Monday, December 3, 2012

அனுமன்

அனுமனை எவ்வாறு வழிபட வேண்டும்?
 
                                                    
 
அனுமன் மார்கழி மாதம் மூலம் நட்சத்திரத்தில் அவதரித்தவர். அனுமன் பிறந்த நாளன்று காலையிலேயே எழுந்து சூரிய நமஸ்காரம் செய்ய வேண்டும். ஏனெனில், அனுமனின் ஆசிரியர் சூரியன். அவரிடமே அனுமன் இலக்கணம் படித்து, சர்வ வியாகரண பண்டிதர் என்னும் பட்டம் பெற்றார். வியாகரணம் என்றால் இலக்கணம். அனுமனின் குருவை நமது குருவாக மதித்து சூரிய நமஸ்காரம் செய்ய வேண்டும். ராமனின் புகழ் பரப்பும் பாடல்களை பாட வேண்டும்.துளசிதாசர் எழுதிய அனுமன் சாலீசா பாராயணம் செய்ய வேண்டும். இதை சொல்ல இயலாதவர்கள் இதன் பொருளை வாசிக்கலாம். மாலையில் 1008 முறைக்கு குறையாமல் ஸ்ரீராம ஜெயம் சொல்ல வேண்டும். அவரது கோயிலுக்குச் சென்று வெண்ணெய், வெற்றிலை, வடை மாலை சாத்தி வழிபட வேண்டும். ஏழைக் குழந்தைகளுக்கு புத்தகம் நோட்டு தானம், கல்வி உதவித்தொகை வழங்க வேண்டும். இரவில் தூங்கும் முன் ஸ்ரீராம ஜெயம் என 108 முறை சொல்ல வேண்டும். உடல்நிலை ஆரோக்கியமானவர் கள் சாப்பிடாமல் இருக்கலாம். மற்றவர்கள் எளிய உணவு எடுத்துக் கொள்ளலாம்.
தமிழ்நாட்டில் திரும்பிய இடமெல்லாம் விநாயகர் கோயில் இருப்பதை போல், மேற்கு தொடர்ச்சி மலை தொடங்கும் கேரளா முதல் மகாராஷ்டிரம் வரை ஆஞ்சநேயருக்கு தனி கோயில்கள் அதிகம். பொதுவாக ஆஞ்சநேயர் விஷ்ணு கோயில்களில் தனி சன்னதியிலும், சிவன் கோயில்களில் தூணிலும் அருள்பாலிப்பது வழக்கம்.சொல் ஒன்று இருந்தால் அதற்கு ஒரு அர்த்தம் இருப்பது போல், ராமா என சொல்லுகின்ற இடத்தில் எல்லாம் ஆஞ்சநேயர் இருப்பது நிச்சயம். இவரது வழிபாட்டில் ராமநாம பஜனையும், செந்தூரப்பூச்சும், வெற்றிலை மாலையும் நிச்சயம் இடம் பெறும். இவரது சன்னதியிலும் துளசியே பிரதான பிரசாதம்.
அனுமன் அவதார நாளில் அருகில் உள்ள ஆஞ்சநேயர் தலத்திற்கு சென்று
ஓம் ஆஞ்சநேயாய வித்மஹே
ராமதூதாய தீமஹி
தன்னோ அனுமன் பிரசோதயாத்

என்ற அனுமன் காயத்ரி சொல்லி அவரது அருள்பெறுவோம். அத்துடன் அனுமன் ஜெயந்தியன்று அவரது புகழ்பரப்பும் அனுமன் சாலீஸா பாராயணம் செய்தால் நினைத்த காரியம் நடக்கும் என்பது நம்பிக்கை.
அனுமனை வணங்குவதன் பலன்: அனுமனை வணங்குவதால், புத்தி, பலம், புகழ், குறிக்கோளை எட்டும் திறன், அஞ்சா நெஞ்சம், ஆரோக்கியம், விழிப்புணர்வு, வாக்குவன்மை ஆகியவற்றைப் பெறலாம்.
என்ன மாலை அணிவிக்கப் போகிறீர்கள்: ராமதூதர் அனுமனுக்கு துளசிமாலை சாத்துவதால் ராம கடாட்சம் பெற்று நல்ல கல்வி, செல்வம் பெறலாம். அசோகவனத்தில் சீதையைக் கண்டு ராமபிரானின் நிலையை அனுமன் எடுத்துரைத்தார். சந்தோஷமடைந்த சீதை அனுமனை ஆசீர்வதிக்க எண்ணி அருகில் வளர்ந்திருந்த
வெற்றிலையைக் கிள்ளி தலையில் தூவி ஆசிர்வதித்தாள். இந்த இலை உனக்கு வெற்றியைத் தரட்டும் என்றாள். வெற்றிலையை காரணமாக்கி ஆசீர்வதித்தமையால் பக்தர்கள் தங்கள் செயல்பாடுகள் வெற்றி பெற வெற்றிலை மாலை சாத்துகின்றனர். திருமணங்களில் வெற்றிலை தாம்பூலம் கொடுப்பது, மணமக்களுக்கும், அவர்களை ஆசிர்வதிக்க வந்தவர்களுக்கும் வாழ்க்கை வெற்றிகரமாக அமைய வேண்டும் என்பதற்காகத் தான். எலுமிச்சம்பழம் ராஜாக்களுக்கு மரியாதை நிமித்தமாகவும், சம்ஹார தொழில் செய்யும் காவல் தெய்வங்களுக்கும் மிகவும் பிடித்தமானது. நரசிம்மன், வராகம், கருடன் ஆகிய சக்திகள் அனுமனிடத்தில் ஒருங்கே அமைந்துள்ளதாலும், ஈஸ்வரனின் அம்சம் ஆனதாலும் இவருக்கு எலுமிச்சம் பழ மாலை சாத்துவர். வாழ்வில் எதிரிகளின் தொல்லை நீங்கப் பெறுவர். வடை மாலை அணிவித்து தானம் செய்தால் செல்வவளம் பெருகும், கிரக தோஷம் நீங்கும்.
வெண்ணெய் சாத்துவது ஏன்: ராமசேவைக்காக தன் உடம்பைப் புண்ணாக்கிக் கொண்டவர் அனுமன். போர்க்களத்தில் அவர் பட்ட காயம் கொஞ்ச நஞ்சமல்ல. அவரைக் கட்டிப் போட்டு தெருத்தெருவாக இழுத்துச் சென்றார்கள். காயத்தின் வேதனை குறைய குளிர்ந்த பொருள் பூசுவது இயல்பு தானே! அதனால் தான், அனுமனுக்கு வெண்ணெய் சாத்தும் வழக்கம் ஏற்பட்டது. உலகியல் ரீதியாக இப்படி ஒரு கருத்து சொல்லப்பட்டாலும், ஆன்மிகக் கருத்து வேறு மாதிரியானது. வெண்ணெய் வெண்மை நிறமுடையது. வெள்ளை உள்ளமுள்ள பக்தர்களை அனுமனே தன்னுடன் சேர்த்து அருள் செய்கிறான் என்பதன் அடையாளமாக வெண்ணெய் சாத்தப்படுகிறது.
கெட்டுப்போகாத வெண்ணெய்: திருவனந்தபுரம் அனந்தபத்மநாப சுவாமி கோயிலில் அனந்த பத்மநாபன் சந்நிதி முன்புறமுள்ள ஆஞ்சநேயருக்கு முக்கியமான வழிபாடு வெண்ணெய் சாத்துவது ஆகும். இந்த வெண்ணெய் எவ்வளவு வெயில் அடித்தாலும் உருகுவது இல்லை. எவ்வளவு நாள் ஆனாலும் கெட்டுப்போவதும் இல்லை.
குங்குமப் பொட்டு: வாலில் குங்குமம் வைத்து வழிபடுவதின் தாத்பர்யம் என்னவென்றால், அனுமாருக்கு வாலில் தான் சக்தி அதிகம். பக்தி சிரத்தையுடன் ராமநாமத்தை ஜபித்துக் கொண்டு இடுப்பில் வால் தோன்றும் திருவிடத்தில் இருந்து தினமும் சந்தனம் சாத்தி குங்குமத் திலகம் வைத்துக் கொண்டு வரவேண்டும். வாலின் நுனியை அடைந்ததும், கலைத்துவிட்டு மறுபடியும் பொட்டு வைக்க வேண்டும். வால்முனையில் பொட்டு பூர்த்தி பெறுகின்ற சுபதினத்தில், எம்பெருமானுக்கு வடைமாலை சாத்தி, உப்பிலியப்பனுக்கு நிவேதிப்பது போல் உப்பில்லா திருவமுது நிவேதிக்க வேண்டும்.காரியம் சித்தியாகும் வரை இவ்வண்ணம் பொட்டு வைத்துக் கொண்டே வர வேண்டும்.
ராமாயணம் என்னும் மணிஹாரத்தில் நடுநாயகமாக விளங்குபவர் ஆஞ்சநேயர்! அவல், சர்க்கரை, தேன், பானகம், நீர்மோர், கதலிப்பழம், கடலை முதலிய நிவேதனப் பொருட்களை அவர் விரும்பி அமுது செய்து மகிழ்வார். இப்படி கண்ணனும், மாருதியும் ஒற்றுமையோடு இணைந்திருப்பதால் தான் வெண்ணெயை மாருதிக்கு சாத்தி வழிபடுகிறார்கள். ஸ்ரீராம நவமி உற்சவம் கொண்டாடும் இடங்களில் எல்லாம் ஆஞ்சநேயர் நேரில் வந்து அடியார்களுள் அடியாராய் பக்தருள் பக்தராய் அமர்ந்து உபன்யாசத்தைப் பேரானந்தத்துடன் ரசித்து அனைவருக்கும் சலக சந்தோஷங்களையும் சுபிட்சங்களையும் வாரி வழங்கிப் பேரருள் புரிகிறார். இதனால் தான் துளசி தாசர் ராமாயண பிரவசனம் தொடங்கும் முன்னர் பக்தர்களை ப்ரதட்சணமாக வருவார். அந்த பக்தர்களோடு பக்தராக மாருதியும் எழுந்தருளி இருப்பார் என்பது அவருக்கு தெரியும்.
ஆஞ்சநேயரை ராம நாமத்தால் சேவிப்பதோடு, வடைமாலை சாத்தி, வெற்றிலை மாலை அணிவித்து, வெண்ணெய் சாத்தி, ஆராதிக்க வேண்டும். வாலில் குங்குமப்பொட்டு வைத்து தியானித்தும் பூஜிக்கலாம். ராமருக்கு அத்யந்த பக்தராகவும் அரிய தொண்டராகவும் பாத சேவை புரியும் பரம பக்தராகவும் விளங்குபவர் ஆஞ்சநேய மகாப்பிரபு! ராமாயணம் என்னும் மணிஹாரத்தில் நடுநாயகமாக விளங்குபவர் ஆஞ்சநேயர்! அவல், சர்க்கரை, தேன், பானகம், நீர்மோர், கதலிப்பழம், கடலை முதலிய நிவேதனப் பொருட்களை அவர் விரும்பி அமுது செய்து மகிழ்வார். இப்படி கண்ணனும், மாருதியும் ஒற்றுமையோடு இணைந்திருப்பதால் தான் வெண்ணெயை மாருதிக்கு சாத்தி வழிபடுகிறார்கள். ஸ்ரீராம நவமி உற்சவம் கொண்டாடும் இடங்களில் எல்லாம் ஆஞ்சநேயர் நேரில் வந்து அடியார்களுள் அடியாராய்பக்தருள் பக்தராய் அமர்ந்து உபன்யாசத்தைப் பேரானந்தத்துடன் ரசித்து அனைவருக்கும் சலக சந்தோஷங்களையும் சுபிட்சங்களையும் வாரி வழங்கிப் பேரருள் புரிகிறார். இதனால் தான் துளசி தாசர் ராமாயண பிரவசனம் தொடங்கும் முன்னர் பக்தர்களை ப்ரதட்சணமாக வருவார். அந்த பக்தர்களோடு பக்தராக மாருதியும் எழுந்தருளி இருப்பார் என்பது அவருக்கு தெரியும்.
எந்தக்கிழமையில் என்ன செய்வது?
திருமணத்தடை நீங்க அனுமனுக்கு வியாழனன்று வெற்றிலை மாலை, துவங்கிய வேலைகளில் தடை நீங்க வியாழன், சனிக்கிழமைகளில் எலுமிச்சை மற்றும் வடைமாலை சாத்தலாம்.
அனுமன் பாட்டு: அனுமன் ஜெயந்தியன்று வாயுபுத்திரர் அனுமனை நினைத்து, இந்தப் பாடலைப் பாடினால் கல்விவிருத்தி, அறிவுவிருத்தி, மனநிம்மதி, செல்வவளம் பெறலாம்.
அஞ்சிலே ஒன்று பெற்றான்
அஞ்சிலே ஒன்றைத் தாவி
அஞ்சிலே ஒன்று பெற்ற அணங்கைக்
கண்டு அயலார் ஊரில்
அஞ்சிலே ஒன்றை வைத்தான் அவன்
எம்மை அளித்துக் காப்பான்.
பொருள்: வாயுவுக்கு பிறந்தவன் அனுமன். ஆகாயத்தில் பறந்து, கடல் தாண்டி இலங்கை சென்றான். பூமிதேவியின் மகளான சீதையைக் கண்டான். அவளை மீட்க இலங்கைக்கு நெருப்பு வைத்தான். அவன் தன்னையே நமக்கு தந்து பாதுகாப்பான்.
விளக்கம்: பஞ்சபூதங்களில் ஒன்றான வாயுவுக்கு பிறந்தான். வானில் (ஆகாயம்) பறந்தான். கடலை (நீர்) தாண்டினான். ஜனகர் தங்கக் கலப்பையால் யாக குண்டத்திற்கு பூமியை (மண்) தோண்டும் போது கிடைத்த சீதையைக் கண்டான். பஞ்சபூதங்களில் ஒன்றான நெருப்பை இலங்கைக்கு வைத்தான். ஆக, பஞ்சபூதங்களையும் அடக்கியாண்டவர் அனுமன். அவரை வணங்கினால் இந்த பூதங்கள் நமக்கு நன்மையை மட்டுமே செய்யும்.
பஞ்சமுக ஆஞ்சநேயருக்கு என்ன படைப்பது
பஞ்சமுக ஆஞ்சநேயருக்கு அனுமன் முகம் கிழக்கு நோக்கி இருக்கும். இந்த முகத்திற்கு வாழைப்பழமும், கொண்டைக்கடலையும், தெற்கு நோக்கிய நரசிம்ம முகத்திற்கு பானகமும், நீர்மோரும், மேற்கு நோக்கிய கருட முகத்திற்கு தேன் படைக்க வேண்டும். வடக்கு பார்த்த வராக முகத்திற்கு சர்க்கரைப்பொங்கல், வடையும் படைக்க வேண்டும். மேல் நோக்கிய ஹயக்ரீவ முகத்துக்கு படையல் அவசியமில்லை.

பக்திக்கு தேவை மனம்
ஒரு ஆசிரியர் தன் மாணவர்களுக்கு பாடம் எடுத்தார். மாணவர்களே! அனுமன் இலங்கைக்குச் செல்ல கடலைத் தாண்ட வேண்டியிருந்தது. இவரால் இது முடியுமா என மற்ற குரங்குகள் சந்தேகப்பட்டன. அவர் என்ன செய்தார் தெரியுமா? ஆழ்ந்து கண்களை மூடி ஸ்ரீ ராமனைத் தவிர மற்றெல்லாவற்றையும் மறந்துவிட்டு, ஜெய் ஸ்ரீ ராம் என்றார். ராமநாம மகிமையால், பெரிய உருவமெடுத்து இலங்கை போய் சேர்ந்தார், என்றார். இதைக் கேட்ட ஒரு சிறுவன் மாலையில் வீடு திரும்பும் போது வழியில் குறுக்கிட்ட கால்வாயைத் தாண்ட நினைத்தான். ஆசிரியர் சொன்னபடியே, ஜெய் ஸ்ரீ ராம் என்று சொல்லியபடியே கால்வாயைத் தாண்டினான். கண்விழித்து பார்த்தால், தண்ணீருக்குள் கிடந்தான். மறுநாள் ஆசிரியரிடம் நடந்தைச் சொன்னான். மாணவனே! பயந்தபடியே கால்வாயைத் தாண்டியிருப்பாய். ராமனின் நாமத்தை மனதார பயபக்தியுடன் சொல்லியிருக்க வேண்டும். அனுமன் அந்த மந்திரத்தைச் சொல்லும் போது அவருடைய ராம பக்தியை மதிப்பிட அளவுகோலே இல்லாமல் இருந்தது, என்றார். பக்திக்கு தேவை ஈடுபாடுள்ள மனம். அதை அனுமனிடம் கேட்டுப் பெறுவோம்.
கீதைக்கு உரை எழுதியவர்
கீதைக்கு பலர் உரை எழுதியுள்ளனர். பைசாசம் என்ற மொழியில், ஆஞ்சநேயர் கீதைக்கு பாஷ்யம் (விளக்கவுரை) எழுதியதாகச் சொல்வர்.
இலக்கண பட்டதாரி: சிறந்த கல்விமானான அனுமனை, நவ வ்யாகரண வேத்தா என்பர். அதாவது, அவர் ஒன்பது வகையான இலக்கணத்தையும் படித்தவர். புத்தி, சக்தி இரண்டும் அவரிடம் இருந்தது.
ராமநாம மகிமை: ராம நாமம் சொன்னால் பாவம் தீரும். மரணத்தின் விளிம்பிற்கு செல்பவர்கள் நலன் பெறுவார்கள். அனுமன் ஓயாமல் ராமநாமம் சொன்னதால் தான்,
கடலைத் தாண்ட முடிந்தது. முடியாததையும் முடித்து வைப்பது ராமநாமம்.
வால் இல்லை: ஸ்ரீராமபிரான் இலங்கைக்கு பாலம் கட்டியபோது, அந்தக் குழுவுக்குத் தலைமை தாங்கி திருப்பணி செய்தவர் நளபிரம்மா என்பவர் ஆவார். இவர் ஆஞ்சநேயரைப் போலவே தோன்றினாலும் இவருக்கு வால் கிடையாது.
எதுவும் கேட்காத இதய தெய்வம்: அனுமன் ஜெயந்தியன்று, அவரைத் தரிசிக்க வெண்ணெய் வாங்க முடியவில்லை, வெற்றிலை வாங்க முடியவில்லை, வடைமாலை அணிவிக்க முடியவில்லை என்ற வருத்தமெல்லாம் வேண்டாம். பணமிருந்தால் இதை செய்யலாம். முடியாத பட்சத்தில், அவருக்குப் பிடித்தமான ஸ்ரீராம ஜெயம் சொல்லி வணங்கினாலே போதும். அவரது அருள் கிடைக்கும். எதையும் எதிர்பாராத இதயதெய்வம் அவர்.
ராமநாமத்தை தவிர வேறு எதுவும் அறியாத அவர் தன்னலமில்லாத வீரனாக திகழ்ந்தார். சீதையை மீட்டு வருவதற்காக அவர் ராமனிடம் எந்தவித பிரதிபலனையும் கருதவில்லை. ராமனுக்கு பணிவிடை செய்வதற்காகவே அவர் வாழ்ந்தார். அடக்கம், தைரியம், அறிவுக்கூர்மையுடன் திகழ்ந்தார். எல்லா தெய்வீக குணங்களும் அவரிடம் இருந்தன. ராமநாமத்தை உச்சரித்துக் கொண்டு கடலைக் கடத்தல், இலங்கையை எரித்தல், சஞ்சீவினி மூலிகையை கொண்டு வந்து லட்சுமணனை எழுப்புதல் ஆகிய அரிய செயல்களை அவர் செய்தார்.தன் அறிவைப் பற்றியோ, தொண்டைப்பற்றியோ பிறரிடம் தற்பெருமையாக சொன்னதே இல்லை. நான் ராமனின் சாதாரண தூதன், அவர் பணியை செய்வதற்காகவே இங்கு வந்துள்ளேன். எனக்கு ராமனின் கிருபையால் அச்சமோ, மரணபயமோ கிடையாது. ராமனுக்கு தொண்டு செய்யம் போது நான் மரணமடைய நேரிட்டாலும் அதை வரவேற்கிறேன், என்று சொன்னார். ராமனுக்கு தொண்டு செய்த சுக்ரீவனுக்கு அவனது ராஜ்யம் திரும்ப கிடைத்தது. அங்கதன் ராஜகுமாரனாக மூடிசூட்டப்பட்டான். விபீஷணன் இலங்கையின் அரசனானான். ஆனால், மிகப்பெரிய சாதனைகளைச் செய்த அனுமனோ ராமனிடம் எதுவும் கேட்கவில்லை. இதைக்கண்டு நெகிழ்ந்த ராமன், உனது கடனை நான் எப்படி திரும்பச் செலுத்துவேன். நான் எப்பொழுதும் உனக்கு கடன்பட்டவனாகவே இருப்பேன். நீ சிரஞ்சீவியாக வாழ்வாய். என்னைப் போன்றே உன்னையும் எல்லாரும் போற்றி வணங்குவர், என்றார். நீ எப்படி கடலைத் தாண்டினாய்? என ராமன் கேட்டார். அதற்கு அனுமன் மிகவும் அடக்கமாக, எம்பெருமானே! எல்லாம் உமது நாம மகிமையால் என்றார். தங்களை தாங்களே புகழ்ந்து கொண்டிருக்கும் இந்த உலகில் அனுமன் பணத்தையோ, பதவியையோ எதிர்பார்க்காதது மட்டுமின்றி தற்புகழ்ச்சியாக ஒரு வார்த்தை கூட சொல்லவில்லை.
நான் நன்றி சொல்வேன் என் சீடனுக்கு: அனுமனின் தலைவனான ராமனிடம் இருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டிய பாடம் நன்றி மறவாமை. எவ்வளவு உயர்ந்த நிலைக்குச் சென்றாலும், கஷ்டப்பட்ட காலத்தில் நமக்கு உதவி செய்தவர்களை மறக்கக்கூடாது. பகவான் மகாவிஷ்ணு ராமனாக அவதாரம் செய்தபோது, சீதையை மீட்பதற்கு அவரது சீடரான அனுமன் உறுதுணையாக இருந்தார். அவருக்கு நன்றிக்கடன்பட்டவராக இருந்த மகாவிஷ்ணு, அனுமன் தன்னிடம் கொண்டிருந்த அன்பிற்கு அடையாளமாக, இந்த உலகம் உள்ளவரை உன் புகழும் பூமியில் நிலைத்திருக்கும். உனக்கு எவ்வளவு கொடுத்தாலும் நான் உனக்கு என்றும் கடனாளியாகத்தான் இருப்பேன்,என்றார்.அனுமனை வணங்கினால் மகாவிஷ்ணுவின் அருள் பரிபூரணமாக கிடைக்கும் என்பது நம்பிக்கை

No comments:

Post a Comment