* திருவிளக்கு பூஜையில் கன்னிப்பெண்கள், சிறுமிகள், சுமங்கலிகள் அனைவரும் பங்கேற்கின்றனர். இதற்கு ஏதேனும் வயது வரம்பு உண்டா?
பெண்களுக்கு வயது அடிப்படையில் சில பெயர்கள் உண்டு. ஏழுவயது வரை பாலா, பதினொரு வயதுவரை கன்னி, அதன்பிறகு திருமணமாகும் வரை வதூ, திருமணமான பின் சுமங்கலி, வயது முதிர்ந்த சுமங்கலிக்கு சுவாசினி என்று பெயர். சுமங்கலி, சுவாசினி ஆகியோர் திருவிளக்கு பூஜை செய்வது தான் சிறந்தது.
* அமாவாசையை சிலர் நிறைந்தநாள் என்று சொல்லி சுபநிகழ்ச்சி நடத்துவது சரியா?
திருமணம், நிச்சயதார்த்தம் அமாவாசையில் செய்யக் கூடாது. வியாபாரரீதியாக சில விஷயங்களை முடிவெடுப்பது, ஒப்பந்தம் செய்வது போன்றவற்றை சமீபகாலமாக சிலர் செய்து வருகிறார்கள். சாஸ்திரரீதியாக இதற்கு பதில் சொல்ல முடியாது. அவர்களது அனுபவத்தில் நல்லதாக இருக்கலாம்.
** ஆத்திகம் நாத்திகம் இரண்டுமே சரியானதாக என் மனதிற்குப் படுகிறது. ஆத்திகத்தை முழுமையாக ஏற்க வழிகாட்டுங்கள்.
நல்லது என்று ஒன்று இருந்தால் கெட்டது என்று ஒன்றும் இருக்கும். எது நமக்குப் பயனளிக்கும் என்பதைப் புரிந்து கொண்டு தேர்வு செய்து கொள்வதே நல்லது. இந்த அடிப்படையில் யோசித்துப் பார்த்தால் ஆத்திகம் நல்லது. மனித வாழ்விற்கு உறுதுணையாகவும், கவலையைப் போக்குவதாகவும் உள்ளது. எந்த இக்கட்டான சூழ்நிலையிலும் கடவுள் கைகொடுப்பார் என நம்பினால் காப்பாற்றப்படுகிறோம் என்பதை உங்கள் அனுபவங்களின் மூலமே சீர்தூக்கிப் பார்க்கலாம். நாத்திகம் நம் கலாச்சாரத்தை கேலிக்கூத்தாக்குகிறது. உலகப்பொதுமறையான திருக்குறள் கடவுள் வாழ்த்துடன் தான் தொடங்குகிறது. சிறந்த ஆன்மிகவாதியாக இருந்து மகிழ்ச்சியாக வாழுங்கள்.
*சுவாமிக்குப் பிரசாதம் படைக்கும்போது திரையிட்டுக் கொள்வது ஏன்?
வீட்டில் சாப்பிடும்போது எல்லோரும் பார்க்கும்படி வாசலில் உட்கார்ந்து நாம் சாப்பிடுவதில்லையே. குளிப்பது, சாப்பிடுவது, ஜெபிப்பது போன்ற விஷயங்களை பிறர் பார்க்கும்படி செய்வது கூடாது என்பது நியதி. தெய்வத்திற்குப் பிரசாதம் படைக்கும் நைவேத்யத்தை ரகசியமாக செய்யும்படி சாத்திரங்கள் கூறுகின்றன. கவுரவம், பயபக்தியோடு மட்டுமே கடவுளுக்கு உணவு படைக்கவேண்டுமே தவிர மேடை காட்சியாக செய்யக்கூடாது.
*பெண்கள் கர்ப்பமாக இருக்கும்போது வழிபாட்டில் தேங்காய் உடைக்கக் கூடாதா ஏன்?
கர்ப்பமாக இருந்தாலும், இல்லாவிட்டாலும் பெண்கள் தேங்காய் உடைக்கக் கூடாது. பெண்கள் தேங்காயை உடைக்கவோ, பூசணிக்காயை வெட்டவோ கூடாது. ஆண்கள் தான் எப்போதும் செய்ய வேண்டும்.
No comments:
Post a Comment