Monday, September 17, 2012
விஞ்ஞான நோக்கில் விநாயகர் உருவினைப் பார்க்கும்பொழுது,
இந்து சமயம் போற்றும் கடவுள் திருவுருவங் கள் அனைத்தும் மிக உயர்ந்த உட்கருத்தினை உணர்த்தும் வடிவங்களாகவே அமைந்துள்ளன. விஞ்ஞான நோக்கில் பார்க்கும் பொழுதும், அத்திரு வடிவங்கள் எவ்வளவு உயர்ந்த தெய்வீக உட்கருத்துகளையும்- விஞ்ஞானக் கோட்பாடு களையும் மக்களுக்கு உணர்த்துவதாக உள்ளன என்பது விளங்குகின்றது.
விஞ்ஞான நோக்கில் விநாயகர் உருவினைப் பார்க்கும்பொழுது, அத்திருவுருவம் இன்று உலகெங்கும் போற்றப்படும் சுற்றுச்சூழல் பாதுகாப்பில் இன்றியமையாத தேவையினை வலியுறுத்தும் வடிவாகவே விளங்குகின்றது. மனிதனின் நல்வாழ்விற்கு மிருகங்களும் பிற அஃறிணை உயிரினங்களும் பெரிதும் உதவுகின்றன. ஆகையால் மனிதன் மிருகங்களையும் பறவை களையும், அவை அழிவுபடாத வகையில் பேணிப் பாதுகாத்தல் வேண்டும். அவற்றிடம் அவன் இரக்க முடையவனாகவும் இருத்தல் வேண்டும். இன்று உலகின் எல்லா நாடுகளிலும் மிருகங்களையும் பறவைகளையும் பாதுகாப்பதற்கான செயல் முறைகள் முனைந்து மேற்கொள்ளப்படுகின்றன. மிருகங்களில் பெரிதான யானையின் தலையும் மனித உடலும் அழகுற அமைந்த விநாயக மூர்த்தம், மக்களுக்கும் மிருகங்களுக்கும் இடையே தேவை யான வாழ்முறை ஒருமைப்பாட்டினை உணர்த்தும் பெரிய தத்துவ தெய்வமாகவே விளங்குகிறது.
மேலும், புலால் மறுத்தலின் தேவையினையும், சைவ உணவின் மேன்மையினையும் யானை முகம் குறிப்பால் உணர்த்துவதாகவும் உள்ளது. மிருகங்களில் யானை கம்பீரத் தோற்றம் உடையது. அயராத உழைப்பு, திடபலம், அறிவு முதலியவை அமையப் பெற்றது. இத்தகைய மேன்மைகளுடன் அளவிடற்கரிய சக்தியின் அரிய உருவமாக விளங் கும் யானை உண்பது தாவர உணவினைத்தான்! அந்த யானையின் பிளிறுதலில் "ஓம்' என்ற பிரணவ மந்திரத்தினையும் கேட்கலாம். இவ்வகையில் மக்களுக்கும் மிருகங்களுக்கும் தாவரங்களுக்கும் இடையே தேவையான வாழ்முறை கட்டுப்பாடும் ஒருமைப்பாடும் (Proper balance and Control between the animal kingdom and the plant kingdom) இருத்தல் வேண்டும் என்ற விஞ்ஞானக் கோட்பாட்டினை உணர்த்தும் மூர்த்தமாகவும் விநாயகர் விளங்கு கின்றார்.
சமய வழிபாட்டில் முதல் வழிபாடு விநாயக மூர்த்திக்கே. மக்களின் முதற்கடமை ஒருமைப் பாட்டு உணர்வினைப் போற்றுதலேயாகும்.
ஓங்கார வடிவமான விநாயகரின் திருவுருவம் ஒருமைப்பாட்டின் தெய்வீக உருவம். ஓங்காரம் எல்லா எழுத்தொலிகட்கும் முதலாய் அமைந்தது. அது அகத்தும் புறத்தும் இயற்கையாய் ஒலிக்கும் ஓசை. ஓங்காரம்- படைத்தல், காத்தல், அழித்தல் என்ற முத்தொழில்களையும் இயற்றவல்லது. எச்செயலையும் தடைகள் இல்லாமல் வெற்றியுடன் முடிப்பதற்கு- அச்செயலைத் தொடங்குவதற்கு முன்னர் முதற்கண் வழிபடப் பெறும் கடவுள் ஒருமைப்பாட்டு உருவினரான விநாயகரே.
ஆண்- பெண் ஒருமைப்பாடு
ஒருமைப்பாடு எங்கும் எதிலும் வேண்டும். வாழ்வின் எல்லா அம்சங்களிலும் அது வியாபித் திருக்க வேண்டும். ஆணின்றி பெண்ணில்லை; பெண்ணின்றி ஆணில்லை. "சக்தியும் சிவமுமாந் தன்மை இவ்வுலகமெல்லாம்' என்கிறார் சிவஞான சித்தியார். விநாயக மூர்த்தம் இதனை அழகுற வெளிப்படுத்துகிறது. அதில் தந்தமுள்ள பகுதி ஆண் கூறு; தந்தமில்லாத பகுதி பெண் கூறு. இவ்வாறு விநாயக மூர்த்தத்தில் ஆண்- பெண் என்ற இரு கூறுகள், ஆண்- பெண் ஒருமைப்பாட் டின் இன்றியமையாத தன்மையை வலியுறுத்தி விளக்குகின்றது.
தொழில்களில் ஒருமைப்பாடு
உலகில் நிகழும் எல்லாச் செயல்களும் படைத் தல், காத்தல், மறைத்தல், அழித்தல், அருளல் என்ற ஐந்து பெரும் தொழில்களில் அடங்கும். விநாயகரின் ஐந்து கரங்களில் அமைந்துள்ள ஐந்து பொருட்களும் இந்த ஐந்து தொழில்களை உணர்த்துவதாகவே உள்ளன. ஒரு கரத்தில் ஏந்தியுள்ள "பாசம்' படைத்தல் தொழிலைப் புலப்படுத்தும். "பாசம்' பிறவிக்கு வழிகோலுகின்றது அல்லவா? ஒற்றைக் கொம்போ காத்தல் தொழிலைக் காட்டும். துதிக்கை மறைத்தல் தொழிலைத் தெரிவிக்கும். அங்குசம் அழித்தல் தொழிலைக் காட்டும். மோதகம் அருளல் தொழிலை அறிவிக்கும். ஐந்தொழில்களையும் அளவோடு ஒருங்கிணைந்த வகையில் செயல்படுத்தும் அழகிய ஞானமூர்த்தமே ஐங்கரத்து விநாயகர்.
ஞானத்தில் ஒருமைப்பாடு
விநாயக மூர்த்தம் ஞான சொரூபம். அது பரஞானம், அபரஞானம் ஆகிய இரண்டினையும் அறிவிக்கும் குறிகளைக் கொண்ட அழகிய மூர்த்தம். அதனுடைய ஒடிந்த கொம்பு அபர ஞானத்தைக் குறிக்கும். ஒடியாத முழுமையான கொம்பு பர ஞானத்தைக் குறிக்கும். இஃதன்றி பதிஞானம், பாசஞானம் ஆகியவற்றினைக் குறிப்பதாகவும் அமையும். பாசஞான நூலான பாரதம் எழுதத் துணை செய்தது ஒடிக்கப் பெற்ற கொம்பு. பாசஞானம் கலைஞானமாகி, சிவஞானத் திற்கு வழிகோலும் உவமையிலாக் கலைஞானம், உணர்வரிய மெய்ஞ்ஞானம், திருப்பெருகும் சிவஞானம் என்ற மும்மதத்தினையும் ஒருங் கிணைத்த ஞான மதத்தின் ஒப்பற்ற தலைவராக விநாயகக் கடவுள் விளங்குகிறார்.
சமயங்களில் ஒருமைப்பாடு
சமய பேதங்களைக் கடந்து சைவர்க்கும் வைணவர்க்கும் வழிபடு கடவுளாக விளங்குபவர் விநாயகர்.
மேலும் விநாயக மூர்த்தம் ஒன்றை வழிபட்டால் போதும்- சிவன், சக்தி, விஷ்ணு ஆகிய பெரும் தெய்வங்களை வழிபட்ட பலன் கிட்டும். ஏனெனில், அத்தெய்வங்களின் அம்சங்கள் விநாயகர் திருவுருவில் அமைந்துள்ளன. விநாயகரின் நாபி பிரம்ம சொரூபமாக விளங்குகின்றது. திருமுகம் திருமாலின் அம்சம். முக்கண் சிவ அம்சம். இடப்பாகம் சக்தி வடிவம்; வலப்பாகம் சூரிய அம்சம். ஆதிசங்கரர் வகுத்த ஆறு சமயங் களிலும் விநாயகர் வழிபாடு உண்டு.
வழிபாட்டில் ஒருமைப்பாடு
வெள்ளெருக்கு முதல் கருங்கல் வரை பேதமின்றி பல பொருட்களைக் கொண்டும் விநாயகர் வடிவம் செய்து வழிபடலாம். வெள்ளெருக்கு, மஞ்சள், சந்தனம், மலர், மரம், சுதை மண், கருங்கல், பொன், வெள்ளி, செம்பு, பளிங்கு போன்ற பல பொருட்கள் விநாயகர் வடிவம் அமைக்கப் பயன்படுகின்றன. விநாயக சதுர்த்தியன்று மண்ணினால் செய்த விநாயகர் வடிவினை அனைவரும் வழிபடுவர்.
அன்பு கணபதி இல்லாத இடமே இல்லை. எங்கும் எவர்க்கும் விநாயகப் பெருமானை வழிபட வேண்டப்படுவதெல்லாம் அன்பு ஒன்று தான். அன்பு வழிபாட்டில் மக்கள் அனைவரை யும் ஒன்றுபடுத்துகிறார் விநாயகப் பெருமான்.
காலம், இடம் கடந்த ஒருமைப்பாடு
காலம், இடமெல்லாம் கடந்து நிற்பவர் கணபதி. ஓங்காரம் அநாதி. அதற்குக் காலம் கற்பித்தல் முடியாது. ஆகையால் ஓங்கார வடிவினரான விநாயகரும் அநாதி. பல காலங்களையும் விநாயகர் பிணைத்து நிற்பதை வேதங்களும் புராணங்களும் தெரிவிக்கின்றன. வேதகாலத்தி லேயே விநாயகர் வழிபாடு இருந்திருக்கிறது.
தேசிய ஒருமைப்பாடு
விநாயக சதுர்த்தியன்று மண்ணினால் செய்த விநாயகர் திருவுருவினையே பெரும்பாலோர் விரும்பி வழிபடுகின்றனர். இது பிறந்த மண்ணை- பிறந்த பொன்னாட்டைப் போற்றுதல் வேண்டும் என்ற உட்குறிப்பினைக் கொண்டது போலும்! "பெற்ற தாயும் பிறந்த பொன்னாடும் நற்றவ வானிலும் நனி சிறந்தனவே' என்றார் மகாகவி பாரதி. விநாயகர் வழிபாட்டில் ஒருங்கிணைந்த தெய்வபக்தி தேசபக்தியாகப் பரிமளிக்கிறது. நாடெங்கும் மக்களால் கொண்டாடப் பெறும் விநாயக சதுர்த்தி விழா தேசிய விழாவாக மலர்ந்து, தேசபக்தியினையும் தேசிய ஒருமைப்பாட்டினையும் ஓங்கச் செய்கின்றது. நமது நாட்டின் விடுதலைப் போரில் மக்களை ஒருங்கிணைக்க, மகாராஷ்டிரம் விநாயக சதுர்த்தி விழாவினைத் தேசிய விழாவாகவே மேற்கொண்டது. விடுதலை வீரரான பாலகங்காதர திலகர் போன்ற பெருந்தலைவர்கள் விநாயக சதுர்த்தியை தேசிய விழாவாக வெற்றி பெறச் செய்தனர்.
இயற்கை ஒருமைப்பாடு
பூமி விளைந்தால்தான் நாட்டில் பஞ்சம் இருக்காது. நல்ல விளைச்சலுக்கு மண்வளம் வேண்டும். மண்ணினால் அமைந்த விநாயகர் திருவுருவம் மண்வளம் பாதுகாக்கப்படுதல் வேண்டும்; போற்றப்படுதல் வேண்டும் என்பதனை அறிவுறுத்துவதாக உள்ளது. மேலும், நிலமும் நீரும் தக்கவாறு ஒருங்கிணைந்தால்தான் நல்ல விளைச்சல் உண்டாகும். நிலத்தையும் நீரையும் தக்க அளவில், நல்ல முறையில் பயன்படுத்த வேண்டும் என்று இன்று விஞ்ஞானிகள் வெகுவாக வலியுறுத்துகின்றனர். இந்த சிறந்த விஞ்ஞானக் கருத்தினையே- மண்ணில் செய்த விநாயகர் உருவினை- சதுர்த்தி விழாவிற்குப் பிறகு பூரணமாக நீரில் கரைத்தல் உணர்த்து கின்றது.
No comments:
Post a Comment