Wednesday, September 26, 2012
பஞ்சாங்கம்
ஆகாய வீதியை மேடம் முதல் மீனம் வரையான பன்னிரு இராசிகளாக பிரித்திருக்கின்றது எமது பாரம்பரிய வானியல். இவ்விதமாகப் பிரிக்கப்படுள்ள வான் வீதியில் எமது பார்வைக்கு சூரியன் சஞ்சரிக்கும் காலத்தை வைத்து மாதங்கள் பெயரிடப்படுள்ளன. சூரியன் மேட இராசியில் பிரவேசிப்பது சித்திரை மாதத்தின் தொடக்கம் ஆகின்றது. இதுவே எமது தமிழ் வருடப் பிறப்பு ஆகின்றது. இதே போல சூரியன் மகர இராசிக்குள் பிரவேசிக்கும் காலமே தை மாதப்பிறப்பாகிய தைப்பொங்கல் தினமாகும். இவ்வாறு ஒவ்வொரு இராசிக்குள் சூரியன் பிரயாணிக்கும் காலமும் அதற்குரிய மாதங்களும் வருமாறு;
சூரியன் மேட இராசியில் சஞ்சரிக்கும் காலம் சித்திரை மாதம்.
சூரியன் இடப இராசியில் சஞ்சரிக்கும் காலம் வைகாசி மாதம்.
சூரியன் மிதுன இராசியில் சஞ்சரிக்கும் காலம் ஆனி மாதம்.
சூரியன் கடக இராசியில் சஞ்சரிக்கும் காலம் ஆடி மாதம்.
சூரியன் சிம்ம இராசியில் சஞ்சரிக்கும் காலம் ஆவணி மாதம்.
சூரியன் கன்னி இராசியில் சஞ்சரிக்கும் காலம் புரட்டாதி மாதம்.
சூரியன் துலா இராசியில் சஞ்சரிக்கும் காலம் ஐப்பசி மாதம்.
சூரியன் விருச்சிக இராசியில் சஞ்சரிக்கும் காலம் கார்த்திகை மாதம்.
சூரியன் தனு இராசியில் சஞ்சரிக்கும் காலம் மார்கழி மாதம்.
சூரியன் மகர இராசியில் சஞ்சரிக்கும் காலம் தை மாதம்.
சூரியன் கும்ப இராசியில் சஞ்சரிக்கும் காலம் மாசி மாதம்.
சூரியன் மீன இராசியில் சஞ்சரிக்கும் காலம் பங்குனி மாதம்.
வருடப்பிறப்பு என்றால் எல்லோரும் புதுப் பஞ்சாங்கம் வாங்குவோம். இவ்வாறு பஞ்ஞாங்கம் வாங்கினாலும் அதிலுள்ள பல விடயங்கள் சாதாரண மக்களுக்கு தெரியாமலும், தெரிந்தும் விளங்காமலும் இருக்கின்றது. இதனால் பஞ்சாங்கம் வாங்குவோரினதும் பாவிப்போரினதும் எண்ணிக்கை குறைந்து வருகின்றது.
பஞ்சம் என்றால் ஐந்து; அங்கம் என்றால் உறுப்பு அல்லது பகுதி. பஞ்சாங்கம் என்பது ஒவ்வொரு நாளுக்கும் உரிய ஐந்து விடயங்களைப் பற்றிய விபரங்களைத் தருவது. இந்த ஐந்து விடயங்களாவன;
1. வாரம்; நவக்கிரகங்களில் இராகு, கேது இரண்டும் நிழற் கிரகங்களாம். அவை தவிர்ந்த ஏழு கிரகங்களுக்கும் நாள் தோறும் ஆட்சி முகூர்த்தங்கள் மாறி மாறி வரும். ஒவ்வொரு நாளிலும் சூரியோதய காலத்தில் எந்த கிரகத்தினுடைய ஆட்சி முகூர்த்தம் வருகின்றதோ அக்கிரகத்தின் பெயரால் அந்த நாள் வழங்கப்படுகின்றது.
உதய காலத்தில் சூரியன் ஆட்சியில் இருக்கும் நாள் ஞாயிற்றுக்கிழமை.
உதய காலத்தில் சந்திரன் ஆட்சியில் இருக்கும் நாள் திங்கட் கிழமை.
உதய காலத்தில் செவ்வாய் ஆட்சியில் இருக்கும் நாள் செவ்வாய்க் கிழமை.
உதய காலத்தில் புதன் ஆட்சியில் இருக்கும் நாள் புதன் கிழமை.
உதய காலத்தில் வியாழன் ஆட்சியில் இருக்கும் நாள் வியாழக் கிழமை.
உதய காலத்தில் வெள்ளி ஆட்சியில் இருக்கும் நாள் வெள்ளிக் கிழமை.
உதய காலத்தில் சனி ஆட்சியில் இருக்கும் நாள் சனிக் கிழமை.
இவ்வாறுதான் வாரத்தின் ஏழு நாட்களும் எமது சம்பிரதாயத்தில் பெயரிடப்பட்டிருக்கின்றன.
2. நட்சத்திரம்; எமக்கு புலனாகக்கூடிய நட்சத்திரக் கூட்டங்களில் 27 முக்கியமானவையாக உள்ளன. அவற்றுக்கு அச்சுவினி தொடக்கம் ரேவதி வரை முறையாக பெயர்களும் உள்ளன. பூமியில் இருந்து பார்ப்பவர்களுக்கு எந்த நட்சத்திரம் சந்திரனுக்கு அருகில் காணப்படுகிறதோ அந்த காலத்துக்கு அந்த நட்சத்திரம் சொல்லப்படுகின்றது. எமது புராணங்களின் படி 27 நட்சத்திரங்களும் தட்சனின் மகள்மாராகப்பிறந்து சந்திரனுக்கு மனைவியானவர்கள். ஆகவே நட்சத்திரம் அந்த நேரத்தில் என்பது சந்திரன் எந்த மனைவியுடன் கூடியுள்ளான் என்பதைக் குறிக்கின்றது.
3. திதி; ஒவ்வொரு நாளும் எமது பார்வைக்கு சந்திரன் ஆகாய வீதியில் செல்லும் தூரத்தில் இருந்து சூரியன் செல்லும் தூரத்தைக் கழித்து வந்த மிகுதியே திதி ஆகும். இத்தூரம்தான் அன்றன்று சந்திரனில் தெரிகின்ற பாகத்தை நிர்ணயிக்கின்றது. இதனால் இது சந்திரனின் தேய்மானம் மற்றும் வளர்ச்சியுடன் ஒத்திசைந்து வருகின்றது. இதில் அமாவாசை முதல் பௌர்ணமி வரை பதினாறு திதிகள் உள்ளன. அமாவாசையில் தொடங்கி பௌர்ணமி வரையுள்ள காலம் வளர் பிறைக்காலம் ஆகும். இதை சுக்கில பட்சம் என்று கூறுவர். சுக்கிலம் என்றால் பிரகாசமான என்று பொருள். பௌர்ணமியில் இருந்து அமாவாசை வரையுள்ள காலம் தேய்பிறைக்காலம் ஆகும். இதை கிருஷ்ண பட்சம் என்று கூறுவர். கிருஷ்ண என்றால் இருண்ட என்று பொருள்.
4. யோகம்; ஒவ்வொரு நாளும் எமது பார்வைக்கு ஆகாய வீதியில் சூரியன் செல்லும் தூரத்துடன் சந்திரன் செல்லும் தூரத்தைக் கூட்டி வந்த தொகையே யோகம் எனப்படுகின்றது. இவ்விதமான யோகங்கள் 27.
5. கரணம்; ஒவ்வொரு திதியையும் இரண்டாகப் பிரித்து வந்த ஒவ்வொரு பகுதியும் கரணம் எனப்படுகின்றது.
இனிமேல் பஞ்சாங்கம் பாரக்கும்போது சற்று விளக்கத்துடன் பார்க்கலாம்.
No comments:
Post a Comment