Saturday, December 29, 2012

பற்றுக பற்றற்றான் பற்றினைஅப்பற்றைப் பற்றுக பற்று விடற்கு’

நியமமும், நிஷ்டையும் கூடிய பெருந்தவத்தோர் வாழும் ஓர் ஆசிரமம் அது. அங்கு நிலவும் தெய்விகச் சூழலே மனித மனத்தில் அதிர்வுகளை உண்டாக்கி, நன்னெறிப்படுத்தும் தன்மை பெற்றது. திருமுருகாற்றுப்படையில் நக்கீரர் வர்ணிக்கிறாரே அந்த மாதிரி மரவுரி உடையும், வெண்மையான வலம்புரிச் சங்கு போன்ற ஜடா முடியும், மான் தோலால் அணியப்பட்ட மாசற்ற மேனியும், விரதங்களால் நலிந்த தேகமும் கொண்டு கல்வியில் கரை கண்டவர்களும், கோபமும், காமமும் நீக்கியவர்களும் ஆக விளங்கிய தவயோகிகளின் வாழ்விடம் அது.
‘சீரை தைஇய உடுக்கையர், சீரொடு
வலம்புரி புரையும் வால்நரை முடியினர்
மாசற இமைக்கும் உருவினர், மானின்
உரிவை தைஇய ஊன்கெடு மார்பின்
என்பு எழுந்து இயங்கும் யாக்கையர்
.... .... ... கற்றோர்க்கு
தாம் வரம்பு ஆகிய தலைமையர், காமமொடு
கடுஞ்சினம் கடிந்த காட்சியர்
அவர்கள் அங்கு தொண்ணூறையும் தாண்டிய வயதான துறவி ஒருவர். எல்லாருடைய பெருமதிப்பிற்கும் உரியவர். வாழ்ந்தது போதும் என நினைத்து உண்ணாமல் உயிரை விடமுடிவு செய்து சீடர்களை அழைத்து ‘உண்ணாநோன்பு இருந்து இறைவனை அடைய நினைக்கிறேன். நான்கு நாள்கள் தண்ணீர் மட்டும் சிறிது, சிறிது கொடுத்து பிறகு அதையும் நிறுத்தி விடுங்கள்’ என்றார். குருவின் கட்டளை ஆயிற்றே! சீடர்கள் பணிவுடன் அவர் சொற்படி நடந்தனர். நான்கு நாள்களுக்குப் பின் அவருக்கு நீரும் தரவில்லை. நினைவு வருவதும், போவதுமாக இருந்தது. அனைவரும் ஒரு தவிப்புடன், சோகத்துடன் எதிர்பார்ப்புடன் சுற்றிச் சுற்றி வந்தனர். மெதுவாக தங்களுக்குள், தங்களது பல அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டனர். அங்கு வந்த ஒரு நடுவயதுத் துறவி கூறினார் ‘இந்த மகான் மகா சமாதி அடைந்தபின், அவரது ருத்திராட்ச மாலையிலிருந்து ஒரு ருத்திராட்சத்தை எனக்குப் பிரசாதமாக அளியுங்கள். அது என்னை மேன் மேலும் நன்னிலைப்படுத்தும்’ என்றார். திடீரென முதிய துறவிக்கு நினைவு திரும்புகிறது. உடலில் எழுந்திருக்க பலமில்லை. ஆனால் ருத்திராட்சத்தைத் தர முடியாது என்பதாக, கையை அசைத்துச் சைகை செய்தார். இவரோ எப்படியும் உயிரைத் துறக்க முடிவு செய்து விட்டார். இவர் தன்னுடன் எதைக் கொண்டு போகப் போகிறார்? பின் ஏன் முடியாது என்று கை அசைக்கிறார்? கீதையின் அக்ஷரப்ரம்ம யோகம் என்ற எட்டாவது அத்தியாயத்தில் கிருஷ்ணர் கூறிய படி
(ஸர்வத்வாராணி ஸம்யம்ய மனோஹ்ருதி நிருத்யச)
என்று தன் புலன்களை வசப்படுத்தி மனத்தில் இறைவனையே நிறுத்தி, சிந்தித்துக் கொண்டு இருந்திருந்தால் ருத்திராட்சப் பித்து வந்திருக்காது. கூறுவது எளிதாக இருந்தாலும், நடைமுறையில் பற்றை நீக்குவது துறவிக்குக் கூட கடினம் என்பதைத் தான் அவரது செயல் காட்டுகிறது.
‘மற்று பற்று எனக்கின்றி நின்திருப் பாதமே மனம் பாவித்தேன்’ என்று தான் அடியவர்கள் பாடுகிறார்கள். சதா சலித்துக் கொண்டே இருக்கும் நம் மனம் எதையாவது பற்றிக் கொள்ளும் இயல்பை உடையது. கொடியானது, ஒரு கொழுகொம்பைப் பற்றுவது போல மனத்திற்கு ஒரு பற்று தேவை. அதனால் தான் வள்ளுவர்
‘பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப்
பற்றுக பற்று விடற்கு’
என்கிறார். இறைவனின் திருவடிகளைப் பற்றிக் கொண்டு விட்டால், உலகியல் பந்தங்களும், பாசங்களும் புளியின் ஓடு போல தானே கழன்று விடும்.
பற்று என்பது நான் என்னும் அகப்பற்றாகவும், எனது என்னும் புறப்பற்றாகவும் விளங்குகிறது. நான் என்பதை ஒரு மரத்தின் நடுப் பகுதியாக, அடி மரமாகக் கற்பனை செய்வதால், எனது, எனது என்று தோன்றி வளர்ந்து கொண்டே வரும் பற்றுகளை மரத்தின் கிளைகளாகச் சொல்வது பொருத்தமாக இருக்கும்.
சங்க இலக்கியங்களில் கூட பற்றுகளை வென்று, வீடு பேறடைந்த மன்னர்கள் பற்றிய செய்திகள் உள்ளன. கிடைத்தற்கரிய கனி, உண்டவர்களின் ஆயுளை அதிகமாக்கும் என்ற பெருமையுடைய நெல்லிக்கனி கிடைத்தும் அதை, தான் உண்ணாமல் ஆத்திசூடி, கொன்றை வேந்தன், மூதுரை, நல்வழி மற்றும் பல பாடல்களால் மக்களை நன்னெறிப்படுத்திய ஔவையார் உண்பது தான் சிறந்தது என்று அக்கனியை ஔவைப் பாட்டிக்கு அதியமான் அளித்தது, முழுமையாக அகப்பற்றை நீக்கியதால் தான். நான் வாழ வேண்டும். நான் தான் வாழ வேண்டும். நான் தான் பெறற்கரிய கனியை உண்ண வேண்டும் என்ற தன்முனைப்பு இருந்தால் தியாக உணர்வே வராதே!
உண்மையாகவே தன் நாட்டில் வாழும் மக்களுக்கான பலனுள்ள தொண்டை மகேசன் தொண்டாகப் போற்றியவர்கள் அந்நாளைய மன்னர்கள். இறைவனின் அடியவர்களாக நாட்டை ஆண்டவர்கள் அவர்கள். அப்படிப்பட்ட ஒரு தருமபரிபாலனம் பண்ணிய மன்னன் மனுநீதிச் சோழன். அவனது மகன் இந்தக் காலத்துப் பையன்களை போலவே செயல்பட்டு, அனுபவமின்றி தேரோட்ட ஒரு கன்றுகுட்டி இறக்க, தாய்ப்பசு கடைவாயிலில் மணியடிக்க, தன் மகனையே தேர்க்காலில் பலி கொடுத்து நீதி வழங்கிய மன்னர், சுயநலப் போக்கை நீக்கி புறப்பற்றை வென்று விடுகிறார். மக்கள் மீதுள்ள பற்றை விடுவது மிகவும் சிரமமான செயல், புறாவைத் துரத்தி வந்த பருந்து விவாதம் செய்ய, புறாவைக் காக்க வேண்டி தன் உடல் சதையையே அரிந்து கொடுத்த மாமன்னன் ‘புள்ளுறு புன் கண் துயர்’ மட்டுமா தீர்க்கிறான்? தான், தன் உடல், உடல்வலி என்ற எந்த நினைவுமின்றி, தர்மத்தை தான் காத்து; தர்மத்தால் காக்கப்படுகிறான். ‘தர்மோ ரக்ஷதி ரக்ஷித:’ பருந்தாகவும் புறாவாகவும் வந்து அவனைச் சோதித்த இந்திரனும் வருணனும், அவன் முன் சுய உருவில் தோன்றி வரமளித்து மறைந்தனர். அகப்பற்று நீங்கினால் ஆனந்தம் தானே! சிபியின் பெயர் இன்றும் நிலைத்து நிற்கிறதே!
‘பாசமாம் பற்றறுத்துப் பாரிக்கும் ஆரிய’னின் திருவடிகளில் சரணடைந்தவர்களால் பற்றுகளை அறுக்க முடியும். ‘கொடுந்தொழில் வல்வில் கொலை இய கானவர்’ குடிப் பிறந்த அரசிளம் குமாரர் பின்னால் திண்மையடையப் போகும் மனத்திற்குப் பொருத்தமாக பெயர் ‘திண்ணன்’ என்று அமைந்தது கூட இறையருள் தான். காட்டாச்சிக்கு ஏற்ற வேட்டையில் திறமைசாலி. சுற்றமும், நட்பும் நிறைந்த காட்டு வாழ்க்கை நன்றாகவே நடந்தது. காளஹஸ்தி மலையில் சிவலிங்கத்தைக் கண்டவுடன் எல்லாம் மாறியது. வேட்டையில் நாட்டமில்லை. விளையாட்டில் தேற்றமில்லை. குலத் தொழில் என்று செய்கின்ற வேட்டையையும் கர்ம யோகமாக்கி விட்டான். புறாவை வாயால் கடித்துக் கடித்து மெதுவாகக் காளத்தியானுக்குப் படைத்து, வாயில் கொண்டு போன நீரை லிங்கத்தின் மேல் உமிழ்ந்து அபிஷேகமாக்கி, அவனுக்கு தெரிந்த ஆசாரத்தில் இறைவழிபாட்டை தினம் செய்தான். சிவகோசரியார் படைத்த பூக்களையெல்லாம் குப்பையாகக் கருதி வெளியே வீசி விடுவான். நாள்கள் கழிந்தன. ஒருநாள், கண்ணிலும், மனத்திலும் நிறைந்து, எண்ணமெல்லாம் இனிக்கச் செய்யும் காளத்தியானை தரிசிக்க திண்ணன் வந்தான். காளத்திநாதரின் கண்ணில் இருந்து குருதி கொப்பளிக்க, திண்ணன் உடல் சாம்பி, உள்ளம் நைந்து, செய்வதறியாது திகைத்துத் திணறியது. சில நொடிகள் தான். காட்டு ஆட்சி முறையே, கண்ணுக்கு பதில் கண், உயிருக்கு பதில் உயிர் என்பது தானே.
தனக்கு நேரப் போகும் அவலத்தைக் கருதாது, காளத்தியாருக்கு கண் நேராக வேண்டும் என்பது ஒன்றே குறியாக தன் கண்ணைத் தோண்டி எடுத்து காளத்திநாதரின் கண்ணில் பொருத்த ஈசனின் கண்ணின் புண் நேராகி விட்டது. ஈசன் விளையாட்டு மேலும் தொடர அவருக்கு, அடுத்த கண்ணில் குருதி கொப்பளித்தது. பார்த்தான் திண்ணன். அடுத்த கண்ணையும் தோண்டிய பின், எப்படி அதை இறைவனுக்குப் பொருத்துவது என யோசித்து அவனது அன்பின் ஆழத்தில் தன் கண்ணை எடுத்த வலி கூட தெரியவில்லையே - தன் காலை அந்த கண்ணில் அடையாளத்துக்கு வைத்தான். அடுத்த கண்ணையும் நொடியில் இறைவனுக்கு அளிக்க, இறைவன் அவன் முன் தோன்றி இழந்த கண்களை அளித்து, பெறற்கரிய பேற்றை அளித்தார். திண்ணன் கண்ணப்பர் ஆகி, இன்றும் நாம் பூசைசெய்யும் நிலையில் இறவா வரம் பெற்றல்லவா இருக்கிறார்? ‘கலை மலிந்த சீர்நம்பி கண்ணப்பர்க்கு அடியேன்’ என்று சுந்தரர் பாடுகிறாரே. தன் உடல் மீது, உயிர் மீது பற்று என்பதான அகப்பற்று நீங்க ‘இமைப் பொழுதும் நெஞ்சில் நீங்காதான் தாள்களைப் பற்றியவராயிற்றே கண்ணப்பர்! ‘அற்றது பற்று எனில் உற்றது வீடு தானே! சிவகோசரியார், நறும்புனலாடி, ருத்ரம் சமகம் செபித்து, கொண்டு வந்த தூயநீரையும், ‘சுரும்பும் ஊசாச் சுடர்’ பூக்களையும் ஏற்ற இறைவன், கண்ணப்பன் தன் வாயிலே கொண்டு வந்து உமிழ்ந்த நீரையும், அழுக்கு நீரையும், கடித்துச் சுவைத்துக் கொணர்ந்த பன்றி மாமிசத்தையும் -அதுவும் அழுக்கு தான்- ஏற்றார். அவருக்கு தன் மீது பக்தன் வைக்கும் பற்று தானே பெரியது? ஒரு புலவர் பாடுகிறார்:
தருமம் தவஞ்சற் றறியாத வேடுவன் தன்செருப்பு
மருமுந்து வேணிக் கணிகாமலர் அவன் வாய்உதகம்
திருமஞ் சனப்புனல், பல்லால் அவன்மென்று தின்றதசை
அருமந்த போனகம் அன்றோநம் காளத்தி அப்பனுக்கே.
சோழநாட்டில் செங்காட்டாங்குடியில் பிறந்தவர் பரஞ்சோதி. வீரமும், தீரமும் மிக்க இவர் பல்லவ மன்னர் நரசிம்மரின் படைத் தளபதியாக, வலக்கரமாக, நாட்டைக் காக்கும் நல்லாண் மகனாக உயர்ந்தார். சிவபக்தி முறுக்கேறியது. அவரை ஆட்கொள்ள நினைத்த ஈசன் சிவனடியாராக வந்து பிள்ளைக் கறி கேட்டார். சிவனடியாரின் ஆவலை நிறைவேற்ற, தன் மகனையே கொல்லப்போகும் வேளையில், சிவனடியார், ஈசனாகக் காட்சி தந்து அருளினார். பரஞ்சோதி, சிறுத்தொண்ட நாயனாரானார். ‘செங்காட்டாங்குடி மேய சிறுத் தொண்டர்க்கடியேன்’ என்று சுந்தரரால் திருத் தொண்டர் தொகையில் புகழப்படுகிறார்.
நமக்குத் துன்பம் வந்தால் பொறுத்துக் கொள்வோம். நம் குழந்தைகளின் துயரையோ, இழப்பையோ தாங்குவது கடினம். ‘உன் கண்ணில் நீர் வழிந்தால் என் நெஞ்சில் உதிரம் கொட்டுதடி’ என்று பாரதி அழகாகப் பாடி விட்டார். அப்படி அருமையான, தன் மகனையே, சிவனடியாருக்காக இழக்கத் துணிந்ததால், பரஞ்சோதியாரின், சிறுத் தொண்டரின் பற்றின்மை எந்த அளவு உரம் பெற்று இருந்திருக்கும்? அப்பூதி அடிகள், மெய்ப்பொருள் நாயனார் என்று வரிசையாகக் கூறிக்கொண்டே போகலாம். நாயன்மார்களாகட்டும், ஆழ்வார்கள் ஆகட்டும், தங்கள் பற்றை மடை மாற்றி இறைவனைக் கொழு கொம்பாகப் பற்றிக் கொண்டவர்கள். கோதை நாச்சியார் அழகாகப் பாடுகிறாள் ‘உன்தன்னோடு உறவேல் நமக்கிங் கொழிக்க வொழியாது’ என்று யாக்கை நிலையாமையையும், நாம் பற்று வைக்கும் பொருள்களின் நிலையாமையையும் கண்டு ஞானியர், தாமரை இலை மேல் இருக்கும் நீர், குளத்து நீருடன் ஒட்டாதிருப்பது போல உலகியலில் பற்றற்று வாழ்வார்களாம். ஔவையார் பாடுகிறார்:
எல்லாப் படியாலும் எண்ணினால் இவ்வுடம்பு
பொல்லாப் புழுமலி நோய் புன்குரம்பை - நல்லார்
அறிந்திருப்பார் ஆதலினால் ஆம்கமல நீர்போல
பிரிந்திருப்பார் பேசார் பிறர்க்கு.
அம்பிகையின் கையில் உள்ள கரும்பு வில்லே திருமாலின் மகனான, காமனின் கையிலும் உள்ளது. காமன் கரும்பு வில்லுடன் தாமரை, அசோகம், மாம்பூ, முல்லை, நீலோத்பலம் என்ற ஐந்து மலரம்புகளையும் கொண்டு உலகைத் தன்வயப் படுத்துகிறான். அவனுக்கு இந்த படைக்கலனை தந்தவளே அம்பிகை தான். அவனுடையது மாயா சொரூபமான படைக்கலம் என்றால், அம்பிகையின் கரும்புவில் ஞான சொரூபமாக, காமனால் ஏற்பட்ட மாயையை அழிக்கிறது. அதே போன்று இவர் நல்லவர், அவர் கெட்டவர், இவரைப் பிடிக்கும் அவரைப் பிடிக்காது என்று உலகையே கூறு போட்டு விருப்பு வெறுப்புகளால் பிரித்துப் பிரித்து வைக்கும் மனிதனை யமதருமராஜன் தன்னிடமுள்ள பாசக்கயிற்றால் கூறு போட்டு, உயிரை உடலிலிருந்து பிரித்து நல்வினை, தீவினைக்கேற்ப, ஓயாத பிறவிக் கடலில் சிக்கி அல்லலுற வைத்து மாய விளையாட்டு விளையாடுகிறான். அஞ்ஞானத்தை, அகங்காரத்தை அடக்கும் அன்னையோ, தன் கையிலுள்ள பாசக்கயிற்றால், தன் திருவடியில் கட்டி. மற்ற கட்டுகளை அவிழச் செய்துவிடுகிறாள். பாச அங்குசத்துடன் கூடிய அன்னையை தியானிக்க, தியானிக்க, நம்முடைய உலகியல் பற்றுக்கள் நீங்கும், விறகுக் கட்டைச் சுற்றியுள்ள இறுகிய கயிற்றை அவிழ்க்க, வேறு ஒரு கயிற்றினால் விறகுக்கட்டை இறுக்க முதல் கட்டு அவிழ்கிறதே அது போன்ற செயல் தான் இது.
யாருக்கும், எந்த தெய்வம் வேண்டுமானாலும் இஷ்ட தெய்வமாக இருக்கலாம். முருக பக்தர்கள் ‘வேல், மயில்’ என்றே தியானம் செய்வர். அகப்பற்று, புறப்பற்றும் நிறைந்த சூரபத்மன், முருகனால் வதம் செய்யப்பட்ட போது முருகன், அவனது தீய பற்றுகளை மட்டும் அழித்து அவனைச் சேவலாகவும், மயிலாகவும் மாற்றி வாகனமாகவும் கொடியாகவும் கொண்டாரே. “பற்றுகள் அழிந்த நிலையில் உன்னையே தாங்கும் வாகனமாகி, உன்னுடன் பூசையும் பெறுகிறதே கோல மயில், சூரமயில். அந்த அளவு இல்லை என்றாலும், என் பற்றையும் நீக்கி, உன் திருவடியில் சேர்த்துக் கொள்” என்று வேண்டலாம்.
“தருக்குற்று வந்த கங்கையைத் தலையில் கொண்டாய். தாருகாவனத்து முனிவர் ஏவிய பாம்புகளை அணிகலனாக்கிக் கொண்டாய். அவர்களது மதயானை உரி போர்த்தாய். இவற்றை எல்லாம் விட கொடியவனா, அகந்தையுடையாவனா நான்? இல்லை. அதனால் என் பாசத் தொடரை அறுத்து, ‘நின் சேவடிக் கீழ் சிறு தொண்டன் ஆக்கிக் கொள்” என வேண்டலாம்.
“கோபிகைகளுக்கு அருளியவா! சதா சலிக்கும் குரங்குகளைச் சலிக்காமல், உன் திருவடியில் கொண்டவனே! வேடனுக்கும், விலங்குகளுக்கும் அருள் செய்தவா! விலங்கு புத்தியுள்ள என் பற்றுகளை அறுத்து, நின் திருவடிச் சரணங்களை பற்ற. நின் அருளாலே நின் தாளைப் பற்றிட வழிகாட்டு” என கண்ணனையும், இராமனையும் வேண்டலாம். “எண்ணியர் எண்ணியாங்கு எய்துப எண்ணியர் திண்ணியர் ஆகப் பெறின் என்பது குறள் கூறும் நல்லுரையல்லவா!.”


No comments:

Post a Comment