Friday, July 13, 2012
மகாலட்சுமி வழிபாடு- தமிழ்
குபேர வாசல் (மகாலட்சுமி பூஜை)
அலைமீது வாசம் செய்யும் அலைமகள், ஓரிடத்தில் நிலையாக நில்லாமல் அலைபவள். அவள் நிலைத்து நின்றாலே செல்வம் நிலைக்கும். அப்படி நிலைத்திட்ட செல்வம் வேண்டுமானால், அகலகில்லேன் என்று அலர்மேல் மங்கையாக நேசம்மிக்க திருமாலின் திருமார்பில் வாசம் செய்யும் வடிவில் அவளை வணங்க வேண்டும் என்கிறது, திருமலைப் புராணம்.
திருமகளை, திருயாவும் தர வேண்டித் துதிக்கும் இப்பாடல்கள், குபேரனின் வாசற்கதவினைத் திறக்கச் செய்து, அங்குள்ள செல்வம், பக்தர்தம் இல்லம் வந்து சேரச் செய்திடும். குபேர வாசல் எனும் இந்தத் துதியினை. அலர்மேல் மங்கையை அகத்தினில் இருத்தி, அகல் விளக்கினை அவள் முன் ஏற்றிவைத்துச் சொல்லி வர, அவள் அருளால், செல்வம் செழிக்கும்,
சந்தோஷம் நிலைக்கும்.
1.பொன்மகள் கடைக்கண் பார்வை
புன்னகை புலர்ந்து கண்டால்
நன்மைகள் யாவும் தேடி
நயம்படக் கதவைத் தட்டும் !
மன்பதை போற்றும் செல்வம்
மழையெனப் பொழியும்; வாழ்த்தும்!
அன்னையே அலர்மேல் தேவி!
அடியேனைக் காண்பா ரம்மா!
2. தேவியே கமல வல்லி;
செந்திரு மாலின் கண்ணே!
நாவினால் நின்னை யன்றி
நயத்தகு நயத்தைக் காணேன்!
காவியம் காணாச் செய்யுள்
கற்பகத் திருவே! நின்றன்
ஓவியம் நெஞ்சில் வைத்தே
ஓதுவேன்; கடைக்கண் பாராய்!
3. நாரணன் தவத்தின் தேவி!
ஞாலத்துப் பெண்கள் போற்றும்
பூரணி! பூவில் வாழும்
புன்னகை அரசி! எல்லாக்
காரண காரி யங்கள்
கணக்கிடல் யாரே? இந்தத்
தாரணி தன்னில் வாழத்
தனயனைக் கடைக்கண் பாராய்!
4. தாமரை நினது பீடம்;
தரிசனம் திருமால் மார்பு;
ஏமமே இதழின் வாசம்
இளநகை புரிந்தால், அந்தச்
சேமமே எனக்குப் போதும்
தேவியே அருள்வா யம்மா!
சாமரம் வீசிப் போற்றிச்
சரிதத்தைப் பாடி வைப்பேன்
5. பூவினுள் சிறந்த பூவே
தாமரைப் புனிதப் பூவே!
காவினில் பூக்கும் பூக்கள்
கண்டிடில் நாணும் என்னே!
யாவினும் உயர்ந்த உன்னை
யாசிப்பேன் தூது செல்வாய்!
பாவினால் பாடும் என்னை
இலக்குமி பார்க்கச் சொல்வாய்!
6. மலர்களின் அரசி வண்ண
மாப்புகழ் கமலம்; அந்த
மலரினும் மென்மை கொண்ட
மங்கையர்க்கரசி ! நீயோ
மலர்புகழ் கமலம் மீது
மார்பினை நிமிர்த்தி நின்றாய்!
மலர்மணம் சற்றே வீசி
வருவயோ மனையைத் தேடி
7. சகலமும் உணர்ந்த நீயே
சஞ்சலம் போக்க வல்லாள்!
அகலமாய் விரிந்த பூமி
அளப்பவள் நீயே தாயே!
இகபரம் காணாத் தெய்வம்!
இமைத்திடில் செல்வத் தோட்டம்!
மகனைநீ கடைக்கண் பாராய்
மாதாவே அலர்மேல் போற்றி!
8. வண்ணமா மலரில் வீற்று
வையத்தை வாழ வைக்கும்
சொர்ணமாம் பொன்னின் தேவி,
சுகங்களின் மகிழ்ச்சி நீயே!
எண்ணமே நின்றன் தோற்றம்
ஏந்திநல் தவமே செய்தால்,
கண்ணினைத் திறப்பாய்; ஆங்கே
காட்சியோ குபேர வாசல்!
9. சீரடி பணிந்து கேட்பேன்;
தேவிநான் ஏழைப் பக்தன்;
ஓரடி எடுத்து வைத்தால்
ஈரடிச் சறுக்கல்; பூமி
நீரடிக் குறையின் வானம்
நிலைமையைச் சமனே செய்யும்!
யார் கொலோ என்னைக் காப்பார்?
அலர்மேலு மங்கைத் தாயே!
10. முகிலதன் நிறமே கொண்டு
மும்மூர்த்தி உருவாய்த் தோன்றி
அகிலமே தன்னுள் ளாக்கி
ஆண்டிடும் திருமால் தேவி!
மகிமைகள் அறிவேன்; நின்றன்
மாட்சிமை புரிவேன்; சற்றே
மகிழ்வுடன் என்னைப் பாராய்
மண்ணிலே செல்வன் ஆவேன்!
11. என்னதான் வழியோ சொல்வாய்
ஏழுமா மலையின் வல்லி !
முன்னம்நான் செய்த பாவம்
மூண்டதோ? அறிகி லேனே!
சின்னவன் குற்றம் ஏதும்
செய்திடில் பொறுப்பாய் தேவி!
அன்னையே அலர்மேல் தாயே
அடியேனை ஆசி செய்வாய்!
12. திருமலை கீழே நின்றன்
திருவாட்சி செல்வக் காவல்!
வருபவர் இனிய நெஞ்சம்
மாதாவே நின்றன் வாசம்!
அருமைகள் அறிந்தா ரைநீ
அணைத்திட மறந்ததில்லை!
மருவிலான் மலைவாழ் ஐயன்
மனைவியே ! அலர்மேல் தாயே!
13. கண்ணிலே நின்னை வைத்தேன்
கருத்திலே ஒளியைத் தந்தாய்!
பண்ணிலே நின்னைப் பாடப்
பாவினில் கவிதை செய்தேன்!
தண்ணிய நெஞ்ச மோடு
தாயேநீ தயவு செய்வாய் !
மண்ணிலே நீயே தெய்வம்
மறக்கிலேன் கடைக்கண் பாராய்!
14. வள்ளலாம் திருமால் நின்றன்
மாபெரும் அழகில் சொக்கிப்
பள்ளிவிட் டெழுந்து வந்து
பவித்திரம் கண்டான்; நின்னை
அள்ளியே அணைத்தான்; மார்பில்
ஆனந்தம் கொண்டான்; பின்னர்
தெள்ளிய மகிழ்வைக் காட்டத்
திருமலை சென்றான் என்னே!
15. சென்றவன் உச்சி ஏறிச்
செம்மைசேர் மலைகள் ஏழை
நின்றவன் சுற்றிப் பார்த்தான்;
நெஞ்சிலே அமைதி; அந்த
நன்றுரை ஏழு குன்றம்
ஞாலத்தில் யாங்கும் இல்லை !
நின்றவன் மேலும் நின்றான்
திருமலை நெடுமால் பீடம்!
16. பீடமோ அண்ணல் வாசம்!
பெருமைகள் குவிய வாழ்த்தி
ஆடகப் பொன்னே, தாயே!
அலர்மேலு அமர்ந்தாய் கீழே!
மாடமா ளிகைகள் எல்லாம்
மணாளனே சொந்தம் என்று
சாடையாய் மகிழ்ந்தாய்; இந்தச்
சகத்தினில் தலைவி நீயே!
17. நின்னிலும் கருணை மிக்கார்
நிலங்களில் யாரே உள்ளார்?
நன்னயத் தோடு வேண்டில்
நலம்பலத் தரவே செய்வாய்!
சென்னியைப் பாதம் வைத்துச்
செப்புவேன்; நானோர் ஏழை!
பொன்னையும் பொருளும் தந்து
பூரிக்கச் செய்வாய் தாயே!
18. ஐயனாம் வேங்கடத்தான்
அழகுறு பார்வை தன்னில்
மெய்தனை உருகச் செய்து
மேன்மையை மேலும் கொண்டாய்!
வையமே நீதான் என்று
வணங்கியே தவமாய் நின்றேன்;
உய்யவே வழியைக் காட்டி
ஓங்கிய செல்வம் தாராய்!
19. வண்டுகள் நாணும் கண்கள்!
வாயெல்லாம் பவளக் கூத்து!
பண்டுநின் அருமை கண்டு
தேவர்கள் பாதம் தொட்டார்!
எண்டிசை செலினும் மாதர்
ஏற்றியே போற்றி நிற்பார்!
கண்டுநான் கொண்டேன் தேவி
கவலைகள் இனிமேல் இல்லை!
20. கார்நிற வண்ண அண்ணல்
கருணையை முழுதாய்ப் பெற்ற
சீர்நிறை கமலச் செல்வி
சிறப்புடைக் கனக வல்லி!
ஏர்முனை முதலாய்க் கொண்ட
எல்லாமே நீதான்! இந்தப்
பார்தனில் நின்னை யன்றிப்
பார்த்திலேன் சரணம் தாயே!
21. கிளிகளோ வரிசை கட்டிக்
கீழ்வானத் தோரணம்போல்
வெளிகளில் பறந்து செல்லும்
வேடிக்கை என்ன சொல்வேன்!
ஒளிமய வேங்கடத்தின்
உன்னத அழகுக் கோலத்
தெளிவினைக் காட்டி நிற்கும்
தெய்வீகம் திருவின் சோதி !
22. தேவர்கள் நின்றன் பாதத்
திருமலர் தாங்கிப் பின்னர்
ஆவலாய்ப் பணிந்து காண்பர்;
அன்னையே மகியை என்னே!
நாவலர் பாடும் தாயே!
நாயகி திருமால் தேவி!
ஆவன செய்வாய்; இந்த
அடியேனின் துயரைத் தீர்ப்பாய்!
23. கருணைமா வள்ளல் அண்ணல்
காத்திடும் வேங்க டத்தில்
பெருமையாய் பக்தர் கூடிப்
பேரின்பம் அடைவார்! நீயோ
அருமையாய் பெருமாள் மார்பில்
ஆனந்தக் கோலம் பூண்டாய்!
மருவிலா அலர்மேல் மங்கை
மாதாவே கடைக்கண் பாராய் !
24. சுதர்சனன் தேவி நின்றன்
சுந்தரம் யாரே அறிவர்!
அதர்களாய் ஆடும் மக்கள்
அறியாமை என்ன சொல்வேன்!
புதர்தனில் புதையல் தேடிப்
புழங்குவோர் பல்லோர் உண்டு;
நிதர்சனம் நீயே என்று
நின்னைநான் சரணம் கண்டேன்!
25. மதுவெனும் அரக்கன் தன்னை
மாளவே செய்த மாலை
வதுவைநீ செய்து கொண்டாய்;
வையமே பெற்ற பேறாம்!
பதுமமேல் நின்றாய்; இந்தப்
பாரினைச் செழிக்கச் செய்தாய்!
இதுவரை ஏழை என்மேல்
ஏனம்மா இரக்கம் இல்லை?
26. கண்ணிலே நின்னை யன்றிக்
காண்பதோ ஏதும் இல்லை!
பண்ணிலே தோடி ராகம்
நீயன்றோ பக்தன் கண்டேன்;
எண்ணிலே அடங்காச் செல்வம்
எல்லாமே நினது வாசம்!
மண்ணிலே வாடும் என்னை
மாதாவே கடைக்கண் பாராய்!
27. அழகிய தோற்றம் முன்னே
அனைத்துமே சரணம் தாயே!
கிழமையில் வெள்ளி நின்றன்
கீர்த்தியைப்பேசும் நாளாம்!
பழமையும் புதுமை சேர்ந்து
பகுத்திடும் அறிவு யாவும்
சுழலுமிவ் வுலகை நோக்கிச்
சுந்தரக் கவிதை பாடும்!
28. அலைகடல் துயிலும் அண்ணல்!
ஆழ்மனத் தாம ரையில்
நிலையுடன் அமர்த்தி ருக்கும்
நிம்பையே! அலர்மேல் தாயே!
கலைபயில் கழகம் நீந்திக்
கவிதையைக் கற்றேன்; சொன்னேன்!
தலைமகள் நீயே என்று
தரிசித்தேன்; செல்வம் தாராய்!
29. பங்கயச் செல்வி பார்வை
பட்டிடில் நிறைகள் யாவும்!
அங்கயற் கண்ணி; மற்றும்
அருங்கலை வாணி அன்னாள்!
எங்குமே அவளின் ஆட்சி
இதனைநாம் அறிந்து கொண்டால்
தங்குமே செல்வம்; நன்மை
தரணியில் அடைவோம் காண்டி!
30. கார்முகில் வண்ணன் இல்லாள்
கமலத்தின் அரசி போற்றி!
சீர்மிகு ஈசன் தங்காய்
சிவந்தமா பாதம் போற்றி!
நீர்கடல் வாசம் தன்னில்
நிறைந்தநின் அமுதம் போற்றி!
பார்தனில் செல்வம் காக்கும்
பரந்தாமன் திருவே போற்றி!
31. திருமலை வேங்க டேசன்
திருவடி நெஞ்சில் கொண்ட
பெருமிகு அலர்மேல் தாயே,
பேரின்பம் பெற்று மார்பில்
உருவினைப் பதித்தாய்! உண்மை
உலகிற்கே எடுத்துச் சொன்னாய்!
திருமிகு செல்வச் சோதி!
திருவருள் கிடைக்கண் பாராய்!
32. விழிமலர் மலர்ந்து வாசம்
வீசிடப் பாராய் தாயே!
பழியிலாப் பக்தன்; நின்றேன்
பதமலர் பணிந்து நின்றேன்!
வழிகளை அறியா வண்ணம்
வாழ்கிறேன்; எளியேன்; நானோ
சுழிமுனை நின்னைக் கொண்டேன்;
சுகங்களைத் தருவாய் என்றும்!
33. அகிலமே நின்றன் பார்வை!
அனைத்துமே நின்றன் செல்வம்!
முகிலதன் வண்ண மாலன்
மூலமே நின்றன் கோலம்!
மகிழ்வுடன் அறிந்து மக்கள்
மகிமைகள் கண்டு கொண்டேன்
மாதாவே கடைக்கண் பாராய்!
34. வான்மலர் மீன்கள் எல்லாம்
வையத்துள் சொல்லும் செய்தி:
தேன்மலர் பூக்கள் கொண்டு
தினம்தினம் தியானம் செய்து
கோன்மலர்க் கமலத் தாயைக்
கோடித்தே இசைப்போ மானால்
ஊன்மலர் புனித மாகி
உலகத்துச் செல்வம் காண்போம்!
35. பிருகுவின் வமிசத் தேவி
பீடுடை அலர்மேல் தாயே!
குருமகன் சங்க ரர்தம்
குரலுக்குக் காட்சி தந்தோய்!
உருகிடும் கவிஞன் நானோ
நின்னையே உபாசிக் கின்றேன்!
திருமகள் நாமம் பெற்றோய்
திருவடி தொழுதேன் வாராய்!
36. அன்னையே திருச்சா னூரின்
அலங்காரத் திருவே போற்றி!
மன்னனாம் வேங்க டத்தான்
மனைவியே மார்பில் வீற்றோய்!
பொன்னையும் மணியும் கொண்டோய்!
பூலோகச் செல்வ மாரி!
என்னையும் சற்றே நோக்கி
எழிலார்ந்த பார்வை பாராய்!
37. தூய்மையின் துளசிப் பூவே!
தூதுநீ சென்று வாராய்!
ஆய்கையில் அருகில் வாழும்
அழகான தோழி நீயே!
வாய்மணம் கமழப் பாடும்
வார்த்தைகள் எடுத்துச் செல்வாய்!
தாய்மனம் கனியச் செய்வாய்!
தனயனைப் பார்க்கச் சொல்வாய்!
38. நீலமா விழிகள் என்றன்
நெஞ்சிலே பதிய வைத்தாய்!
கோலமா காட்சி என்னே!
குவலயம் வியக்கும் தோற்றம்!
காலமே நின்றன் ஆட்சி;
கனிந்தது புவனம்; ஏனை
சாலமா இயற்கை நீயே!
சரணமே அலர்மேல் தாயே!
39. திருமலை எம்பி ரானின்
திருத்தேவி பாதம் போற்றி!
அருமலை ஏழின் வண்ணம்
ஆராய்ந்தால் இவளே மூலம்!
பெருமலை இமயம் ஒத்த
பேரின்பம் இங்கே உண்டு!
தருமலை, செல்வம் வேண்டின்
தரிசித்தால் பெறுவோம் நாமே!
40. மண்டலம் பாடி வைத்தேன்
மாதாவே கடைக்கண் பாராய்!
குண்டலம் அணிந்த கோலம்
குவலயம் ஒளிரும் காட்சி!
எண்டிசை வணங்கும் மக்கள்
எல்லார்க்கும் நீயே செல்வம்!
தொண்டினைச் செய்து வாழ்வேன்;
தொடரட்டும் குபேர வாசல்!
41. வணங்குவோம் அலர்மேல் பாதம்!
வாழ்த்துவோம் நல்லோர் நெஞ்சை!
வணங்குவோம் கதிர்நி லாவை!
வாழ்த்துவோம் பஞ்ச பூதம்!
வணங்குவோம் ஒன்பான் கோளை!
வாழ்த்துவோம் எட்டுத் திக்கை!
வணங்குவோம் உலகை; மேலும்
வாழ்த்துவோம் திருவை யாவும் !
(மங்களம் நிறைக)
ஸ்ரீ தேவி ஸ்தோத்திரம்
கமலநாபன் மார்பில் வாசம் செய்யும் கமலமகளை வேண்டினால், கவலை யாவும் தீரும்படி கனக (கருணை) மழை பெய்விப்பாள் என்பது ஆன்றோர் வாக்கு. செந்தாமரையாளின் அருளாள் செல்வம் யாவும் பெற வகை செய்யும் துதிகள் பல உண்டு. அவற்றுள் ஓர் உயர்வான துதி தேவி ஸ்தோத்திரம் எனும் இந்தத் தமிழ்த் துதி. செல்வமகள் கருணையினால் செல்வம் சேர்ந்து வாழ்வில் செழிப்பு ஓங்கிட, கஞ்சமலர்த் தாயவளை நெஞ்சில் வைத்து, இத்துதியைச் சொல்லுங்கள் நிச்சயம் அருள்வாள். நிமலையாம் ஸ்ரீதேவி
தாமரை திகழும் திருக்கரமும்
தளிர்நகை பொழியும் ஒளிமுகமும்
÷க்ஷமம் அளிக்கும் நல்லருளும்
சேவிப் பார்க்கு நிறைவரமும்
மூவர் போற்றும் பெருமையுடன்
முன்னே சங்க பதும நிதி
காவல் செய்ய, காட்சிதரும்
கமல மாதே! வணங்கு கிறேன்!
தாமரை வடிவாய்த் திருக்கண்கள்!
தாமரை மென்மை தளிர்க்கைகள்!
தூய மங்கல வெண்மை உடை!
துலங்கு சந்தனம்! மணிமாலை!
ஞானம், சத்தி, பலம் செல்வம்
நயத்தகு வீரம், பொலி வென்னும்
ஆறும் பெற்று மூவுலகும்
ஆட்சி புரிபவளே! அருள்க!
இயற்கை, செயற்கை இயற்றுவிப்பாய்!
எல்லா உயிர்க்கும் நலஞ் செய்வாய்!
அனைத்துக் கலைக்கும் அடிப்படையாய்!
அரிய செல்வத் திருப்பிடமாய்
நினைத்த தளிக்கும் சுரபியென
நிலவும் மேலாம் வடிவம் நீ!
விளங்கும் தெய்வ இலக்குமியே!
விஷ்ணுவின் இதய இலச்சினையே!
செந்தாமரைதான் உன் வீடு!
திகழும் தூய்மை உன் ஏடு!
அமுதம் தோற்க இனிப்பவள் நீ!
அனைத்திலும் அணுவாய் அமைந்தவள் நீ!
அக்கினி பத்தினி ஸ்வாஹா நீ!
அரிய ஸ்வதாவும் ஆனவள் நீ!
எங்கும் எதிலும் எந்நாளும்
இலங்கிச் சிறப்பவளே சரணம்!
அரிய வடிவும் நற் குணமும்
அற்புதப் புகழும் பெற்றவளே!
அசுர மாதா துதியைத்தன்
அதிகா ரத்தில் கொண்டவளே!
அமுதப் பாற்கடல் ஈன்றவளே!
அறிவே உருவம் ஆனவள் நீ!
அருளைப் பொழியும் வானவள் நீ!
சிறிதும் குற்றம் அற்றவள் நீ!
ஸ்ரீநா ராயணர் சிந்தை நீ!
உலகின் துயர இருள் நீக்கும்
ஒளியே! பகவான் உட்கொள்ளும்
அமுதே! உன்றன் கடைக்கண்ணால்
அடியேன் இடுக்கண் போக்கிடுக!
தருமம் அனைத்தும் ஒன்றான
தாயே! உன்னைப் போற்றுகிறேன்!
இருப்பிடம் உனக்குப் பங்கயம்தான்!
இருப்பதும் கையில் கமலம்தான்!
இருவிழி அதுவும் தாமரைதான்!
இலங்கும் அழகும் அம்மலர்தான்!
கருணை வடிவே! காசினியைக்
காக்கும் தாயே! வணங்குகிறேன்!
மலரில் தோன்றிய மலர்முகமே!
மகிழ்வாய் முகுந்தன் அரவணைக்கும்
அலைமகளே! இவ் வகிலத்தில்
ஆனந்தத்தின் அடிப்படை நீ!
பூவிற் சிறந்த கமலத்தில்
பொலியும் மாலை அணிந்தபடி
பூவையர் விரும்பக் காட்சிதரும்
தேவதையே! உனைத் துதிகின்றேன்!
வந்திப் பவர்க்கு வாழ்வளிக்கும்
வாசம் நிறைந்த வரலக்ஷ்மி!
சந்திப்பவர்க்கு மகிழ்வுதர
தருணம் பார்த்தே இருப்பவளே
சந்திர னோடு நீ பிறந்தாய்!
சந்திர வதனம் நீ பெற்றாய்!
செங்கதி ரோடு ஒளி போன்றே
திருமா லோடு திகழ்பவள் நீ!
புயங்கள் நான்கு கொண்டவளே!
புதிய நிலவின் வடிவினளே!
பயன்படு செல்வம் தருபவளே!
பக்தர்க் கருளைப் பொழிபவளே!
நயந்த அன்பர் வாழ்வினிலே!
நல் இன்பத்தைத் தருபவளே!
வியக்கும் மங்கள வடிவம் நீ!
வித்தகியே! உனைப் பணிகின்றேன்!
தூயவளே! நீ உலகன்னை!
துலங்க சக்தியின் முதற் பண்ணை!
மாயச் செய் என் வறுமையினை!
மலர்ப் பொய்கையிலே வாழ்பவளே!
ஆய்ந்த வெண்மணி ஆடையுடன்
அமைதி துலங்க விளங்குகிறாய்!
தோய்ந்த அன்பில் துதிப்போர்க்குச்
சுடரும் பொன்முடி சூட்டுகிறாய்!
விளங்கும் வெளிச்ச உருவோடு
வில்வக் காட்டில் விளையாடி
இலங்கும் திருமால் மார்பினிலே
இடமும் பெற்ற இலக்குமியே!
நலமார் செல்வக் களஞ்சியமே!
நல்ல வாழ்வின் இலக்கியமே!
நலமார் செல்வக் களஞ்சியமே!
நல்ல வாழ்வின் இலக்கியமே!
கலங்கும் பாவ வினை போக்கி
கனக மழையைப் பெய்விப்பாய்!
அன்னை வடிவே! உன்னாலே
அரிய தனமும் தானியமும்
நன்மை பலவும் வருவனவே!
நங்கையர்க்குள்ளே சிறந்தவளே!
பொன்னின் அரண்மனைப் பொலிவினிலே
புண்ணிய வடிவாய் நிறைந்தவளே!
தன்னை பூஜை செய்வோர்க்கு
சகல வரம்தரும் சந்நிதி நீ!
திருப்பாற் கடலில் உதித்தவளே!
திருமால் மார்பிடை பதித்தவளே!
விருப்போ டணுகும் பக்தர்க்கே
வெற்றியை வாழ்வில் தருபவளே!
செறித்த கனகச் சூழலுடன்
சுடரும் மகிழ்ச்சி மண்டபத்தில்
பொருத்த முடனே பொலிகின்ற
பூவே! உன்னைப் போற்றுகிறேன்!
தேசம் போற்றும் உத்தமியே
ஸ்ரீமகா விஷ்ணுவின் பத்தினியே!
பூசை மலராய்ப் பொலிகண்கள்!
பொன்னைப் பொழியும் திருக்கைகள்!
மோசம் செய்யும் வறுமையினை
முற்றும் அழிக்கும் அருட்பார்வை!
ஆசை யாவும் நிறைவேற்றும்
அன்னை உன்னைப் புவிபோற்றும்!
நவ துர்க்கைக்கும் மலரென நீ
நாயகியே நீ விளங்குகிறாய்!
சிவன் அயன் திருமால் மூவருமே
சேர்ந்த சங்கம வடிவம் நீ!
அவரவர் தொழிற்கும் நீ மூலம்!
அன்னை நீயே முக்காலம்!
அவனி சுழன்றிடக் காரணமே!
அனைத்தும் நிறைந்த பூரணமே!
தேவ மாதர் பணி செய்ய
திகழும் தலைவி! வையத்தின்
மேவும் சுடர் நீ! மேன்மை நீ!
மேலாம் பாற்கடல் உதித்தவள் நீ!
மூவர் போற்றும் முதல்வி நீ!
ஆவ தனைத்தும் உன்னாலே!
ஆசி அளிப்பாய் கண்ணாலே! நாரா
யணரின் நெஞ்சமெனும்
நற்றா மரப்பூ நடுவினிலே
சீராய் அமர்ந்த ஸ்ரீமகளே!
திசைகள் எட்டும் உன் புகழே!
ஆரா திப்பர் இல்லத்தை
அரண்மனை ஆக்கும் பெற்றியளே!
பூரணக் கருணை பொழிந்திடுவாய்!
பொன்மகளே! உன் அடி சரணம்!
No comments:
Post a Comment