Monday, September 3, 2012

நமக்கு பெரும் துன்பம் செய்தவர்களுக்கும் நாம் நன்மையே நினைக்க வேண்டும்

கவுதமன் என்பவன் அந்தணகுலத்தில் பிறந்தாலும், பெற்றோர் சொல் கேளாமல் கெட்டவனாகி விட்டான். காட்டுக்குச் சென்று வேட்டையில் ஈடுபட்டு மாமிசம் சாப்பிட்டான். தன் குடும்பத்துக்கு ஒத்துவராத பெண்ணைத் திருமணம் செய்து கொண்டான். அவன் செய்த அநியாயங்கள் கொஞ்ச நஞ்சமல்ல. ஒருமுறை, ஒரு அறிஞர் கவுதமனைப் பார்த்தார். ""கவுதமா! அந்தணனாகப் பிறந்த நீ இத்தகைய இழிசெயல்களைச் செய்யலாமா? இனி மிருக வேட்டையாடாதே. வேறு தொழில் செய்து பிழைத்துக்கொள்,'' என்றார். கவுதமனுக்கு அந்த நேரத்தில் நல்ல நேரம் பிறக்கவே, அவரது யோசனையை ஏற்றான். காட்டுவழியே வந்த வியாபாரிகளுடன் சேர்ந்து ஒரு நகர் நோக்கிச் சென்றான். அப்போது, யானைகள் வியாபாரிகளைத் துரத்த, ஆளுக்கொரு திசையாக தப்பி ஓடினர். கவுதமன் ஒரு சோலைக்குள் புகுந்து விட்டான். அங்கு பழமரங்கள் ஏராளமாக இருந்ததால், அவனது பசி தீர்ந்தது. அயர்ந்து உறங்கிவிட்டான். அப்போது, ஒரு கொக்கு அங்கு வந்தது. அதன்பெயர் ராஜதர்மன். அதற்கு மனிதபாஷை தெரியும். மனிதர்களைப் போல் பேசவும் செய்யும். கவுதமன் விழித்ததும்,""ஐயா! நீர் என் இடத்துக்கு வந்துள்ளதால் எனக்கு விருந்தாளி ஆகிறீர். இங்கே தங்கிச் செல்லலாம்,'' எனக்கூறி அவனது குறையைக் கேட்டது. தன் ஏழ்மையைச் சுட்டிக்காட்டி, சம்பாதிக்க வேண்டும் என்று அவன் கூறவே, அவனை தனது அரக்க நண்பனான விருபாக்ஷன் என்பவனிடம் அனுப்பியது. கவுதமனும் விருபாக்ஷனைச் சந்தித்து, விஷயத்தைச் சொல்ல, அரக்கனும் அவனை நன்றாக உபசரித்து, பெரும் பணமூட்டையைக் கொடுத்தான். அதை எடுத்துக்கொண்டு அவன் திரும்பி வரும்போது, மீண்டும் கொக்கு நண்பனைச் சந்தித்தான். ""ராஜதர்மா! உன்னால் நான் நற்பலன் அடைந்தேன், நன்றி,' 'என்றான். கொக்கும் அவனை இன்னும் சிலநாட்கள் தன்னுடன் தங்கிப்போகலாம் என்று கூறி, மீண்டும் உபசரித்தது. சிலநாட்கள் கழிந்தன. கவுதமன் ஊருக்கு கிளம்பினான். அப்போது, மீண்டும் பழையபுத்தி அவனை வந்து ஒட்டிக்கொண்டது. ""போகும் வழியில் சாப்பிட ஏதாவது வேண்டுமே! இந்தக்கொக்கு கொழுகொழுவென இருக்கிறது. இதை அடித்துச் சுட்டு இறைச்சியை வைத்துக்கொண்டால் உணவுப்பிரச்னை இருக்காது' என்று எண்ணிய அவன், திட்டத்தைச் செயல்படுத்தி விட்டான். இப்போது அவன் பையில் கொக்கு இறைச்சி இருந்தது. நண்பனைக் காணாத விருபாக்ஷன் தன் மகனிடம், ""மகனே! ராஜதர்மனை நான்கு நாட்களாகக் காணவில்லை. அவன் தினமும் ஒருமுறையாவது என்னைச் சந்தித்து விடுவான். நம்மைக் காணவந்த கவுதமன் நல்லவன் இல்லை என்பதைப் புரிந்து கொண்டேன்., இருந்தாலும், ராஜதர்மன் அனுப்பிய ஆள் என்பதால் <உ<தவினேன். நீ ராஜதர்மனைத் தேடி வா. அவன் கிடைக்காவிட்டால், கவுதமனை எப்படியாவது இழுத்து வா,'' என்றான். ராஜதர்மன் கொல்லப்பட்டதை அறிந்த விருபாக்ஷனின் மகன், கவுதமனை இழுத்து வந்தான். நன்றி கெட்ட அவனைக்கொன்று இறைச்சியை உண்ணுமாறு அரக்கர்களுக்கு விருபாக்ஷன் உத்தரவிட்டான். ""அரசே! இவனெல்லாம் ஒரு மனுஷனா! இவனைத் தொட்டாலே பாவம். நன்றி கெட்ட இவனது இறைச்சியைத் தின்றால் எங்களுக்கும் அதே புத்தி வந்து விடும்,'' என்றவர்கள் அவனைக்கொன்று புதைத்து விட்டனர். பின் பிரம்மா அமுதகலசத்துடன் அங்கு வந்து, கொக்கை உயிர்ப்பித்தார். உயிர்த்தெழுந்த கொக்கு, ""என்ன இருந்தாலும் கவுதமன் என் விருந்தினன், சந்தர்ப்பவசத்தால் தவறு செய்தான். அவனையும் உயிர்ப்பியுங்கள்,'' என்றது. பிரம்மா அவனையும் உயிர்ப் பித்தார். நன்றி மறக்கக்கூடாது. நமக்கு பெரும் துன்பம் செய்தவர்களுக்கும் நாம் நன்மையே நினைக்க வேண்டும் என்பது இந்தக்கதை உணர்த்தும் பாடம்.

No comments:

Post a Comment