Monday, September 3, 2012
நடப்பதெல்லாம் நன்மைக்கே!
இரண்டு நண்பர்கள் விமானத்தில் வெளிநாடு கிளம்பினர். சிறிது தூரம் தான் பறந்திருக்கும். நான்கு பேர் எழுந்தனர். இருவர் துப்பாக்கியை நீட்டியபடியே, விமானி அருகில் சென்றனர். இருவர் பயணிகளை மிரட்ட ஆரம்பித்தனர்.
""<நீங்கள் பயணிக்கும் இந்த விமானத்தை நாங்கள் கடத்தியுள்ளோம். இந்த அரசாங்கம் நாங்கள் கேட்கும் பிணயத்தொகையை எங்களுக்குத் தர வேண்டும். சிறையில் இருக்கும் எங்கள் இயக்க தொண்டர்களை விடுவிக்க வேண்டும். 24 மணி நேரத்திற்குள் இது நடக்காவிட்டால், உங்கள் இறப்பு உறுதியாகி விடும். நாங்கள் தற்கொலை படையினர். பட்டனை அழுத்தினால், விமானம் சுக்கு நூறாகி விடும். யாரும் பிழைக்க முடியாது,'' என்று மிரட்டினர்.
இதற்குள் விமானி அருகில் சென்ற தீவிரவாதிகள், அவரது தலையில் துப்பாக்கியை வைத்து அழுத்தி, தாங்கள் சொல்லும் ஊரில் தரையிறக்க வேண்டும் என்று மிரட்டிக் கொண்டிருந்தனர்.
ஒருவழியாக விமானம் ஏதோ ஒரு நிலையத்தில் தரையிறங்கியது. உள்ளிருந்த நண்பர்களுக்கு அவசரம். நேரத்துக்கு தாங்கள் செல்ல வேண்டிய நாட்டுக்குப் போகாவிட்டால், அவர்களுக்கு கிடைக்க வேண்டிய வியாபார ஒப்பந்தம் வேறு யாருக்கோ கிடைத்து விடும். அவர்களது நிறுவனத்துக்கு கடும் நஷ்டம் ஏற்படும் என்ற நிலை!
அவர்கள் பரபரத்துக் கொண்டிருந்தனர். கடத்தல்காரர்கள் மூன்று நாட்களை கடத்தி விட்டனர். ஒருவழியாக, ராணுவவீரர்கள் விமானத்தில் மின்னலென ஏறி, கடத்தல்காரர்களை வளைத்துப் பிடித்தனர்.
ஆனால், நேரம் கடந்து விட்டதால் இளைஞர்கள் குறிப்பிட்ட இடத்தை அடைய முடியாமல் ஒப்பந்தத்தை இழந்தனர். எனவே, பாதிவழியில் இருந்தே நாடு திரும்பினர். அவர்கள் தாங்கள் தங்கியிருந்த கட்டடத்துக்கு சென்றனர். அவர்கள் கண்டகாட்சி திடுக்கிட வைத்தது. அந்தக்கட்டடம் ஏதோ காரணத்தால் இடிந்து எல்லாரும் இறந்து போயிருந்தனர். நண்பர்கள் மட்டும், ஒப்பந்தத்தை விரைவில் முடித்து மறுநாளே ஊர் திரும்பியிருந்தால் அவர்கள் உயிரும் பறிபோயிருக்கும். "ஒப்பந்தம் மீண்டும் கிடைக்கும், உயிர் போனால் கிடைக்குமா?' இறைவன் ஒன்றைப் பறிக்கிறான் என்றால் அதில் ஆயிரம் அர்த்தங்கள் இருக்கும் என்பதை இந்த சம்பவம் தெளிவாக்குகிறது அல்லவா!
No comments:
Post a Comment