Tuesday, September 11, 2012
கொடிய பாவங்கள் நீங்கும் பரிகாரம்
மனிதப் பிறவி மகத்தான பிறவி. மனிதனாக பிறந்தால் தான் இறைவனை எளிதில் அடைய முடியும். வேறு எந்தப் பிறவிக்கும் இந்த சிறப்பு கிடையாது. வானுலகில் தேவராக இருந்தாலும் கூட இறைவனைத் தரிசிக்கத்தான் முடியுமே ஒழிய அவரோடு இரண்டறக் கலக்க முடியாது.
ஆக இத்தகைய அரிய மானிடப்பிறவியைத் தந்த நம் முன்னோருக்கு நன்றி தெரிவிக்க வாரிசுகள் நடத்தும் ஒரு விழாவாக அமாவாசையை எடுத்துக் கொள்ளலாம். சூரியனின் வடக்கு திசை பயணம் துவங்கும் உத்ராயண காலத்தின் துவக்கமான தை மாதம் மிகவும் புனிதமானது. அந்த மாதத்தில் வரும் அமாவாசையில் கடற்கரை தலங்களுக்குச் சென்று முன்னோருக்குச் தர்ப்பணம் செய்து வரலாம்.
சம்பந்தரும், நாவுக்கரசரும் வழிபட்ட வேதாரண்யம் மிகவும் புனிதமானது. இக்கோவிலுக்குள் உள்ள மணிகாணிகை தீர்த்தத்தில் நீராடினால், கங்கை, யமுனை, நர்மதை, சிந்து, காவிரி போன்ற புண்ணிய நதிகளில் நீராடியதற்கு சமம். இதில் நீராடியவர்கள், தங்கள் பாவங்களைக் கழுவிக் கொள்வதுடன், தங்கள் முன்னோர் செய்த பாவங்களுக்கும் சேர்த்து நிவர்த்தி பெற்று வரலாம்.
பிரம்மஹத்தி (கொலை செய்த பாவம்) போன்ற கொடிய பாவங்களும் கூட நீங்கும் என்பது ஐதீகம். பல ஆண்டுகளாக யோகம், தானம் தவம் செய்த பலன்களையும் அடையலாம். இந்தக் கோவில் எதிரே உள்ள கடல், ஆதி சேது என்று அழைக்கப்படுகிறது. அதாவது ராமேசுவரத்துக்கு சமமானது இந்த கடல் தீர்த்தம்.
இதில் ஒரு முறை நீராடுவது ராமேசுவரத்தில் நுறு தடவை நீராடுவதற்கு சமம் என்பவர். தை அமாவாசை, மாசி மாத, மகாளய அமாவாசைகளில் இங்கு நீராடுவர். இவ்வூர் அருகில் உள்ள கோடியக்கரை கடல் தீர்த்தமும் மிகவும் புனிதமானது.
No comments:
Post a Comment