Wednesday, September 26, 2012
சைவத்தில் சோதிடம்
தெய்வ நம்பிக்கையும், வழிபாடும் உடையவர்களுக்கு கிரகங்கள் ஒன்றும் செய்யாதது மட்டுமல்ல என்றும் நன்மையையே செய்யும் என்று மெய்கண்ட சாத்திரங்கள் பதினான்கில் ஒன்றாகிய நெஞ்சுவிடு தூது பின்வருமாறு குறிப்பிடுகின்றது.
'நாள் இருபத்து ஏழும் நவக்கிரகமும் நலியும்
கோள் இது என்று எண்ணிக் குறிப்பரோ'
-உமாபதிசிவம் எழுதிய நெஞ்சுவிடுதூது-
இதையே இவருக்கு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த திருஞான சம்பந்தரும் " வேயுறு தோளி பங்கன்" என்ற கோளறு பதிகத்தின் மூலம் விளக்குகின்றார்.
"ஞாயிறு திங்கள் செவ்வாய் புதன் வியாழம் வெள்ளி
சனி பாம்பிரண்டு முடனே
ஆசறு நல்ல நல்ல அவை நல்ல நல்ல
அடியாரவர்க்கு மிகவே"
- சம்பந்தரின் கோளறு பதிகம்-.
இங்கு ஞானசம்பந்தர் கிரகங்கள் அடியவர்களுக்கு நல்லவையே செய்யும் என்று ஒன்றுக்கு நான்கு முறை சொல்லுகின்றார். இது சம்பந்தர் போன்ற உயர் ஞான நிலையில் உள்ள அடியவர்களுக்கு முழுதும் பொருந்தும். அதற்காக அவர் சோதிடம் பார்க்க்ககூடாது என்று சொல்லவில்லை. 'ஒன்பதொன்றோடேழு பதினெட்டொடாறும் உடனாய நாள்கள் அவைதாம்' என்று ஆகாத நாட்களை எல்லாம் பட்டியலிட்டுப் பாடியிருக்கின்றார். சம்பந்தர் நாள் கோள் சரியில்லாமல் இருந்தும் மதுரைக்குப்புறப்பட்டுச் சென்றது தனக்காக அல்ல; சிவப்பணிக்காகவே. ஆயினும் அவர் பல இடர்களை எதிர் கொள்ளத்தான் நேர்ந்தது. இது அவருடைய வாழ்க்கையிலேயே ஒரு சோதனையான காலம். அவர் அடியார்களுடன் தங்கிய மடத்துக்கு தீ வைத்தார்கள். சமணருடன் பல போட்டிகளில் பங்கு பற்றவேண்டி இருந்தது. அது மட்டுமல்ல எண்ணாயிரம் சமணரைக் கழுவேற்றுவதற்கு உடந்தையானார் என்ற பழிச்சொல்லும் அவர்மீது விழுந்தது. பெரிய புராணத்திலும், திருவிளையாடற்புராணத்திலும் அவருடைய வாழ்க்கை வரலாற்றை விளக்கும் சைவ சமயப் பேச்சாளர்கள், எழுத்தாளர்கள் யாவரும் யாழ்ப்பாணத்து நல்லூர் ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலர், ஏழாலை பண்டிதர் மு. கந்தையா உட்பட இதற்கு விளக்கம் சொல்லியே செல்லவேண்டியிருந்தது. ஆயினும் இறை நம்பிக்கையில் ஊன்றியவர்களுக்கும், இவ்விதமான பதிகங்கள், தோத்திரங்கள் ஓதி வழிபடுபவர்களுக்கும் கிரகங்களின் தீயபலன்களும், அவற்றின் தாக்கங்களும் குறைவாக இருக்கும். இதை "கண்ணுக்கு வந்தது புருவத்துடன் போன மாதிரி" என்றும் "தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போனது மாதிரி" என்றும் உவமித்துச் சொல்லவுவார்கள்.
திருஞான சம்பந்தரின் அவதாரத்தைச் சொல்லும் பன்னிரண்டாம் திருமுறையான பெரிய புராணம் திருஞான சம்பந்தரின் பிறப்புச் சாதக கிரகநிலையையும் கூறுகின்றது. அவர் பிறக்கும்போது சூரியன் முதலான கிரகங்கள் அனைத்தும் சிறப்பாக உச்சத்தானங்களில் நின்றதாக இப்பாடலில் இருந்து அறிகின்றோம்.
அருக்கன்முதற் கோளனைத்தும் அழகியுச் சங்களிலே
பெருக்கவலி யுடன்நிற்கப் பேணியநல் லோரையெழத்
திருக்கிளரும் ஆதிரைநாள் திசைவிளங்கப் பரசமயத்
தருக்கொழியச் சைவமுதல் வைதிகமுந் தழைத்தோங்க
-பெரிய புராணம், பாடல்-1925
இதே போன்று மார்க்கண்டேயர் பிறந்தபோது உள்ள கிரக நிலையையும் அதில் தேவ குருவான வியாழனும், அசுர குருவான வெள்ளியும் உச்சம் பெற்று விளங்குதலையும் கந்தபுராணம் குறிப்பிடுகின்றது.
மீனமும் முடிந்த நாளும் மேவுற மிதுனம் செல்ல
ஊனமில் வெள்ளிதானும் ஒண்பொனும் உச்சமாகும்
தானம் உற்று இனிதுமேவ தபனனே முதலா உள்ள
ஏனையர் முனிவர் நாகர் இடம் தொறும் இருப்ப மன்னே
-கந்த புராணம் 2-5-186-
இவ்வாறே தேவி மதுரையை தடாதகைப்பிராட்டியாக இருந்து சோமசுந்தரருடன் ஆண்ட காலத்தில் கர்ப்பமுற்று உக்கிரகுமார பாண்டியரைப் பெற்றபோதும் அவர் வியாழன் முதலிய நற்கோள்கள் கேந்திர தானமென்னும் ஒன்று, நான்கு, ஏழு, பத்து ஆகிய தானங்களில் நிற்க சிறந்த ஓரையிலே குழந்தை பிறந்தது என்று திருவிளையாடற் புராணம் கூறுகின்றது.
”---பசும் பொற்கோள் வந்து
தேசொடு கேந்தி ரத்திற் சிறந்தநல் லோரை வாய்ப்ப ...”
- திருவிளையாடற் புராணம், பாடல் 931-
இவை வான்மீகி இராமாயணத்தில் உள்ள ஸ்ரீ ராமர் பிறந்த போதுள்ள கிரகநிலைக் குறிப்புகளுடன் ஒப்பிடத்தக்கன. ஸ்ரீ ராமர் பிறந்தபொழுது குரு, சுக்கிரன், செவ்வாய், புதன், சனி ஆகிய ஐந்து கிரகங்களும் உச்சம் பெற்று ( குரு கடகத்திலும், வெள்ளி மீனத்திலும், செவ்வாய் மகரத்திலும், புதன் கன்னியிலும், சனி துலாத்திலும் உச்சம் பெறுகின்றன. ), கேந்திர, தானங்களில் ( சாதகத்தில் இலக்கினம் அல்லது சந்திரனில் இருந்து 1ம் 4ம் 7ம் பத்தாம் இடங்கள் கேந்திர தானங்கள் ஆகும்.) இருந்ததாக அறிகின்றோம். இது பஞ்ச மாகா புருஷ யோகம் என்று சோதிடத்தில் சொல்லப்படுகின்ற ஐந்து சிறப்பான யோகங்களின் சேர்க்கையாகும்.
இதேபோல முகூர்த்தம், வாரம், நட்சத்திரம், திதி, கரணம், யோகம் ஆகிய யாவும், நவக்கிரகங்களும் நன்னிலையில் விளங்கும் வேளையில் தர்மன் பிறந்தான் என்று மகாபாரதம் கூறுகின்றது. இது ஐப்பசி மாதத்து வளர்பிறைப் பஞ்சமி திதியும் கேட்டை நட்சத்திரமும் கூடிய நாளாகும்.
சிவம்உற முகூர்த்தம் வாரம் தினம் திதி கரணம் யோகம்
நவமென வழங்கு கோளும் நன்னிலை நின்ற போதில்
அவனியிர் ஒருகோல் ஓச்சி ஆளும் என்றறிவின் மிக்க
தவநெறி முனிவர் கூறப் பிறந்தனன் தர்மன் மைந்தன்
-வில்லிபுத்தூர் ஆழ்வார் பாரதம் பாடல் 245-
இதேபோல அர்ச்சுனனும் நல்ல நிமித்தங்கள் தோன்ற பங்குனி மாதத்து பௌர்ணமியில், உத்தர நட்சத்திரத்தில் பிறந்ததாக மகாபாரதம் கூறுகின்றது.
எங்குநன் நிமித்தம் செல்ல இருநில மகிழ்ச்சி கூரப்
பங்குனி நிறைந்த திங்கள் ஆதபன் பயிலு நாளில்
வெங்குனி வரிவில் வாகை விசயனும் பிறந்தான்
-வில்லிபுத்தூர் ஆழ்வார் பாரதம் பாடல் 261-
சைவத்தில் ஊன்றி நின்று வழிபடுவோருக்கு சோதிட பலன்கள் தேவையில்லை என்றாலும் சைவத்தில் சோதிடத்தையும் அதன் பலன்களையும் ஏற்றும், மதித்தும் வந்த மரபைக் காலம் காலமாகக் காணக்கூடியதாக உள்ளது. ஆனால் இதற்கு மேலாக இறை ஒன்று உள்ளது என்பதை எப்போதும் உணர்ந்திருந்தார்கள்.
"ஆறங்கம் நால் வேதம் ஆனாய் போற்றி" என்று திருநாவுக்கரசர் பாடும்போது வேதங்களின் ஆறு அங்கங்களுள் ஒன்றாகிய சோதிடத்தையும் சேர்த்தேதான் போற்றுகின்றார்.
"மகத்தில் புக்கதோர் சனியெனக் கானாய்" என்று நிந்தா ஸ்துதியாக சுந்தரர் சிவனைப்பாடியுள்ளார். மகர இராசியில் சனி வரும் காலம் கொடிய காலமாகும் இது தனி மனிதருக்கு மட்டுமல்ல உலகத்துக்கும் பொருந்தும்.
விலங்கல் அமர் புயன் மறந்து மீன்சனிபுக்கு ஊன் சலிக்கும் காலம் தானும்
கலங்கல் இலா மனப்பெருவண் கையுடைய மெய்யர் வாழ் கழுமலமே
என்று மகரத்தில் சனி புகும் கொடிய காலத்திலும்கூட கலங்காத மனம் உடைய மெய்யடியார்கள் வாழும் திருக்கழுமலம் என்று சம்பந்தர் பாடுகின்றார்.
சூரியனும், செவ்வாயும் முன்னே செல்ல வெள்ளி அவற்றின் பின்னே செல்லும் காரணத்தால் பன்னீராண்டு மழை வளம் குன்றும் என்று திருவிளையாடல் புராணத்தின் இந்திரன் முடிமேல் வளை எறிந்த படலம் கூறுகின்றது.
காய்சின வெய்யோன் சேயோன் முன்செலக் கதிர்கால் வெள்ளித்
தேசிகன் பின்பு சென்று நடக்குமிச் செயலான் முந்நீர்த்
தூசி உலகில் பன்னீ ரா ண்டுவான் சுருங்கு மென்று
பேசின நூல்கள் மாரி பெய்விப்போன் சென்று கேண்மின்
-திருவிளையாடற் புராணம், பாடல் 1055-
சிவஞானபோதத்தைத் தமிழில் செய்த மெய்கண்டாரின் மாணாக்கரான அருணந்தி சிவம் சிவஞான சித்தியார் என்ற நூலைச் செய்திருக்கின்றார். இதுவும் பதினான்கு மெய்கண்ட சாத்திரங்களுள் ஒன்று. இதிலே ஒரு பாடலில் 'குற்றமில்லாத வேத நூல்களைக் குறைவின்றி ஓதி உணர்ந்தவர்கள் இந்த உலகிலே இன்னது நடக்கப்போகின்றது என்று முன்னரேயே சோதிடம் வழியாக ஊகித்து சொல்வதும் அங்ஙனமே அவர்கள் கூறியபடி நடப்பதும் காண்கின்றோம்' என்று கூறுகின்றார்.
பழுதி லாமறை கண்ட நூல்பழுது
இன்றி உண்டது பாரின்மேல்
மொழிவர் சோதிடம் உன்னி இன்னது
முடியும் என்பது முன்னமே
அழிவிலாதது கண்ட னம்அவை
-சிவஞான சித்தியார், பரபக்கம்-
முன்னர் குறிப்பிட்ட உமாபதி சிவத்தின் குருவே இந்த அருணந்தி சிவம்.
இன்றைய முறையில் ஒன்பது கிரகங்களையும் ஒன்றாக தாபித்து கோவிலில் வழிபடும் நவக்கிரக வழிபாடு பழைய ஆகம முறைகளில் இல்லாதது என்றாலும் நவக்கிரகங்களின் வழிபாடு புதிதாகப் புகுத்தப்பட்ட ஒன்று அல்ல. நவக்கிரகங்களில் சூரியன், சந்திரன், வியாழன், வெள்ளி போன்ற கிரக அதிதேவதைகளின் மூர்த்தங்கள் கோவில் கர்ப்பக்கிருகங்களுக்கு உட்புறத்திலும், வெளிப்புறத்தில் பரிவார மூர்த்தங்களாகவும் பிரதிட்டை செய்யப்படும் விதிகள் சைவ ஆகமங்களில் பரவலாக உள்ளன.
கர்மபலன்களை உடனிருந்து ஊட்டுகின்ற இறையின் வழிபாட்டை ஒதுக்கி விட்டு, வெறும் கிரக வழிபாடு செய்து உழலும்போதுதான் நாம் தவறிழைக்கின்றோம். பலர் வைத்தீசுவரன் கோவிலுக்குப்போய் செவ்வாயை மட்டும் வழிபட்டுவிட்டு வருவார்கள்; திருநள்ளாறு போய் சனைச்சுரனை மட்டும் வழிபட்டுவிட்டு வருவார்கள். சோதிடமும், எதிர்காலத்தைப்பற்றிய பயமும், நமது வாழ்க்கையின் துன்பங்களும் வழி தவறிப்போகும் நம்மை இறையிடம் திருப்புவதற்கேயாம்.
" நல்ல குருநாதன் என்னை வருத்துவது
கொல்ல வல்ல; கொல்ல வல்ல; என்
பொல்லா வினையைப் போக்குதற்கே "
ஈசுவரன் அல்லது ஈசன் என்றால் எல்லா ஐஸ்வரியங்களுக்கும் அதிபதி என்று பொருள். "ஈசனடி போற்றி" என்ற சிவ புராண வரிக்கு இவ்வாறுதான் பொருள் கூறுவர். "ஈஸாவாஸ்யம் இதம் ஸர்வம்" இந்த எல்லாமே ஈசுவரனுடைய உடமைப்பொருள் என்று ஈசாவாஸ்ய உபநிடதம் தொடங்குகின்றது. இது முழுமுதலான இறையையே குறிக்கும்.
கிரகங்களுக்கு ஆதிபத்தியமும், ஆற்றலும், பலன்களும் கொடுத்து, அவைகளின் இயக்கத்துக்கும் காரணமாக உள்ள இந்த ஈசுவரனை வணங்கி வர எமது முன்செய்த கர்ம வினைகள் கழியும்.
இவ்வாறு சேமிப்பில் உள்ள எமது கர்மாவை சஞ்சித கர்மா என்பர். “சஞ்சித பாப விநாசஹ லிங்கம்” என்று ஆதி சங்கரர் லிங்காஷ்டகத்தில் பாடியுளார். குருவருளால் இருவினையொப்பு நிலை கைகூடி வர வருவினை ஏறாது. இந்த வருவினையை ஆகாமிய கர்மா என்பர். ஸ்ரீ கிருஷ்ணர் மகாபாரதப்போரில் அர்ச்சுனனுக்கு பகவத்கீதையை உபதேசித்து அவனுக்கு இந்த இருவினையொப்பு நிலையைக்கூட்டி அவனை யுத்தம் செய்ய வைத்தார். இதனால் அவனுக்கு போரின் கர்மவினை ஏறவில்லை. ஆயினும் நாம் இப்பிறப்பில் அனுபவிப்பதற்கு கொண்டு வந்த கர்மவினையை அழிக்க முடியாது. இதை பிராரப்த கர்மா என்பர். இதையே விதி என்றும் ஊழ்வினை என்றும் கூறுவர். திருவள்ளுவரும்
” ஊழிற் பெருவலி யாவுள மற் றொன்று
சூழினும் தான் முந்துறும்” என்று கூறுகின்றார். இந்த ஊழ் வினையைக் குறைப்பதற்கும், விதியின் வலியைக் குறைப்பதற்கும் பிராயச்சித்த வழிமுறைகள் உதவும். இதற்கு வழிகாட்டியாக சோதிட சாத்திரம் உள்ளது. விரும்பியோர் பாவித்துப் பயன் பெறலாம்.
உற்றதொழில் நினைவு உரையில் இருவினையும் உளவாம்;
ஒன்று ஒன்றால் அழியாது; ஊண் ஒழியாது; உன்னின்
மற்றவற்றின் ஒருவினைக்கு ஓர் வினையால் வீடு
வைதிகசைவம் பகரும் வழியில் ஆற்றப்
பற்றியது கழியும்; விலையால் ஏற்கும் பான்மையுமாம்; முன்னர்
சொற்றருநூல் வழியின் வரின் மிகுதி சோரும்;
சோராததங்கு அது மேலைத் தொடர்ச்சியாமே
-சிவப்பிரகாசம் பாடல் 31-
No comments:
Post a Comment