Wednesday, September 26, 2012
கடவுள் உண்டா? இல்லையா?
அஸ்தி நாஸ்தி அல்லது அத்தி நாத்தி என்பது சமண மதக்கொள்கை. இதில் ஏழு பகுதிகள் உள்ளன. அதனால் இதை ஸப்த பங்கி வாதம் என்பர். ஸப்த என்றால் ஏழு. இந்த அத்தி நாத்தி கடவுளைப் உண்டா என்ற வினாவுக்கு ஏழு விடைகளை முன்வைக்கின்றது. இதற்கு மேல் எட்டாவது விடை ஒன்றை யாருமே கூற இயலாது; முயன்று பாருங்களேன்.
1. சியாத் அஸ்தி - கடவுள் உண்டாம்.
2. சியாத் நாஸ்தி - கடவுள் இல்லையாம்.
3. சியாத் அஸ்தி நாஸ்தி - கடவுள் உண்டும், இல்லையுமாம்.
4. சியாத் அவ்யக்தம்- கடவுள் சொல்லொணாதது.
5. சியாத் அஸ்தி அவ்யக்தம் - கடவுள் உண்டும், சொல்லொணாததுமாம்
6. சியாத் நாஸ்தி அவ்யக்தம்- கடவுள் இல்லையுமாம், சொல்லொணாததுமாம்
7. சியாத் அஸ்தி நாஸ்தி அவ்யக்தம் - கடவுள் உண்டுமாம், இல்லையுமாம், சொல்லொணாததுமாம்.
இது சமஸ்கிருதம் இல்லை; அர்த்த மகத மொழி. மகதம் என்பது இன்றைய இந்தியாவின் பீகார் மாநிலம். சமணம் இங்கிருந்துதான் வந்தது. பல திராவிட வாதிகள் சமணம் திராவிட மதம் என்றும், திருவள்ளுவர் சமணர் என்றும், சமணம்தான் தமிழை வளர்த்தது என்று எண்ணியும், எழுதியும், பேசியும் வருவது வேறு கதை.
எது எப்படியிருந்தாலும் இந்த ஏழு வார்த்தைகளும் எளிமையானவையும், நிரம்பிய அர்த்தம் உள்ளவையுமாகும். அஸ்தி என்றால் உண்டு. இதிலிருந்தே கடவுள் உண்டு என்று சொல்பவர்களை ஆஸ்திகர் என்று சொல்லும் வழமை வந்தது. நாஸ்தி என்றால் இல்லை. இதிலிருந்தே கடவுள் இல்லை என்று சொல்பவர்களை நாஸ்திகர் என்று சொல்லும் வழமை வந்தது.
இந்த அத்தி நாத்தி எழுதிய ஏட்டைத்தான் சமணர்கள் மதுரையில் சம்பந்தருடன் செய்த புனல் வாதத்தில் வைகை ஆற்றில் விட்டார்கள். சம்பந்தர் " வாழ்க அந்தணர்" எழுதிய ஏட்டை ஆற்றில் விட்டார். சம்பந்தர் இட்ட ஏடு ஆற்றில் எதிரேறி கரையையும் அடைந்தது. இவ்வாறு ஏடு எதிரேறி கரை சேர்ந்த இடமே திருவேடகம் ஆகும். இது மதுரையில் இருந்து ஒரு சில கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது. சமணர்களின் அத்தி நாத்தி ஏடு ஆற்றின் போக்குடன் அடித்துச் செல்லப்பட்டது.
இந்த " வாழ்க அந்தணர்" என்ற திருப்பாசுரத்துக்கு பல தனிச்சிறப்புகள் உள்ளன.
1. இது பன்னிரண்டு பாடல்களை உடையது. மற்றைய பதிகங்கள் எல்லாம் பதினொரு பாடல்கள் கொண்டவை.
2. இந்தப்பாசுரத்தை சம்பந்தர் தன் கையாலேயே எழுதினார். சம்பந்தரின் மற்றைய பாடல்களை ஏட்டில் எழுதி வந்தவர் அவருடைய தாய் மாமன் சம்பந்த சரணாலயர். சம்பந்தர் கொடுத்து வைத்தவர். அவருக்கு அழுதால் பால் கொடுக்க உமையம்மை; கோவில்களுக்கு தோளில் தூக்கிச் செல்ல அவரின் தந்தையார்; அவரின் பாடல்களை எழுத ஒரு மாமனார்; அவருக்கு சிவிகை பந்தர் குடை கொடுக்க சிவனார்; பல்லக்கு தாங்க அப்பர் சுவாமிகள் என்று அடுக்கிக்கொண்டே போகலாம்..
3. சைவத்தின் கொள்கை விளக்கம் செய்த பாடல் இது.
4. இதற்கு மட்டுமே சேக்கிழார் 22 பாடல்களில் விளக்கம் கொடுத்திருக்கிறார்.
5. முதல் ஒன்பது பாடல்களின் யாப்பு வேறு; கடைசி மூன்று பாடல்களின் யாப்பு வேறு.
6. சம்பந்தரின் மற்றைய பதிகங்கள் எல்லாம் மற்றைய மதங்களைச் சாடியவையே. பரமத கண்டனம். ஆனால் சைவ சமயத்தை மெய்ச்சமயம் என்று தாபித்த பதிகம் இது ஒன்றே. சுய மத தாபனம். இதுதான் சம்பந்தரை ஆச்சாரிய தானத்துக்கு ஏற்றிய பதிகம். ஆச்சாரிய இலட்சணங்கள் இரண்டு. பரமத கண்டனம்; சுயமத தாபனம். இந்த இரண்டையும் இந்தப்பதிகத்தினூடாகச் செய்திருக்கிறார் சம்பந்தர்.
சமணர்களின் நூல்களிலும் இந்த சம்பவம் குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கு அவர்கள் சொல்லும் விளக்கம் சம்பந்தர் ஏட்டை ஆற்றின் போக்குக்கு எதிராகச் செல்லும் ஒரு மீனில் கட்டி விட்டதால் ஏடு எதிரேறியதாம். அது சரி அப்போது அனல் வாதத்தில் சமணர்களின் ஏடு தீயில் கருகியதற்கும் சம்பந்தர் இட்ட ஏடு நெருப்பில் எரியாமல் இருந்ததற்கும் என்ன சொல்லியிருக்கிறார்கள் இந்தச் சமணர்கள்? சொன்னால் என்னிடம் சண்டைக்கு வராதீர்கள். சம்பந்தரின் ஏடு கற்றாளைச்சாற்றில் ஊற வைக்கப்பட்ட ஏடாம்; அதனால்தான் நெருப்பில் இட்டும் வேகவில்லையாம்.
இன்றும் மதுரையில் நிறைய சமண சமயிகளும், அவர்களுடைய பாடசாலைகளும், சங்கங்களும், இளைஞர் அமைப்புகளும் இருக்கின்றன. காஞ்சியிலும் சமணக் குடியிருப்புகளும், கோயில்களும் இருக்கின்றன, இந்த சமணக்கோவில்கள் அமைப்பில் தென்னிந்திய சைவக்கோவில்களைப்போலவே கர்ப்பக்கிருகம், அதன் மேலாக உள்ள தூபி, விமானம், முன்னால் உள்ள கொடித்தம்பம், பலிபீடம், சுற்றுப்பிரகாரம் என்று அப்படியே சைவக்கோயில்கள் மாதிரி உள்ளன.
இது நிற்க; நாத்தி நாத்தி என்று ஒரு சைவப் பாடலும் உள்ளது. இது சர்வ ஞானோத்தர ஆகமத்தின் பாடல். இது சிவன் முருகனுக்கு உபதேசித்த ஒரு உப ஆகமம். சர்வ ஞானோத்தரம் என்றால் எல்லா ஞானங்களின் முடிபு என்று பொருள். வேதாந்தம் என்றாலும் வேதங்களின் முடிபு என்றுதான் பொருள். ஆனால் அந்தம் என்பதற்கு வடமொழியில் கடைசி என்றும் பொருள் உண்டு. ஆகவேதான் வேதாந்தம் என்பது வேதங்களின் கடைசியிலுள்ள உபநிடதங்களையே குறிக்கும் என்றும் கூறுவர். ஆனால் உத்தரம் என்ற சொல் மேலான ஆதாரமான முடிபு என்றுதான் பொருள் தரும். வீட்டு கூரைக்கு உள்ள உத்தரம் என்ற பகுதியை நினைவு கூருங்கள். ஆகவே சர்வ ஞானோத்தரம் என்றால் எல்லா ஞானங்களினதும் மேலான ஆதாரமான முடிபு என்று பொருள். சர்வ ஆகமங்களினதும் மேலான முடிபு என்றுப் பொருள் கொள்வர். உத்தரம் என்றால் கேள்விக்குரிய விடை அல்லது பதில் என்றும் பொருள் கொள்ளலாம். இதன்படி சர்வஞானோத்தரம் என்பது அனைத்து ஞானத்துக்குமான பதில் என்று பொருள் தரும். இந்த நூலின் மூலம் சமஸ்கிருதத்தில் 240 சுலோகங்களுடன் விளங்குகின்றது. தமிழில் இதை ஆக்கியவர் பெயர் தெரியவில்லை. இது 71 பாடல்களில் தூத்துக்குடி பொ. முத்தையாபிள்ளை அவர்களின் முத்தி ரத்நம் என்னும் உரையுடன் 1923 இல் பதிப்பிக்கப்பட்டிருக்கின்றது.
யாழ்ப்பாணத்து சிவ யோகர் சுவாமிகளின் வழிகாட்டலில் இந்த ஆகமம் படிக்கப்பட்டு வந்ததாக அறிகிறோம். முன்னைய பிரதிகள் எல்லாம் வழக்கொழிந்து கிடையாமல் போன பின்னர் சிவயோகர் மரபில் வந்த புலம் பெயர் தமிழர் ஒருவரிடமிருந்த புத்தகப்பிரதியொன்றின் உதவியினால்தான் இப்புத்தகம் 2002 இலும் 2005இலும் மறுபதிப்புக்கண்டு சித்தாந்த சாத்திரம் படிப்பவர்களின் கைகளில் மீண்டும் தவளத்தொடங்கியுள்ளது. சிவயோகர் மரபில் சர்வஞானோத்தர ஆகம வசனம் இலங்கையில் சமீபத்தில் மீள் பதிப்புச் செய்யப்படுள்ளது.
சரி, நாத்தி நாத்தி பாடலுக்கு வருவோம்.
அத்துவிதம், துவிதம், விசிட்டாத்துவிதமாம் என்று
அபேதம், பேதாபேதம், பேதமாக
முத்தி பலவும் பகர்ந்தோம் பக்குவத்துகு ஈடா(ய்)
முத்தி அதி ரிக்குச் சொன்ன முத்தி குக கேள்,
சுத்த அத்துவிதமான சாக்ஷாத் தாரகையாஞ்
சொன்ன இம் முத்திக்கு மேல் அறிவது ஒன்றும் இல்லை
சத்தியமா(ய்), முதற், புனர், சத்தியம் முக்காலும்
சத்தியமாகும், நாத்தி, நாத்தி, நாத்தி
அத்துவிதம், துவிதம், விசிட்டாத்துவிதம் என்று அபேதம், பேதம், பேதாபேதமாக பக்குவத்துக்கீடா(க) முத்தி அதிகாரிக்குச் சொன்ன முத்தி(யை) குக(னே) கேள்! சுத்த அத்துவிதமான சாட்சாட்காரதையாக ( விளங்கப்பெறுகின்ற) சொன்ன முத்திக்கு மேல் அறியத்தக்கது ஒன்றும் இல்லை. நாத்தி நாத்தி நாத்தி. ( இல்லை, இல்லை, இல்லை.) இது முதல் சத்தியம், புனர் (மீண்டும்)சத்தியம், முக்காலும் சத்தியம். -சர்வஞானோத்தர ஆகமம்; பாடல் 32
No comments:
Post a Comment