எது பாவம், எது புண்ணியம்
எது பாவம், எது புண்ணியம் என்பதையே புரிந்து கொள்ளாமல் நாட்களைக் கழிக்கின்றனர் மக்கள். நாட்கள் செல்லச் செல்ல ஆயுள் குறைகிறதே! பார்த்துக் கொண்டே இருக்கும் போதே வெள்ளி விழா என்கிறான்,பொன் விழா என்கிறான், மணி விழா என்கிறான், வைர விழா என்கிறான்.
மாலை, மாலையாகப் போட்டு போட்டோ எடுத்து, அதைப் பார்த்து மகிழ்ந்து போகிறான். இத்தனைக் காலத்தில் செய்த பாவங்கள் எத்தனை, புண்ணியங்கள் எத்தனை என்று யோசிப்பதே இல்லை.
அனால், மேலே ஒருத்தன் இருக்கிறான்; அவனிடம் ஒரு கம்ப்யுட்டர் ரே உள்ளது. இவனது பாவ, புண்ணியங்கள் விநாடிக்கு விநாடி அங்கே பதிவாகி விடுகிறது. அங்கே போனதும் தான் அதைப் பார்கிறான். 'அடேயப்பா! இவ்வளவு பாவமா செய்திருக்கிறேன்? எனக்கு தெரியவே இல்லையே! ஹி...ஹி...ஹி.. என்று இளிக்கிறான். 'டேய், இளிக்காதே! இதற்கும் தண்டனை உண்டு;அனுபவித்து விட்டுப் போ..'என்று கழுத்தைப் பிடித்து நரகத்தில் தள்ளுவர். புண்ணியம் செய்தவன் பாடு பரவாயில்லை; நல்ல உலகத்துக்குப் போய் விடுவான்.
அதனால், வாழ்நாளில் சிந்திக்க வேண்டும். பெரியோர் என்ன சொல்லியிருகின்றனர், அறநூல்கள் என்ன சொல்கின்றன, யாரை அண்டினால் நற்கதி கிடைக்கும், என்ன செய்தால் தீவினைகள் தொலையும் என்று சிந்தித்து செயல் பட வேண்டும். நம்மை நல்வழிப் படுத்தி, கரை சேர்க்க பல சாதனங்கள் உள்ளன; அவற்றைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். " மூத்தோர் சொல் அமுதம்" என்றனர்; அதைக் கேட்க வேண்டும்.
மனிதனுக்கு உதவுவதற்காக மூன்றை சொல்லியுள்ளனர்; ஏணி, தோணி, புராணி! ஏணி, மனிதன் மேல போக உதவுகிறது; அனால், தான் இருத்த இடத்திலேயே இருந்து விடுகிறது. தோணி, தண்ணீரை தாண்டி அக்கரையில் மனிதனை சேர்த்து விடுகிறது; தான் மட்டும் தண்ணீரிலேயே இருக்கிறது. புராணி, பகவத் குணங்களைச் சொல்லி, பக்தர்களை பகவானிடம் சேர வழிகாட்டுகிறார்; அனால், அவர் மட்டும் இங்கேயே புராணம் சொல்லி கொண்டிருக்கிறார்.
'அட, சரி தான் போய்யா! நீயும் உன் வேதாந்தமும்! என்று சிலர் சொல்லலாம். வேதமும், வேதாந்தமும், சாஸ்திரமும் சொல்கிறதே... அதைக் கேட்டு, அதன் படி நடக்கலாமே! நல்லவர்கள் காட்டும் வழி நடப்பது நல்லது தானே!
No comments:
Post a Comment