Wednesday, September 26, 2012
தாவரங்கள், விலங்குகளுக்கும் நற்கதி
மனிதப்பிறவியின் நோக்கம் இறைவனை அடைதலே. ஆனால் ஏனைய பிறவிகள் அவற்றுக்கு கொடுக்கப்பட்ட உடல், கருவிகள், உலகம், அனுபவங்கள் வாயிலாகப் பக்குவ முதிர்ச்சி பெற்று பின்னர் மேலான மனிதப்பிறவியில் பிறந்து இறையை அடைதல் வேண்டும். ஆனாலும் இதற்கு விதி விலக்குகளும் உள்ளன. ஈ இறைவனை வழிபட்டு நற்கதி அடைந்த தலம் ஈங்கோய் மலை. யானையும் சிலந்தியும் வழிபட்டு நற்கதி அடைந்த தலம் திருவானைக்கா. திருவிளையாடற் புராணத்தின் நாரைக்கு உபதேசித்த படலமும், கரிக்குருவிக்கு முத்தி கொடுத்த படலமும் பன்றிக்குட்டிகளுக்கு பால் கொடுத்த படலமும் விலங்குகள் பறவைகள்கூட இறையை அடைவதற்கும் புண்ணிய பாவ காரியங்களுக்கும் விதி விலக்கல்ல என்று நமக்கு கூறுகின்றன.
அகலியை கல்ல தானாள் அரிபல பிறவி பெற்றான்
பகலவன் குலத்தில் தோன்றிப் பார்எலாம் முழுதும் ஆண்டு
நிகரிலா அரசன் ஆகும் சிலந்தி, நீடுகலம் போற்றச்
சகமதில் எலிதான் அன்றோ? மாவலி ஆய்த்துத் தானே!
என்ற சிவஞான சித்தியார்-சுபக்கம்-134ம் பாடல்
"நிகரிலா அரசனாகும் சிலந்தி" என்று சிலந்தி வழிபட்டு நற்கதி அடைந்த கதையையும் "எலிதான் அன்றோ மாவலி ஆயிற்று" என்று எலி நற்கதி அடைந்த கதையையும் கூறுகின்றன. பின்வரும் திருநாவுக்கரசர் தேவாரப் பாடல்களும் மேற்கூறிய சிலந்தி நற்கதி அடைந்த கதையையும், எலி நற்கதி அடைந்த கதையையும் வலியுறுத்துகின்றன.
சிலந்தியும் ஆனைக் காவில் திருநிழற் பந்தர் செய்து
உலந்தவன் இறந்த போதே கோச்செங்க ணானும் ஆகக்
கலந்தநீர்க் காவிரி சூழ் சோணாட்டுச் சோழர் தங்கள்
குலந்தனிற் பிறப்பித் திட்டார் குறுக்கைவீ ரட்டனாரே
- திருநாவுக்கரசர் தேவாரம்-
நிறைமறைக் காடு தன்னில் நீண்டெரி தீபம் தன்னைக்
கறைநிறத்து எலிதன் மூக்குச் சுட்டிடக் கனன்று தூண்ட
நிறைகடல் மண்ணும் விண்ணும் அகன்றவான் உலகும் எல்லாம்
குறைவறக் கொடுப்பர் போலும் குறுக்கை வீரட்டனாரே
-திருநாவுக்கரசர் தேவாரம்-
பின்வரும் தேவாரம் முயலுக்கு இறைவன் அருள் செய்த வரலாற்றை கூறுகின்றது.
முன்னம் நின்ற முடக்கான் முயற்கருள் செய்துநீள்
புன்னை நின்று கமழ் பாதிரிப் புலியூருளான்..
-திருஞானசம்பந்தர் தேவாரம்-
கமலை ஞானப்பிரகாசரின் பின்வரும் பாடல் பல உயிரினங்கள் இறைவனை வழிபட்டு உய்ந்த வரலாற்றைக் கூறுகின்றது.
குதிரை சிலந்தி கழுகுஉடும்பு
குரங்கு நரிஈ எறும்புசிதன்
மதுவண்டு அலவன் கரியரிஆ
மஞ்ஞை யெகினம் புறாஆந்தை
ததியெண் காமைமுயல் கோம்பி
தத்தை கேழல் அருச்சிப்ப
விதியும் விலக்குங் கடந்தாற்கு
விதியால் ஒன்றை விதிப்பார
- கமலை ஞானப்பிரகாசர் பாடிய புட்ப விதி பாடல் 35-
1.சிதல்-கறையான்
அலவன்-நண்டு
மஞ்ஞை - மயில்
எகினம்- அன்னம்
ததியெண்கு- கரடி
கோம்பி- பச்சை ஓணான்
கேழல் - பன்றி
2, திருவண்ணாமலை, திருந்து தேவன் குடி - குதிரை வழிபட்டு பிறவி நீங்கிய தலங்கள்.
3. திருக்கழுக்குன்றம்- பிரசண்டன், சம்பாதி, சடாயு, கம்பு, குந்தன், மாகுந்தன் முதலிய கழுகுகள் பூசித்து முத்தி அடைந்தன.
4. திருமகாகறல்- உடும்பு சிவலிங்கத்தைத் தழுவிக் கொண்டிருக்கின்றது. உடும்பு பூசித்ததால் இறைவரின் பெயர் மாகறலீஸ்வரர்.
5. குரங்கணில்முட்டம் - குரங்கு, அணில், காகம் வழிபட்டு முத்தி அடைந்தன. வடகுரங்காடுதுறை, தென் குரங்காடுதுறை, குரங்குத்தளி- குரங்குகள் வழிபட்ட தலங்கள். இத் தலங்களில் இறைவர் பெயர் வாலீஸ்வரர், சுக்ரீஸ்வரர், ஹனுமனீஸ்வரர்.
6. மயிலாடுதுறை- நந்தி பூசித்து முத்திப்பேறு பெற்ற தலம்..
7. திரு ஈங்கோய் மலை - ஈ பூசித்து நற்கதி பெற்ற தலம்.
8. திருவெறும்பியூர் - எறும்புகள் பூசித்து நற்கதி பெற்ற தலம்.
9. திருந்து தேவன் குடி- நண்டு பூசித்துச் சிவப்பேறு பெற்ற தலம்; இறைவர் பெயர் கர்கடகேஸ்வரர்.
10. திருஆமாத்தூர் பிருங்கி முனிவர் வண்டு வடிவில் சிவனை வழிபட்டு உய்ந்த தலம்.
11. திருவானைக்கா, திருபெண்ணாகடகம்- யானை பூசித்து முத்தி பெற்ற தலங்கள்.
12. காளத்தி - யானை, சிலந்தி, பாம்பு இறைவனை வழிபட்டு உய்ந்த தலம்.
13. திருவாவடுதுறை, திருப்பெண்ணாகடம் - பசு வழிபட்டு சிவகதி அடைந்த தலம்.
14. மயிலாப்பூர், மயிலாடுதுறை - மயில் பூசித்து பேறு பெற்ற தலம். இறைவர் பெயர் மயூரேஸ்வரர்.
15. திருமணஞ்சேரி - ஆமை வழிபட்டு சிவப்பேறு அடைந்த தலம்.
16. திருக்கழுக்குன்றம் - பன்றி வழிபட்டு சிவப்பேறு எய்திய தலம். கழுகு வழிபட்ட தலம்.
17. பிரமனது வாகனமாகிய அன்னம் சிவனைப் பூசித்து முத்தி அடைந்தது.
18. திருவாரூர் - கறையான் வழிபட்ட தலம். இறைவர் பெயர் புற்றிடங்கொண்டார்.
19. சேலம்- கிளிகள் வழிபட்ட தலம். இறைவர் பெயர் சுகவனேஸ்வரர். சுகம் என்றால் கிளி.
20. திருக்கேழம்பம்- குயில் வழிபட்ட தலம். இறைவர் பெயர் கோகிலேஸ்வரர். கோகிலம் என்றால் குயில்.
21. சக்கரப்பள்ளி- சக்கரவாகப் பறவைகள் வழிபட்ட தலம். இறைவர் பெயர் சக்கரவாகேஸ்வரர்.
22. கூகையூர் - கூகைகள் சிவனை வழிபட்ட தலம். இறைவர் பெயர் கூகேஸ்வரர்.
23. புறாவூர்,பனங்காட்டூர், திருவோத்தூர், எறும்பூர்- பறவைக்கூட்டங்கள் வழிபட்ட தலங்கள். இறைவர் பெயர் பட்சீஸ்வரர்.
24. திருவலிவலம், திருவலிதாயம் - கரிக்குருவி வழிபட்ட தலங்கள். வலியன் என்பது கரிக்குருவியை. இறைவர் பெயர் வலியதாயேஸ்வரர்.
25. உறையூர் என்ற கோழியூர் - சேவல் வழி பட்ட தலம். இறைவர் பெயர் கோழீஸ்வரர்.
26. காஞ்சிபுரத்தில் முத்துச்சிப்பிகள் வழிபட்ட தலம் உள்ளது. இங்கு இறைவர் பெயர் சிப்பீஸ்வரர்.
27. மப்பேடு - மான் வழிபட்ட தலம். இறைவர் பெயர் ஸ்ருங்கேஸ்வரர்.
28. மங்கலக்குடி -குதிரை வழிபட்ட தலம். இறைவர் பெயர் ஹயவந்தீஸ்வரர். ஹயம் என்றால் குதிரை.
29. திருநெடுங்களம் - ஒட்டகம் வழிபட்ட தலம். இறைவர் பெயர் நெடுங்களேஸ்வரர். நெடுங்களம் என்றால் நீண்ட கழுத்து. இது இங்கு ஒட்டகத்தைக் குறிக்கின்றது.
30. பல தலங்களில் மீன்கள் வழிபட்டதால் மச்சேஸ்வரர்.
31. திருவண்ணாமலையை வலம் வந்த புனுகுப் பூனை நற்கதி பெற்றது.
32. சிவன் பன்றிக்குட்டிகளுக்கு பால் கொடுத்து ஆட்கொண்ட வரலாறும், கரிக்குருவிக்கு உபதேசித்த வரலாறும், நாரைக்கு முத்தி கொடுத்த வரலாறும் திருவிளையாடற் புராணத்தில் உள்ளன.
33. பாதிரிப்புலியூர் - முயல் வழிபட்ட தலம்.
34. கரடி, ஓணான் போன்ற பல விலங்குகளும், ஏன் மரங்களுங்கூட இறைவனை வழிபட்டு முத்தி அடைந்த வரலாறுகள் பல தல புராணங்களில் உள்ளன.
இவ்வாறான இறை வழிபாடும், அதன் பயனான சிவ கதியுமே மனிதப்பிறவிக்கு நோக்கம், இவை வெறும் வாய்ப்பு அல்ல. ஆனால் மிருகங்கள் பறவைகளுக்கு இறையின்பம் நோக்கமல்ல ஆனால் ஒரு வாய்ப்பு. ஒரு மரமாகப் பிறந்தால் ஒரு இடத்திலேயே தரித்திருந்து, வெயிலில் காய்ந்து, மழையில் நனைந்து, பனியில் வாடி, காற்றில் உலைந்து தனது கர்மாவைக் கழிக்கின்றது. மரங்களுக்கு ஊறு என்ற தொடுகை உணர்ச்சி இருப்பதாக முன்னர் கூறிய தொல்காப்பியச் சூத்திரம் கூறுவதை இங்கு பிரயோகிக்க வேண்டும். அதே சமயம் மரமானது தன்னை நாடி வரும் உயிரினங்களுக்கு நிழலைத் தந்து, உறைவிடம் தந்து, காற்றைத் தந்து, வாயு மண்டலத்தைச் சுத்தமாக்கி, பூவைத் தந்து, காயைத் தந்து, கனியைத் தந்து, விறகைத் தந்து, உணவைத் தந்து, தனது உடலையும் கூட மரமாகத் தந்து உதவி எவ்வளவோ நல் வினைகளையும் செய்கின்றது. இதிலும் சில மரங்கள் பூசைத் திரவியங்களான பூ, பழம், கனி, மற்றும் இலைகளைத் தந்தும், சில வேளைகளில் கோவிலில் நிழல் மரமாக இருந்தும், தல விருட்சமாக இருந்தும், மேலான சிவ புண்ணியங்களைச் செய்யும் பேற்றையும் பெறுகின்றன. இவற்றுக்கு இதனால் வருகின்ற நல்வினைப் பயனும், சிவ புண்ணியப் பலனும் அவற்றை மேலான இறைநிலைக்கு நேரடியாகவே உயர்த்தவும் வல்லன்.
பதினான்காம் நூற்றாண்டைச் சேர்ந்த கொற்றவன் குடி உமாபதி சிவம் அவர்கள் தினமும் அபிக்ஷேக நீர் போய் புனிதமடைந்து பக்குவம் பெற்றிருந்த முள்ளிச்செடிக்கு எல்லோரும் காண முத்தி கொடுத்து ஒளியுடலுடன் அனுப்பியது இங்கு நோக்கத்தக்கது.
அர்ச்சனைக்கு உபயோகங்கள் ஆகிய தருக்கள்ஆதி
கற்புஉறு சிவலோகத்தைக் கலப்பதே திண்ணம் கண்டோர்
அற்புதன் பூசைதன்னை அருவினை அறுவர்அன்பால்
தற்பரன் பூசை கண்டோர் சிவபுரம் அதனைச் சார்வார்
-சிவ தருமோத்தர ஆகமம் பாடல் 43-
சிவ பூசைக்குப் பயன்படும் பொருள்கள், மலர்கள் தரும் செடிகள், இலை தரும் விலவ மரம் போன்றனவும் சிவலோகப்பேறு பெறும். அடியவர்கள் சிவபூசை செய்யும் முறைகளையும் நேரில் பார்ப்பவர்களுக்கும் வினை நீக்கம் நிகழும். அவற்றை அன்போடு தரிசிப்பவரும் சிவபுரதைதச் சேர்வர்.
மைந்தர் மாதரும் மற்றை அலியுமோ
பந்தம்பாச விலங்கும் பறவையும்
முந்த ஆக்கைஇது எனமுன்உறும்
அந்தஆக்கை அடைந்துஅகன்று ஆழும்ஏ.
-சிவ தருமோத்தர ஆகமம் பாடல் 363-
ஆடவர், மகளிர், இவையிரண்டும் இல்லாத அலிகள் ஆகிய மூவகை மனிதர்களும் தமது பாவச்செயல்களுக்கு ஏற்ற நரகத்துன்பங்களை அனுபவிப்பதுபோல, பறவைகளும் விலங்குகளும்கூட அவை செய்த தீய செயல்களுக்குத் தக்கபடி இறக்கும் போது தமது உடலை விட்டு நீங்கி நரக அனுபவம் பெறுவதற்கு உரிய உடல்களைப்பெற்று அத்துன்பங்களை அனுபவிக்கும்.
ஆக்கை- உடம்பு
விண்ணுளார் நரர் மற்றை விலங்குமே
பண்ணு பாவ பலத்தைக் கொடுப்பவன்
திண்ணமே யமன் தேசிகன் தீர்த்திடும்
பண்ணில் பாவ விதம் சிவ பத்தரும்
-சிவ தருமோத்தர ஆகமம் பாடல் 364-
தேவர்களும், மனிதர்களும், விலங்குகளும் செய்த தீய செயல்களுக்கு ஏற்ற பலன்களை இயமன் அளிப்பான். இவ்வாறே சிவனடியார்கள் செய்த தீவினைகளால் உண்டான பாவங்களை ஞானகுரு நீக்குவார்.
நரர் - மனிதர், தேசிகன்- ஞானகுரு
சிவ தருமோத்தரம் என்பது சைவத்தின் அடிப்படை நூல்களாகிய சிவாகமங்கள் இருபத்தெட்டில் ஒன்றாகிய சர்வோக்த ஆகமத்தின் பதினொரு உப ஆகமங்களில் ஒன்று. இதை தமிழில் பாடியவர் 16ம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் வாழ்ந்த மறைஞான சம்பந்த தேசிகர். இவர் செய்த பிற நூல்களுள் சைவ சமய நெறி, பதி பசு பாசப் பனுவல், உருத்திராக்க விசிட்டம் என்பன குறிப்பிடத்தக்கன.
No comments:
Post a Comment