Monday, October 1, 2012
நல்லோர் கூட்டுறவு நல்ல பண்புகளையும் தருகிறது
வேடன் ஒருவன் பறவைகளை வேட்டையாடுவதற்காக, ஒருநாள் காட்டுக்குச் சென்றான். ஒரு மரக்கிளையில், கூட்டில் இருக்கும் இரு கிளிகளைப் பார்த்ததும், அவை இரண்டையும் உயிருடன் பிடித்து எடுத்துச் செல்லும்போது, அவற்றுள் ஒரு கிளி எப்படியோ தப்பித்துப் பறந்துவிட்டது. கையிலிருந்த அந்த ஒற்றைக் கிளியோடு வீடு திரும்பிய வேடன், அதைப் பேசப் பழக்கினான். ஒருசில நாட்களிலேயே, வேடன் பேசும் அனைத்தையும் அந்தக் கிளி கற்றுக்கொண்டுவிட்டது. தப்பித்துச் சென்ற மற்றொரு கிளி, ஒரு முனிவரின் கையில் கிடத்தது. தனது ஆஸ்ரமத்திற்கு அதனை எடுத்துச் சென்று, வேத மந்திரங்களையும், நல்ல வார்த்தைகளையும் அதற்குப் பழக்கினார் அந்த முனிவர். இவ்வாறு அவ்விரு கிளிகளும் தனித்தனியே அந்தக் காட்டின் இரு மூலைகளில் வாழ்ந்துகொண்டிருந்தன.
ஆண்டுகள் கடந்தன. ஒரு நாள் ஒரு அரசன் வேட்டைக்கென ஒரு குதிரை மீது அமர்ந்து அந்தக் காட்டுப் பக்கம் வந்தான். வேடனின் குடிசைக்கு அருகில் அவன் வந்தபோது, அவனைப் பார்த்த அந்தக் கிளி, "ஓடு, ஓடு, யாரோ ஒருவன் குதிரையின் மீது வந்துகொண்டிருக்கிறான். அவனைப் பிடி; கொல்" எனக் கூச்சலிட்டது.
அதைக் கேட்ட அரசன் உடனடியாக அங்கிருந்து அகன்று, முனிவரின் ஆஸ்ரம இருந்த காட்டின் மறு கோடிக்குச் சென்றான். அங்கேயும் ஒரு கிளி கூண்டில் அமர்ந்திருந்தது. அரசன் வருவதைப் பார்த்ததும், அந்தக் கிளி, "வாருங்கள், அரசே! வந்து இளைப்பாறுஙள். குளிர்ந்த நீர் பருகி, இனிய பழங்களை உண்டு, சற்று ஓய்வெடுத்துக் கொள்ளுங்கள்" என இதமாகச் சொன்னது. "வணக்கத்துக்குரிய முனிவரே! வந்து அரசனை வரவேற்று உபசரியுங்கள். அவர் நமது ஆஸ்ரமத்துக்கு வருகை தந்திருக்கிறார்' என முனிவரை அழைத்தது.
இந்தச் சொற்களைக் கேட்ட அரசன் வியப்படைந்தான். வேடனின் கிளி மரியாதை இல்லாமலும், இந்தக் கிளி அன்புடனும் பேசியதைக் கேட்ட அந்த அரசன், ஒருவர் வளரும் சூழ்நிலையும், அவர் கூடியிருக்கும் இடத்தில் வசிப்பவர் கற்றுக்கொடுக்கும் போதனைகளுமே ஒருவரது குணத்தைத் தீர்மானிக்கிறது என்பதை உணர்ந்தான். தீய சகவாசம் தீய குணங்களையும், நல்லோர் கூட்டுறவு நல்ல பண்புகளையும் தருகிறது என்னும் பாடத்தை இவ்விரு கிளிகளின் மூலம் அவன் தெரிந்து கொண்டான்
No comments:
Post a Comment