பின்னே எதுதான் வேண்டும்? எது வாழ்க்கைக்கு உதவக் கூடியது? எது அறிவை வளர்ப்பது? எது மன நிம்மதியை அளிக்கக் கூடியது? மற்ற விஷய சுகங்களெல்லாம் மன சஞ்சலத்தை உண்டு பண்ணக் கூடியவைகளே! நிதானமாக சிந்தித்தால் தெரியும். பருத்தி பளபளப்பாக உள்ளது போல், சான்றோரின் வாழ்க்கையும் ஒளி வீசுகிறது. பருத்தி பல கஷ்டங்களுக்கு உட்பட்டாலும், நம் உடலை மறைக்கும் துணியாகிறது. சான்றோரும் மற்றவர்களின் குறை குற்றங்களை மறைக்க (நீக்க) பல இன்னல்களை மேற்கொள்கின்றனர். சான்றோர் நட்பு (சத் சங்கம்) கிடைத்தால் காக்கை குயிலாகவும், வாத்து அன்னமாகவும் மாறிவிடும் தன்மை பெறுகின்றன. அதுபோல, காக்கை, வாத்து போல் குறைகள் உள்ளவர்களும் சான்றோரின் நட்பினால் உயர்வு பெறலாம். வேடரான வால்மீகி, நாரதரின் தொடர்பால் ராம நாம உபதேசம் பெற்று, முனிவரானார். ஒரு வேலைக்காரியின் புதல்வராக இருந்த நாரதர், மகான்களின் சேர்க்கையால் ஞானம் பெற்று, அடுத்த பிறவியில் பிரம்மாவின் புதல்வரானார். சத் சங்கத்தின் மூலமே இவர்களுக்கு உயர்வு ஏற்பட்டது. சத் சங்கத்தின் மூலம் தான் அறிவு, புகழ், முன்னேற்றம், செல்வம், மங்களம் ஆகியவற்றை எந்த இடத்திலும், எந்த காலத்திலும் பெற முடியும். சான்றோர் நட்பின்றி விவேகம் வராது; விவேகம் இன்றி பக்தி வராது; பக்தி இன்றி ஆண்டவன் அருள் கிடைக்காது; அருள் இன்றேல் சித்திகள் ஏற்படாது.
சாதுக்கள் சலனமற்ற மனம் உடையவர்கள். அவர்களுக்கு நண்பன்-பகைவன் என்று யாரும் கிடையாது. மலரானது எப்படி வலது, இடது என்று வேற்றுமை இல்லாமல் இரு கைகளுக்கும் மணம் அளிக்கிறதோ, அப்படி சான்றோர் எல்லாரிடமும் அன்பு காட்டுவர். சான்றோர் தூய உள்ளம் கொண்டவர்கள், உலக நன்மை யை நாடுபவர்கள், உலக நன்மைக்கு எதிராக அவர்கள் எதையும் விரும்ப மாட்டார்கள்; உலகம் நன்றாக இருக்க வேண்டும் என்பதையே அவர்கள் விரும்புவர். நாமெல்லாம் எப்படியோ? சான்றோர் வரிசையில் சேர முடியுமா?
No comments:
Post a Comment