ராஜாஜி சென்னை மாகாணத்தின் முதல்வராக இருந்த சமயம் சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு உண்டானது. நீர்த்தேக்கங்கள் அனைத்தும் வற்றிவிட்டன. கிடைக்கும் நீரின் அளவு நாளுக்கு நாள் குறைந்து போனது.
சென்னையில் இருந்து மக்கள் வெளியேறினால் தான் பிரச்னை தீரும் என்ற நிலை ஏற்பட்டது. அதிகாரிகளும் இதே யோசனையைத் தெரிவித்தனர். இந்த யோசனையை முதல்வர் ராஜாஜி ஏற்கவில்லை. அவர் வேறொரு கருத்தை வெளியிட்டார்.
அதன்படி, ஒரு குறிப்பிட்டநாளில் சென்னையைக் காப்பாற்றுமாறு எல்லா வழிபாட்டுத் தலங்களிலும் இறைவனை வேண்டி பிரார்த்தனை செய்யும்படி மக்கள் கேட்டுக் கொள்ளப் பட்டார்கள்.
சட்டபேரவையில் ஒரு கட்சியினர் ராஜாஜி கூறியதைக் கேலி செய்தார்கள். சென்னை நகரைக் காப்பாற்ற இது தான் ராஜாஜியின் வழி என்றால், மக்களைக் காப்பாற்ற வழியே இல்லை என்றும் அவர்கள் குற்றம் சாட்டினர்.
ஆனால், முதல்வரின் வேண்டுகோளின்படி மக்கள் அனைவரும் கூட்டுப்பிரார்த்தனையில் ஈடுபட்டனர். 24மணி நேரத்திற்குள் சென்னைநகர் முழுவதும் மேகங்கள் திரண்டன. மூன்று நாட்கள் இடைவிடாமல் மழை பெய்தது.
நீர்த்தேக்கங்கள், ஏரி,குளங்கள் அனைத்தும் நிரம்பின. குடிநீர் பிரச்னையில் இருந்து சென்னை நகரம் தப்பியது. இந்த நிகழ்ச்சி நடந்தது ஒரு மே மாதத்தில். அது கடுமையான கோடை காலம்.
பிரார்த்தனை யால் மழை பெய்ததாக தாங்கள் கருதவில்லை என்றும் இது ஒரு தற்செயல் நிகழ்வு என்றும் குற்றம் சாட்டிய கட்சியினர் கருத்து வெளியிட்டனர். அதற்கு ராஜாஜி, ""நீங்கள் எது வேண்டுமானாலும் கூறுங்கள். மனப்பூர்வமாகப் பிரார்த்தனை செய்தால் அதிசயம் நிகழும்,'' என்பதற்கு இந்த நிகழ்ச்சி ஒரு அத்தாட்சி என பதிலளித்தார்.
"நம்பியவர்க்கு நடராஜன், நம்பாதவர்க்கு வெறும் ராஜன்' என்று ஒரு சுலவடை சொல்வார்கள். நம்பினார் கெடுவதில்லை என்ற வேதங்களின் கூற்றுக்கு இந்த நிகழ்ச்சியை உதாரணமாகச் சொல்லலாம்.
No comments:
Post a Comment