Thursday, June 21, 2012

வாயில்லா ஜீவன்களின் மீது அன்பு-ரமணர்.


ரமண மகரிஷி ஒரு மான் மீது அதீத பாசம் வைத்திருந்தார். அங்கே குரங்கு, மயில் போன்றவை இருந்தாலும் மான் மீது தனிபாசம் அவருக்கு!
திருவண்ணாமலையில்உள்ள ரமணாஸ்ரமத்தில், அந்த மான் எப்போதும் அவருடனேயே இருக்கும். அதற்கு "வள்ளி' என பெயர் சூட்டியிருந்தார். அதற்கு உணவூட்டுவது, அன்புடன் தடவிக்கொடுப்பது எல்லாமே அவர் தான். வெளியில் போனால் கூட, ""போயிட்டு வரட்டுமா! சமர்த்தாக இரு!'' என்று சொல்லிவிட்டு தான் போவார்.
ஆஸ்ரமத்தில் இருந்தவர்கள் எல்லாம், ""ஆஹா..நாம் இந்த மானாய் பிறந்திருக்கக் கூடாதா! அவரது அன்புக்கரங்களால் தினமும் வருடுகிறாரே! அத்தகைய ஸ்பரிசத்தைப் பெறுவதற்கு எத்தனை புண்ணியம் செய்திருக்கிறது இந்த மான்! இந்த ஸ்பரிசம் நமக்கு கிடைக்கவில்லையே,'' என ஏங்கியவர்கள் உண்டு.
அவர் என்ன கட்டளையிட்டாலும் அப்படியே கேட்கும் அந்தமான். அவர் வெளியே சென்றால், ஏக்கத்துடன் அவரைப் பார்க்கும். ஆனால், எல்லாருக்கும் முடிவு என்ற ஒன்று உண்டல்லவா! அந்தமானுக்கு ஒரு "கல்' ரூபத்தில் முடிவு வந்தது.
யாரோ ஒருவர் அதன் மீது கல்லை வீசி எறிந்து விட்டார். மானுக்கு கடுமையான காயம். டாக்டர்களை வரவழைத்தார் ரமணர்.
அவர்கள் சிகிச்சை அளித்தும் பலனில்லாமல் போனது. கடைசியில், அவரைக் கண்கொட்டாமல் தரிசனம் செய்தபடியே அது உயிரை விட்டது.
ரமணர் அதை புதைக்க ஏற்பாடு செய்தார். புதைக்கப்பட்ட இடத்தில் தன் அன்புமானுக்கு சமாதியும் கட்டினார்.
பக்தர்களின் அன்புக்கு மட்டுமல்ல! வாயில்லா ஜீவன்களின் அன்புக்கும் அடிமைப்பட்டிருந்தார் ரமணர்.

No comments:

Post a Comment