மறதி என்பது தேவையான நேரத்தில் ஏற்பட்டால் அது பலமாகும், அதே மறதி தேவையில்லாத நேரத்தில் ஏற்பட்டால் பலவீனமாவதும் உண்டு. மறதி எப்போது பலமாகும் தெரியுமா? இறைவனை வழிபடும் போது, சொந்தம் பந்தம் இவ்வுலகம் அனைத்தையும் மறந்து ஒரே சிந்தனையுடன் தனக்குள்ளே இருக்கும் இறைவனைத்தேட வேண்டும். அப்போது மறதி என்பது மாபெரும் பலமாக அமையும். அத்துடன் நமக்கு யாரும் கெடுதல் செய்தாலும், அதை மறந்து அவர்களுக்கு மறுபடியும் கெடுதல் செய்யாமல், இறைவா அவர்கள் எனக்கு கெடுதல் செய்ததைப்போல் வேறு யாருக்கும் கெடுதல் செய்யாமல் அவர்களை நல்வழிப்படுத்து என இறைவனை வேண்டும் போது, அடுத்தவர்கள் செய்த கெடுதலை மறக்க வேண்டும். மேலும் வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என நினைப்பவர்கள், கடந்த காலத்தில் நடந்த தேவையற்ற மற்றும் மன்னிக்கவே முடியாத செயல்கள், மற்றும் மறக்கவே முடியாத சோகங்கள் ஆகியவற்றை அவசியம் மறந்தே ஆக வேண்டும். அப்போது தான் மறதி நமக்கு பெரும் பலமாக, வாழ்க்கையின் பாலமாக அமையும்.
ஆனால், அவசியமான காரியங்களில் மறதி ஏற்பட்டுவிட்டால், அதுவே நம்மை அழிப்பதாக வும் அமைந்துவிடுகிறது. நெடுநீர், மறவி, மடி, துயில் நான்கும் கெடுநீரார் காமக் கலன். எதையும் காலம் தாழ்த்திச் செய்தல், மறதி, சோம்பல், தூக்கம் ஆகிய நான்கும் கெட்டு அழிபவர்கள் விரும்பும் அணிகலன்கள் என்று கூறுகிறது உலகப் பொதுமறையாம் திருக்குறள். ஊழ்வினைப் பயன் நன்கு அமையுமானால் தக்க தருணத்தில் மறதி நீங்கிவிடும். நல்நினைவு தோன்றிவிடும். இராவணன் சிவபெருமானுக்கு விருப்ப மான சாமகானம் இசைத்தான். கலை வல்லா னாகிய அவன் எப்படியும் சிவனின் பெரும் பாராட்டைப் பெற்றுவிட வேண்டும் என்று பேராசை கொண்டான். தனது உடல் நரம்பையே எடுத்து யாழில் பூட்டி இசைத்தான். அந்த தேவகானத்தில் மகாதேவன் மனம் மகிழ்ச்சியில் மிதந்தது. இராவணன் கேட்கும் முன்னாலேயே, முப்பத்து முக்கோடி வாழ்நாள் பெறுவாய்; எத்திக்கிலும் யாவராலும் வெலப்படாய். இதோ இந்த சந்திர ஹாசம் என்ற வாளையும் பெற்றுக்கொள். ஆனால் ஒன்று எக்காரணம் கொண்டும் நீ இதனை நிராயுதபாணிமேல் பயன்படுத்தக் கூடாது. அப்படிச் செய்தால் அப்பொழுதே அது எம்மிடம் திரும்பி வந்துவிடும் என்றார்.
இந்த வரத்தை இராவணன் எப்படி எப்பொழுது மறந்தான்? சீதையைக் கவர்ந்து வந்து அசோக வனத்தில் சிறை வைத்துவிட்டான். அவளை தன் விருப்பத்துக்கு இசைவிக்கும்படி அரக்கியர்க்கு உத்தரவிட்டான். கலக்கத்துடன் மண்டோதரி யின் அந்தப்புரத்துள் நுழைகிறான். வருகிற கணவனின் நடை தளர்ந்திருக்கிறது. தலை குனிந்திருக்கிறது. முகம் வாடியிருக்கிறது. சுவாமி, தங்கள் முகம் ஏன் வாட்டமுற்றுள் ளது? வந்ததும் நேரே பூஜை அறைக்குச் சென்று சந்திரஹாச வாளை வைத்துவிட்டு வருவீர்களே. அது எங்கே? என்று பதட்டத் துடன் கேட்டாள் பத்தினி. இராவணன், அந்த வாள் எங்கே போயிற்று என்று தெரியவில்லை தேவி என்றான். என்ன சுவாமி இது? நிராயுதபாணி யார் மீதாவது பயன்படுத்தினால் அதைக் கொடுத்த சிவனிடமே திரும்பிவிடும் என்று சிவனார் அன்று சொன்னதை என்னிடம் சொல்லி இருக்கிறீர்களே. இப்பொழுது எந்த நிராயுத பாணிமீதாவது பயன்படுத்தினீர்களா? என்று கவலையுடன் கேட்டாள் மண்டோதரி. இராவணன் மண்டோதரி முகத்தைப் பார்க்காமலே சொன்னான். ஆம் தேவி. இப்பொழுது தான் நினைவு வருகிறது. சீதையை புஷ்பக விமானத்தில் கொண்டு வரும்பொழுது ஒரு பெருங்கழுகு என்னைத் தடுத்தது. அதன் அலகால் என்னை பயங்கரமாய் தாக்கியது. அப்பொழுது ஆத்திரமடைந்த நான் அந்தக் கழுகின் சிறகுகளை அந்த வாளால் வெட்டி கழுகை வீழ்த்தினேன்.
அந்தக் கழுகிடம் ஆயுதம் ஏதும் இல்லையா? அதன் அலகுதான் ஆயுதமாகப் பயன் பட்டது. வேறெதுவும் இல்லை. சுவாமி, அலகு ஓர் உறுப்பல்லவா? அது எப்படி ஆயுதமாகும்? அப்படியானால் அந்தக் கழுகு நிராயுதபாணி தான். வாள் சிவனிடம் திரும்பிச் சென்றிருக்கும். பெற்ற வரத்தை மறந்து விட்டீர்களே சுவாமி! ஆத்திரத்தில் அறிவிழந்துவிட்டேன் தேவி.ஆத்திரம் மட்டுமல்ல; மாற்றான் மனைவி யாகிய சீதைமீது கொண்ட காமம்தான் அறிவு மயங்கச் செய்துள்ளது என்பதை மண்டோதரி தன் மனத்துக்குள் நினைத்து வருத்தினாள். இராவணனின் மறதிக்கு காமமே காரணமானது. காமமே துன்பங்களுக்குக் காரணம் என்கிறார் திருவள்ளுவர். காமம், வெகுளி, மயக்கம் இம்மூன்றன் நாமம்கெடக் கெடும் நோய்.
அதேபோல் பெற்றோர், செய்நன்றி, வாழ்க்கையின் முக்கியமானவர்கள், நமது கடமை ஆகியவற்றை எப்போதும் மறக்கக்கூடாது. அப்படி வரக்கூடிய மறதியானது மிகவும் கெடுதலாக அமையும்
No comments:
Post a Comment