Sunday, January 13, 2013

விரும்பியது கிடைக்கவில்லையென்று வருந்தாதே.


விரும்பியது கிடைக்கவில்லையென்று வருந்தாதே.
கிடைத்துள்ளதை விரும்பு


ஒரு நாள் விவசாயி ஒருவன் தன் ஊரை அடுத்த காட்டின் வழியாகப் போய் கொண்டிருந்தான். அங்கே மிகவும் பெரிய மரம் ஒன்று இருந்தது. அவன் மரத்தின் நிழலை அடைந்ததும், ""தங்கம் வேண்டுமா தங்கம்?'' என்று ஒரு குரல் கேட்டது. விவசாயி சுற்றும் முற்றும் பார்த்தான்; மேலும் கீழும் பார்த்தான். அவன் கண்ணுக்கு ஒருவரும் தென்படவில்லை. ஆயினும், மீண்டும் குரல் ஒலித்தது, ""தங்கம் வேண்டுமா, தங்கம்?'' என்று கேட்டது. அது மாயக்குரல். உருவமற்ற ஒருவனுடைய குரல் அசரீரி. ஏழை விவசாயி வியப்பு மிகுந்து விழித்தான்; மிரள மிரளப் பார்த்தான். ஒருவரும் இல்லையென்றாலும் குரலோசை உண்மையாகவே இருந்தது.
""
தங்கம், மாற்றறியாத செழும்பொன். ஏழுகுடம் நிறைய என்னிடம் இருக்கிறது. உனக்கு வேண்டுமா? உடனே சொல்,'' என்று கொஞ்சம் அதிகாரமாகவே கேட்டது குரல்.
பொன் வேண்டாமென்று சொல்ல மனம் வருமா? அதுவும் ஏழு குடம் பொன்!
""
வேண்டும்!'' என்று மறுகுரல் கொடுத்தான் விவசாயி. உடனே அசரீரி சிரித்தது.
""
அப்படியென்றால் வந்த வழியே திரும்பிப் போ. உன் வீடு போய் சேர். ஏழு குடங்களையும் நான் வைத்தாயிற்று,'' என்று கூறியது. விவசாயி திரும்பினான். வீடு நோக்கி ஓடினான். வழியில் நிற்காமல், குடல் தெறிக்க ஓட்டம் பிடித்தான். அங்கே கண்ட காட்சி அவனை மெய்சிலிர்க்க வைத்தது. மாயக்குரல் பொய் சொல்லவில்லை என்பதை உணர்ந்தான். அவனுடைய வீட்டுக் கூடத்தில் ஏழு குடங்கள் இருந்தன. ஒன்றையடுத்து ஒன்று வரிசையாக இருந்தன; கண்களைக் கவரும் ஒளி வீசின.
விவசாயி முகத்திலும் புன்முறுவல் படர்ந்தது. மகிழ்ச்சி பொங்கி வழிந்தது. அவன் மெதுவாக அடியெடுத்து வைத்தான். குடங்களை நெருங்கி நடந்தான். அவற்றை திறந்து திறந்து பார்த்தான். ஆனால்; ஏழாவது குடத்தைப் பார்த்ததும் அவன் மனம் திடுக்கிட்டது. ஏனென்றால் அதில் பாதியளவு தான் தங்கம் இருந்தது.
""
ஆறு குடமும், அரைக் குடமும்... இது என்ன கணக்கு?'' என்று நினைத்தான் விவசாயி. அந்த அரைக்குடம் நிறைகுடமானால் தானே, ஏழு முழுக்குடம் தங்கத்துக்கும் அவன் உரியவன் ஆவான். ஆகவே, அவன் ஆறு குடங்களை மறந்தான். அரைக் குடத்தையே நினைக்கத் தொடங்கினான். அதை நிரப்புவதே தன் முதல் வேலையாகக் கருதினான்.
அடுத்த விநாடி, அவன் தன் நகைப் பெட்டியைத் திறந்தான். அதிலிருந்த ஆபரணங்களை எல்லாம் எடுத்தான். தன் மனைவியையும் அழைத்து, அவள் அணிந்திருந்த கம்மல், வளையல், அட்டிகை ஆகியவற்றையும் கழற்றிக் கொடுக்கும்படி ஆணையிட்டான். விவசாயி அவற்றை உருக்கினான். கட்டித் தங்கமாக்கினான். கை நிறைய எடுத்து அரைக்குடத்தில் போட்டான். குடம் நிறையவில்லை.
விவசாயி சிந்தித்தான். வீட்டிலிருந்த நெல் முழுவதையும் விற்றான். பாத்திரங்களை விற்றான். பண்டங்களை விற்றான். தங்கம் வாங்கி அரைக் குடத்தில் போட்டான்.
தொழுவத்தில் கட்டியிருந்த பசுவும் கன்றும் அவன் கண்களில் பட்டன. உடனே அவற்றை அவிழ்த்துக் கொண்டு போய் சந்தையில் விற்றான். பொன் வாங்கினான். அரைக் குடத்தில் போட்டான்.
குடம் நிறையவில்லை. விவசாயிக்கு ஆத்திரம் வந்தது. அவனுக்கு வேலை மீது நாட்டம் செல்லவில்லை. உண்ணவும் தயங்கினான். அவன் உண்ண நினைத்தாலும், ஏமாற்றமே அடைந்திருப்பான். சமையல் செய்ய வீட்டில் ஒரு பிடி அரிசியும் இருக்கவில்லை. பாவம் அவன் மனைவியும் பட்டினி கிடந்தாள்.
திடீரென்று, அவனுக்கு மற் றோர் எண்ணம் தோன்றியது. தான் வேலை செய்த பண்ணையாரிடம் ஓடினான். கை கட்டி நின்றான். கூலி போதவில்லை என்று முறையிட்டான்.
பண்ணையார் மிகவும் நல்லவர். குறை கேட்டதும் மனம் இறங்கினார். அவனுக்கு இரு மடங்கு கூலி அளந்தார். ஆயி னும் விவசாயியின் வீட்டில் பட்டினி தாண்டவம் ஆடிற்று.
அதிகமாகக் கிடைத்த தானி யத்தையும், அவன் விற்றுத் தங்கம் வாங்கினான். அரைக் குடத்தில் போட்டான். அப்பொழுதும் குடம் நிறையவில்லை.
விவசாயியும் அவன் மனைவியும் எலும்பும் தோலுமாக இளைத்துப் போயினர். உடுத்திக் கொள்ளக் கந்தல் துணியும் இல்லாமல் திண்டாடினர். என்றாலும் விவ சாயி தன் ஆசையைக் கை விடவில்லை. பிச்சை எடுக்கவும் துணிந்தான். ஊரார் சிரித்தனர். மனைவி புலம்பி அழுதாள்.
பிச்சையெடுத்த பணத்தையும் சிறுகச் சிறுகச் சேமித்து, அவன் தங்கமே வாங்கினான். அரைக் குடத்தில் போட்டான். பயனில்லை; குடம் நிறையவில்லை.
விவசாயி நாளுக்கு நாள் மெலிந்து கொண்டே போனான். காலம் நகர்ந்தது வாரங்கள் மாதங்கள் ஆயின.
ஒரு நாள் பண்ணையார் அவனை அழைத்தார். அவனுடைய துயரத்துக்கு காரணம் கேட்டார்.
""
ஒரு மடங்கு ஊதியம் பெற்ற போது, நீ மிகவும் மகிழ்ச்சியாகவே இருந்தாய். இப்போது இரு மடங்கு ஊதியம் அடைகிறாய். ஆனால், ஏன் இளைத்துத் துரும்பாகிவிட்டாய்?'' என்றார்.
தலைகுனிந்து நின்றான் விவசாயி. மீண்டும் பண்ணையார் பேசத் தொடங்கினார். ""நீ அந்த மரத்தில் வாழும் அசரீரியின் ஆசை வார்த்தைக்கு அடிமைப்பட்டாயா? அதன் சொல்லைக் கேட்டு ஏழு குடம் தங்கத்தையும் வாங்கிக் கொண்டாயா?'' என்று வினவினார். தலையைச் சொறிந்தான் விவசாயி. தன்னுடைய ரகசியம் எப்படி வெளியாயிற்று என எண்ணிப் பார்த்தான்.
பண்ணையாருக்கு அந்த மாயக் குரலின் சேதி முழுவதும் தெரியும். ஒருநாள், அவரையே அது தன் வலைக்குள் இழுத்துக் கொள்ளப் பார்த்தது. ஆனால் அவர் ஏமாறவில்லை. ""தங்கமும் வேண்டாம்; குடமும் வேண்டாம்; சங்கடமும் வேண்டாம்,'' என்று தீர்மானமாகச் சொல்லிவிட்டார் என்ற தனக்கு ஏற்பட்ட அனுபவத்தை பண்ணையார் கூறினார்.
அதைக் கேட்டதும், விவசாயி தன் பேராசையை ஒப்புக் கொண்டான். தன் வீட்டில் ஏழு குடங்கள் இருந்த உண்மையையும் ஒப்புக் கொண்டான்.
பண்ணையார் மற்றொரு விபரத்தையும் எடுத்துக் கூறினார். அந்தப் பொன் மாயமானது அதைச் செலவிட ஒருவராலும் இயலாது. மேலும் மேலும் சேர்க்கத் தூண்டுமே தவிர, நல்ல வழியில் ஓர் எள்ளத்தனையும் செலவிட அது இடம் கொடுக்காது.
விவசாயி கையைப் பிசைந்தான். தன் அறியாமையை நினைத்து வருந்தினான். அந்தத் தருணத்தையே எதிர்பார்த்திருந்தார் பண்ணையார். உடனே அவனை நோக்கி ""ஓடு, ஓடு,'' என அவசரப்படுத்தினார்.
எங்கே ஓடுவான் அவன்?
மாயக்குரல் இருந்த இடத்திற்கு அதே விநாடி அவனை ஓட வைத்தார் பண்ணையார். அவர் சொல்லிக் கொடுத்தபடியே, விவசாயி மரத்தை அடைந்ததும், ""எனக்கு ஏழு குடமும் வேண்டாம்; தங்கமும் வேண்டாம்,'' என்று கூவினான். அசரீரியும் சரி என்றது.
விவசாயி வீடு திரும்பினான். அவன் மனதில் இருந்த சுமை எங்கேயோ பறந்து போயிற்று. கூடத்தில் இருந்த குடங்களும் மாயமாக மறைந்தன. அவற்றைப் பின்பற்றி அங்கே குடி கொண்டிருந்த துன்பமும் ஆசையும் ஒழிந்தன.
உண்மையாக உழைக்க ஆரம்பித்தான் விவசாயி. இழந்துபோன எல்லா செல்வங்களும் அவனை வந்தடைந்தது.


No comments:

Post a Comment