Wednesday, July 18, 2012
நவ நிதிகள்
நவ நிதிகளுக்கும் அதிபதி குபேரன்.
நவ நிதிகளுக்கும் அதிபதி குபேரன். நவ நிதிகள் யாவை?
1) பத்மம்
2) மஹாபத்மம்
3) மகரம்
4) கச்சபம்
5) குமுதம்
6) நந்தம்
7) சங்கம்
8) நீலம்
9) பத்மினி
குபேரன்
இவற்றுள் மிக முக்கியமான நிதிகள் சங்க நிதி மற்றும் பத்ம நிதி. அள்ள அள்ள வற்றாமல் கூடிக் கொண்டே இருக்கும் அபூர்வ ஆற்றல வாய்ந்த இந்த நிதிகளைப் பற்றி அப்பர் முதல் அருளாளர்கள் பலரும் தங்களது பாக்களில் பாடியுள்ளனர்.
குபேரன் சிவ பெருமானது உற்ற தோழன். அவனுக்கு 'சிவ சகா' என்ற பெயரே உண்டு. சிவ புராணத்தில் ருத்ர சம்ஹிதையின் பத்தொன்பதாவது அத்தியாயம் ஒரு அழகிய சம்பவத்தை வர்ணிக்கிறது. இந்த அத்தியாயத்தின் தலைப்பு சிவ-குபேரனின் நட்பு என்பதாகும்.
அளகாபுரியின் அதிபதியான குபேரன் கடுந்தவத்தை மேற்கொண்டான். அவன் தவத்தைக் கண்டு மெச்சிய சிவபிரான் உமையுடன் தோன்றினான். ஆயிரக்கணக்கான உதயசூரியன்களின் பிரகாசத்தைத்தோற்கடிக்கும் பேரொளியைக் கண்ட குபேரன் அந்த ஒளியால் கண்கள் கூசவே கண்களை மூடிக் கொண்டான்.
"உன் திருவடிகளைக் காணும் பார்வையைக் கொடு' என்று வேண்டினான். சிவபிரான் தன் உள்ளங்கையால் அவனைத் தொட குபேரன் பார்வை பெற்றான். முதலில் அவன் பார்வை உமையின் மேல் பட்டது.
சிவனின் பத்தினியான உமையின் ஒளியையும் அழகையும் கண்டு வியந்த குபேரன் "சிவனுக்கு அருகில் இருக்கும் இந்தப் பெண்மணி யார்? என்னை விட எப்படிப்பட்ட பெருந்தவத்தை (சிவனின் அருகில் இருக்கும்படி) மேற்கொண்டாள் இவள்? என்ன உருவம்! என்ன அன்பு! என்ன அதிர்ஷ்டம்! என்ன பெரும் புகழ்!' என்று திரும்பத் திரும்ப குபேரன் கூறினான்.
அவனின் பார்வை அம்பிகையை விட்டு அகலாதிருக்கவே தேவியின் பேரொளியால் அவனது இடது கண் வெடித்துத் தெறித்தது.
"இவனது பார்வை என்ன பார்வை; பொறாமையுடன் கூடியதா" என்று தேவி சிவபெருமானை வினவ சிவபிரான் சிரித்தார்.
"இல்லை தேவி! இவன் உனது மகனே! உன் தவத்தின் ஒளியைக் கண்டு அவன் வியந்து என்ன அழகு! என்னஒளி! என்ன உருவம் என்று புகழ்கிறான்." என்று கூறிய சிவபிரான் குபேரனை நிதிகளுக்கு நாயகனாக்குகிறான்; அத்தோடு குஹ்யர்களுக்கும் அதிபதி ஆக்குகிறான்.
குஹ்யர்கள் என்றால் மறைந்திருப்பவர்கள் என்று பொருள். யட்சர்களைப் போல இவர்களும் குபேரனுக்கு சேவகம் செய்யலாயினர்.ஒரே கண்ணை உடையவனாதலால் "ஏக பிங்களன்" என்ற பெயரும் குபேரனுக்கு உண்டு. வைஸ்ரவணன் என்பதும் குபேரனின் பெயரே.அஷ்டதிக் பாலர்களில் குபேரனும் ஒருவன். வடதிசைக்கு அதிபதி. தீபாவளியன்று இரவில் குபேரனை விசேஷமாக தங்க, வெள்ளி நாணயங்களை வைத்து பாரதம் முழுவதும், குறிப்பாக வட இந்தியாவில், வழிபடுகின்றனர்.
நிதிகளுக்கு அதிபதியான குபேரனின் சிலையை சென்னையில் உள்ள திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோவிலில் காணலாம்.
பாரத ரிஸர்வ் வங்கியின் வாசலிலுல் குபேரனுக்கு ஒரு இடம் உண்டு. (இந்தக் கட்டுரையைப் பார்த்த "செகுலர் பர்ஸன்" யாரேனும் குபேரனுக்க ரிஸர்வ் வங்கி வாசலில் இடம் என்றால் தேசத்தின் செகுலரிஸம் என்னாவது என்று முழங்கி அதை அகற்ற வேண்டும் என்று கூறாமல் இருக்க வேண்டும். முஸ்லீம்கள் அதிகம் உள்ள இந்தோனேஷியாவின் ஏர்லைன்ஸ் பெயர் கருடா ஏர்வேஸ் என்று இருக்கலாம்; ஆனால் இந்தியாவில் இப்படிப்பட்ட பெயர்கள் இருந்தால் நம் மதச்சார்பின்மை என்னாவது?!)
குபேரனுக்கு ஒரு கோலம் உண்டு.
எந்தப் பக்கம் கூட்டினாலும் 72 வரும் இந்த மாயச்சதுரம் குபேரனுக்குரியதாக நெடுங்காலமாக வழிபட்டு வரப்படுகிறது.
குபேரனுடைய தியான ஸ்லோகம் பின் வருமாறு:-
மநுஷ்யவாஹ்ய விமாந வரஸ்திதம் கருடரத்ந நிபம் நிதி நாயகம் சிவஸகம் முகுடாதி விபூஷிதம் வரகதம் தநதம் பஜே துந்திலம்
இதனுடைய பொருள் :- மனிதர்களால் தாங்கப்பெறும் உத்தமமான விமானத்தில் வீற்றிருப்பவரும், கருடரத்தினம் (மரகதம்) போன்று ஒளி வீசுபவரும், நவ நிதிகளின் தலைவரும், சிவ பெருமானின் தோழரும், சிறந்த கதை என்னும் ஆயுதத்தை கையில் ஏந்தியவரும் பொன் முடி முதலிய ஆபரணம் பூண்டவரும் தொந்தியோடு விளங்குபவரும், செல்வம் தருபவருமாகிய குபேரப் பெருமானை வணங்குகிறேன்.
குபேர மந்திரம் பின் வருமாறு:-
ஓம் யக்ஷய குபேராய வைஸ்ரவணாய
தந தாந்யாதிபதயே தநதாந்ய ஸம்ருத்திம் மே
தேஹி தாபய ஸ்வாஹா
வியாழக்கிழமையும் பூச நட்சத்திரமும் கூடிய நாளில் இந்தக் குபேர சக்கரத்தை அல்லது யந்திரத்தை உரியவர்களைக் கொண்டுவீட்டில் பிரதிஷ்டை செய்வது மரபு.
அல்லது தாமிரத் தகட்டில் பொறித்து கடைகளில் விற்கப்படும் இந்த யந்திரத்தை வாங்கி வணிகக் கடைகளிலும், இல்லங்களிலும், பர்ஸிலும் குபேரனை நாடி வழிபடுவோர் வைத்திருப்பர்.
'சிவ சகா' என்பதால் சிவனை வழிபட்டாலும் குபேரனது பார்வை சிவபிரானின் பக்தர்கள் மீது திரும்பும்.
குபேரனது சக்கரத்தை வைத்து பக்தியுடனும் வழிபட்டால் செல்வம் வந்து சேரும் என்று அற நூல்கள் அறுதியிட்டு உறுதி கூறுகின்றன
No comments:
Post a Comment