Thursday, September 6, 2012
தன் நட்பின் வலிமை யால் தன் தோழனுக்கும் கயிலாயத்தில் இடம்பெற்றுத் தந்த கதையை அறிவீர் களா?
இந்திய சமூகத்தில் நட்புக்கும் கற்புக்கும் பெரிய மதிப்புண்டு. இந்தியாவின் பெருங்காவியங்களான இராமாயணத்திலும் மகாபாரதத்திலும் நட்பையும் கற்பையும் போற்றும் முன்னுதாரணப் பாத்திரங்கள் பல உள்ளன.
தன் கற்பின் வலிமையால் எமனிடமிருந்து தன் கணவன் சத்தியவானின் உயிரை மீட்டு வந்த சாவித்திரி கதையை நாம் அறிவோம். தன் நட்பின் வலிமை யால் தன் தோழனுக்கும் கயிலாயத்தில் இடம்பெற்றுத் தந்த கதையை அறிவீர் களா? சுந்தரர்- பெருமாக் கோதையார் கதை, நட்பின் பெருமையை மட்டுமின்றி ஆடி மாத சுவாதித் திருநாளின் அருமையையும் பேசுகிறது.
சேரநாட்டை ஆண்டு வந்த பெருமாக் கோதையார் என்ற மன்னன் சிறந்த சிவபக்தன். திருவஞ்சிக்குளம் உமாமகேஸ்வரர்மேல் தீராக் காதல் உடையவன். அவன் உள்ளத் தூய்மையுடன் சிவனை வணங்கும்போதெல்லாம் தில்லை அம்பலக்கூத்தனின் சிலம்பொலி கலீர் கலீரெனக் கேட்கும். சிலம்பொலி நாதம் கேட்டபின்பே மன்னன் அமுதுண்ணுவது வழக்கம்.
ஒருநாள் சேரமான் இறைவனை வழிபடும்போது சிலம்பொலி கேட்க வில்லை. மன்னன் திகைப்படைந்தான். "தன் பக்தியில் குறை நேர்ந்துவிட்டதோ! அதனால்தான் சிலம்பொலி கேட்கவில்லையோ' எனக் கருதி, தன் உடைவாளால் தன்னுயிரை மாய்த்துக்கொள்ளத் துணிந்தான். அப்போது சிலம்பொலி அதிர சேரமான் முன்பு ஈசன் தோன்றி, ""வருந்தாதே மன்னா! என் பக்தன் சுந்தரன் தேனினும் இனிய பாடல்களால் தினமும் என்னை அபிஷேகம் செய்வான். இன்று, அதில் நான் மெய்மறந்துவிட்டேன். எனவேதான் சிலம்பொலி கேட்க சற்று தாமதமாகிவிட்டது'' என்றார்.
ஈசனின் இதயத்தையே உருக்கும் பாடல்களைப் புனையும் இத்தகையதோர் சிறப்புமிக்க சிவனடியாரை அறியாது போனோமே என்றெண்ணிய சேரன், தில்லை சென்று அம்பலவாணரைத் தரிசித்தான். பின் திருவாரூர் சபாபதி யைத் தரிசித்துவிட்டு சுந்தரரின் இல்லம் தேடிச் சென்றான். அவருடன் நட்பு கொண்டு அளவளாவி மகிழ்ந்தான். சேரன் தனது பூர்விகமான திருவஞ்சிக்குளத்துக்கு வருமாறு சுந்தரருக்கு அழைப்பு விடுத்தான்.
அவரது அழைப்பையேற்று வஞ்சிக்குளம் சென்று, சிறிது காலம்
அங்கு கோவில் கொண்டுள்ள ஈசனை ஆராதித்து மகிழ்ந்தார் சுந்தரர்.
பின் தன் நாடு திரும்பிய சுந்தரர் தொண்டை மண்டலம், பாண்டி நாடு என பல சிவத் தலங்களையும் தரிசித்து விட்டு மீண்டும் திருவஞ்சிக்குளம் சென்றார். சேரனின் நட்பு அவரை காந்தமென ஈர்த்தது. தன்னைக் காண வந்த சுந்தரரை மன்னன் மேளதாளங்களுடன் வரவேற்று, யானைமீது அமரச் செய்து ஊர்வலமாக அழைத்துச் சென்று, அரியணையில் அமர்த்தி பாத பூஜை செய்து கௌரவித்தான். சுந்தரரும் அங்கேயே தங்கி மலைநாட்டுப் பதிகள் பல கண்டு வழிபட்டார்.
சுந்தரர் கயிலை செல்ல வேண்டிய நேரம் வந்தது. "தலைக்குத் தலை மாலை' என்ற பதிகம் பாடிக்கொண்டிருந்த அவரை, வெள்ளை யானையை அனுப்பி அழைத்துவரும்படி சிவகணங்களுக்கு உத்தரவிட்டார் ஈசன்.
அமரர்கள் சூழ யானையின்மீது கயிலாயம் சென்ற சுந்தரரின் நெஞ்சம் நண்பனையே நினைத்தபடி இருந்தது.
தன் உள்ளுணர்வால் இதையறிந்த சேரமான், சுந்தரர் விண்ணிலேறி கயிலை செல்வதைக் கண்டான். உடனே தன் வெண்புரவியில் ஏறியமர்ந்து, அதன் காதில் நமசிவாய எனும் ஐந்தெழுத்தை ஓத, விண்ணில் சென்ற யானையைத் தொடர்ந்து சென்றது குதிரை. இருவரும் கயிலையை அடைந்தாலும் காவலர்கள் சேரமானை உள்ளே அனு மதிக்கவில்லை. சுந்தரர் இறைவனை அடைந்து அவரை வணங்கி, ""என் ஆருயிர் நண்பன் சேரமான் வாயிலில் காத்திருக்கிறார். கருணை கூர்ந்து
அவரையும் உள்ளே அழையுங்கள்'' என்று வேண்டி நின்றார். அடியார்க்கு அருளாமல் வேறு யாருக்கு ஈசன் அருளுவான்? சேரனை உள்ளே அனுமதித்ததும் அல்லாமல், ""இனி நீங்கள் இருவரும் சிவகணங் களுக்குத் தலைவர்களாக இருப்பீர்'' என அருள் புரிந்தார். இவ்வாறு சுந்தரனுக்கும் சேரமானுக்கும் ஈசன் கயிலாயப் பதவி அருளிய நன்னாள்தான் ஆடி சுவாதித் திருநாள்.
No comments:
Post a Comment