மாதங்களுள் நான் மார்கழி'' என்று கண்ணபிரான் கீதையில் திருவாய் மலர்ந்து
அருளியுள்ளார். இதை தனுர் மாதம் என்றும் கூறுவர். இம்மாதம் சிறந்த புண்ணிய
காலமாகும். மார்கழி மாதம் தேவர்களுக்கு அருணோதய காலமாகிறது.அதனால் அம்மாதம்
முழுவதும் பகவானைத் தியானிப்பதும், அவனைத் தோத்திரம் செய்வதும், அவனைப் பற்றியே
நினைத்துக் கொண்டிருப்பதும் நமக்கு சகல சௌபாக்கியங்களையும் அளிக்கிறது.
நாம் நமது மனத்தைத் தெளிவுப்படுத்தி ஆன்மீக மார்க்கத்தில் லயிக்கச் செய்வதற்கு
மார்கழி மாதம் மிகச் சிறந்த மாதமாகக் கருதப்படுகிறது. இம்மாதத்திலுள்ள ஒவ்வொரு
நாளும் நித்ய விரத நாளாகக் கொண்ëடாடப்படுகிறது. ஸ்ரீமந் நாராயணனின் கேசவ, நாராயண,
கோவிந்தா, மாதவா, மது சூதனா, விஷ்ணு, த்ரிவிக்ரமா, வாமனா, ஸ்ரீதரா, ரிஷிகேசா,
பத்மனாபா, தாமோதரா என்ற பன்னி ரென்டு நாமங்களும் பன்னிரெண்டு மாதங்களாக
கருதப்படுகின்றன.
இதில் முதல் நாமமாக விளங்கும் கேசவா என்பது மாதங்களுக்கு மணிமகுடமான
மார்கழியாக விளங்குகிறது. ஆன்மீக மார்க்கத்திற்குச் செல்ல தலையான மாதமாகக்
கருதப்படும் இம்மார்கழி மாதம் "மார்க் சீர்ஷம்'' என்பர். அதுவே நாளடைவில் மருவி
மார்கழி என்றானது. இம்மாதத்தை கிரிபிரதஷிணத்துக்கு உகந்த மாதமாகக் கருதுகிறார்கள்.
இராம காதையில் இளையபெருமாள் ஸ்ரீராமபிரானிடம், "ஸ்ரீ ராமா! உமக்கு ப்ரியமானதான
காலம் வந்திருக்கிறது.
இந்த மார்கழி மாதத்தினால் ஆண்டு முழுவதுமே அலங்கரிக்கப்பட்டது போல்
விளங்குகிறது என்று கூறுகிறார். இம்மாதத்தில் மாதர்கள் வைகறைத் துயிலெழுந்து
வீட்டிற்கு முன்னால் சுத்தமாக மெழுகி கோலமிட்டு, சாணத்தினைப் பிடித்து வைத்து அதன்
மீது பரங்கி பூவை, மகுடம் வைத்தாற் போல் அழகுற வைப்பர்.
அதனைச்சுற்றி வித விதமான வகையில் வண்ண வண்ணப்பூக்களை கண்ணைக் கவரும் வண்ணம்
அழகாக அடுக்குவர். இவ்வாறு வாயில் முன்புறத்தை அழகுற அலங்கரிக்கும் பழக்கம் பண்டு
தொட்டே நிலவி வருகின்றது. அதற்குக் காரணமான முக்கிய பாரதக் கதை ஒன்றுண்டு.
பாண்டவர்களுக்கும் கௌரவர்களுக்கும் போர் நடந்தது மார்கழி மாதத்தில் தான்!
யுத்தத்தில் பாண்டவர்களில் மாண்டவர் சிலர், மீண்டவர் பலர். பாண்டவர்களின்
வீட்டை அடையாளம் கண்டு கொள் வதற்காக வேண்டி, வியாசர்,வீட்டு வாயிலில் சாணம் இட்டு
மெழுகி ஊமத்தம் பூ வைப்பதற்கான ஏற்பாடு செய்தாராம். அந்த அடையாளத்தைக் கொண்டு யுத்த
காலத்தில் பாண்டவர் சேனைகளின் வீடுகளை கௌரவர்களின் தாக்குதல் ஏற்படாமல், கண்ணன்
பாதுகாப்பு கொடுத்து காப்பாற்றினார்.
அன்று முதல் இந்தப் பழக்கம் தொடர்ந்து வர ஆரம்பித்தது. இம்மார்கழி மாதத்தில்
பல வைஷ்ணவ ஆசாரியர்களும், சைவ பெரியார்களும், மாமன்னர்களும் தோன்றியுள்ளனர்.
இம்மாதத்தைச் சிறப்பித்துக் கொண்டாடுவதை மக்கள் பழக்கமாகக் கொள்ளலாயினர்.
இம்மாதத்தில் ஆண்களும், பெண்களும் திருப்பாவை.
திரு வெம்பாவை மற்றும் தோத்திரப் பாடல்களையும் பாடிப் பரவச முறுவர். ஸ்ரீ
வைஷ்ணவ ஆலயங்களில் இராப்பத்து, பகல் பத்து என்ற முறையில் நாலாயிரத் திவ்ய பிரபந்தம்
பாராயணம் செய்யப்படும். இம்மாதத்தில், எம்பெருமானுக்கு நெய் வழிய வழிய சர்க்கரைப்
பொங்கல் செய்து நிவேதிப்பதனை "கூடார வல்லி'' என்று வைஷ்ணவர்கள் மிகவும் விசேஷமாகக்
கொண்டாடுகின்றனர்.
இதன் உண்மை தத்து வத்தை "கூடாரை வெல்லும் சீர் கோவிந்தா'' என்ற பாட்டால் பாவை
ஆண்டாள் நமக்கு ஆழகுற மொழிகின்றாள். மார்கழி மாதத்தில் மதி மறைந்த நந்நாள் மூல
நஷத்ரம் கூடிய சுப தினத்தில் ஆஞ்ச நேயருடைய ஜயந்தி கொண்டாடப்படுகிறது. இத்தகைய
மங்களகரமான மார்கழி மாதத்தில் வைகறைத் துயி லெழுந்து,பகவானைத் துதி செய்வதால் மற்ற
எல்லா மாதங்களிலும் பகவானைப் பூஜித்த பலனைப் பெறலாம்.*
No comments:
Post a Comment