Wednesday, September 26, 2012
ஐந்து வகையான பிரளயங்கள்
உலக முடிவைப் பிரளயம் என்று சைவம் சொல்லுகின்றது. இவ்வாறு ஐந்து வகையான பிரளயங்களைப்பற்றியும் அவற்றின் காலங்களைப்பற்றியும் சைவம் விளக்கமாகவும், துல்லியமாகவும், அச்சொட்டாகவும் சொல்லுகின்றது. .
1. நைமித்திக பிரளயம்; இது ஒவ்வொரு மன்வந்தரத்தின் முடிவிலும் நிகழ்வது. ஒவ்வொரு மன்வந்தரமும் எழுபத்தொரு சதுர்யுகங்கள் கொண்டது. தற்போது நடப்பது வைவஸ்வத மன்வந்தரத்தில் இருபத்தெட்டாவது சதுர்யுகம். சதுர் என்றால் நான்கு. ஒவ்வொரு சதுர்யுகமும் கிருத யுகம், திரேதா யுகம், துவாபர யுகம், கலியுகம் என்று நான்கு யுகங்கள் கொண்டது. ஒவ்வொரு சதுர் யுகத்திலும் நாற்பத்து மூன்று இலட்சத்து இருபதாயிரம் வருடங்கள் உள்ளன. வைவஸ்வத மன்வந்தரத்தின் இருபத்தெட்டாவது சதுர் யுகத்தில் கிருத, திரேதா, துவாபர யுகங்கள் முடிந்து இப்போது நடப்பது நான்காவது யுகமான கலியுகம். இது நான்கு இலட்சத்து முப்பத்திரண்டாயிரம் வருடங்கள் கொண்டது. இந்தக் கலியுகம் மகாபாரத யுத்தம் முடிந்து கிருஷ்ண பரமாத்மா இவ்வுலக வாழ்வை நீத்த பின்னர் கி.மு. 3101 பெப்ரவரி மாதம் பதினேழாம் திகதி தொடங்கியது. ஆகவே கலியுகம் முடிய இன்னமும் நான்கு இலட்சத்து இருபத்தாறாயிரத்து எண்ணூற்று எண்பத்தெட்டு வருடங்கள் உள்ளன. இந்த கலியுகம் முடியும் தறுவாயில் விஷ்ணுவின் கல்கி அவதாரம் நிகழும். அவர் விஷ்ணுயசிரயன் (விஷ்ணுயசஸ்) என்னும் அந்தணனுக்கு மகனாக சாம்பலம் என்ற கிராமத்தில் பிறப்பார். மீண்டும் தர்மத்தை நிலை நிறுத்துவார். ஆனால் உலக முடிவு வராது. இந்த கலியுகம் முடிய இருபத்தொன்பதாவது சதுரயுகத்தின் முதலாவதுயுகமான கிருத யுகம் மீண்டும் தொடங்கும். இதையே ரஷ்யப் புரட்சி பற்றிப் பாடும்போது பாரதி "கிருத யுகம் எழுக மாதோ" என்று பாடினான்.
இவ்வாறு ஒன்றன் பின் ஒன்றாக எழுபத்தொரு சதுர்யுகங்களும் கழிந்த பின்னர் மன்வந்தர முடிவில் ஒரு பிரளய அழிவு உண்டாகும். அது எமது பூலோகத்துக்கு மட்டும் நிகழ்வது. பூலோகம் என்பது பூமி மட்டும் அல்ல; எமது சூரிய குடும்பம் உள்ளிட்ட இரண்டாயிரம் மில்லியனுக்கு மேற்பட்ட சூரிய குடும்பங்களை உடைய எமது ஆகாயகங்கை என்னும் இந்தப் பால்வீதியில் உள்ள அத்தனை அண்டத்தொகுதிகளும் இந்தப் பிரளயத்தில் அழியும். இதுவே நாம் வாழும் எமது உலகின் முடிவுக்காலமாகும். இவை யாவும் ஒரு கிருத யுக காலம் அதாவது பதினேழு இலட்சத்து இருபத்தெட்டாயிரம் வருடங்கள் நீருள் அமிழ்ந்திருக்கும். இந்தப்பிரளயம் எப்படி இருக்கும் என்று சிந்திப்பவர்கள் 2012 திரைப்படத்தைப் பார்த்தால் பிரளயம் என்பது எப்படி இருக்கும் என்று புரிந்துகொள்ளலாம்.
ஆனால் பிரளயம் வருகின்ற 2012 இல் நிகழாது. கி.பி. நான்கு இலட்சத்து இருபத்தெண்ணாயிரத்து எண்ணூற்று எண்பத்தொன்பதாவது வருடமளவில் வரப்போகின்ற பிரளயத்தில் இந்தப் பூமி மட்டுமல்ல நமது ஆகாய கங்கை என்னும் பால்வீதியில் உள்ள அத்தனை அண்டத்தொகுதிகளும் அழியும். அப்போது பூலோகம் தவிர்ந்த ஏனைய உலகத்தொகுதிகள் யாவும் வழமைபோல இயங்கிக்கொண்டிருக்கும். பிரளய கால முடிவில் மீண்டும் இந்த உலகங்கள் பிரம்மாவினால் படைக்கப்படும்.
இவ்வாறான பிரளய காலம் ஒன்றில் நீருள் அமிழாது அக்காலத்தில் உயர்ந்து நின்ற சிகரம் ஒன்றுதான் திருஞானசம்பந்தர் அவதரித்த சீர்காழி. இதேமாதிரியாக 2012 திரைப்படத்தில் எமது இன்றைய உலகின் உயர்ந்த சிகரமான எவரெஸ்டு ஒரு சிறு குன்றாக தண்ணீருக்கு மேல் நிற்பதையும் அதன்போது ஆபிரிக்காவில் வேறொரு மலை உருவாகி அதுவே அப்போதைய உலகின் உயர்ந்த சிகரம் என்றும் திரைப்படம் சொல்வது ஒப்பிடத்தக்கது. அம்மையப்பராகிய இறைவர் பிரளய காலத்தில் பிரணவத்தைத் தோணியாக்கி சீர்காழியில் சுற்றி வந்ததாக சைவம் கூறுகின்றது. இதனாலேயே சீர்காழிக்கு தோணிபுரம் என்று பெயர். இது திரைப்படத்தில் கப்பலில் இடம் பிடித்து தப்பிப்பிழைப்பவர்கள் குன்றாகக் குறுகிப்போய் நிற்கும் எவரெஸ்டை தமது கப்பலில் பார்வையிட்டுச் சுற்றி வருவதோடு ஒப்பு நோக்கத்தக்கதாகும்.
2. நித்திய பிரளயம்; ஆயிரம் சதுர் யுகங்களுக்கு அதாவது 362 கோடி வருடங்களுக்கு ஒருமுறை நிகழவது நித்திய பிரளயம் ஆகும். இது ஒரு கல்ப காலம். இது படைப்புக்கடவுளான பிரம்மாவுக்கு ஒரு பகற்பொழுது. இப்போது நடப்பது சுவேதவராக கல்பமாகும். முன்னைய கல்ப முடிவில் அமழ்ந்திருந்த உலகத்தை விஷ்ணுவானவர் வெள்ளைப்பன்றி வடிவெடுத்து மேலே கொண்டு வந்ததால் இதற்கு இந்தப்பெயர். சுவேதம் என்றால் வெள்ளை; வராகம் என்றால் பன்ற என்று அர்த்தம். இது விஷ்ணுவின் பத்து அவதாரங்களில் ஒன்று. நித்திய பிரளயத்தில் எமது பூலோகம் என்னும் பால்வீதியில் உள்ள அனைத்து அண்டத்தொகுதிகளுடன் அதற்கும் அப்பாலும் உள்ள புவர் லோகம், சுவர் லோகம் என்னும் அண்டத்தொகுதிகளும் அழியும். இந்த மூவுலங்களைச்சார்ந்த அண்டங்கள் யாவும் இந்த நித்திய பிரளயத்தின் பின்னர் ஆயிரம் சதுர் யுக காலம் நீரினுள் அமிழ்ந்திருக்கும். இது பிரம்மாவுக்கு இரவுக்காலமாகும். இக்காலத்தில் இந்த மூவுலகங்கள் தவிர்ந்த ஏனைய உலகங்கள் வழமைபோல இயங்கிக்கொண்டிருக்கும். இதன் பின்னர் பிரம்மாவினுடைய பகல் தொடங்க அவர் இம்மூவுலகங்களையும் முன்போலப் படைப்பார்.
3. அவாந்தர பிரளயம்; நாம் வசிக்கும் பூமி உள்ளிட்ட பால்வீதி அண்டத்தொகுதிகள் யாவும் பூ லோகம் என்று பார்த்தோம். இதற்கு மேலே ஏழு உலகத் தொகுதிகள் உள்ளன. இவற்றின் வரிசை பின்வருமாறு:
1. பூலோகம்
2. புவர் லோகம் ;இது எமது பால் வீதிக்கு அடுத்ததாக 2.5 மில்லியன் ஒளி வருட தூரத்துக்கு அப்பால் உள்ள அன்ட்றோமீடா அண்டத்தொகுதியாக இருக்கலாம்.
3. சுவர் லோகம் - இதைத்தான் சுவர்க்க லோகம் என்று மதங்கள் கூறுகின்றன.
4. மஹர் லோகம்
5. ஜன லோகம் -இங்குதான் எமது பித்ருக்கள் உறைகின்றார்கள்.
6.தப லோகம்
7.சத்திய லோகம் - இங்கு பிரம்மா தனது பத்தினிகளாகிய காயத்திரி, சாவித்திரி, சரஸ்வதி ஆகியோருடன் உறைகின்றார்.
இந்த உலகங்களின் குறிப்பை காயத்திரி மந்திரத்திலும் காணலாம். இதற்கும் மேலே விஷ்ணு லோகம் உள்ளது. இதை வைகுந்தம் என்பர். இதற்கும் மேலே உள்ளது சிவலோகம்.
இதேபோல கீழ் உலகங்கள் அதளம் முதல் பாதாளம் ஈறாக ஏழு உள்ளன. இவையாவன
1. அதலம்
2. விதலம்
3. சுதலம்
4. தலாதலம்
5. ரசாதலம்
6. மகாதலம்
7. பாதாளம்
இதனால்தான் ஒருவருடைய வீழ்ச்சியைக் குறிப்பிடும்பொழுது அதல பாதாளத்தில் விழுந்து விட்டார் என்று கூறும் வழமை உள்ளது.
இவ்வாறாக மேல் உலகங்கள் ஏழு, கீழ் உலகங்கள் ஏழு என்று எல்லாமாக பதினான்கு உலகத்தொகுதிகள் எமது பூலோகத்துக்கு அயல் உலகங்களாக உள்ளன. இவற்றையே "புவனம் பதினான்கையும் பூத்தவளே" என்று அபிராமி அந்தாதியும் "நின் கிங்கிணி ஓசை பதினான்குலகமும் கேட்டதுவே" என்று கந்தரலங்காரமும் கூறுவதும் இந்தப் பதினான்கு உலகத் தொகுதிகளையே. இவற்றுள் எமது அண்டவியல் விஞ்ஞான அறிவு ஆராய்ச்சிகளுக்கு உட்படுவது பூலோகம் என்னும் பால்வீதி அண்டத்தொகுதியாகும். இதன் படங்களைப் பார்த்தால் ஒரு பாய்ச்சுருள் போல் இருக்கும். இதையே பாய்ச்சுருளான அண்டத்தொகுதி என்று பாகவத புராணம் கூறுகின்றது.
இந்தப் பதினான்கு உலகங்களுக்கும் அப்பால் இன்னமும் பல அண்டத்தொகுதிகள் உள்ளன. இவற்றில் ஆறு பேரண்டங்களை உள்ளடக்கிய அண்டத்தொகுதியைப் பிரம்மாண்டம் என்று கூறுவர். மானுட சிந்தனைக்கும் ,கற்பனைக்கும் எட்டக்கூடிய அதிகூடிய அண்டப்பரிமாணம் இதுதான்.
இந்த ஆறு அண்டத்தொகுதிகளுக்கு அப்பாலும் எட்டு திக்குகளிலும், மற்றும் மேல் கீழாகவும் திசை ஒவ்வொன்றுக்கும் பத்து பத்தாக நூறு அண்டத்தொகுதிகள் உள்ளன. இவை எல்லாவற்றுக்கும் உச்சியில் பத்திரகாளி புவனமும், வீரபத்திர புவனமும் உள்ளன. ஆக மொத்தமாக நூற்றெட்டு புவனங்கள் ஒன்றாக நிவிருத்தி கலா புவனங்களாக உள்ளன. நாம் நூற்றெட்டு நாமங்கள் சொல்லி வழிபடுவது எமது அயற்புவனங்களான இந்த நூற்றெட்டு புவனங்களில் உள்ள அனைத்து உயிர்களின் க்ஷேமத்துக்காகவே. இந்த நூற்றெட்டு புவனங்களுக்கு அப்பாலும் பிரதிட்டாகலை புவனங்கள் என்று ஐம்பத்தாறு அண்டத்தொகுதிகள் உள்ளன.
முன்னர் சொன்ன நூற்றெட்டு புவனங்களுடன் இந்த ஐம்பத்தாறு புவனங்களுமாக உள்ள நூற்று அறுபத்து நான்கு புவனங்களும், அவற்றைப் படைத்துக் காத்து அழிக்கும் திரிமூர்த்திகளாகிய பிரம்ம, விஷ்ணு, உருத்திரர்களும் பல்லாயிரம் கோடி வருடங்களினூடாக இவற்றுக்கு அப்பாற்பட்டுள்ள வித்தியா தத்துவ புவனங்களில் வதியும் ஸ்ரீகண்ட ருத்திரரிடம் ஒடுங்குவது அவாந்தரப் பிரளயம் ஆகும். இங்கு கூறப்படுகின்ற பிரம்ம, விஷ்ணு, உருத்திரர்கள் இவ்வுலகங்களில் உள்ள மற்றைய உயிர்களைப்போல முக்குண தோஷங்களுக்குட்பட்டவர்களே இவர்களை குணிப் பிரம்மா, குணி விஷ்ணு, குணி உருத்திரன் என்று சைவம் கூறுகின்றது. இவர்கள் பிறப்பு இறப்புகளுக்கு அப்பாற்பட்ட இறையின் பரப்பிரம்மா. மகாவிஷ்ணு, பரசிவன் ஆகிய தோற்றங்களில் இருந்து வேறுபட்டு நிற்பவர்கள். எப்பொழுதும் பர மற்றும் மகா என்னும் சிறப்புப் பதங்கள் ஒப்புயர்வற்ற ஒன்றேயான பிறப்பு இறப்பு அற்ற ஒரே இறையைக் குறிக்கும் பதங்களாம்.
4. மத்திம பிரளயம்; ஸ்ரீகண்ட ருத்திரரும் அவர் உள்ளிட்ட ஏனைய உயிர்களும் வதியும் குணதத்துவ புவனம் உள்ளிட்ட இருபத்தேழு வித்தியா கலை புவனங்களும் பல்லாயிரக்கணக்கான கோடி வருடங்களினூடாக சுத்த வித்தியா தத்துவ புவனங்களில் வதியும் அனந்தேசுவரர் என்னும் சிவனிடம் ஒடுங்குகின்றன. இது மத்திம பிரளயம் ஆகும்.
5. மகா பிரளயம் அல்லது மகா சங்காரம்; மேற் சொன்ன அனந்தேசுவரர் உள்ளிட்ட உயிர்கள் வதியும் முப்பத்து மூன்று சுத்த வித்தை புவனங்களையும் ஒடுக்குவது இந்த புவனங்களுக்கும் தத்துவங்களுக்கும் அப்பாலாய் நிற்கும் பரப்பிரம்மமாகிய பரசிவன் ஆவார். இது மகாப் பிரளயம் அல்லது பேரூழிக்காலம் எனப்படும். இவர் சக்தியே பராசக்தி. இவரது நவந்தரு பேதமென்னும் ஒன்பது வடிவங்களில் ஒரு பேதமே மகாவிஷ்ணு. இந்த மகாசிவனே பஞ்ச கிருத்தியம் என்னும் படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் தொழில்களுக்குரிய சதாசிவர். இவரே சத் சித் ஆனந்த சொரூபியாகிய நடன சிவன் என்னும் நடராசர். இவரது திருமேனியே சிவலிங்கத் திருமேனி ஆகும். ஓம் ஸ்ரீ தத்துவாசனாயை நமஹா என்று ஸ்ரீ லலிதா சகஸ்ரநாமம் கூறுவது இவ்வாறு 224 அண்டத்தொகுதிகளுக்கும் மூலமான முப்பத்தாறு தத்துவங்களையும் ஆசனமாக அல்லது தளமாகக்கொண்டு இருக்கும் இந்த பராசத்தியையே. இந்த தத்துவ உலகங்களுக்கு அப்பாற்பட்டு மஹாகைலாசம் இங்கு உள்ளது. அந்த மஹா கைலாசத்தில் நிலைகொண்டுள்ள சக்தியையே மஹாகைலாச நிலயாயை நமஹா என்று ஸ்ரீ லலிதா சகஸ்ரநாமம் கூறுகின்றது. அம்மையப்பராகிய இறை அமரும் கைலாசம் இதுவே. நமது பூலோக கைலாசம் இதன் ஒரு சின்னமே ஆகும். இங்கு கூறப்பட்ட 224 அண்டத்தொகுதிகளும் எமது புவி சார்ந்த கோடிக்கணக்கான அண்டத்தொகுதிகளில் ஒன்றினது விவரணமேயாகும்.
இவ்வளவு காலமும் இறையின் பஞ்ச கிருத்தியங்களுக்கு காரணமாக இருந்த சக்தியும் மகாசங்காரத்தின் முடிவில் சிவத்தில் ஒடுங்கும். அப்போது சிவன் ஆடுவது சங்கார தாண்டவம். சிவனுடைய எல்லா தாண்டவங்களிலும் அருகில் இருக்கும் சக்தி இந்த சங்கார தாண்டவத்தில் இருப்பதில்லை. ஏனெனில் சங்கார காலத்தில் எல்லா உயிர்களும் மாயையில் ஒடுங்க, மாயை சக்தியில் ஒடுங்க, சக்தியும் சிவத்தில் ஒடுங்கும். அப்போது உலகின் இருமை வயப்பட்ட உந்தல்கள் எல்லாம் ஒடுங்கி ஒன்றாகும். இதையே அண்டவியல் விஞ்ஞானம் ஒருமைப்புள்ளி (point of singularity)என்று கூறுகின்றது. இதுவே ஸ்ரீ சக்கரத்தின் முப்பரிமாணமாக அமைந்துள்ள மகாமேருச் சக்கரத்தின் உச்சியில் உள்ள முக்கோண வடிவத்தின் மேல் உள்ள புள்ளியாகிய பிந்து.
நவ ஆவரணங்களாகவுள்ள மகாமேருச்சக்கரம் இவ்வாறு பல்வேறு படிநிலைகளில் உள்ள அண்டத்தொகுதிகள் ஒன்றன் பின் ஒன்றாக, ஒழுங்கு முறையில், ஒன்றில் ஒன்று ஒடுங்கி, ஈற்றில் யாவும் சக்தியில் ஒடுங்க, அறுதியாக சக்தியும் சிவத்தில் ஒடுங்குவதைக் காட்டும் இயந்திர வடிவமாகும். சிவலிங்கத்தில் உள்ள ஆவுடையார் இந்த மகாமேருச்சக்கரத்தின் முக்கோண வடிவு குறிக்கும் பராசக்தியே. இந்த ஆவுடையாரை ஊடறுத்து நிற்கும் லிங்கம் மகாமேருச்சக்கரத்தின் உச்சிப் புள்ளியான பிந்து ஆகும். சில சக்கர வடிவங்களில் இந்தப்புள்ளி நீட்டமாக இலிங்க வடிவிலேயே அமைந்திருப்பதைக் காணலாம். இது ஈற்றில் சக்தியும் சிவத்தில் ஒடுங்குவதைக் குறிக்கின்றது.
சக்தியை முழுமுதற் கடவுளாகக்கொள்ளும் சாக்த சம்பிரதாயத்தில் சிவமும் சத்தியில் ஒடுங்க, ஈற்றில் சத்தியே நிலை பெற்றிருப்பதாகச் சொல்வார்கள். அவர்கள் மகாமேருச்சக்கரத்தின் முக்கோணத்தை சிவம் என்றும், அதன் மேல் உள்ள புள்ளியை சக்தி என்றும் கொள்வர். இது சிவனின் உடலின் மேல் அமர்ந்திருக்கும் சக்தியின் திருவுருவப் படங்களுக்கு ஒப்பானது. ஆயினும் இம்முறையில் சிவலிங்க வடிவில் உள்ள ஆவுடையாருக்கும் இலிங்கத்துக்கும் விளக்கம் தர முடிவதில்லை. சைவம் ஒன்றேதான், தான் உள்ளிட்ட கடந்த கால, நிகழ்கால, எதிர்கால மதங்கள், அவற்றின் கொள்கைகள், வடிவங்கள் யாவற்றையும் உள்ளடக்கக்கூடியதாகவும், விளக்கும் தன்மையதாகவும் அமைந்து இவை எல்லாவற்றுக்கும் அப்பாலானதாய், இராஜாங்கத்து அமர்ந்து விளங்குகின்றது. சைவம் விளங்கினால் எல்லா சமயங்களும் விளங்கும். "மேன்மைகொள் சைவ நீதி விளங்குக உலக மெல்லாம்'
இறுதியாங் காலந் தன்னில் ஒருவனே இருவருந்தம்
உறுதியின் நின்றா ரென்னின் இறுதிதான் உணாடாகாதாம்
அறுதியில் அரனே எல்லாம் அழித்தலால் அவனால் இன்னும்
பெறதும்நாம் ஆக்க நோக்கம் பேரதி கரணத்தாலே
-சிவஞானசித்தியார் பாடல் 55-
No comments:
Post a Comment