Sunday, July 29, 2012
காசிக்குச் சென்றால் ஏதாவது விட்டுவிடுவது ஏன்?
காசிக்குச் சென்றால் ஏதாவது விட்டுவிடுவது ஏன்?
காசிக்குத் தினமும் லட்சக்கணக்கானவர்கள் செல்கிறார்கள். இவர்கள் எதையாவது விட்டு விட்டால் இந்தியாவின் பொருளாதாரம் சரியாகி விடுமா என்ன! இவ்வாறு விட்டு வருதல் என்பது கயா சென்று சிராத்தம்(திதி கொடுப்பது) செய்பவர்களுக்கு மட்டும் தான். கயாவில் செய்யும் பிதுர்காரியம் மிக உயர்ந்த புண்ணியத்தை தரும். இதைச் செய்துவிட்டு வந்த பிறகு, மனதில் எழும் அல்ப ஆசைகளை விடுத்து, தர்மநெறியில் வாழ்ந்தால் அந்த புண்ணியம் நம்மைக் காப்பாற்றும் என்பதால் அப்படிக் கூறுகிறார்கள். அதாவது நமக்குப் பிடித்தமான ஒன்றுக்காக சில சமயம் நெறி தவற நேரிடுகிறது. எனவே, தான் ஏதாவது ஒன்றை என்றில்லாமல், நமக்குப் பிடித்தமான ஒன்றை விட்டு விட வேண்டும்.
சுபம், அசுபம் இரண்டிலும் சங்கு ஊதுகிறார்களே ஏன்?
சங்கு ஊதுவது எல்லாவற்றிற்கும் பொருந்தும் என்பதால் இப்படிச் செய்கிறார்கள். சுபநிகழ்ச்சியில் ஊதப்படுவதால் தேவர்கள் சந்தோஷப்படுகிறார்கள். அசுபத்தில் ஊதுவதால் பிதுர்கள் (நம் முன்னோர்) அவர்களது பிரிவால் சோகத்திலுள்ள நாம் மீண்டும் மகிழ்ச்சி பெற வாழ்த்துவார்கள்
** பெண் தெய்வப்படங்களை விரித்த கூந்தலுடன் சித்தரிப்பது ஏன்?
பெண் தெய்வங்களின் தலை அலங்காரத்தை மூன்று விதமாகச் செய்யலாம் என சிற்ப சாஸ்திரங்கள் கூறுகின்றன. கிரீடம், கரண்டமகுடம், அளகபாரம் என்பவை. கிரீடம், கரண்ட மகுடம் போன்றவை சித்தரிக்கப்படும்போது விரித்த கூந்தலாகவே அமைய வேண்டும். அளகபாரம் என்ற வகையில் தான் ஜடை பின்னலிடுதல்(வேணி பந்தம்), ஜடை மகுடம்(உச்சிக் கொண்டை) போன்ற முறைகள் கூறப்பட்டுள்ளன. கோப வடிவான சில சக்திகளை மட்டும் தான் மகுடம், கிரீடம் போன்றவை இல்லாமல் விரித்த கூந்தலுடன் சித்தரிக்கப்படுவதுண்டு.
*வழிபாட்டில் காற்றடித்து கற்பூரம், விளக்கு அணைந்துவிட்டால் மனம் வருந்துகிறது. பரிகாரம் கூறுங்கள்.
காற்றடிப்பதை நிறுத்த இயலாது. இது இயற்கையாக நிகழ்வது. இதுபோன்ற இடங்களில் நாம் தான் எச்சரிக்கையாக நடந்து கொள்ள வேண்டும். கனத்த திரியாகப் போட்டு விளக்கேற்றலாம். கற்பூரத்தை கட்டியாக வைக்காமல் நொறுக்கி தூளாக நிறைய வைத்து ஏற்றலாம். இவையும் மீறி காற்றில் அணைந்தாலும் வருத்தப்படத் தேவையில்லை. மீண்டும் ஏற்றி வழிபாடு செய்யுங்கள்.
மனத்தூய்மை பெற எத்தனை முகம் கொண்ட ருத்ராட்சம் அணிய வேண்டும்?
ஐந்துமுக ருத்ராட்சம் மிக உயர்ந்தது. கண்,காது,மூக்கு, வாய், மெய் என்னும்
ஐம்புலன்களே மனதில் எழும் எண்ணங்களுக்கு காரணமாகின்றன. ஐந்து முக ருத்ராட்சம் அணிந்து அதில் ஐம்புலன்களும் பொருந்திவிட்டதாக எண்ணிக் கொள்ளுங்கள். புலன்கள் மனதைத் தவறான பாதைக்கு இட்டுச் செல்வது தடுக்கப்படும். தவறான எண்ணங்கள் ஏற்படாவிட்டால் மனம் தூய்மை பெற்றுவிடும்.
No comments:
Post a Comment