Friday, January 18, 2013

ராமேசுவரம் கோவிலின் தோற்றம் குறித்து இரண்டு கருத்துக்கள்

ராமேசுவரம் கோவிலின் தோற்றம் குறித்து இரண்டு கருத்துக்கள் நிலவுகின்றன. ராமாயணப்போருக்கு முன்னர் சேது அணை கட்டுவதற்காக ராமபிரான் இக்கோவிலை எழுப்பினார் என்பது ஒரு கருத்து. ராமாயண போருக்கு பின்னர் ராவணனைக் கொன்ற பாவம் நீங்க வேண்டி ராமபிரான் இக்கோவிலை எழுப்பினார் என்பது மற்றொரு கருத்து.

ராவணனால் இலங்கைக்கு கவர்ந்து செல்லப்பட்ட சீதா தேவியை காக்கும் பொருட்டு, ராமபிரான் தமது படைகளுடன் கடலிலே பாலம் கட்டத்தொடங்கினார். அவர் பகலிலே கட்டிய பாலத்தை ராவணன் இரவிலே வந்து அழித்து விட்டான்.


அதை கண்ட ஜாம்பவான் ராமபிரானிடம் பாலத்தை கட்டி அதன் மீது சிவலிங்க உருவை வைக்குமாறு கூறினார். ராமபிரானும் அவ்வாறே சிவலிங்க பிரதிட்டை செய்தார். சிவபக்தனான ராவணன், அச்சிவலிங்க உருவை கண்டதும் பாலத்தை அழிக்காது விட்டுவிட்டான். இவ்வாறு தோன்றியது தான் இத்தலத்து ராமலிங்கம் என்பது ஒரு கருத்தின் விளக்கம். இது ராமாயணப் போருக்கு முன்னது.


ராமாயண போருக்கு பின்னர் ராமபிரான் சிவலிங்க பிரதிட்டைக்காக ஒரு நேரம் குறிப்பிட்டு அனுமனை சிவலிங்கம் கொண்டு செல்லுமாறு காசிக்கு அனுப்ப குறிப்பிட்ட நேரத்தில் அவன் வந்து சேர்ந்ததால் சீதாதேவி கடற்கரையிலுள்ள மணலையே சிவலிங்கமாக்கி கொடுத்தாள். அச்சிவ லிங்கத்தை ராமபிரான் குறிப்பிட்ட நேரத்தில் பிரதிட்டை செய்து பூசையை முடித்தார்.


காலங் கடந்து வந்த அனுமன் அதை கண்டு கோபமுற்று பிரதிட்டை செய்யப்பட்டிருந்த சிவலிங்கத்தை தனது வாலால் கட்டி பெயர்த்தெடுக்க முயன்று முடியாமல் நின்றான். அதை கண்ட ராமபிரான் அவ்வனுமனை சமாதானப்படுத்தி அவன் கொண்டு வந்த சிவலிங்கத்தை ராமலிங்க பிரதிட்டையின் அருகிலேயே பிரதிட்டை செய்து வைத்து அதற்கே முதற்பூசை நடைபெற வேண்டும் என்ற கட்டளையும் இட்டார்.


அனுமன் கொண்டு வந்த சிவலிங்கம், ராமலிங்கத்திற்கு வடபக்கம் பிரதிட்டை செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு தோன்றியது தான் இத்தலத்து ராமலிங்கம் என்பது மற்றொரு கருத்தின் விளக்கம்.சிவபுராணம், ஆஞ்சநேய புராணம், பத்ம புராணம், அத்யாத்ம ராமாயணம், ஆனந்த ராமாயணம் ஆகியவையெல்லாம் இத்தலத்து கோவில் ராமாயண போருக்கு முன்னரே எழுப்பப்பட்டது என்னும் கருத்தை உணர்த்துகின்றன.


ராமபிரான் இலங்கையிலிருந்து மலர் விமானத்தில் திரும்பும்போது தாம் அமைத்த அணையையும், கோவிலையும் சீதாதேவிக்கு காட்டியதாக கூறுகின்றன. கந்தபுராணம், கம்ப ராமாயணம், தேவாரம் ஆகிய நூல்கள், ராமாயண போருக்கு பின்னர் ராவணனை கொன்ற பாவம் தீர, ராமபிரான் இக்கோவிலை எழுப்பினார் என்று தெளிவாக கூறுகின்றன. வால்மீகி ராமாயணம் இத்தலத்து கோவிலை பற்றி கூறவில்லை.


ஆனால் ராமபிரான் இலங்கையிலிருந்து மலர் விமானத்தில் அயோத்தியை நோக்கி திரும்பி செல்லும் போது தம்மால் கட்டப்பட்ட சேது அணையை சீதாதேவிக்கு காட்டியதையும், சேதுவின் சிறப்பையும், தமக்கு மகாதேவர் அருள் வழங்கிய காட்சியையும் சுருக்கமாக கூறுகின்றது. கம்பராமாயணம் அனுமன் காசிக்கு சென்றதையும், சீதா தேவி மணலிலே கட்டிய சிவலிங்கத்தை ராமபிரான் பிரதிட்டை செய்ததையும் விரிவாக கூறுகின்றது.


இத்தலத்து கோவில் ராமபிரானால் எழுப்பப்பட்டது என்பதை திருஞான சம்பந்த சுவாமிகள்,


"தேவியை வவ்விய தென்னிலங்கைத்

தசமாமுகன்

பூவியலும் முடிபொன்று வித்த பழியோய்அற

ஏவியலும் சிலை அண்ணல் செய்த

இராமேச்சுரம்''


எனப் பாடிப் போற்றுகின்றார். ஞானசம்பந்தர், ராமாயணப் போருக்கு பின்னர், ராவணனை கொன்ற பாவம் நீங்கவே ராமபிரான் கோவில் எழுப்பினார் என்னும் கருத்தை விளக்குகின்றார். திருநாவுக்கரசு சுவாமிகள், "செங்கண்மால் செய்த கோவில் திரு இராமேச்சுரம்'' என்று இத்தலத்தை போற்றிப் பாடுகின்றார். ராமபிரான் எடுத்த கோவில் என்பதனை உணர்த்துகின்றார். ராமேசுவரம் தீவு, திருமாலின் கையில் இருக்கும் சங்கின் வடிவில் அமைந்து விளங்குகிறது.

No comments:

Post a Comment