Friday, July 13, 2012
உண்மை பேசினால் என்ன நன்மை?
உண்மையை மட்டுமே பேச வேண்டும், சத்தியநெறியை மட்டும் கடைபிடிக்க வேண்டும். என்ன வந்தாலும், எது நடந்தாலும் இதயத்து மாளிகையில் சத்தியத்தை மட்டுமே குடியமர்த்த வேண்டும். இதனால், என்ன லாபம் என்பதற்கு உதாரணகர்த்தா திருக்கடையூர் அபிராமி பட்டர். இவர் மீது பொறாமை கொண்ட சிலர், சரபோஜி ராஜாவிடம் சென்று, நமது ஊர் அபிராமி கோயிலில் ஒரு பைத்தியம் வேலை செய்கிறது. அம்பாள் முன்னால் கண்ணை மூடிக்கொண்டு ஏதேதோ பிதற்றுகிறது. இவரது பிதற்றலைக் கேட்டு அம்பாளுக்கும் கஷ்டம், பக்தர்களுக்கும் கஷ்டம், என்றனர். ஆனால், அம்பாள் எல்லாம் அறிந்தவள் அல்லவா! அபிராமிபட்டர் சத்தியநெறி தவறாதவர், தன் முன்னால் அமர்ந்து சத்தியத்தை மட்டுமே பேசுபவர் என்பதை ஊருக்கு உணர்த்த முடிவெடுத்தாள். ஒருநாள் சரபோஜி கோயிலுக்கு வந்தார். இன்று என்ன திதி? என பட்டரிடம் கேட்டார். அவர் அம்பாளின் முகத்தை பூரணசந்திரனாகக் கற்பனை செய்து லயித்திருந்த வேளை அது. பவுர்ணமி என்றார். இன்று அமாவாசையல்லவா! பவுர்ணமி என்கிறானே, நிச்சயம் இவன் பைத்தியம் தான், என்று நினைத்த சரபோஜி, இதுதான் பவுர்ணமி வானமா? என்று கேலியாக சிரித்தபடியே தலையைத் தூக்கினார். நிஜமாகவே வானில் சந்திரன் இருந்தான். அதாவது, சத்தியம் பேசுபவர்கள், தவறாகவே ஏதும் சொன்னாலும் கூட அது சத்தியமாகி விடுகிறது. அதனால் தான் சத்தியத்தைக் கடைபிடிக்கும் மகான்கள் சொல்வதெல்லாம் பலித்து விடுகிறது. சத்தியத்தின் மதிப்பை அறிந்து சத்தியத்தின் பக்கம் திரும்புங்கள். கலியுகத்தில் இது சாத்தியமா என்றெல்லாம் சாக்குப்போக்கு சொல்லாமல் சத்தியத்தின் பக்கம் போனால் நன்மை நமக்குத்தான்!
No comments:
Post a Comment