Monday, September 17, 2012
வினாயகர் சதுர்த்தி:-
விநாயகர் என்றால் தனக்கு மேலே ஒரு தலைவர் இல்லாதவர் என்று பொருள். வி – இதற்கு மேல் இல்லை. நாயகர் -- தலைவர். வினாயகர் அஸ்டோத்திரத்தில் ஓம் அநீஸ்வராய நம என்ற ஒரு வரி உள்ளது. அதாவது தனக்கு மேல் ஒரு ஈஸ்வரன் இல்லாதவர் என்பதாகும். ஆதிசங்கரர் தனது பஞ்ச ரத்தினம் என்ற வினாயகர் துதியில் அநாயக ஏகநாயகம் என இவரைக் குறிப்பிடுகிறார். தனக்கு மேல் ஒரு தலைவர் இல்லாமல் ஒரே மூலப்பொருளாய் எல்லாவற்றிற்கும் தலைவராய் இருப்பவர் என்பதாகும். பூத கணங்களிற்கு தலைவராய் அதாவது கணங்களிற்கு அதிபதியாய் இருபதனால் கணபதி என அழைக்கப்பட்டார். நமது கஷ்டங்களை, வினைகளை, விக்கினங்களை நீக்குபவர் என்பதனால் விக்னேஸ்வரர் ஆனார். யானை முகத்தினன் என்பதனால் கஜானனன் என்றும், மோதகத்தை விரும்பி உண்பதனால் லம்போதரன், மோதகப்பிரியன் என்றும், ஒரு தந்தத்தை உடையவர் என்பதனால் ஏகதந்தன் என்றும் வழங்கப்படலானார்.
ஐந்து கரத்தினன் எனப்படும் இவர் துதிக்கையுடன் ஐந்து கரத்தினை கொண்டவர். துதிக்கையில் புனித நீர்க்குடம், வலது கைகளில் ஒன்றில் அங்குசமும், மற்றயதில் ஒடிந்த தந்தமும், இடது கைகளில் ஒன்றில் பாசமும், மற்ற கரத்தில் மோதகமும் வைத்திருப்பார். புனித நீர்க் குடத்திலிருக்கும் புனித நீரினைக் கொண்டு உலக வாழ்வில் உழன்று, களைத்து, சோர்வடைந்து தன்னைச் சரணடையும் மக்களின் தாகம் தீர்த்து, களைப்பைப் போக்கி, பிறவா நிலையைக் கொடுத்து தன்னடியில் சேர்த்துக் கொள்கிறார். இதற்கு அவ்வையாரின் வாழ்க்கை சிறந்த உதாரணமாகும். “என்னை அறிவித்து எனக்கு அருள் செய்து முன்னை வினையின் முதலைக் களைந்து வாக்கும் மனமும் இல்லா மனோலயம் தேக்கியே எந்தன் சிந்தை தெளிவித்து” அவ்வையார் தனது வினாயகர் அகவலில் மேற்க் கண்ட வரிகளினாலும் மற்றும் வினாயகர் அகவலில் பல இடங்களிலும் வினாயகர் தன்னை ஆட்கொண்டு தனக்கு அருள் செய்த விதத்தினை கூறியுள்ளார்.
அங்குசம் என்பது யானையை அடக்க உதவும் ஒரு கருவி ஆகும். இவர் கையில் இருக்கும் அங்குசமோ ஆசை என்ற மாய வலையில் சிக்கி அலைந்து திரியும் மனத்தினை அடக்கி ஒருநிலைப்படுத்தி பேரின்ப வீட்டினை தரவல்லது. பாசக் கயிற்றினால் மனித மனங்களில் ஆசாபாசங்களைக் கட்டிப் போடுகிறார். ஒடிந்த தந்தம் மகாபாரதம் என்ற காவியத்தை எழுத பயன்பட்டது. நமது மனங்களில் ஞானத்தை, உண்மை அறிவை எழுதுகிறார். மோதகம் அமுத கலசமாகும். இந்த மோதகத்தினால் மக்களிற்கு அமுதத்தை வழங்கி பிறப்பிறப்பு இல்லாத பேரின்ப நிலையயை அருளுகிறார்.
வினாயகர் ஓங்கார சொரூபமானவர். அவருக்கு செய்யும் வணக்கம் பிரம்மத்தையே சேருகிறது. வினாயகரை வணங்குதல் எல்லா தெய்வங்களையும் வணங்கியதற்கு ஒப்பாகும். பிடித்து வைத்தால் பிள்ளையார் என்று ஒரு வழக்கு மொழியும் கிராமப் புறங்களில் உள்ளது. அதாவது மஞ்சள் பொடி, பசும் சாணம் இதர சில பொருட்களினால் பிடித்து வைத்து பிள்ளையாரை ஆவாகணம் செய்து வழிபடலாம். மற்ற எல்லா வழிபாட்டிலும் மிக எளிமையாக வழிபடக் கூடியது வினாயகர் வழிபாடே.
வினாயகர் சதுர்த்தி:-
ஒரு சமயம் வினாயகர் கைலையில் நடனமாடிக் கொண்டிருந்தார் இவரின் நடனத்தை பார்த்து சந்திரன் ஏளனமாக சிரித்தான். இதனால் கோபம் கொண்ட வினாயகர் சந்திரனை “இன்று முதல் சந்திரன் உருவத்தை யாரும் காணமாட்டார்கள். கண்டவரும் நிந்தை செய்து ஒதுக்குவார்கள். இப்படிப்பட்ட நீசனாகட்டும்” என்று சபித்து விட்டார். இதன் காரணமாய் சந்திரன் கலையிழந்து தேய்ந்து மெலிந்தான். சந்திரன் தன் செய்கைக்கு மிகவும் வருந்தி பின்னர் வினாயகரயே சரண் அடைந்தான். தன்னை சரண் அடைந்தோரிற்கு சகல நன்மைகளையும் தரும் கருணை கடலாம் மூஷிக வாகனன் எம்பெருமான் வினாயகரும் மனமிரங்கி சுக்ல பட்ச சதுர்த்தி திதியில் சந்திரனைக் காண்போர் வீணான சங்கடங்களிற்கு ஆளாவர் என்றும். ஆனால் ஆவணி மாதம் சுக்ல பட்ச சதுர்த்தி திதியில் விரதம் அனுட்டித்து வினாயகரை வணங்குபவர்கள் சகல சாப விமோசனமும் பெற்று சீரும் சிறப்புடனும் வாழ்வர் என சந்திரனிற்கு சாப விமோசனம் அருளினார். அதனால்; தான் வளர்பிறையில் வரும் நாலாம் நாள் சந்தினை யாரும் இன்றும் பார்ப்பது கிடையாது. “நாலாம்பிறைச் சந்திரனை பார்த்தால் நாய் அலைச்சல்” என்று கிராமத்து மக்கள் இன்றும் கூறுவர். ஆவணி மாதம் சுக்ல பட்ச சதுர்த்தி திதியே வினாயகர் சதுர்த்தி நாளாகும்.
சகல ஐசுவரியங்களும் தரும் வினாயகர் வழிபாடு.
மனத்தாலே நினைத்தாலே ஓடி வந்து அருள்புரியும் முதன்மைக் கடவுள் வினாயகர். கலியுகத்தின் கருணைக்கடல் பிள்ளையார். தன்னை வணங்குபவர்களிற்கு சகல நலன்களையும் அள்ளி வழங்குபவர் வினாயகர்.
எந்த ஒரு காரியம் தொடங்குவதற்கும் முன் முதலில் வினாயகரை வணங்க வேண்டும். இப்படிப்பட்ட ஒரு வரத்தை ஈசன் வினாயகரிற்கு வழங்கியுள்ளார.; இதை கடைப்பிடிக்காத முருகனும் ஏன் ஈசனும் கூட காரியம் நிறைவேறாமல் பின் வினாயகரை வணங்கி எடுத்த காரியம் செவ்வனே முடித்தனர். வுpனாயகரை அவ்வையார் எழுதிய வினாயகர் அகவல் அல்லது நக்கீரர் எழுதிய வினாயகர் திருஅகவல் தினமும் பாராயணம் செய்து வழிபடலாம். நோய்நொடி இல்லாமல் ஏவல், காத்து கறுப்பு அண்டாமல் இருக்க காசிப முனிவர் இயற்றி கச்சியப்ப சிவாச்சாரியார் மொழி பெயர்த்த வினாயகர் கவசம் பாராயணம் செய்யலாம். நினைத்த காரியம் நிறைவேற காசிப முனிவர் இயற்றி கச்சியப்ப சிவாச்சாரியார் மொழி பெயர்த்த காரிய சித்தி மாலை பாராயணம் செய்யலாம்.
முறைப்படி பூசை அறை வைத்து இருப்பவர்கள் வினாயகர் மூல மந்திரத்தை அல்லது வினாயகர் காயத்திரி மந்திரத்தை முறைப்படி ஒரு தகுந்த குருவிடமிருந்து பெற்று நாளொன்றிற்கு 16, 27, 54, 108, 1008 :::::::::::: என்று எதோ ஒரு எண்ணிக்கையில் செபம் செய்து வரலாம்.
மூலமந்திரம்:-
ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் க்லௌம் கம் கணபதயே வரவரத சர்வ ஜனம்மே வசமானய ஸ்வாகா. .
காயத்திரி மந்திரம் :-
தற்புருஷாய வித்மஹே வக்ரதுண்டாய தீமஹீ
தன்னோ தந்தி ப்ரயோதயாத்.
சிதறு தேங்காய்
பொதுவாக பூசைகள் தொடங்கும் போதோ அல்லது நல்ல காரியங்கள் தொடங்கும் போதோ முதலில் வினாயகரை நினைத்து தேங்காய் உடைப்பது வழக்கம். இந்த பழக்கம் எப்படி வந்தது என்று பார்த்தால் ஒரு சமயம் வினாயகர் “ மகோற்கடர் ” என்ற முனிவராக அவதாரம் எடுத்து காசிப முனிவரின் ஆசிரமத்தில் தங்கியிருந்தார். இவ்விரு முனிவர்களும் ஒரு யாகத்திற்காக புறப்பட்டபோது ஒரு அசுரன் அவர்களைத் தடுத்து நிறுத்தினான். வினாயகர் யாகத்திற்காக கொண்டு சென்ற கலசங்களின் மேலிருந்த தேங்காய்களை அவன் மீது வீசி அவனை வதம் செய்தார். அதாவது ஒரு காரியத்திற்கு செல்லும் முன் ஏற்பட்ட தடையை தேங்காயை வீசி எறிந்து வினாயகர் நீக்கினார். நாம் எந்த காரியம் செய்யும் முன்னும் தடைகளை நீக்க வேண்டும் என வினாயகரை வழிபடுவது வழக்கம். அவர் காட்டிய வழியில் தேங்காயை அவரிற்கு பலி கொடுத்து எடுத்த காரியம் செவ்வனே முடிய வேண்டும் என வேண்டிக் கொள்கிறோம். மற்றும் நமது பாவங்கள் தேங்காயைப் போன்று வினாயகர் அருளால் சிதற வேண்டும் என்றும் சிதறு காய் போடுவதாக ஒரு கருத்தும் உள்ளது.
குட்டிக் கும்பிடுதலும் தோப்புக்கரணமும்
ஒரு சமயம் அகத்திய மாமுனிவர் காவிரி நதியை தனது கமண்டலத்தில் அடக்கி வைத்துக் கொண்டார். வினாயகப் பெருமான் காகம் வடிவெடுத்து அந்த கமண்டலத்தை தட்டி விட்டு காவிரி நதியை விடுவித்தார். பின்னர் ஒரு அந்தண சிறுவனாக வடிவெடுத்து நின்றார். போபம் கொண்ட அகத்திய முனிவர் அந்த அந்தண சிறுவனின் தலையில் குட்டினார். அப்போது வினாயகப் பெருமான் தனது சுயரூபம் எடுத்து உலக நன்மைக்காக தான் காவிரி நதியை விடுவித்ததாக கூறினார். அகத்திய முனிவரும் தமது தவறிற்கு வருந்தி தன் தலையில் தானே குட்டி கொண்டு வினாயப் பெருமானிடம் தன்னை மன்னித்து அருளும் படி வேண்டிக் கொண்டார். அன்றிலிருந்து தலையில் குட்டிக் கும்பிடும் பழக்கம் தொடங்கியதாக கருதப் படுகிறது.
கஜமுகாசுரன் என்ற அசுரன் ஒரு சமயம் தேவர்களை அடிமைப் படுத்தி தனக்கு டீதாப்புக் கரணம் போட்டு வணக்கம் செலுத்த வைத்தான். வினாயப் பெருமான் அந்த அசுரனை அழித்து தேவர்களை விடுவித்தார். அசுரனிற்கு போட்ட தோப்புக் கரணத்தை தேவர்கள் வினாயப் பெருமானிற்கு போட்டு பக்தியுடன் வணங்கினர். அன்று முதல் வினாயப் பெருமானிற்கு தோப்புக்கரணம் போட்டு வணங்கும் பழக்கம் ஏற்பட்டது.
ஆன்மீக ரீதியாக நாம் தோப்புக் கரணம் போடும் போது நமது உடலில் தூங்கிக் கொண்டிருக்கும் குண்டலினி சக்தி தட்டி எழுப்பப் படுகிறது. குட்டிக் கும்பிடும் போது நமது தலையிலிருக்கும் அமிர்த கலசத்திலிருந்து அமிர்தம் சிந்தி உடல் பூராவும் பரவி நமக்கு சுறுசுறுப்பும் புத்துணர்வும் தருகிறது. இந்த தத்துவத்தை இன்றைய அறிவியல் உலகமும் ஏற்றுக் கொள்கிறது.
அருகம்புல் வழிபாடு
அனலாசுரன் என்ற அசுரன் உலகத்து மக்களை, தேவர்களை மிகவும் துன்புறுத்தி வந்தான். தன்னை எதிர்ப்பவர்களை அனலாய் மாறி தகித்த விடுவதனாலேயே அவனிற்கு அனலாசுரன் என்ற பெயர் வந்தது. அவனின் அட்டூழியங்களை தாங்க முடியாமல் தேவர்கள் சிவ-சக்தியிடம் முறையிட்டனர் சிவனும் வினாயகரிடம் அனலாசுரனை வதம் செய்யும்படி கூறினார். வினாயகரும் அனலாசுரனுடன் போரிட்டார். அனலாசுரனை வெற்றி கொள்ளமுடியாத வினாயகர் அவனை பிடித்து விழுங்கி விட்டார். வினாயகரின் வயிற்றுக்குள் சென்ற அனலாசுரன் அதை வெப்பமடையச் செய்தான். பிள்ளையாரை அந்த வெப்பம் கடுமையாக தகித்தது. அவருக்கு கங்கை நீரால் குடம் குடமாக கங்கை நீர் அபிசேகம் செய்யப்பட்டது. ஆனால் எந்த பலனும் கிட்டவில்லை. அப்போது ஒரு முனிவர் அருகம்புல்லை கொண்டு வந்து வினாயகரின் தலை மீது வைத்தார். அனலாசுரன் வினாயகர் வயிற்றினுள்ளே சீரணமாகிவிட்டான். வினாயகரின் எரிச்சலும் அடங்கியது. அன்று முதல் வினாயகர் தன்னை அருகம்புல்லால் அர்ச்சிப்பவர்களிற்கு தான் சகல நன்மைகளையும் செய்வேன். என அருள்பாலித்தார்.
அருகம்புல் அர்ச்சனையால் ஞானம், கல்வி, செல்வம் அனைத்தும் கிட்டும். வினாயகரிற்கு அர்ச்சித்த ஒரு அருகம்புல்லிற்கு இந்திரரின் மணிமுடியே ஈடாகவில்லை என்ற ஒரு புராணக்கதையும் உள்ளது. முத்தியைத் தரவல்லது அருகம்புல் உபாசனை. அதாவது நமது சகல பாவங்களையும் களைய வல்லது.
சங்கடஹர சதுர்த்தி அன்று வினாயகரிற்கு அபிசேக ஆராதனை செய்து வணங்கி வர காரிய சித்தியாகும். மிகவும் சிறப்பான பலன் கிடைக்கும். சுக்ல பட்ச சதுர்த்தியன்று அருகம்புல் சாற்றி வழிபட எடுத்த காரியங்கள் அனைத்திலும் வெற்றி என்பது உறுதியாகும்.
நாகசதுர்த்தி அன்று அபிசேக ஆராதனை செய்து வணங்கி வர நாகதோசம், ராகு, கேதுக்களினால் ஆன சகல தோசமும் நீங்கும். குழந்தை இல்லாதவர்களிற்கு தோசம் நீங்கி குழந்தை பாக்கியம் கிட்டும்.
செவ்வாய், சனிக்கிழமைகளில் செவ்வரலி அல்லது மஞ்சள் அரலி மலர் சாற்றி வழிபடுதல் சிறப்பானது
திருமணத்தடையுள்ளவர்கள் மஞ்சள் பிள்ளையாரை பித்தளைத் தட்டுக்குள் வைத்து மூடி அருகம்புல் சாற்றி 48 நாட்கள் தொடர்ந்து வழிபட்டுவர திருமணத்தடை நீங்கி திருமணம் நடக்கும்.
கடுமையான வறுமையில் உள்ளவர்கள் வெள்ளெருக்கு திரி போட்டு நெய் தீபமேற்றி வினாயகரை வழிபட்டு வர வறுமை நீங்கி வளமான வாழ்வு கிட்டும்.
நவக்கிரக தோசமுள்ளவர்கள் வினாயகரிற்கு பின்புறம் வெள்ளெருக்கு திரியில் நெய்தீபமிட்டு வணங்கி வர நவக்கிரக தோசம் நீங்கி சகல சௌபாக்கியங்களும் கிட்டும்.
நீண்ட நாட்களாக குழந்தையில்லாதவர்கள், சதுர்த்தி தோறும் வேப்பமரமும், அரசமரமும் சேர்ந்த மரத்தடியில் உள்ள வினாயகரிற்கு முன்னும், பின்னும் வெள்ளெருக்கு திரியில் நெய்தீபமிட்டு வணங்கி எறும்புக்கு நாட்டுச் சர்க்கரை தூவி வர குழந்தைப் பாக்கியம் கிட்டும்.
சங்கடஹர சதுர்த்தி விரதம் அனுஷ்டிப்பது எப்படி?
மாசி மாதம் தேய்பிறையில் வரும் திதியில் இவிவிரதத்தினை ஆரம்பிக்க வேண்டும். இந்தநாள் செவ்வாய்க்கிழமை ஆனால் மிகவும் சிறப்பானதாகும். இதன் பிறகு ஒவ்வொரு தேய்பிறை சதுர்த்தியிலும் விரதம் இருந்து சதுர்த்தி விரதம் அனுஷ்டிக்க வேண்டும். ஒரு வருடம் இப்படி விரதம் அனுஷ்டித்து பின்னர் அடுத்த மாசியில் வரும் தேய’பிறை சதுர்த்தியில் விரதத்தினை நிறைவு செய்ய வேண்டும்.
சதுர்த்தியன்று அதிகாலையில் எழுந்து, காலைக்கடன்களை முடித்த பின்னர் குளித்து, திருநீறு பூசி வினாயகர் அகவல் போன்ற பாடல்களை பாடி விரதத்தினை ஆரம்பிக்க வேண்டும். மாலையில் சதுர்த்தி பூசையில் கலந்து கொண்ட பின்னர், மிளகு கலந்த நீரினை பருகி விரதத்தினை நிறைவு செய்ய வேண்டும். பின்னர் பால் பழம் அருந்தலாம். முடியாதவர்கள் உணவு அருந்தலாம்.
இந்த விரதத்தை ஆயுள் முழுவதும் அனுஸ்டிக்க வேண்டியதில்லை ஒரு வருடம் முறையாக அனுஸ்டிப்பது போதுமானது. இந்த விரதத்தினை முறைப்படி அனுஸ்டித்தால் வாழ்க்கையில் சகலமும் நமது எண்ணம் போல் ஈடேறும்.
சதுராவ்ருத்தி தர்ப்பணம்.
444 மந்திரங்களைக் கொண்ட சதுராவ்ருத்தி தர்ப்பணம் வினாயகரிற்கு மிகவும் பிடித்தமான ஒரு சிறந்த வினாகர் அருள் பெறக்கூடிய வழிபாட்டு முறையாகும். இப்போது உலகில் இந்த முறையை அனுஸ்டிப்பவர்கள் இல்லை என்ற அளவிற்கு அருகி வந்து விட்டது. இதனை செய்தால் அனைத்து தேவர்களும் வசியமாவார்கள். மாகாலட்சுமி நித்ய வாசம் செய்வார். வாக்கில் சரஸ்வதி குடிகொள்வார். எதிரிகள் தொல்லை அழிந்து போகும். எண்ணிய காரியம் நிறைவேறும். குடும்பம் என்றும் பேரானந்த வாழ்வு வாழும்.
ஆனால் இதனை எளிதில் செய்ய முடியாது. நவக்கிரகங்கள் இதனை செய்ய விடாமல் தடைசெய்யும். தெய்வ அனுக்கிரகமும், தகுந்த குருவின் ஆசியுடையவர்களால் மட்டுமே அதனை செய்ய முடியும் இந்த உபாசனை கடைசி ஜென்மம் உள்ளவர்களிற்கு மட்டுமெ கிட்டும் என்பதும் ஒரு ஐதீகமாகும்.
முதலில் வினாயகரிற்கு தேங்காயை சிதறுகாயாக உடைத்து நாம் செய்த பாவங்கள் அனைத்தும் நம்மைவிட்டு சிதறி ஓடிவிட வேண்டும் என வேண்டிக் கொள்ள வேண்டும். பின்னர் அவர் சன்னிதானத்தில் அவரிற்கு முன்னால் நின்று வலது கையால் இடது காதையும், இடது கையால் வலது காதையும் பிடித்து நன்றாக இருந்து எழும்பி தோப்புக் கரணம் போடுதல் வேண்டும். அதேபோல கைகளை வைத்து நெற்றியின் இரு பொட்டுக்களிலும் குட்டி கொள்ள வேண்டும். பின்னர் வினாயகரிற்கு அருகம்புல் மாலை அணிவித்து தூப, தீப, அராதனை செய்து அல்லது செய்வித்து வணங்க வேண்டும். பின்னர் அவரை 3 முறை வலம் வர வேண்டும். வினாயகரிற்கு 1 முறை வலம் வர வேண்டும் என்ற ஒரு நடமுறையும் உள்ளது.
விநாயகர் சதுர்த்தி விரதத்தை ஒரு கொண்டாட்டமாகவே நாம் பாவிக்கலாம். விநாயகர் மிகவும் எளிமையான கடவுள். யார் கூப்பிட்டாலும் ஓடோடி வந்து அருள் தருவார்.
அதனால்தான் அவர் எல்லாருக்கும் பொதுவாகவும், யாரும் சுலபமாக வழிபடும் வகையிலும் இருக்கிறார்.
விநாயகர் விரதத்தை பார்வதி தேவியே மேற்கொண்டிருக்கிறார். தன் கணவரை அவமதித்து யாகம் நடத்திய தந்தை தட்சனிடம் நியாயம் கேட்கப் போனாள் பார்வதி என்ற தாட்சாயணி. ஆனால், தட்சனோ மிகவும் கர்வம் பிடித்தவன். மருமகனை அவமானப்படுத்தியது போதாதென்று, மகளையும் கேலி பேசினான்.
இந்த அவமானத்தை பொறுத்துக் கொள்ள முடியாத தாட்சாயணி, தட்சன் வளர்த்து வைத்திருந்த யாக குண்டத்தில் அப்படியே பாய்ந்துவிட்டாள்.
அதன்பிறகு, பர்வதராஜனுக்கு மகளாகப் பிறந்து பார்வதி என்னும் பெயருடன் வளர்ந்து வந்தாள்.
சிறு வயதிலிருந்தே கயிலைநாதன்தான் தன் கணவன் என்று தீர்மானமாக இருந்தாள். அவளுடைய அந்த எண்ணம் பலிக்க வேண்டும் என்றால், அவள் விநாயகரை நினைத்து சதுர்த்தி விரதம் மேற்கொள்ள வேண்டுமென்று அவளுடைய தந்தையார் பர்வதராஜன் யோசனை சொன்னார்.
அவர் சொன்னபடியே, மண்ணால் ஒரு விநாயகர் விக்ரகத்தை உருவாக்கினாள் பார்வதி. கூடவே தங்கத்தாலும் ஓர் உருவம் செய்து இரண்டையும் பொற்கும்பம் ஒன்றின் பக்கத்தில் வைத்தாள்.
அந்த விக்ரகங்களுக்கு ஆகம விதிப்படி பூஜைகளை செய்தாள்.
ஆவணி மாத அமாவாசைக்கு அடுத்த சதுர்த்தியில் இப்படி பூஜையை ஆரம்பித்து, பௌர்ணமிக்கு அடுத்த சதுர்த்தி வரையில் தினமும் பூஜை செய்தாள்.
அதற்குப் பிறகு மண் பிள்ளையாரை, மேள தாளத்தோடு ஊர்வலமாக எடுத்துப் போய் நதியிலே இறக்கி விட்டாள். அந்த பதினைந்து நாட்களும் நியம நிஷ்டைகளை மீறாமல் இருந்த விரதத்தின் பலனாக, தான் ஆசைப்பட்டாற்போல கயிலைநாதனை கைப்பிடித்தாள்.
விநாயகர் ஆதி பரம்பொருள். எல்லோருக்கும் மூத்தவர். பிரம்மா, விஷ்ணு, சிவன் என்று எல்லோரையும் உருவாக்கியவர் அவர்தான். அவர் சாதிக்க வேண்டியது நிறைய இருந்ததால் அவர் பலவித அவதாரங்களை எடுத்தார்.
அந்த மாதிரியான ஒரு அவதாரம்தான் சிவன் மகனாக அவர் தோன்றியது. அற்பத் தாவரமான புல்லையும் (அருகம்புல்) அவர் ஏற்றுக் கொள்கிறார். காட்டுப்பூவான எருக்கம்பூவைக் கூட அவர் மறுப்பதில்லை.
அவரைப் பொறுத்தவரை புல் மாலை போட்டவரும் ஒன்றுதான்; ரோஜா மாலை போட்டவரும் ஒன்றுதான். வித்தியாசமே பார்க்க மாட்டார். தன்னை வணங்குபவரின் மனம் சுத்தமாக இருக்கிறதா, அந்த மனதில் தனக்கு எத்தகைய இடம் இருக்கிறது என்பதை மட்டும்தான் பார்ப்பார்.
விநாயகர் சதுர்த்தி விரத நடைமுறைகள் என்னென்ன?
அன்றைய தினம் விடியற் காலையிலேயே எழுந்து, சுத்தமாக குளித்துவிட்டு, வீட்டையும் சுத்தமாக்கிக் கொள்ள வேண்டும். வாசலில் மாவிலைத் தோரணம் கட்டலாம். முடிந்தால், இரண்டு வாழைக் கன்றுகளையும் வாசலின் இருபுறங்களிலும் கட்டி வைக்கலாம். பிறகு, பூஜையறையில் சுத்தம் செய்த ஒரு மணையை வைக்க வேண்டும்.
அதன்மேல் ஒரு கோலம் போட்டு, அதன்மேல் ஒரு தலை வாழை இலையை வைக்க வேண்டும். இலையின் நுனி வடக்கு பார்த்ததுபோல இருப்பது நல்லது. இந்த இலையின் மேல் பச்சரிசியைப் பரப்பி வைத்து, நடுவில் களிமண்ணாலான பிள்ளையாரை வைக்க வேண்டும்.
பூமியிலிருந்து உருவான எதுவும் பூமிக்கே திரும்பப் போகவேண்டும் என்ற தத்துவம்தான் களிமண் பிள்ளையார். களிமண் மட்டும்தான் என்றில்லாமல், உலோகம், கற்சிலை விக்ரகங்களையும் வைக்கலாம்.
பத்ர புஷ்பம் எனப்படும் பல்வகைப் பூக்கள் கொண்ட கொத்து, எருக்கம்பூ மாலை, அருகம்புல், சாமந்தி, மல்லி என்று எத்தனை வகை பூக்களை வாங்க முடியுமோ, அவரவர் வசதிக்கேற்ப வாங்கிக் கொள்ளலாம்.
அதேபோல முடிந்த அளவுக்கு சில வகை பழங்களையும் வாங்கிக் கொள்ளலாம். இவை எல்லாவற்றையும் விட, விநாயகருக்கு மிகவும் பிடித்தமான மோதகத்தை செய்து கொள்ளலாம்.
அதாவது கொழுக்கட்டை. தேங்காய் பூர்ணத்தை உள்ளே வைத்து செய்யப்படுவது. இதிலும் ஒரு தத்துவம் இருக்கிறது. மேலே இருக்கும் மாவுப் பொருள்தான் அண்டம்.
உள்ளே இருக்கும் வெல்லப் பூர்ணம்தான் பிரம்மம். அதாவது நமக்குள் இருக்கும் இனிய குணங்களை மாயை மறைக்கிறது. இந்த மாயையை உடைத்தால் அதாவது வெள்ளை மாவுப் பொருளை உடைத்தால், உள்ளே இனிய குணமான வெல்லப் பூர்ணம் நமக்குக் கிடைக்கும்.
(விநாயகருக்கு முதன் முதலாக இந்தக் கொழுக்கட்டையை நிவேதனம் செய்தது, வசிஷ்ட முனிவருடைய மனைவியான அருந்ததி.)
பிள்ளையாருக்கு பூக்களால் அலங்காரம் செய்து விட்டு, பிறகு விநாயகர் பாடல்கள் எதை வேண்டுமானாலும் பாடலாம். அவ்வையார் தந்த விநாயகர் அகவல், காரிய சித்தி மாலை படிப்பது விசேஷமான பலன்களைத் தரும். பிள்ளையாருக்கு கொழுக்கட்டை மட்டுமில்லாமல், அவரவர் வசதிக்கேற்ப எள்ளுருண்டை, பாயசம், வடை என்றும் நைவேத்யம் செய்யலாம்.
பால், தேன், வெல்லம், முந்திரி, அவல் என்று ஒவ்வொன்றிலும் சிறிதளவு எடுத்து ஒன்றாகக் கலந்து அதையும் நைவேத்யம் செய்யலாம். நிவேதனப் பொருட்கள் ஒவ்வொன்றிலும் 21 என்ற கணக்கில் சிலர் வைப்பார்கள். ஆனால், எண்ணிக்கை முக்கியமில்லை; ஈடுபாடுதான் முக்கியம். பிறகு கற்பூரம் காட்டி விரதத்தை முடிக்கலாம்.
இந்த விரதத்தை காலையிலிருந்தே உணவு எதுவும் எடுத்துக் கொள்ளாமல் அனுஷ்டிப்பது மிகவும் விசேஷம். பூஜை நேரம் வரை பட்டினியாக இருப்பது சிறப்பு. சம்பிரதாயம் பார்க்கக் கூடியவர்கள் இந்த விநாயகர் சதுர்த்திக்குப் பிறகும் தொடர்ந்து விரதத்தை அனுசரிப்பார்கள். அப்படித் தொடர்ந்து, பௌர்ணமிக்குப் பிறகு வரும் சதுர்த்தி தினத்தோடு விரதத்தை நிறைவு செய்வார்கள்.
இத்தனை நாள் விரதத்துக்குப் பிறகுதான் பிள்ளையாரை கிணற்றிலோ அல்லது ஏதாவது நீர்நிலையிலோ கொண்டுபோய் போடுவது வழக்கம்.
பதினைந்து நாள் அனுசரித்தாலும் சரி, விநாயகர் சதுர்த்தி அன்றைக்கு ஒரே ஒருநாள் மட்டும் அனுசரித்தாலும் சரி, மேற்கொள்ளும் விரதத்தை உளப்பூர்வமாகக் கடைப்பிடிக்க வேண்டியதுதான் முக்கியம்.
வருடத்திற்கு ஒருமுறை இப்படி விநாயகர் சதுர்த்தி அனுசரிப்பதுபோல மாதந்தோறும் பௌர்ணமிக்கு அடுத்த சதுர்த்தி, சங்கடஹர சதுர்த்தியாக அனுஷ்டிக்கப்படுகிறது.
இந்த நாளிலும் விரதம் இருப்பது சிலருடைய வழக்கம். அன்றைக்கு முழுவதும் பட்டினி இருந்து, விநாயகர் சிலை அல்லது படத்துக்கு முன்னால் தீபமேற்றி, விநாயகர் பாடல்கள், ஸ்தோத்திரங்களை பாடி, மாலையில் கொழுக்கட்டை நைவேத்யம் செய்து, பிறகு சந்திர தரிசனம் செய்துவிட்டு எளிமையான உணவை எடுத்துக்கொண்டு விரதத்தை முடிப்பதும் சிலர் வழக்கம்.
இந்த விரதங்களால் உள்ளம் மேன்மைஅடையும்; உடல் ஆரோக்கியம் வளரும்; எல்லா வளங்களும் நிறையும். விரதம் இருப்பவர்களுக்கு மட்டுமல்ல, அவர்கள் குடும்பத்தினருக்கும், அவர்களை சார்ந்த அனைவருக்கும் விநாயகர் நல்லன எல்லாம் அருள்வார்.
No comments:
Post a Comment