Monday, October 1, 2012
கிரஹங்கள் தரும் துன்பங்களிலிருந்து விடுபட
ஆளுடைய பிள்ளையாரான திருஞான சம்பந்தரும், திருநாவுக்கரசரும் புண்ணியத் தலங்களை வழிபட்டபடி பயணம் சென்று கொண்டிருந்த நேரம்...
மதுரை மாநகரில் அப்போது கூன் பாண்டியனின் ஆட்சி. அவன் சமண மதத்தை தழுவியிருந்ததால் அங்கே சமணர்களின் அட்டகாசம் அளவு கடந்திருந்தது. "சைவத்தை ஒழித்துக் கட்டினால்தான் தங்களுடைய அதிகாரம் நிலைக்கும்' என்று கணக்குப் போட்டு அவர்கள் காய் நகர்த்திக் கொண்டிருந்தனர்.
ஆனால் மன்னனின் துணைவியாரான மங்கையர்க்கரசியும், அமைச்சர் குலச்சிறையும் சிவபெருமானிடம் நீங்காத பேரன்பு உடையவர்கள். "திருஞான சம்பந்தர் மதுரைக்கு ஒருமுறை வந்துவிட்டால் போதும்! சமண இருள் அகலும்; சைவ ஒளி துலங்கும்' என்று அவர்கள் எண்ணினார்கள். இதை சம்பந்தரிடம் தெரியப்படுத்த தூதுவர்களை அனுப்பினார்கள்.
சம்பந்தரும் மதுரைக்கு புறப்பட சம்மதித்தார். ஆனால் சமணர்களின் கொடுமைகளை ஏற்கனவே கண்டிருக்கும் திருநாவுக்கரசருக்கு, சம்பந்தர் அங்கே செல்வதில் விருப்பமில்லை. ""நீங்களோ வயதில் இளையவர்; சமணர்களோ சூழ்ச்சிகளே வடிவானவர்கள். போதாக்குறைக்கு நாளும், கோளும் கூட இப்போது சாதகமாக இல்லை'' என்று ஆளுடைய பிள்ளையாரிடம் அப்பர் பெருமானாகிய நாவுக்கரசர் மன்றாடினார்.
சம்பந்தர் அவரை சமாதானப்படுத்தி, ""நாளும், கோளும் நாயகனாகிய சிவபெருமானின் அடியார்களைத் துன்புறுத்தாது. நீங்கள் கவலைப்பட வேண்டாம். மதுரையம்பதியில் சைவக் கொடி பறக்க வைப்பேன்'' என்று உறுதியளித்து, "கோளறு திருப்பதிகம்' பாடினார்; சொன்னபடியே வென்று காட்டினார்.
கிரஹங்கள் தரும் துன்பங்களிலிருந்து விடுபட விரும்புகிறவர்கள் தினம்தோறும் இந்தப் பதிகத்தை, ஒருமுறையாவது பாராயணம் செய்வது அவசியம்.
பெற்றோர்கள், தங்களுடைய பிள்ளைகளுக்கு இந்தப் பதிகத்தைப் போதித்து, தினசரி இதைப் படிக்கச் சொல்ல வேண்டும்.
அதீதமான காமம், லஞ்சம், ஊழல் போன்ற தீமைகள் மலிந்து இருள் சூழ்ந்திருக்கும் இன்றைய வாழ்வில், "கோளறு திருப்பதிகம்' என்னும் தீப்பந்தத்தை தங்களுடைய வாரிசுகளின் கையில் ஒப்படைப்பது பெற்றோர்களின் முக்கியக் கடமை. இந்தப் பதிகத்தைப் பாடுவோரை கிரஹங்கள் தாக்காது. இதை நாம் சொல்லவில்லை; ஞானசம்பந்தரே சொல்லியிருக்கிறார். பாக்கியம் இருப்பவர்கள் படித்துப் பயன் பெறலாம்.
No comments:
Post a Comment