Monday, September 3, 2012
இறைவனுக்கு மரியாதை
தஞ்சை மன்னன் ஒருவன், காவிரிப்பூம்பட்டினத்தில் கடல் நீராட சென்று கொண்டிருந்தான். தருமபுரத்தைக் கடந்தபோது, கோயில் மணி சப்தம் கேட்டது. அது அவ்வூரிலுள்ள ஞானபுரீஸ்வரர் கோயில் மணி. அர்த்தஜாம பூஜைக்காக எழுப்பிய மணி ஒலி அது.
இறைவனுக்கு மரியாதை தெரிவிக்கும் விதத்தில் மன்னன் பல்லக்கில் இருந்து இறங்கினான். வெளியில் நின்றபடியே இறைவனை வணங்கினான். அக்காலத்தில் சைவர்களுக்கும், பிற மதத்தினருக்கும் பிரச்னை உருவாகிக்கொண்டே இருக்கும். அந்தமதத்தைச் சேர்ந்த சிலர், ""மன்னா! இந்த இடத்தில் இறங்கியா வணங்கினீர்கள்! இது ஒரு சைவ சமாதி. தாங்கள் இதை வணங்கியதால், அதற்குரிய பரிகாரம் செய்து விட்டு கிளம்புங்கள்,'' என்றனர். மன்னனும், அதைநம்பி அவ்வாறே செய்தததுடன், கோயிலை சமாதியென நினைத்து இடித்துத் தள்ளவும் உத்தரவிட்டான்.
இதையடுத்து ஏவலர்கள் அதை இடிக்க ஆரம்பித் தனர். இதைக் கண்ட அவ்வூர் சிவனடியார்கள், தருமபுரம் ஆதீனத்தில் ஏழாவது குருவாக அப்போது இருந்த திருவம்பல தேசிகரிடம் முறையிட்டனர்.
அவர்களைத் தேசிகர் அமைதிப்படுத்தினார்.
""நாம் ஏதும் செய்ய வேண்டியதில்லை. இறைவனுக்கு எல்லாம் தெரியும்.
ஆக்கலும் அழித்தலும் அவனைச் சார்ந்தது,' 'என்றவர், "நமசிவாய' மந்திரத்தை தொடர்ந்து ஜெபித்தார். அப்போது, ஏவலர்கள் இடித்த இடத்தில் இருந்து ரத்தம் பொங்கி வழிந்தது. அவர்கள் அதிர்ச்சியில் உறைந்தார்கள். சற்று தூரம் சென்ற மன்னனின் கண்கள் குருடாகி விட்டன.
தவறை உணர்ந்த மன்னன் தருமபுரம் திரும்பினான். தேசிகருடன் சென்று இறைவனிடம் மன்னிப்பு கேட்டு கண் வரப்பெற்றான்.
No comments:
Post a Comment