Wednesday, September 26, 2012

அஞ்சவத்தை

அநாதியாகவே ஆணவ மலத்துடன் கூடியிருத்தலால் தானே சுயமாக அறிய முடியாத ஆன்மா எமது உடலில் மற்றைய கருவிகளுடன் கூடி ஐந்து நிலைகளில் நின்று அறிகின்றது; செயலாற்றுகின்றது. அவை பற்றி இங்கு விளக்கமாகப் பார்ப்போம். 1. நனவு அல்லது விழிப்பு நிலை: ஆன்மா அன்னமயகோசத்துடன் கூடி முப்பத்தைந்து தத்துவங்களுடன் புருவ மத்தியில் நின்று தொழிற்படும் நிலை. ஞானேந்திரியங்கள் ஐந்து செவி- மிலேச்சர் மெய்- சாரணர்/ ஒற்றர் கண்- தூதர் வாய்- ஏவலர் மூக்கு- புரோகிதர் கர்மேந்திரியங்கள் ஐந்து வாக்கு- குதிரைச்சேவகர் கால்கள்- யானை வீரர் கை - தேரோட்டி கழிவங்கம்- காலாட் படை சனன அங்கம்- சேனாதிபதி பரிவாரங்கள் பத்து சத்தம் பரிசம் உருவம் ரசம் கந்தம் வசனம் கமனம் தானம் விசர்க்கம் ஆனந்தம் தச வாயுக்கள்- உறுதிச் சுற்றம் பிராணன் அபானன் உதானன் சமானன் வியானன் நாகன் கூர்மன் கிருகரன் தேவதத்தன் தனஞ்சயன் அந்தக்கரணங்கள் நான்கு- அமைச்சர்கள் மனம் புத்தி சித்தம் அகங்காரம் 2. கனவு: ஆன்மா பிராண மயகோசத்துடன் கூடி கண்டத்தில் நின்று இருபத்தைந்து தத்துவங்களுடன் தொழிற்படும் நிலை. இங்கு ஞானேந்திரியங்கள் ஐந்தும், கர்மேந்திரியங்கள் ஐந்தும் செயற்படாது புருவ மத்தியிலேயே ஒடுங்க ஏனைய இருபத்து நான்கு தத்துவங்களும் கண்டத்தில் தொழிற்பட்டு, நனவென்று மயங்கும் கனவு என்ற அவத்தை நிகழும். பரிவாரங்கள் பத்து சத்தம் பரிசம் உருவம் ரசம் கந்தம் வசனம் கமனம் தானம் விசர்க்கம் ஆனந்தம் தச வாயுக்கள்- உறுதிச் சுற்றம் பிராணன் அபானன் உதானன் சமானன் வியானன் நாகன் கூர்மன் கிருகரன் தேவதத்தன் தனஞ்சயன் அந்தக்கரணங்கள் நான்கு மனம் புத்தி சித்தம் அகங்காரம் 3. ஆழ்ந்த உறக்க நிலை. ஆன்மா மனோ மயகோசத்துடன் கூடி சித்தம், புருடன், பிராணன் என்ற மூன்று தத்துவங்களுடன் இருதயத் தானத்தில் செயற்படும். இங்கு முன் செயற்பட்ட தத்துவங்கள் எல்லாம் ஒடுங்கி செயற்படாது கண்டத்தில் நிற்க, சித்தம் - என்னும் மந்திரத் தலைவனும் பிராணன் - என்னும் உறுதிச் சுற்றமும் புருடன் - என்னும் ஆன்மாவுடன் சேர்ந்து இருதயத்தானத்தில் இயங்கும். 4. துரியம்; ஆன்மா விஞ்ஞானமயகோசத்துடன் கூடி புருடன், பிராணன் ஆகிய இரண்டு தத்துவங்களுடன் உந்தித்தானத்தில் நின்று தொழிற்படும் நிலை. உந்தித் தானம் என்பது நாபிக்கு மேல் நாலு அங்குலத்துக்கும், நாபிக்கு கீழ் நாலு அங்குலத்துக்கும் இடைப்பட்ட எட்டு அங்குலப் பகுதியாகும். இங்கு சித்தம் செயற்படாது இருதயத்தானத்திலேயே நிற்க, பிராணன் என்கிற உறுதிச்சுற்றம் மட்டும் புருடனுடன் சேர்ந்து உந்தித்தானத்தில் இயங்கும். இது சயனத்தில் அரசன் துயில் கொள்ளும் வேளையிலும் அவன் அரசாணை செயற்படுவது போலவாம். இங்கு உயர்ச்சி, இழிவு, சீற்றம், பொறுமை, வைதல், வாழ்த்தல், இன்பம், துன்பம் ஆகியவை இல்லை. 5. துரியாதீதம்; ஆன்மா ஆனந்தமய கோசத்துடன் கூடி பிராணனையும் விட்டு மூலாதாரத்தில் ஆணவ மறைப்புடன் புருடன் என்ற தத்துவத்துடன் மட்டும் தொழிறபடும் நிலை. இந்நிலையில் ஆன்மா எங்கும் வியாபியாய் நிற்கும். இங்கு பிராணனும் உந்தித்தானத்திலே நிற்க புருடன் மட்டும் மூலாதாரத்தில் நின்று செயற்படும். 1. கால் கொடுத்து இருகைமூட்டி வாழிய வெந்நில் தண்டுஎன இடங்கத்து இன்னியல் பழுக்கழி நிரைத்துச் சிரைக்கயிறு அசைத்து மயிர்த்தோல் வேய்ந்து சுவர்த்தசை நிறீஇ ஐம்புலச்சாளரத்து அரும்பெறல் மாடத்து உம்பரீ மணிக்குடச் சென்னிப் பொங்கிய கூந்தல் பதாகை நான்குநிலை தழீஇய ஆங்கினிது அமர்திறன் அறையின் ஆன்ற சாக்கிரம் சொப்பனம் சுழுத்தி துரியம் பிருகுடி நாப்பண் ஒருபெருங் கந்தரம் மருமத்து ஆதி வலஞ்சுழி உந்தி ஒருநான் கங்குலி உம்பர் வரன்முறை செவி மெய்கண் வாய்மூக்கு எனப்பெயரிய வாயின் மிலேச்சர் சாரணர் தூதர் சூதமாகதர் புரோகிதர் என்ற மேதகு புத்தீந் தியமும் தீதுஅறு வாக்கொடு பதம்கை பாயுரு உபத்தம்என் இவுளி மறவரும் யானை வீரரும் திகிரி தூண்டிய தறுகணா ளரும் வன்கண் மள்ளரும் தந்திரத் தலைவரும் என் கருமேந்தியத் திறளும் எஞ்சிய ஓசை பரிசம் உருவம் இரதம் கந்தம் உரைநடை கொடைபோக்கு இன்பம்என் விடயப் பல்பரிசனமும் இடையாப் பிராண வபான உதான வியான சமான நாக கூர்ம கிருகர தேவதத்த தனஞ்சயன் என்ற ஈரைந்து உறுதிச் சுற்றமும் நியதி சிந்தித்து ஆய்ந்து துணிந்து செயற்படும் அந்தக் கரண அமைச்சரும் தந்தம் முறையுளி வழாஅது துறைதோறு ஈண்டிய சதுரங்கத்து நீதி யாகிப் பேர் அத்தாணிச் சீர்பெறத் துன்னி வீசுவ வீசி விரும்புவ விரும்பி மாசில் காட்சி மன்னன் நீங்கிப் பல் பரிவாரமும் விள்ளாச் சுற்றமும் தந்திரம் புணர்ந்த மந்திர மாக்களும் பலர்புகழ் அறியா அவைபுகும் அரங்கின் நனைந்து ஆய்ந்து துணிந்து செயல்மணந்து இனிது உணர்ந்து நனவெனக் கனவின் நன்னடை வழாஅது உரைத்தனன் சொப்பனத் தகத்து இனிது இறந்து மந்திரத் தலைவனும் வன்கடும் பதிபனும் மந்திர பூமி மருங்கு போகிச் சிந்தை மாத்திரம் கனவலின் நனவின் தந்துரை சுழுத்தியின்றே மந்திரத் தலைவற் தணந்து விலைவரம் பில்லாச் சிங்கம் சுமந்த ஐம்பேர் அமளிப் பள்ளி மண்டபத் தானும் தனாது திகிரி யுருண்ட பெருவனப்பு ஏய்ப்ப உறுதிச் சுற்றத்து உறுவளி எடுப்ப ஏற்றம் அழிவு சீற்றம் ஆற்றல் இழிச்சல் பழிச்சல் இன்ப துன்பம் ஒழித்தனன் துரியத்து அழித்து இனிதுஅதீதத்து ஒருவகை எங்கணுமாகி இருள் இரி சுடர்த் தொழில் சாக்கிரம் தாங்க நான்கின் இடத்தகை தெரிதனில் தெரியு மாறே -பஞ்ச அவத்தை இயல், ஞானாமிர்தம் பாடல் 16- 2. சாக்கிர முப்பத்தைந்து நுதலினிற் கனவு தன்னில் ஆக்கிய இருபத்தைந்து களத்தனிற் சுழுமுனை மூன்று நீக்கிய இதயம் தன்னில் துரியத்தில் இரண்டு நாபி நோக்கிய துரியா தீத நுவலின் மூலத்தில் ஒன்றே -சிவஞான சித்தியார் பாடல் 223- 3. அண்ணல்தன் வீதி அரசிருப்பாகும்; அணி படையோர் நண்ணொரு நாலொன்பதாம் அவர் ஏவலும்; நண்ணும் இவ்வூர் துண்ணென் பசிக்கு மடைப்பள்ளியான் சுகமும் எல்லாம் எண்ணிலி காலம் அவமே விடுத்தனன் எண்ணரிதே -பட்டினத்தார் பாடல்- 4. அந்தக் கரண மவற்றின் ஒன்று அன்று, அவை சந்தித்தது ஆன்மா சகசமலத்து உணராது அமைச்சு அரசு ஏய்ப்ப நின்று அஞ்சவத்தைத்தே -சிவஞானபோதம் - நான்காம் சூத்திரம் -பசு இலக்கணம்- Soul is not one of the psychic faculties (anthakaranas of mind, intellect, conscious and self). It cannot know because of its conjunction with prime eternal impurity aaNava malam, the darkness of ignorance. Like a king moves on with his ministers, carries out his duty, the soul moves on with the anthakaranas, goes through the five different states (as wakeful, deep sleep, dream, dhurya and duryaatheeta inorder to experience and to know). -Siva Jnna Bodha Sutra, Number Four on the nature and dimensions of the soul- இந்த தேகத்தில் இனிதாக இருக்கும் ஆன்மாவாகிய அரசன் அமர்ந்து செயற்படும் முறைமையை இந்த நான்காவது சூத்திரம் சொல்லுகின்றது. அந்தக்கரணங்களாகிய மனம், புத்தி, சித்தம், அகங்காரம் என்னும் அகக் கருவிகள் (psychic faculties) ஆன்மா அல்ல. அரசன் தன் அமைச்சரோடு கூடி ஆட்சி புரிவது போல, உயிரானது ஆணவமலப் பிணைப்பினால் அந்தக்கரணங்களோடு கூடி ஐந்து அவத்தைகளில் செயற்படும். இந்த ஐந்து அவத்தைகளாவன விழிப்பு நிலை, கனவு நிலை, உறக்க நிலை, துரியம், துரியாதீதம் என்பனவாம். இவ்வாறு செயற்படும் உயிரானது தன்னுடன் அனாதியாகவே இருக்கும் ஆணவ மலத்தின் மறைப்பினால், தான் செய்யும் செயல்களை அறியுமே தவிர, தன்னை அறியாது; தன்னை இயக்கும் சிற்சத்தியையும் அறியாது. ­உயிர் மனம் (mind) அல்ல; உயிர் புத்தி (intellect) அல்ல; உயிர் சித்தம் (ultra conscious) அல்ல; உயிர் அகங்காரம் (sence of self) அல்ல. ஒப்பீடு : ……………….இங்ஙனம் ஆராய்ந்து அன்னம் பிரம்மம் என்று அறிந்தார்.........பின் அன்னம் உற்பத்தியும் நாசமும் உடையதாகையால் பிரம்மமாக மாட்டாது என்று தெளிந்து.......மீண்டும் தவம் செய்து.............. மனம் பிரம்மம் என்று ஆராய்ந்து அறிந்தார்.......... பின் மனம் பிரம்மமாக மாட்டாது என்று தெளிந்து......மீண்டும் தவம் செய்து ..........விஜ்ஞானம் பிரம்மம் என்று ஆராய்ந்து அறிந்தார்..........பின் விஜ்ஞானம் பிரம்மமாக மாட்டாது என்று தெளிந்து............மீண்டும் தவம் செய்து..........ஆனந்தம் பிரம்மம் என்று ஆராய்ந்து அறிந்தார். - தைத்திரீய உபநிடதம் பிருகு வல்லீ- 1-6- உயிர் அறிவுள்ளதாயினும் அதை மறைத்திருக்கும் ஆணவ இருள் உயிரின் அறிவை மறைத்து மயக்கத்தைக் கொடுக்கின்றது. ஆணவ மலம் உயிரை அனாதியாகவே பீடித்திருப்பதால் இது சகச மலம் எனப்படுகின்றது. இவ்வாறு ஆணவ மல மறைப்பால் அறிவில்லாத உயிர், சிறிது அறிவு துலங்குவதற்காக அந்தக்கரணங்களாகிய மனம், புத்தி, சித்தம், அகங்காரம் ஆகிய கருவிகளோடு கூடிச்செயற்படும். இந்த நிலையில் இது விழிப்பு, உறக்கம், கனவு, துரியம், துரியாதீதம் என்ற ஐந்து அவத்தைகளில் செயற்படுகின்றது. விழிப்பு நிலையில் ஆன்மா முப்பத்தைந்து தத்துவங்களுடன் கூடி புருவ மத்தியில் தொழிற்படும். கனவு நிலையில் கர்மேந்திரியங்கள் ஐந்தையும் ( கை, கால், நா, சனன உறுப்பு, கழிவுறுப்பு) ஞானேந்திரியங்கள் ஐந்தையும் (மெய், வாய், கண், மூக்கு, செவி) விட்டு கண்டத்தில் இருபத்தைந்து தத்துவங்களுடன் செயற்படும். உறக்கத்தில் சித்தம், பிராணன், புருடன் ஆகிய மூன்று தத்துவங்களுடன் கூடி இருதயத்தில் செயற்படும். துரியத்தில் புருடனும், பிராணனும் கூடி உந்தியில் செயற்படும். துரியாதீதத்தில் ஆன்மா தனித்து நின்று மூலாதாரத்தில் செயற்படும். இவ்வாறு துரிய நிலையில் இருந்து விழிப்பு நிலைக்கு திரும்பும்போது விடுபட்ட இதே ஒழுங்கில் அத்தத்துவங்களைக் கூட்டி செயற்பட்டுக்கொண்டு செல்லும். இது அரசன் ஒருவன் அந்தப்புரத்தில் இருந்து உலாவுக்குப் புறப்படும்போது அரண்மனையின் ஒவ்வொரு நிலையில் அவனின் காவலர்களும், அமைச்சர்களும், சேவகர்களும், படை பரிவாரங்களும் சேர்ந்து கொண்டு செல்வதையும், மீளும்போது ஒவ்வொருவராக விடுபட்டு, இறுதியில் அவன் அந்தப்புரம் நுழையும்போது அவன் மட்டுமே தனியாக உட்செல்வதையும் ஒத்தது. இந்நிலைகளில் செயற்படும் உயிருக்கு தன்னையும் தெரியாது, தன்னை இயக்கும் சித்சத்தியையும் தெரியாது. படமெடுக்கும் கமராவுக்கு காட்சி மட்டுமே தெரியும்; ஆனால் தன்னைத் தெரியாது; தன்னை இயக்குவோனையும் தெரியாது. அதுபோலவே இதுவும். சாதாரண மானுடர்களாகிய நாம் மேற்கூறிய ஐந்து அவத்தைகளில் விழிப்பு, உறக்கம், கனவு என்ற மூன்று நிலைகளிலேயே எமது வாழ்க்கையைக் கழிக்கின்றோம். மற்றைய இருநிலைகளும் நாமறியாமலே கணப்பொழுதுக்கு வந்து வந்து மறைகின்றன. ............உடலில் பல நாடிகளுள் ஹிதா என்னும் ஒரு நாடி உள்ளது. அது இருதயத்தாமரையுடன் தொடர்புடையது. இருதயத்தில் இருந்து அது உடல் முழுவதும் வியாபிக்கின்றது. மயிரிழையை ஆயிரம் கூறாக்கினால் எவ்வளவு நுண்ணியதாகுமோ அதைவிட இந்த நாடி சூட்சுமமானது. உறங்கும்போது மனிதன் இந்த நாடியில் ஒடுங்குகிறான். கனவுகூட இல்லாமல் தூங்கும்போது இந்தப் பிராண சக்தியுடன் அவன் ஐக்கியமாகிவிடுகிறான். கண் காது முதலியவற்றிலுள்ள சக்திகளெல்லாம் இதில் லயிக்கின்றன. அவன் விழித்துக்கொள்ளும்போது அச்சக்திகள் போன வழியே திரும்பி வருகின்றன. - கௌஷீதகீ உபநிடதம் 4.19 - ஆன்மீக சாதனைகள் புரியும்போது துரியம் என்னும் தூங்காமல் தூங்கும் தியான நிலை கை கூடும். ' தூங்காமல் தூங்கிச் சுகம் பெறுவ(து) எக்காலம்' -பத்திரகிரியார் பாடல்- கை கூடிய துரிய நிலை இருபத்து நான்கு மணி நேரமும் நிலைத்திருக்கும் நிலை துரியாதீதம். இரமண மகரிஷி போன்ற சித்தர்கள் இந் நிலையில் இருந்தவர்கள். இதுவே திருமூலர் சொல்லும் இராப்பகல் அற்ற நிலை, காலத்தைக் கடந்த நிலை. இவை பற்றிய மேலதிக விளக்கங்களை குரு முகமாக உணர்க. ஒ-டு 1. இருந்தேன் இக்காயத்தே எண்ணிலி கோடி இருந்தேன் இராப் பகல் அற்ற இடத்தே -திருமந்திரம் பாடல் 80- ஒ-டு 2. அங்கு (சூரியன்) அஸ்தமிக்கிறதுமில்லை, உதிக்கிறதுமில்லை -சாந்தோக்கிய உபநிடதம் 11.2- ஒ-டு 3. இந்தப் பிரமஞானத்தை அறிந்தவன் எவனோ அவனுக்கு சூரியன் உதிப்பதுமில்லை, அஸ்தமிப்பது மில்லை. அவனுக்கு எப்போதும் ஒரே பகலாகவே இருக்கும். -சாந்தோக்கிய உபநிடதம் 11.3- ஒ-டு 4. அங்கே சூரியன் பிரகாசிப்பதில்லை; சந்திரனும், நட்சத்திரங்களும் பிரகாசிப்பதில்லை; மின்னல் கொடிகளும் பிரகாசிப்பதில்லை; ஸ்வயம்பிரகாசமுள்ள அதைப் பின்பற்றியே அனைத்தும் பிரகாசிக்கின்றது. அவனொளியாலேயே இவையனைத்தும் விளங்குகின்றது. -கட உபநிடதம், ஷஷ்டீ வல்லீ 5.15- ஒ-டு 5. உண்மையாம் சிவப்ரகாச ஒளியது வாழிவாழி - தாயுமானவர் பாடல் - ஒ-டு 6. சிந்தையில்லை நானென்னும் பான்மையில்லை தேசமில்லை காலமில்லை திக்குமில்லை தொந்தமில்லை நீக்கமில்லை பிறிவுமில்லை சொல்லுமில்லை இராப் பகலாந் தோற்றமில்லை அந்தமில்லை ஆதியில்லை நடுவுமில்லை அகமுமில்லை புறமுமில்லை அனைத்துமில்லை -தாயுமானவர் பாடல்- ஒ-டு 7. பட்டப்பகல் போலொளிரும் நாடெங்கள் நாடே பகலிரவு தோன்றாத நாடெங்கள் நாடே - சிவ யோகர் சுவாமிகளின் நற்சிந்தனை- ஒ-டு 8. பகல் இரா முதல் ஈறு இடை இன்றாம் இடத்து உறங்குவது இவர் வாழ்க்கை - திருவிளையாடற் புராணம், பாடல் 2751- 5. தசவாயுக்களும் அவற்றின் செயற்பாடும்; பிலத்து நிற்கும் பிராணனோடு அபானன்எனும் பிரியாவியானன் சமானனொடு கூர்மன் நலத்து நின்ற நாகன்எழிற் கிருகரன்றானாகும் நற்தேவதத்தன் ஒடுதனஞ்செயன் பத்தாகும் இலக்கமுடன் பிரண நிலைமூலமதிற் தோன்றிஎழுந்து சிரசளவு முட்டியிரு விழியின் கீழாய் கலக்கமற நாசிவழியோடும் நிராறில் கடுகியெட்டு வுட்புகுந்து கழியும் ஓர்நான்கே உந்தியெனுந் தலத்தின்கீழ் அபானன்நின்று உறுமி மலங்களையும் கழலச்செய்யும் விந்தையெழில் வியானன் தோள்தனில் நின்று மிகக் களையுந் தவனமும் உண்டாகச் செய்யும் பிந்த உதானன் செயலுண்டசனந் தன்னைப் பொருநாடி நரம்புவருவூட்டல் செய்யும் இந்த வுடலதனை வளர்க்குஞ் சமானன்தானு மியாவையு மேமிஞ்ச வொட்டா திருக்கு மன்றே கூர்மன் இருவிழியில் நிமைத்திடுமே நாகன் கொட்டாவி விக்கலெனுங் கொடுமை செய்யும் தீர்மை கிருகானீட்டி முடக்கி வைக்குந் தேவதத் தன்விழித்துமே வசனஞ் செய்யும் பேர்மன்னுந் தனஞ்சயன்மேற் சிரசிரண்டாய்ப் பிளந்திடும் போதது வோடிப் போவதாகும் நேர்மை யறிந்திடுவை யினிநாடி பத்தின் நிலை தெரிநெதிடவிபரம் உரை செய்வோமே - அகத்தியர் இரத்தினகிரி கடம்- பாடல் 19-21-

No comments:

Post a Comment