து இறங்கிய அறம்வளர்த்த நாச்சியார் சிவன் சந்நிதானத்தை நோக்கி ஓடினாள்.

அதே நேரத்தில் அசரீரி ஒன்று, "உன் மகளை சிவனுக்குத் திருமணம் செய்து வை' என்று கட்டளையிட்டது.

அதன்படி ஒரு மாசி மாத மக நட்சத்திர நாளில் நாச்சியார்- சிவன் திருமணம் சுசீந்திரம் கோவிலில் நடந்ததாக வரலாறு கூறுகிறது.

எனவே, நினைத்தவரையே திருமணம் செய்ய விரும்பும் பெண்கள், தீர்க்க சுமங்கலிகளாக வாழவிரும்பும் பெண்கள் சுசீந்திரம் கோவிலுக்கு வந்து அறம்வளர்த்த நாச்சி யாரை வணங்குகிறார்கள்.

இதற்காக ஆருத்ரா தரிசனம் என்ற விசேஷ நிகழ்ச்சி ஒவ்வொரு ஆண்டும் மார்கழி மாத திருவாதிரை தினத்தன்று அதி காலை நான்கு மணிக்கு சுசீந்திரம் கோவிலில் நடக்கிறது. இவ்விழாவில் பல்லாயிரக்கணக் கானோர் கலந்துகொள்கிறார்கள்.

ஒரு காலத்தில் திரேதாயுகா என்ற பெண், பார்வதிதேவியின் தீவிர பக்தையாக இருந்தாள். பார்வதிதேவிக்கும் இவள்மீது அன்பு இருந்தது.

திரேதாயுகாவுக்குத் திருமணம் நடந்தது. அக்காலத்தில் திருமணமான நான்காவது நாளில்தான் சாந்தி முகூர்த்தம் நடக்கும். ஆனால் திருமணமான மூன்றாவது நாளி லேயே திரேதாயுகாவின் கணவன் இறந்து விட்டான். திரேதாயுகா அலறித் துடித்து, ""பார்வதிதேவியே! உன் பக்தையான என்னை இப்படி சோதிக்கலாமா? உன்னை இவ்வளவு காலம் வணங்கி என்ன பயன்?'' என்று கூறிக் கதறி அழுதாள்.

அப்போது கயிலாயத்தில் சிவன் அருகில் அமர்ந்திருந்த பார்வதி திரேதாயுகாவின் அலறலைக் கேட்டு, அவள் கணவனுக்கு உயிர்ப் பிச்சையளிக்க சபதம் செய்தாள். அவளது சபதத்தைக் கேட்டு அதிர்ந்துபோன சிவன் உடனே எமலோகத்தை ஒரு பார்வை பார்த்தார். இதைக் கண்டு பதறிப்போன எமன் திரேதாயுகாவின் கணவனுக்கு மீண்டும் உயிர் கொடுத்தார்.

அதன்பின் பார்வதியும் பரமசிவனும் திரேதாயுகாவுக்கும் அவள் கணவனுக்கும் காட்சி கொடுத்து ஆசீர்வதித்தார்கள்.

இந்த நிகழ்ச்சி ஒரு மார்கழி மாத திருவாதிரை நட்சத்திர நாளில் நடந்தது. இதற்கு ஆருத்ரா தரிசனம் என்று பெயர் ஏற்பட்டது.

No comments:

Post a Comment