Wednesday, September 26, 2012
விபூதி தரிக்கும் காலம்
விபூதி தரிக்கும் காலம்
முச்சந்தி உடனுதயம் அத்தமன காலம்;
முன்உணவின் முன் பின்னும்; உறங்கு முன்னும் பின்னும்;
அர்ச்சனையின் முன்பின்னும்; மலசலங்கள் விட்டால்
ஆசமித்த பின்னும்; அதீக்கிதர் தொட்டாலும்;
பொச்சவர்கள், மார்ச்சாரம், கொக்கு,எலிகள் முதலாப்
பொல்லாத தீண்டிடினும் புனிதநீறு அணிக;
நிச்சயமே சிவன், அங்கி, குரு,வித்தை முன்னும்;
நீசர்முன்னும்; நடவையினும் அணியற்க நீறே
-தத்துவப் பிரகாசம் பாடல் 66-
சந்தி- சந்தியா காலம்;
ஆசமனம்- உட் சுத்திக்காக வலது உள்ளங்கையில் உழுந்து அமிழும் அளவுக்கு நீர் விட்டு உள்ளங்கை அடியில் உதடு வைத்து மந்திரம் சொல்லி ஒலி எழுப்பாமல் உறிஞ்சிக் குடித்தல். உறிஞ்சும் நீர் இருதயத்தானம் வரை போகவேண்டும், உதரம் வரை அல்ல.
அதீக்கிதர் - தீட்சை இல்லாதவர்கள்;
பொச்சவர்கள் - தவத்தில் இருந்து வழுவியவர்கள்;
மார்ச்சாரம் - பூனை;
அங்கி - அக்கினி;
காலை, மதியம், மாலை என்கின்ற மூன்று சந்தியா காலங்களிலும், உணவுண்பதற்கு முன்னரும், பின்னரும், உறங்குவதற்கு முன்னரும் பின்னரும், பூசை செய்வதற்கு முன்னரும், பின்னரும், மல சலங் கழித்த பின்னர் சுத்தி செய்து ஆசமனம் செய்த பின்னரும், தீட்சையில்லாதவர்கள் தீண்டினாலும், தவ ஒழுக்கம் விட்டவர்கள், பூனை, கொக்கு, எலி முதலியவற்றைத் தீண்ட நேரிடினும், திருநீறு இட்டுக்கொள்ள வேண்டும். இறைவன் சன்னிதானத்துக்கு முன்னாலும், அக்கினிக்கு முன்னாலும், குருவுக்கு முன்னாலும், கற்கும் வித்தைக்கு முன்னாலும் முகத்தை எதிர்நோக்காது, முகத்தை மாறி நோக்கி நின்று திருநீறு தரிக்க வேண்டும். நீசர்களுக்கு முன்னாலும், நடந்து கொண்டும் விபூதி தரிக்கக்கூடாது.
No comments:
Post a Comment