சிஷ்யன்: சிலர் பஜனை செய்வதை பக்தி என்று சொல்கிறார்கள். மற்ற சிலர் நித்ய கர்மாவைச் செய்வதைத்தான் பக்தி என்று சொல்கிறார்கள். இதில் உண்மையான பக்தி எது?
ஆசார்யாள்: ஆதிசங்கர பகவத்பாதாள் விவேகசூடாமணியில், (மோக்ஷகாரணஸாமக்ர்யாம் பக்திரேவ கரீயஸீ) (மோக்ஷத்தை அடையக்கூடிய ஸாதனங்களில் பக்திதான் தலைசிறந்தது) என்று கூறியுள்ளார். அவரே பக்தியென்றால் என்ன என்றும் சொல்லியிருக்கிறார் -
(ஸ்வஸ்வரூபானுஸந்தானம் பக்திரித்யபிதீயதே)
தன்னுடைய ஸ்வரூபத்தை அனுஸந்தானம் செய்வதே பக்தி என்று கூறியிருக்கிறார். அதாவது ஆத்ம ஸ்வரூபத்திலேயே லீனமாக இருப்பது பக்தி. இதுவே உத்தமமான பக்தியின் லக்ஷணம். ஆனால், இம்மாதிரியான உத்தமமான பக்தியை எல்லாரும் கடைப்பிடிக்க முடியாது. அவர்களுக்குச் சற்றே குறைந்த வகையான பக்தியைக் கூற வேண்டும். மதுஸூதன ஸரஸ்வதி விளக்கம் கூறும்போது பக்தி மூன்று வகையாக இருக்கிறதென்று சொல்லியிருக்கிறார். முதல் வகை 'நான் இறைவனுக்குச் சேர்ந்தவன்' என்றிருப்பது. இரண்டாவது வகை 'இறைவன் எனக்குச் சேர்ந்தவன்' என்றிருப்பது. இதற்கு உதாரணம்யசோதையே ஆகும். இறைவனிடத்தில் அதிகமான அன்பு வைத்தால் 'இறைவன்' எனக்குச் சேர்ந்தவன் என்ற எண்ணம் ஏற்படலாம். அதைக் காட்டிலும் உத்தமமானது 'நானேதான் அந்தப் பரம்பொருள்' என்பதேயாகும்.
சி: 'நானேதான் பரம்பொருள்' என்பதை எப்படி பக்தியென்று கூறலாம்?
ஆ: சாமான்யமான பக்தன் இறைவனைக் காட்டிலும் தான் வேறானவன் என்பதை ஒத்துக்கொள்ளத் தயாராக இருக்கிறான். ஆனால், உத்தமமான பக்தன் அந்தப் பிரிவைக்கூடத் தாங்கிக் கொள்ளாமல் 'நானே அந்தப் பரம்பொருள் ஆகிவிடுவேன்' என்று கருதி இந்த ஞானத்தைப் பெற்றுக் கொள்கிறான். ஆகவே அதை உத்தமமான பக்தியென்று சொல்லத்தான் வேண்டும். இப்படிப்பட்ட பக்தனையே உத்தமமான பக்தனென்று கிருஷ்ணர் கூறியிருக்கிறார். ஏன் என்றால் அவர் ஞானியைத்தான் மிகச் சிறந்த பக்தன் என்று கருதுகிறார்.
சி: சாமான்யமான மக்கள் எவ்வாறு பக்தி செலுத்த வேண்டும்?
ஆ: எதுவரைக்கும் 'உடல்தான் நான்' என்ற எண்ணம் இருக்குமோ அது வரைக்கும் தான் இறைவனுடைய தாஸன் என்று கருதுவதே உத்தமமானதாகும். அவ்வாறிருப்பவன் இறைவனிடமிருந்து ஒன்றும் விரும்ப மாட்டான்: இறைவனின் சேவை செய்வதையே தன் கடமை என்று கருதுவான். பிரஹ்லாதனுக்கு பகவான் 'ஏதாவது நான் வரம் தருவேன்' எனக் கூறியபொழுது பிரஹ்லாதன்,
(யஸ்த ஆஸிஷ ஆசாஸ்தே நஸப்ருத்ய: ஸ வை வணிக்)
(எவனுக்கு இறைவனிடமிருந்து ஏதாவது வேண்டுமோ அவன் தாஸனில்லை, வியாபாரி) என்று பதிலளித்தான். எனவே, உத்தமமான பக்தன் இறைவனிடமிருந்து ஒன்றும் விரும்பமாட்டான். இறைவனிடம் பக்தி செலுத்துவது கடமை என்று கருதி பக்தி செலுத்துவான்.
சி: அப்படியென்றால் பஜனை செய்வதைப் பக்தியென்று கருதுவது தவறா?
ஆ: தவறில்லை. அதெல்லாம் பக்திதான். நாரதர் பக்தியைப் பற்றிக் கூறும்பொழுது. “ஸாத்வஸ்மின் பரமப்ரேம ரூபா” அதாவது 'இறைவனிடத்தில் உள்ள தீவிரமான ப்ரீதியே பக்தியாகும்' என்று கூறியிருக்கிறார். இறைவனிடத்தில் எந்தவிதமான வழியில் ப்ரீதியைக் காட்டினாலும், அதெல்லாம் பக்தி என்ற கோஷ்டிக்குத்தான் சேரும். சங்கரபகவத்பாதாள் சிவானந்த லஹரியில் -
(அங்கோலம் நிஜபீஜஸந்ததிரயஸ்காந்தோபலம் ஸூசிகா
ஸாத்வீ நைஜவிபும் லதா க்ஷிதிருஹம் ஸிந்து: ஸரித்வல்லபம்
ப்ராப்னோதீஹ யதா ததா பசுபதே: பாதாரவிந்தத்வயம்
ப்ராப்னோதீஹ யதா ததா பசுபதே: பாதாரவிந்தத்வயம்
சேதோவ்ருத்திருபேத்ய திஷ்டதி ஸதா ஸா பக்திரித்யுச்யதே)
(எப்படி ஒர் அங்கோல மரத்தின் விதை அம்மரத்திடம் செல்கிறதோ, எப்படி ஒர் இரும்புத் துண்டு காந்தத்திடம் செல்கிறதோ, எப்படி ஒரு பதிவிரதையான பெண்மணி தன் கணவன் விஷயத்தில் அபிமானம் வைத்திருக்கிறாளோ, எப்படி ஒரு கொடி மரத்தைச் சுற்றிக் கொள்கிறதோ, எப்படி ஒர் ஆறு கடலைச் சென்றடைகிறதோ, அதேபோல் மனத்தின் எண்ணங்கள் இறைவனின் பாதாரவிந்தங்களில் இருப்பதற்கு பக்தி என்று பெயர்) என்று கூறுகிறார். கொடுக்கப்பட்ட முதல் உதாரணம் என்னவென்றால், அங்கோலத்தின் விதை அங்கோல மரத்திடம் செல்வது. அங்கோல மரத்தில் உள்ள கோந்தைப் போன்ற ஒன்றில் போய் விதை ஒட்டிக் கொண்டு விடும். அதேபோல் முதல் நிலையில் பகவான், பக்தனுக்கு ஆதரவு கொடுத்து அவன் பக்கம் பக்தனது மனத்தைத் திருப்புவான். இரண்டாவது உதாரணம் 'அயஸ் காந்தோபலம் ஸூசிகா'. முதல் உதாரணத்தில் பக்தன் ஏதாவது முயற்சி செய்ய வேண்டியிருந்தது. இரண்டாவது பக்தனின் மனம் இறைவனிடம் இயற்கையாகவே செல்கிறது. காந்தத்தின் பக்கம் எப்படி இரும்புத் துண்டு போகுமோ அதேபோல் பக்தி விஷயத்திலும் சற்றுப் பயிற்சியாகி விட்டால் இறைவனைப் பற்றி நினைத்துக் கொண்டேயிருந்தால் மனம் தானாகவே அங்கு செல்லும். உதாரணமாக காந்தம் எவ்வாறு இரும்பை இழுத்துக்கொள்கிறதோ, அதேபோல் இறைவன் பக்தனைத் தானாகவே இழுத்துக் கொள்வான். மூன்றாவது 'ஸாத்வீ நைஜ விபும்'. அப்யாஸமாகிவிட்டு இறைவனிடம் மனம் தானாகவே சென்று கொண்டிருந்தால் அவனைப் பற்றியே கவனம் இருந்து கொண்டேயிருக்கும். அதாவது பதிவிரதை எவ்வாறு தன் கணவனைப் பற்றி நினைத்துக் கொண்டிருப்பாளோ அதுபோலாகும். நான்காவது வகை 'லதா க்ஷிதிருஹம்'. லதை அல்லது கொடி, மரத்தைச் சுற்றிக் கொண்டிருந்தால் அம்மரத்திற்கே ஓர் அழகு ஏற்படும். அதேபோல் பக்தன் உத்தமமான பக்தியைச் செலுத்தி வந்தால், பக்தனுக்கு மட்டுமன்றி இறைவனுக்கே ஒரு சோபை போல் ஏற்படும். அடுத்தது உத்தமமான பக்தியைப் பற்றியுள்ளது. 'ஸிந்துஸ்ஸரித் வல்லபம்'- எப்படி ஒரு நதி, கடலில் போய்ச் சேர்ந்தவுடன், 'இது நதி' என்று கூற முடியாதோ. அதேபோல் இறைவனிடம் அளவு கடந்த பக்தி வைத்தால், அவன் அதிலேயே ஐக்கியமாகி விடுவான். அதுதான் உத்தமமான பக்தியாகும். ஆதலால் பக்திக்கு வெவ்வேறு தரங்கள் இருக்கின்றன. ஆகவே பஜனை செய்வதை பக்தியில்லை என்று கூற முடியாது.
சி: சிலர் பஜனை செய்தால் போதும், நித்ய கர்மா ஏன் செய்ய வேண்டும் என்று கேட்கிறார்கள், இது சரியா?
ஆ: இல்லை. இது சற்றும் சரியில்லை. நித்ய கர்மாவைச் சரிவரச் செய்து வருவதே சிறந்த பக்தியாகும். ஒரு யஜமானனும், அவனுக்கு ஒரு வேலையாளும் இருப்பதாக வைத்துக்கொள்வோம். அந்த வேலைக்காரன், யஜமானன் சொல்லும் வேலையையே செய்யாமல் வெறுமென யஜமானைப் போற்றிக் கொண்டிருந்தால் அவனிடம், யஜமானனுக்குத் திருப்தி ஏற்படுமா? இறைவன்தான் நமக்கு இங்கு யஜமானன். அவன் வேதம் மூலமாகவும், ஸ்ம்ருதி மூலமாகவும், நாம் எப்படி வாழ வேண்டும் என்று கூறியிருக்கிறான். அதை விடுத்து, வெறுமென அவனைப் போற்றிக் கொண்டேயிருந்து, தன்னைப் பக்தன் என்று வேறு சொல்லிக் கொண்டால், அவனது கட்டளைகளை மீறிய ஒருவன் தன்னைப் பக்தன் என்று சொல்லிக் கொள்வதைப் போலாகும். அது அவ்வளவு பொருத்தமில்லை. ஆகையால் நாம் நித்ய கர்மாவைச் செய்து வர வேண்டும். அதைத் தவிர பஜனை முதலியவற்றைத் தாராளமாகச் செய்து வரலாம்.
சி: இறைவனிடம் நம் பக்தியை எவ்வாறு வளர்ப்பது?
ஆ: நமக்கு எந்த விஷயத்திலும் எப்படி பற்று ஏற்படுகிறது? அதைப்பற்றி நினைத்துக் கொண்டேயிருந்தால் அவ்விஷயத்தில் பற்று ஏற்படும். 'இதைச் செய்ய வேண்டும்' என்று ஒரு செயலிலோ, பொருளிலோ நினைத்து வந்தால் அங்கு பற்றுதல் ஏற்படுகிறது. அதேபோல் இறைவனிடமும், 'இவன் உத்தமமானவன், இவனைச் சிந்திப்பதில் இன்பம் இருக்கிறது' என்று நினைத்துக்கொண்டு வந்தால் பக்தி நன்கு வளரும்.
சி: பக்தன் எதற்காக இறைவன் விஷயத்தில் பக்தி வைத்துக்கொள்ள வேண்டும்?
ஆ: இறைவனருளால்தான் எல்லா நன்மையும் கிடைக்கும். லௌகீக நன்மையாயிருந்தாலும், அதற்கு இறைவன் விஷயத்தில் பக்தி வைத்துக் கொள்ள வேண்டும். சாமான்யமாகப் பார்த்தால் இப்படிக் காரணம் கூறலாம். ஆனால் உயர்வானது எதுவென்றால், இறைவனிடம் பக்தி வைப்பது தனது கடமை எனக் கருதி இறைவன் விஷயத்தில் பக்தி வைப்பதே ஆகும். இறைவனிடம் நாம் செலுத்தும் பக்தி இயற்கையாகவே வர வேண்டும். அதுதான் உண்மையான பக்தியாகும்.
சி: ஒருவனுக்கு தன் இஷ்ட தெய்வத்தின் மீது அதிகமாக ப்ரீதி இருந்தால் மற்ற தெய்வங்களிடம் அவ்வளவு ப்ரீதி இருக்காது என்பது ஸகஜம். அதனால் சிவனையே விரும்பும் ஒருவன் விஷ்ணுவின் பேரில் துவேஷம் வைத்துக் கொள்ளலாமா?
ஆ: துவேஷம் வைத்துக் கொள்வது நல்லதுமில்லை, சாஸ்திரத்திற்கு சம்மதமுமில்லை. உருவமே இல்லாத கடவுள், பக்தனுக்கு அருள் புரியத்தான் உருவம் பெற்றுக் கொள்கிறான். ஆகவே, இறைவனைப் பொருத்தவரை அந்த உருவத்தில் தாத்பர்யம் இல்லை. பக்தன் எப்படி விரும்புகிறானோ, அப்படி இறைவன் காட்சியளிக்கிறான். ஆகவே இறைவன் விஷயத்தில் சிவன் வேறு விஷ்ணு வேறு என்பதுபோல் வித்யாசம் நினைப்பது தவறு. ஒருவனின் மனத்தில் தன் இஷ்ட தேவதையிடம் ப்ரீதியிருந்தாலும் மற்ற தேவதைகளைத் துச்சம் என்று கருதி துவேஷம் வைத்துக் கொள்ளக் கூடாது.
சி: பக்தி வழிக்கு ஏதாவது சிறப்பு உள்ளதா?
ஆ: எல்லாரும் பக்தியைச் செய்யலாம். தகுதி வித்யாசமே ஏதுமில்லை. மேலும், அதைச் செய்வது எளிது. ஒருவனுக்கு இயற்கையாகவே ப்ரீதி என்று ஒன்று இருக்கும். அதை இறைவனிடம் திருப்பி விட்டால் அது பக்தியாகிவிடும். தவிர ஞானமார்க்கம் மூலமாகவோ, தியானத்தின் மூலமாகவோ ஒருவன் ஸித்தியடைய வேண்டுமெனில், செய்யும் போது அது கடினமாக இருக்கும். ஓரளவுக்கு முன்னேற்றம் அடைந்த பிறகுதான் அவன் இன்பத்தை அனுபவிப்பான். ஆனால் பக்தி அப்படியில்லை. பக்தி மார்க்கத்தில் செல்லும் போதே இன்பமிருக்கும். 'என் கடவுளை நான் நினைத்துக் கொண்டிருக்கிறேன்' என எண்ணினாலேயே ஒர் இன்பம் ஏற்படும். அதனால் பக்தி மார்க்கத்தில் முதலிலிருந்தே இன்பமிருக்கும். பக்தியின் பலன் வடிவாகவே பக்தி இருக்கும். இதுவும் ஒரு விசேஷம்.
சி: சில தடவை ஸ்தோத்ரங்களைப் பாராயணம் செய்யும் பொழுது ஏதாவது தவறுகள் ஏற்படலாம். அதைப் பாராயணம் செய்பவன் கவனிக்காமல் இருந்திருக்கலாம். அப்படியிருந்தால் மிகவும் தோஷமுண்டா?
ஆ: ஓரளவுக்கு ஸ்தோத்ரத்தைத் தெரிந்து கொண்டு சொல்வது விசேஷம். அப்போதுதான் விசேஷ பக்தி ஏற்படும். சில சமயங்களில் நம்மையறியாது தவறுகள் ஏற்பட்டால் அதனால் குற்றமில்லை. ஏனென்றால், இறைவன் உள்ளத்தில் உள்ளதைத்தான் கவனிக்கிறான். வெளியில் இருப்பவற்றைக் கவனிப்பதில்லை.
(மூர்க்கோ வததி விஷ்ணாய வித்வான் வததி விஷ்ணவே
உபயோ: ஸத்ருசம் புண்யம் பாவக்ராஹீ ஜனார்தன:)
உபயோ: ஸத்ருசம் புண்யம் பாவக்ராஹீ ஜனார்தன:)
பதத்தை உச்சரிக்கத் தெரியாதவன் 'விஷ்ணவே' என்பதற்குப் பதிலாக ‘விஷ்ணாய’ என்று கூறலாம். இருவருக்கும் ஒரேவிதமான புண்ணியம்தான் கிடைக்கும். ஏனென்றால் ஜனார்தனன் உள் எண்ணத்தைத்தான் க்ரஹிக்கிறான். நீலகண்ட தீக்ஷிதர் ஓர் உதாரணம் மூலமாகவே காட்டியுள்ளார். இறைவன் மேல் நாம் புஷ்பத்தைப் போட்டால் நாம் நன்மையை அடைவோம் என்பது எல்லாருக்கும் தெரியும். ஆனால், அதைப் போடும்போது நல்ல பக்தி பாவனையுடன் செய்ய வேண்டும். மன்மதனும் சிவன் மேல் புஷ்பத்தால் செய்யப்பட்ட பாணத்தைத்தான் விட விரும்பினான். ஆனால் அவரின் தபஸைக் கெடுக்க வேண்டுமென்று எண்ணங்கொண்டு, விடுவதற்குச் சித்தமாயிருந்தான். ஆனால் பகவான் அதற்குச் சம்மதிக்கவில்லை. அவனை எரித்து விட்டார். பக்தனும் மன்மதனும் பகவான் மேல் புஷ்பம் போடத் தான் சென்றார்கள். ஆனால், பக்தனுக்கு உத்தமமான பலன், மற்றவனுக்கு நாசம். ஆகவே மன எண்ணம்தான் முக்கியம்.
சி: இறைவனிடம் எனக்கு ஆரோக்யம் வேண்டும். நான் பரீட்சையில் நன்கு எழுத வேண்டும் என்றெல்லாம் பிரார்த்தனை செய்வது தவறா?
ஆ: பிரார்திப்பது தவறு என்று நான் கூறுவதில்லை. ஆனால் அது தேவையேயில்லை. இறைவனுக்கு எல்லாம் தெரியும். நமக்கு எப்படி நன்மை செய்ய வேண்டும் என்று தெரியும். அவரிடம் ‘அதைக் கொடு, இதைக் கொடு’ என்று நாம் உபதேசம் செய்ய வேண்டியதில்லை. ஆதலால் ‘நீ எப்படி வேண்டுமானாலும் நடத்திக் கொள்’ என்று அவனிடம் சொல்வதே ச்ரேஷ்டமாகும். ஆனால் அதிகமாக ஆசை வந்தால் இறைவனைப் பிரார்த்தனை செய்தால் அது தவறென்று சொல்வதற்கில்லை. ஒரு காமதேனு ஒருவனுக்குக் கிடைத்தால், அதை அவன் உழுவதற்காகப் பயன்படுத்தினால், அதை நல்லதென்று சொல்வோமா? அதேபோல் இறைவன் எல்லாவற்றையும் கொடுக்கும் சாமர்த்தியம் உள்ளவன். மேலும் அவனுக்கு எது நல்லது, எது கெட்டதென்பது தெரியும். அவன் கருணாமூர்த்தி. அவன் ஸர்வக்ஞன். அப்படியிருக்கும்போது, 'நீ என் உள்ளத்தில் இருக்கிறாய். அது போதும்' என்று சொல்வது நல்லதா, அல்லது 'இதைக் கொடு, அதைக் கொடு' என்று உபதேசிப்பது நல்லதா?
சி: இறைவனுக்கு ஒன்றும் தேவையில்லை. அப்படியிருந்தாலும், எல்லாவற்றையும் அவனுக்குக் கொடுக்க வேண்டும் என்று கூறப்பட்டிருக்கிறது. இதற்குக் காரணமென்ன?
ஆ: இறைவனுக்கு ஒன்றும் தேவையில்லைதான். ஆனால் அவனுக்கு நம் மனத்தைக் கொடுக்க வேண்டும் என்று நமக்கு கடமையிருக்கிறதா இல்லையா? இருக்கிறது. ஆதலால் நம் மனத்தை இறைவனிடத்திலே எப்போதும் கொடுக்க வேண்டும். அதாவது இறைவனையே எப்போதும் நினைத்துக் கொண்டிருக்க வேண்டும். பகவான் கிருஷ்ணர், னீணீனீஸீuஷினீக்ஷீ ஹ்uஙீஹ் நீ (மாமனுஸ்மர யுத்ய ச) (என்னைச் சிந்தித்து யுத்தத்தில் ஈடுபடு) என்று கூறுவதன் மூலம் எல்லாக் காலங்களிலும் நாம் இறைவனையே சிந்திக்க வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்தியிருக்கிறார். மேலும், நாம் எல்லாவற்றையும் இறைவனுக்கு அர்ப்பணிக்க வேண்டும். அவ்வாறு செய்தால் அவன் அவசியம் ஏற்றுக் கொள்வான். பகவானே, “பத்ரம் (இலை), புஷ்பம், பழம், ஜலம் ஆகியவற்றில் எதை பக்தியுடன் நீ தருகிறாயோ அதைப் பக்தியுடன் ஏற்றுக் கொள்கிறேன்” என்றும், “எதைச் செய்கிறாயோ, எதைச் சாப்பிடுகிறாயோ, எதை யாகத்தில் தருகிறாயோ, எதைத் தானம் செய்கிறாயோ, எந்த தவத்தைச் செய்கிறாயோ அவை எல்லாவற்றையும் குந்தியின் மகனே! எனக்கு அர்ப்பணமாகச் செய்” என்றும் கூறியுள்ளார்.
சி: சில சமயங்களில் மனக்கவலைகள் போன்றவை நம் மனத்தை இறைவனிடம் திருப்ப விடாமல், மற்றொரு பக்கம் திருப்பி விடுகின்றன. இதற்கு என்ன செய்வது?
ஆ: உண்மையான பக்தனுக்குக் கவலை எதற்காக இருக்க வேண்டும்? ரயிலில் பிரயாணம் செய்யும்போது சுமையைத் தலையில் வைத்துக் கொள்ள வேண்டுமா அல்லது கீழே வைத்துக் கொள்ள வேண்டுமா? முதல் வழியில் நடந்தால் அவனை முட்டாள் என்று நாம் கூறுவோம். இவ்வுலகில் எது நடைபெற்றாலும் அது இறைவனுடைய இச்சையின் படிதான் நடைபெறுகிறது. இறைவன் நம் நன்மைக்காகவே எதையும் இயற்றுகிறான் என்று கருதிக் கவலையில்லாமல்தானே இருக்க வேண்டும்? நாமே நம் விஷயத்தில் கவலை கொள்வது 'இறைவன் நம்மைக் காக்கிறான். நமக்கு எது நல்லதோ அதைத் தருகிறான்' என்பதில் நம்பிக்கையில்லாததுபோல்தான் ஆகிறது!
சி: இப்படி உண்மையாக இருந்தாலும் சில சமயங்களில் கவலை தானாகவே வருகின்றது. அது எதனால்?
ஆ: அது உண்மைதான். பக்தி அந்த அளவிற்கு பக்குவமாகவில்லை என்று அர்த்தம். அந்தப் பக்தியை வளர்ப்பதற்கும் கவலையை விடுவதற்கும் ஒருவன் முயற்சி செய்ய வேண்டும். இவ்வாறு செய்து இறைவனிடமே அத்தனை பாரத்தையும் ஒப்படைத்துவிட்டால் ஒருவன் சுகமாக வாழலாம். சந்தோஷமாகவும் இருக்கலாமே!
No comments:
Post a Comment