Monday, October 1, 2012
அரசன் அன்று கொள்வான், தெய்வம் நின்று கொள்ளும்
இராமாயண யுத்தம் முடிந்து ராமபிரான் ஆட்சி பொறுப்பை ஏற்று இருந்த காலம் அது. அயோத்தியாவை ஆண்டு வந்த அவர் மாதம் ஒரு முறையாவது தமது மந்திரி சபையைக் கூட்டி நாட்டில் யாருக்கேனும் குறை இருந்தால் அவர்களை அழைத்து வந்து அவர்களுக்கு தேவையான நீதியை வழங்க வேண்டும் என்பார். அப்படி இருக்கையில் ஒரு முறை அவர் சபையில் இந்திரன், சந்திரன், யமன், அக்னி என அனைவரும் வீற்று இருந்தார்கள்.
ராமபிரான் தனது சகோதரன் லஷ்மணரை அழைத்துக் கூறினார் 'லக்ஷ்மணா, உடனே கிளம்பிச் சென்று நாடு முழுவதும் சுற்றி யாருக்கேனும் குறை இருந்தால் அவர்களை இங்கே அழைத்து வா'. சகோதரர் இட்ட பணியை செய்வதில் லஷ்மணருக்கு யாருமே இணையாக இருக்க முடியாது.
உடனேயே கிளம்பிச் சென்ற தம்பி லஷ்மனன்ர் நாடு முழுவதும் சுற்றி விட்டு அரண்மனைக்குத் திரும்பி கூறினார் '' அண்ணா, இந்த நாட்டில் யாருமே குறையுடன் இருப்பதாகத் தெரியவில்லையே''. ராமர் கூறினார் '' இருக்காது தம்பி, மீண்டும் ஒரு முறை சென்று பார். என் உள் மனதில் இந்த நாட்டில் யாருக்கோ குறை உள்ளதாக ஒரு பிரமை இருந்து கொண்டே உள்ளது. ஆகவே சரியாகச் சென்றுப் பார் ''. லஷ்மணர் மீண்டும் கிளம்பிச் சென்றார். அவரால் குறையுடன் உள்ள யாரையுமே பார்க்க முடியவில்லை.
மனம் குழப்பத்தில் ஆழ்ந்தபடி இருக்க அரண்மனை வாயிலுக்கு வந்தபோது அங்கு ஒரு நாய் எழுந்திருக்க முடியாமல் அழுதபடி படுத்துக் கிடப்பதைப் பார்த்தார். அதன் தலையில் ஒரு ரத்தக் காயம் இருந்தது. லஷ்மணரைப் பார்த்த அந்த நாய் அவரை தன அருகில் வருமாறு அழைத்தது. அவருக்கு மிருக பாஷைகள் தெரியும் என்பதினால் ஒரு வேளை அதற்கு ஏதும் குறை இருக்குமோ என்று எண்ணி கொண்டு அதனிடம் சென்று ''நீ ஏன் அழுது கொண்டு இருக்கின்றாய்? எதற்காக என்னை அழைத்தாய் '' எனக் கேட்டார்.
அதற்கு அந்த நாய் பதில் கூறியது ''ஐயா....ராம ராஜ்யத்தில் எனக்கு ஒரு பெரிய குறை ஒன்று உள்ளது. ஆனால் அதை மன்னர் ராமபிரானிடம் மட்டுமே நேரில் கூற இயலும். என்னை அவரிடம் அழைத்துச் செல்ல முடியுமா '' என்று கேட்டது.இது என்னடா குழப்பமாக உள்ளது என்று எண்ணிக் கொண்டு ''சரி நான் அண்ணாவிடம் கேட்டு விட்டு வருகிறேன் '' என்று உள்ளே சென்று ராமனிடம் அந்த நாயின் குறையைக் கூற ராமரும் சற்றும் தயங்காமல் உடனே அந்த நாயை அழைத்து வருமாறு கூறினார்.
நாயும் சபைக்கு வந்ததும் ராமர் அதன் குறை என்ன என்று கேட்க அது கூறியது '' மன்னா...நான் எந்த தவறுமே செய்யவில்லை. ஆனாலும் என்னை ஒரு பிராமணன் தலையில் தனது கட்டையால் அடித்து காயப்படுத்தி விட்டார். அவருக்கு தக்க தண்டனை தர வேண்டும்''. சபையில் இருந்த அனைவரும் நாயின் குறையைக் கேட்டு அதிர்ந்தார்கள்.
ராமபிரான் சற்றும் தயங்கவில்லை. உடனே அந்த நாய் குறிப்பிட்ட பிராமணரை அழைத்து வரச் சொல்லி நாய் கூறிய புகாரைக் குறித்துக் கேட்டார். அந்த பிராமணரோ தயங்கவே இல்லை. சற்றும் தயங்காமல் இறுமாப்புடன் தமது குற்றத்தை ஒப்புக் கொண்டார். அவர் கூறினார் '' மன்னா....நான் என்ன செய்வது...ஒரு நாள் எனக்கு பசி எடுத்தது. விரைவாகச் சென்று பிட்ஷை வாங்கி வரலாம் எனக் கிளம்பினால் இந்த நாய் நான் செல்லும் வழியை மறைத்தவாறு நடு வழியில் படுத்து இருந்தது. (கிராமத்தின் சாலைகள் குறுகலாக ஒற்றை அடிப்பாதையாக இருந்த காலம் அது). ஆகவே அதை எழுப்ப பூமியைத் தட்டினேன் . ஆனால் அது எழுந்து கொள்ளாமல் தூங்கிக் கொண்டே இருந்தது. நாயை தாண்டிச் செல்வது சாஸ்திரப்படி பாவம் என்பதினால் என்ன செய்யலாம் என யோசித்தேன். எனக்கோ பசி வயிற்றைக் குடைந்தது. ஆகவே நொடிப் பொழுதில் ஏற்பட்ட ஆத்திரத்தில் அதன் தலை மீது என் தடியால் ஓங்கி ஒரு அடி கொடுக்க அதன் தலையில் ரத்தக் காயத்தை அது ஏற்படுத்தி விட்டது . வேறு என்ன செய்ய முடியும் ? நான் செய்தது தவறு என நீங்கள் நினைத்தால் அதற்கு ஏற்ப எனக்கு தண்டனைக் கொடுங்கள்'' என அகந்தையுடன் கூறினார் .
சபையில் சலசலப்பு ஏற்பட்டது. ஒரு நாயை சமாதானப்படுத்த பிராமணருக்கு தண்டனை தருவதா? கூடாது.....கூடாது என்ற குரலே இருந்தது. ஒரு பிராமணருக்கு தண்டனை தர சாஸ்திரத்தில் இடம் இல்லை. ஆகவே ஒரு நாயின் புகாருக்காக அந்த பிராமணருக்கு தண்டனை தரக் கூடாது என்றார்கள். ஆனால் நியாயமே பெரிது என எண்ணிய ராமர் அதற்கெல்லாம் கவலைப்படாமல் தயக்கம் இன்றி கூறினார் ''சபையினரே....அனைவரும் கவனத்துடன் கேளுங்கள்...என்னுடைய ராஜ்யத்தில் யாருக்கு குறை இருந்தாலும், அவற்றுக்கு காரணமானவரை தண்டித்து குறையை அதை நிவர்த்தி செய்ய வேண்டியது என் கடமை. அதுவே ராஜ்ய பரிபாலனத்தின் லட்சியமும் கூட. இங்கே இந்த பிராமணரும் தான் செய்த தவறை ஒப்புக் கொண்டு தன் செய்கைக்கு வருந்தி விட்டார் என்றாலும், ஒருவர் செய்த குற்றத்திற்கு தண்டனை தராமல் இருக்க முடியாது. ஆகவே அவருக்கு....'' என ராமர் தண்டனையைக் கூற துவங்கும் முன் அந்த நாய் ராமரிடம் ''மன்னா..ஒரே ஒரு நிமிடம்.
அந்த பிராமணருக்கு தக்க தண்டனை தர வேண்டும் என்றால் பக்கத்து நாட்டின் மன்னனாக அவருக்கு முடி சூட்ட வேண்டும்'' என்றது. அனைவரும் பிரமித்து நின்றார்கள். கடுமையான தண்டனை கொடுக்க வேண்டும் என்று கூறாமல் குற்றம் செய்தவருக்கு அரச மகுடமா? ஆச்சர்யப்பட்டுப் போன ராமபிரான் அந்த நாயிடம் கேட்டார் '' உன் கோரிக்கை விசித்திரமாக உள்ளதே. உன்னை அடித்து ரத்தக் காயத்தை ஏற்படுத்தியவருக்கு கடுமையான தண்டனைக் கொடு எனக் கேட்காமல் அதற்குப் பதில் அவருக்கு அரச பட்டதை சூட்டுமாறு ஏன் கேட்கின்றாய்?''. அந்த நாய் கூறியது
''மன்னா நானும் பூர்வ ஜென்மத்தில் அந்த நாட்டின் மன்னனாகவே இருந்தேன். நான் செய்யாத நன்மைகள் கிடையாது. அனைவருக்கும் ஆதரவாக இருந்து, நியாயமான ஆட்சி புரிந்தேன். கோபம் என்பதே அறியாமல் இருந்த நான் ஒரே ஒருமுறை என்னை மீறி வந்த என் கோபத்தினால் ஒருவரை அவமானப்படுத்தும் விதத்தில் அவரை சபையை விட்டு வெளியேறு என்று கூறி விட்டேன். நான் செய்த அந்த செயலுக்கு அவர் நான் நாயாகப் பிறக்க வேண்டும் என சாபமிட்டு விட்டார். நான் செய்த சாதாரண குற்றத்திற்கு இந்த ஜென்மத்தில் நாயாகப் பிறப்பு எடுக்க வேண்டி இருந்தது. ஆகவே முன் கோபமும், அகந்தையும் உள்ள இந்த பிராமணர் அரசனாக இருக்க வேண்டும். அப்போதுதான் அவர் தனது முன் கோபத்தினாலும், அகந்தையினாலும் மீண்டும் மீண்டும் பல தவறுகளை இழைத்து அடுத்த ஏழேழு ஜென்மத்திலும் கேவலமான பிராணிகளாகப் பிறந்து அவதிப்படுவார் . நான் பார்க்க விரும்புவது அவருக்கு இந்த ஜென்மத்தில் கொடுக்கப்படும் தண்டனை அல்ல. அடுத்தடுத்த ஏழு பிறவிகளிலும் அவர் கடுமையான தண்டனை பெறுவதையே விரும்புகிறேன்''.
அதைக் கேட்ட அனைவரும் பேச்சு மூச்சு இல்லாமல் அமர்ந்து இருந்தார்கள். அதைக் கூறியப் பின் அந்த நாய் அங்கிருந்து விரைவாக வெளியேறிச் சென்று விட்டது. தானே வலிய உண்ணாவிரதம் இருந்து சில நாட்களில் மரணம் அடைந்து விட்டது என்றாலும், அது சொர்கத்தை அடைந்தது. அந்த நாய் கேட்டுக் கொண்டது போலவே அந்த பிராமணரை ராமபிரான் பக்கத்து நாட்டு மன்னனாக முடி சூட்டினார் . நாய் நம் குறையைக் எடுத்துக் கூறி உள்ளதினால் கோபதாபம் இல்லாமல் மிகவும் ஜாக்கிரதையாக ஆட்சி புரிய வேண்டும் என நினைத்த பிராமணர் தன்னை மறந்து பல முறைகள் ஆத்திரத்தில் அடுத்தடுத்து பல தீய செயல்களை செய்ய அல்பாயுசில் மரணம் அடைந்து அடுத்தடுத்து ஏழு ஜென்மங்கள் கேவலமான பிராணிகளாகப் பிறந்து அவதிப்பட்டார்.
நீதி
ஒருவர் செய்த குற்றத்திற்கு உடனடியாக தண்டனை தருவது ஆட்சியாளர்களின் வழக்கம். ஆனால் தெய்வ தண்டனை என்பது ஏழேழு காலத்துக்கும் தொடரக் கூடியது. அது நாம் சந்ததியினரையும் பாதிக்கும் என்பதினால் தெய்வ தண்டனையே வலிமையான தண்டனை. இதைதான் அரசன் அன்று கொள்வான், தெய்வம் நின்று கொள்ளும் என்பார்கள்
No comments:
Post a Comment