Monday, September 3, 2012
குறைகளை மறந்து நிறையை எடுத்து வாழப் பழக வேண்டும்,
தாகம் எடுத்த குட்டியானை குளத்தைத் தேடிச் சென்றது.
குளக்கரையில் பசுமையான மரங்கள் பூத்துக் குலுங்கின. ஒரு மரத்தில் கிளி ஒன்று வந்து அமர்ந்தது. அதன் பச்சைநிறமும், சிவந்தவாயும் யானைக்குட்டியைக் கவர்ந்து விட்டது.
""என்னை மட்டும் கடவுள் இப்படி கருப்பாக படைத்து விட்டாரே! இந்தக்கிளி இவ்வளவு அழகாக இருக்கிறதே!'' என்று ஏங்கி நின்றது. அப்போது"குக்கூ' என்ற குரல் கேட்டது. குரல் வந்த திசையில் குயில் ஒன்று பாடியபடி பறந்தது. "கருப்பாக இருந்தாலும் இந்த குயில் இனிமையாகப் பாடுகிறதே! என் குரலும் இருக்கிறதே!'' என்று ஒரு தடவை பிளிறிப் பார்த்து வெறுப்படைந்தது. சில வண்ணத்துப்பூச்சிகள் மலர்களில் இருந்த தேனை உண்பதைக் கண்டது. ஐயோ! என் தும்பிக்கை இந்த மலரின் மேல் பட்டாலே உதிர்ந்து விடுமே! பிறகெப்படி தேன் குடிப்பது,'' என்று வருத்தப்பட்டது. தன்னைத் தவிர மற்ற உயிர்கள் எல்லாம் மகிழ்ச்சியாக இருப்பதாக எண்ணிகண்ணீர் சிந்தியது. குட்டியைக் காணாத தாய் யானை குளத்திற்குத் தேடி வந்தது.
தாயிடம் குட்டியானை வருத்தத்தைச் சொல்லி அழுதது.
""கண்ணே! உன்னிடமுள்ள குறையை மட்டும் பார்க்கும் நீ நிறைகளைப் பார்க்கத் தவறிவிட்டாய். கடவுள் நமக்கும் பலமான துதிக்கை, வெண்ணிற தந்தம், தூண் போன்ற நான்கு கால்கள் கொடுத்திருக்கிறார். அதனால் மனிதர்கள், "யானை இருந்தாலும் இறந்தாலும் ஆயிரம்பொன்,'' என்று சொல்கிறார்கள். சொல்லப்போனால், முதற்கடவுளாக இருப்பவரே ஆனைமுகன் தான். இதோ! இந்த மரத்தை உன்னால் பிடுங்கி எறிந்து விட முடியும். மற்ற உயிர்களால் அது முடியுமா! எல்லாருக்கும் வாழ்வில் குறைநிறை உண்டு. குறைகளை மறந்து நிறையை எடுத்து வாழப் பழக வேண்டும்,'' என்றது.
தாயின் அறிவுரை கேட்ட குட்டிக்கு கவலை மறந்தது.
No comments:
Post a Comment