Monday, October 1, 2012
பாவங்களை போக்கும் யமுனை
முன்னொரு காலத்தில் கிரேதா யுகத்தில் நிஷாதா என்ற தேசத்தில் ஹேமகுண்டலா என்பவர்; வாழ்ந்து வந்தார். அவர் ஒரு வியாபாரி. இரண்டு மகன்கள் இருந்தனர். அவர் பாடுபட்டு பெரும் செல்வம் சேர்த்தார். நிறைய தான தருமங்கள் செய்தார். தன்னிடம் உதவி கேட்டு வந்தவர்களுக்கு உதவிகள் செய்தார் ஆனாலும் அளவுக்கு மிஞ்சிய செல்வம் சேர்ந்ததும் வாழ்க்கை அலுத்தது. ஆன்மீகத்தில்
நாட்டம் கொண்டார். சிவனுக்கும் விஷ்ணுவிற்கும் இரண்டு ஆலயங்களைக் கட்டினார். அதன் பின் அனைத்து செல்வத்தையும் இரண்டு மகன்களுக்கும் கொடுத்துவிட்டு சன்யாசம் மேற்கொண்டு சென்று விட்டார்.
இரு மகன்களுக்கும் கடவுள் பக்தி இல்லை. கூத்தாடினர், சூதாடினர், பெண் பித்தர்களாக இருந்தனர். இரண்டு மகன்களும் ஊதாரித்தனமாக இருந்து செல்வம் அனைத்தையும் கரைத்தனர். ஒரு கால கட்டத்தில் கடனாளிகளாகி ஊரை விட்டு ஓடி விட்டனர். மூத்தவன் காட்டிற்குள் சென்று யமுனை நதி ஓடிக் கொண்டு இருந்த கரையில் தங்கி வாழ்ந்தான். இரண்டாமவனோ மலைப் பகுதிக்குச் சென்று குகைகளில் வாழ்ந்து வந்தான். சில காலம் கடந்தது. இருவரும் மரணம் அடைய யம தூதுவர்கள் அவர்களை மேலுலகுக்கு அழைத்துச் சென்றனர். மூத்தவன் சொர்கத்திற்கும், இளையவன் நரகத்துக்கும் சென்றனர்.
அதைக் கண்ட நாரத முனி யமதர்மராஜனிடம் சென்று கேட்டார், 'இத்தனை கேடு கெட்ட வாழ்க்கையை வாழ்ந்த இருவரில் ஒருவனை மட்டும்; சொர்கத்துக்கு ஏன் அனுப்பினீர்கள்;?'
யமதர்மராஜர் கூறினார் ' முனிவரே உங்களுக்குத் தெரியாததா, எத்தனைதான் தீய செயல்களை செய்தாலும் புனிதமான யமுனை நதியில் ஒரு முறை குளித்தாலும் அனைத்து பாபங்களும் போய்விடும் என்பது. மூத்தவன் தனது இறுதி நாட்களில் தினமும் யமுனையில் அல்லவா குளித்து வந்தான். கிருஷ்ணரும், சிவபெருமானும் குளித்த அந்த புனித நதியில் குளித்து விட்டவருக்கு நான் சொர்கத்தைத் தராமல் வேறு என்ன செய்வது?'.
யமுனை சூரியனின் மகள். யமதர்மராஜரின் சகோதரியாம். சூரியனின் மனைவி ஒரு நாள் அவருடைய ஒளியை தாங்க முடியாமல் தன்னுடைய கண்களை மூடிக் கொண்டபோது கோபமடைந்த சூரியன் மனைவிக்கு சாபமிட்டார். அப்போது பிறந்தவளே யமுனை. அதனால்தான் அவள் நதி என்றும் சலசலப்பாகவே உள்ளதாம்.
நீதி:- இறுதி நாட்களில் செய்யும் புண்ணியம்
இறைவன் அருளை நிச்சயம் பெற்றிடும்;.
No comments:
Post a Comment