பொன்னுக்கும் பொருளுக்கும் முக்கியத்துவம் இல்லாத காலத்தில் கால்நடைகளே ஒருவரது
உண்மைச் செல்வமாக மதிக்கப்பட்டு வந்தன. கால் நடைகளே ஒருவரது பொருளாதார
மதிப்பீட்டிற்கு அளவு கோலாக இருந்தது. ஆதலால் மாடுகள் இல்லாத வீடே இல்லை என்னும்
நிலை இருந்தது. நாட்டின் பொருளாதார துறையில் தனிச் செல்வாக்கு மாட்டுக்கு இருந்தது.
ஆதலால் செல்வத்தை `மாடு' என்ற சொல்லாலே குறிப்பிட்டு வந்தனர். ``கேடில்
விழுச்செல்வம் கல்வி ஒருவருக்கு ``மாடு'' அல்ல மற்றயவை என்று செல்வத்தை மாடு
என்னும் பொருள்பட வள்ளுவரும் உரைக்கின்றார். பசுக்கள் ஒரு நாட்டின் செல்வமாக
மட்டுமல்ல. பிற விலங்குகளைப் போல் பசுவையும் ஒரு விலங்காக கருதக்கூடாது.
எள்ளைத் தானிய மென்றும், பசுவை விலங்கு என்றும் எண்ணக் கூடாது என்று
சாஸ்திரங்கள் கூறுகின்றன. பண்டைய காலத்தில் பகைவர் நாடு மீது படை எடுப்பதற்கு
முன்னால் `வெட்சி' மாலை சூடி பகை நாட்டு பசுக்களை கவர்ந்து வருவார்கள். பின் பசுவை
பறிகொடுத்த நாட்டு வீரர்கள் ``கரந்தை மாலை சூடி வெட்சி'' மாலை சூடி கவர்ந்து சென்ற
நாட்டினர் மீது படையெடுத்து பசுக்களை மீட்டு வருவார்கள்.
இதிலிருந்து நாம் அறிந்து கொள்வது என்ன? ஒரு நாட்டின் பொருளாதாரம் பசுக்களால்
தான் நடைபெற்றது. அதனை அழித்து விடக்கூடாது என்பதுதான். ``நம்முடைய தார்மீக
உணர்விற்கும், கலாச்சார வாழ்விற்கும் பண்பாட்டிற்கும் அடிப்படையாக அமைந்தது
பசுவாகும். பதி, பசு, பாசம் என்னும் பொழுது ஆன்மையை பசு என்ற சொல்லாலேயே
குறிப்பிடுகின்றோம், மாடுகளை கட்டி வைக்கும் இடமே தொழுவம் என்னும் கொட்டில் ஆகும்.
அறிவு தரும் ஆலயத்தை அறிவாலயம் என்று சொல்வது போல தொழுவுவதற்கு ஏற்ற இடமே
தொழுவம் எனப்படும். பசுக்கள் இருக்குமிடம் ``கோ இல்'' ஆகும். உண்மைதான். ஆன்மா
ஒடுங்குமிடம் கோவில். இறைவன் வாழுமிடம் கோயில். பசுவில் தான் மும்மூர்த்திகளும்
முப்பத்தி முக்கோடி தேவர்களும் வசிக்கின்றனர்.
பசுவின் கர்ப்பகாலம் 9 மாதம் 9 நாள். எருமையின் கர்பகாலம் 10 மாதம் 10
நாளாகும். பசுவின் பின் பகுதியில் செல்வத்தை அள்ளித் தரும் மகாலட்சுமி வசிப்பதாக
சாஸ்திரம் சொல்கிறது. அப்பகுதியில் மகாலட்சுமி வசிப்பதாலேயே பசுவுக்கு பூஜை
செய்யும் போது பின் பகுதிக்குத்தான் முக்கிய பூஜை நடைபெறுகிறது.
முற்காலத்தில் ராஜாக்கள் அரண்மனைகள் கட்டும் போது உபய தோமுகி என்னும் பூஜை
செய்து தான் பின் கட்டடம் கட்டுவார்கள். ``உபய தோமுகி'' என்பது ஒரு பசு ஆகும். அந்த
பசு ஈனும் போது கன்றின் முன்னங்கால்களும் தலையும் தான் முதலில் வரும். கன்று போடும்
காலத்தில் இவ்வாறு இரு பக்கமும் தலையுடைய பசுவை ``உபய தோமுகி'' என்று சொல்வார்கள்.
அப்பொழுது அந்த பசுவை வலம் வந்து வழிபட வேண்டும். மாட்டின் வயிற்றில் இருந்து
கன்று வெளிப்படும் பொழுது முப்பத்து முக்கோடி தேவர்களும் மகாலட்சுமியாக நினைத்து
வணங்கியும், ஆசீர்வாதமும் செய்வார்கள். அப்பொழுது 3 முறை வலம் வந்து வணங்கி
தங்களுக்கு என்ன பிரச்சினைகள் தீரவில்லையோ அது விரைவில் தீர்ந்து நல்ல வழி கிடைக்க
வேண்டும் என வேண்டிக் கொண்டால் பயன் உறுதியாக விரைவில் கிடைக்கும்.
ஈன்ற பசுவிற்கு நஞ்சுக்கொடி விரைவில் விழுவதற்காக மூங்கில் இலை தழைகளை
கொடுப்பர். நஞ்சுக்கொடி விழுந்து விடும். நஞ்சுக் கொடியை தாழை ஓலை, அல்லது பனை
ஓலைப் பெட்டியில் வைத்து கட்டி பால் மரங்களில் கட்டித் தொங்கவிடுவார்கள். அதன்
மூலமாக மாடுகளுக்கு பால் பாக்கியம் பெருகும்.
இதன் நடைமுறை தற்காலம் மாறி வருகிறது என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.
கள்ளனைப் போல சில கள்ளப் பசுக்களும் உண்டு. இவை வேண்டுமென்றே பாலை சுரக்காமல்
தன்னுள் அடக்கிக் கொள்ளும் பால் சுரப்பதை இறக்கி கொடுக்காது. பால் கறந்தாலும் மிக
குறைவாகவே இருக்கும். அப்படிப்பட்ட மாடுகளின் பால் காம்பில் ``பிரண்டை''யை அரைத்து,
பால் கறப்பதற்கு முன்னால் லேசாக தடவி விட வேண்டும்.
உடனே மடிக் காம்புகளில் ``தினவு'' எடுக்கும். தினவு எடுத்த மாடுகள் சொரிந்து
கொள்ள முற்படும். அப்பொழுது நாம் காம்பை அழுத்தி கரப்பது மாடுகளுக்கு மிகவும் இதமாக
இருக்கும். சண்டித்தனம் அடங்கி பொறுமையாக பால் சுரந்து கொண்டே இருக்கும். கன்று
ஈன்ற பசுக்களுக்கு தொடர்ந்து புல் புண்ணாக்கு தானியம் போன்றவற்றை அளித்து காலையில்
வணங்கி வந்தால் கொடுத்த கடன் பிரச்சனையின்றி கிடைக்கும்.
வராது என நினைத்த கடனும் வாசலைத் தொட்டு கொடுக்கும். ஒருவருக்கு தீய கனவுகள்
அடிக்கடி வந்து அவஸ்தைபட்டால் அதற்கு பரிகாரம் காலையில் பசுவின் தொழுவத்திற்கு
சென்று வாழைப்பழம் கொடுத்து வழிபட்டால் சுகம் கிடைக்கும். ``கோ பூசை'' செய்தால்
கோடி நன்மை பெறலாம் என்பது நமது முன்னோர் வாக்கு.
பசுக்கள் மேய்ச்சலுக்கு சென்று வீடு திரும்பும் போது அதாவது அந்திப் பொழுதில்
அவற்றோடு சீதேவியும் வீட்டுக்கு வருவாளாம். வரலட்சுமி விரதத்தை ஆவணி மாதம்
பவுர்ணமிக்கு முன்வரும் வெள்ளிக்கிழமையில் அந்தி வேளையில் பூசை செய்து வழிபட்டால்
அளவற்ற செல்வம் பெற்று வாழலாம்.
இன்றும் பெரிய லட்சாதிபதி, கோடீஸ்வரர்களின் வீட்டில் இந்த வரலட்சுமி நோன்பு
இருந்து செல்வத்திற்கு மேல் செல்வம் சேர்ப்பதை நினைவில் கொள்ள வேண்டும். பலவித கிரக
கோளாறுகளால் பீடிக்கப்பட்டவர்களும் தீராத வியாதிகளால் அவதிப்படுபவர்களும் தங்கள்
பீடைகளிலிருந்து விடுபடுவதற்கு கோதானம் என்னும் பசுதானம் செய்து வழிபட்டால் நலம்
பெறலாம்.
விஷ்ணுவும் பஞ்ச கவ்யமும்...........
பஞ்ச கவ்யம் வைணவ மதத்திலும் சிறப்பான இடம் பெற்றுள்ளது. பஞ்ச கவ்யத்திலுள்ள
நெய்யின் அதிதேவதை விஷ்ணு என்று கூறப்படுகிறது. இராமனே! உடலில் பொருந்தி நிற்கின்ற
உயிர் நீ, உறக்கத்தோடு விழிப்பாகவும் நீயிருக்கிறாய், பசுக்களிடத்தில் உண்டான பஞ்ச
கவ்யமும் அவற்றின் தூய்மை யாகவும் நீயேயிருக்கின்றாய்.
ஆகாயத்தோடு கூடிய பூமியும் நீ, அழகிய கடலில் உண்டான அமுதமும் இரத்தினங்கள்
போன்ற வளமையும் நீ, நானாகவும் என் தலைவனாகவும் நீயேயிருக்கின்றாய். பசுவிடம்
தோன்றும் பஞ்ச கவ்யம் எவ்வளவு தூய்மையானது என்பதை இதன் மூலம் நாம் அறிந்து கொள்ள
முடியும்.
No comments:
Post a Comment