Sunday, July 29, 2012
கோவிந்தநாமத்தின் மகிமை
<திருப்பதிக்குள் நாம் எங்கு சென்றாலும், நம் காதில் ஒலிக்கும் நாமம் "கோவிந்தா... கோவிந்தா...' என்னும் திவ்யநாமம். இந்த நாமம் எவ்வளவு சக்தியுடையது என்பதற்கு இந்தச் சம்பவம் ஒரு உதாரணம்.
நாடு சுதந்திரமடைவதற்கு முன் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தினர் கோயில்களுக்குள் செல்ல தடை விதிக்கப்பட்டிருந்தது. பல தலைவர்கள் இதற்கு எதிராகப் போராடினர். அவர்களில் ராஜாஜியும் ஒருவர்.
ஒருமுறை, ஏழுமலையான் மீது தீவிர பக்தியுடைய ஒரு தாழ்த்தப்பட்டவர் திருப்பதிக்குள் நுழைந்து விட்டார். அதிகாலையே நீராடி, நெற்றியில் திருமண் (நாமம்) தரித்து, "கோவிந்தா...கோவிந்தா...' என முழங்கியபடியே, கோயிலுக்குள் நுழைந்து, பெருமாளைக் கண்குளிர தரிசித்தும் விட்டார். அப்போது ஒரு அதிகாரி அந்த பக்தரை எப்படியோ பார்த்து விட்டார்.
""நீ தாழ்த்தப்பட்டவன் தானே! கோயிலுக்குள் நுழைய என்ன தைரியம்? உன்னால், கோயிலே தீட்டுப்பட்டு விட்டதே. வா... உன்னை போலீசில் ஒப்படைக்கிறேன்,'' என ஒப்படைத்து விட்டார். சித்தூர் கோர்ட்டில் ஆங்கில நீதிபதி ஒருவர் முன், தாழ்த்தப்பட்டவர் நிறுத்தப்பட்டார். அவருக்காக முனுசாமி என்ற வக்கீல் ஆஜரானார். வழக்கு நடந்து கொண்டிருந்தது.
இவ்விஷயத்தை ராஜாஜி கேள்விப்பட்டார். கோர்ட்டுக்குச் சென்று வழக்குகளில் ஆஜராவதில்லை என்று அவர் முடிவெடுத்திருந்த சமயம் அது. இருப்பினும், அந்த தாழ்த்தப்பட்டவருக்காக ஆஜராக சித்தூர் சென்றார். அங்கே, வேறு ஒரு வக்கீல் அவருக்காக வாதாடுவது கண்டு, அமைதியாக கவனித்துக் கொண்டிருந்தார். அப்போது வக்கீல் முனுசாமி, ""நீதிபதி அவர்களே! தாழ்த்தப்
பட்டவர்களுக்காக குரல் கொடுப்பவர் ராஜாஜி. அவர் இங்கே வந்துள்ளார். அவரே இவ்வழக்கில் வாதாடட்டும்,'' என்றார்.
நீதிபதியும் சம்மதிக்கவே, தாழ்த்தப்பட்டவருக்காக வாதாடினார் ராஜாஜி.
""கோவிந்தா' என்ற நாமத்தை ஒரு தடவை சொன்னாலே ஒரு இடம் சுத்தமாகி விடும். இவரோ நீராடி, திருமண் தரித்து, கோவிந்தநாமத்தை பலமுறை சொல்லியபடி கோயிலுக்குள் சென்றுள்ளார். அப்படியிருக்க, கோயில் தீட்டுப்பட்டதாகக் கூறுவது எந்த வகையில் நியாயம்? இவரை வழக்கில் இருந்து விடுவிக்கவேண்டும்,'' என்றார்.
வாதத்தை ஏற்ற நீதிபதி, அந்த நபரை விடுதலை செய்தார். கோவிந்தநாமத்தின் மகிமையைப் பார்த்தீர்களா! ஆனால், இப்போது "உன் பணம் கோவிந்தா தான்! உனக்கு வேலை கோவிந்தா தான்' என்று கேலிப்பொருள் கலந்து பேசுவதைக் கைவிடுங்கள். கோவிந்தநாமம் கோடி பலன் தரவல்லது.
No comments:
Post a Comment