வாக்கு சரியாக இருக்க வேண்டும். நல்ல சொல்லைச் சொல்ல வேண்டும். உண்மையையும், பிறருக்குத் துன்பம் கொடுக்காமலும், அன்பு, பிரேமை, சாத்வீகத்துடனும் நிதானமாகப் பேச வேண்டும். ராமபிரானைப் பற்றிச் சொல்லும் போது "ராமோ தீவிர்நாபி பாஷதே' என்பார்கள். இரண்டு தடவை ராமபிரானிடத்திலிருந்து சப்தம் வராது. "கொடுத்தேன் என்றால் கொடுத்தார்; மறுபேச்சு பேசமாட்டார். "கொடுக்கிறேன்' என்று சொல்லிவிட்டு "நாளைக்கு வா, நாளன்னிக்கு வா' என்று திரும்பத் திரும்பச் சொல்லுகிற பழக்கமெல்லாம் அவரிடத்தில் கிடையாது. அது வாக்கினுடைய தர்மம். மனதிலே என்ன நினைக்கிறோமோ அது தான் வாக்கிலே வர வேண்டும்; அது தான் செயலிலே வர வேண்டும். இதுதான் உண்மையின் விளக்கம். அந்த வகையிலே நாம் இருக்க வேண்டுமென்றால் நல்ல குணத்தோடு கோபமில்லாத நிலையில் இருந்தால் தான், இந்த நிலையெல்லாம் நமக்கு வரும்.
ஆகவே, குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரையிலும் ஒவ்வொரு மனிதனும் நல்லதைச் செய்ய வேண்டும். நல்லதைப் பேசுவதற்குப் பழக்கம் பண்ணிக் கொள்ள வேண்டும். கோபம் என்பது பேச்சிலேயோ, காரியத்திலேயோ, ஏன் மனதிலே கூடத் தோன்றக்கூடாது என்பதை வைத்துத் தான் "ஆறுவது சினம்' என்று சொல்லியிருக்கிறார்கள்.
No comments:
Post a Comment