Wednesday, February 6, 2013

பிரச்னை தீர வேண்டுமா ?



மனித வாழ்க்கை பல பிரச்னைகள் நிறைந்தது. இரவு நேரம் வந்ததும், இன்று என்னென்ன செய்தோம், எதெல்லாம் விட்டுப் போயிற்று, எதெல்லாம் நினைத்தபடி நடந்தது, எதெல்லாம் நினைத்தபடி நடக்கவில்லை என்று சிந்திக்கிறான் மனிதன்; மறுநாள் என்னென்ன செய்ய வேண்டும் என்று திட்டம் போடுகிறான்.

அவைகளில் எதெல்லாம் நடக்குமோ தெரியாது. இப்படி பல பிரச்னைகளில் சிக்கி, என்ன செய்வது என்று தெரியாத ஒரு சிலர், "ஹூம்... எப்படியோ நடக்கட்டும். பகவான் விட்ட வழி...' என்று சொல்லி, பொறுப்பை பகவானிடம் ஒப்படைத்து விடுவர். நம்மை நம்பியுள்ள பக்தனின் பிரச்னைகளை தீர்த்து வைக்க வேண்டும் என்று நினைக்கிறான் பகவான்; அதற்கு, சில வழிமுறைகளை சந்தர்ப்பங்களாக ஏற்படுத்துகிறான். பிரச்னைகள் தீர வழி வைக்கிறான். இதுதான் பகவான் விட்ட வழி என்கின்றனர்.
நம்பினவர்களுக்கு வழி செய்தும் கொடுக்கிறான்; தவறான வழியில் போகிறவனை தடுத்தும் நிறுத்துகிறான் பகவான். வழி தெரியாதவர்களுக்கு வழியும் காட்டுகிறான்; திக்கு திசை தெரியாமல் விழிப்பவர்களுக்கு, வேறு உருவில் வந்து, வழிகாட்டியாக அழைத்துச் செல்கிறான். சேரவேண்டிய இடம் வந்ததும் மறைந்து விடுகிறான்.
ஹரதத்தர் என்ற பக்தர் ஒருவர் இருந்தார். அவர் இருக்குமிடத்திலிருந்து சில மைல் தூரத்தில் இருந்த சிவன் கோவிலுக்கு, தினமும் போவது வழக்கம். ஒருநாள் மாலை, கோவிலுக்கு புறப்பட்ட போது, இடி, மின்னலுடன் காற்றும், மழையுமாக இருந்தது. அதில், கோவிலுக்கு போகும் வழியை தவற விட்டு விட்டார். எந்த வழியில் போவது என்று தெரியாமல், தடுமாறிக் கொண்டிருந்தார்.
அந்த சமயம், ஒரு இடையன் அங்கு வந்தான். "ஐயா... நீங்கள் கோவிலுக்கா போக வேண்டும்?' என்று கேட்டான். "ஆமாம்! ஆனால், வழி தெரியவில்லை...' என்றார் தத்தர். "சரி... நானும் அங்கே தான் போகிறேன்; என்னோடு வாருங்கள்...' என்றான் அவன். இருவரும் கோவில் வரை சென்றனர். அந்த இடம் வந்ததும், வழிகாட்டியாக வந்த இடையன் மறைந்து விட்டான். இவர் சுற்றும், முற்றும் தேடிப் பார்த்தார்; ஆளைக் காணவில்லை. அப்போது தான் அவருக்குப் புரிந்தது... வழிகாட்டியாக வந்தது இடையன் அல்ல; சாட்சாத் பரமேஸ்வரன் தான் என்று. கோவிலுக்குள் போய் பகவானை தரிசித்து, பலவாறு துதித்தார்.
பகவான் வழிகாட்டியாக வந்தார். சரி... ஆனால், ஏன் சுய உருவில் வராமல், இடையனாக வந்தார்? அதுதான் ரகசியம். "பகவான் எப்படி இருப்பார்!' என்று, மனதால் நினைக்கும்போது தான், பக்தி செய்ய முடியும். பரமேஸ்வரனே புலித்தோல், மண்டையோடு, நெருப்பு சட்டி, சூலம் எல்லாவற்றோடும் இவன் எதிரில் தோன்றினால் என்ன ஆகும்? ஆள் அலறி அடித்து ஓட்டமாக ஓடி விடுவான். பகவான் நேரில் வந்ததற்கு, பயன் எதுவும் இருக்காது. அதனால், மனித உருவில் வந்து, வழிகாட்டிவிட்டுப் போய் விடுகிறார். அந்தக் காலத்தில், பகவான் நேரில் தரிசனம் கொடுத்தார்; வரம் கொடுத்தார் என்றெல்லாம் புராணங்களில் உள்ளது. ஆனால், இந்தக் காலத்தில் அதெல்லாம் சரிப்பட்டு வராது. பகவான், இப்போதெல்லாம் நேரில் வர மாட்டார். மனித உருவில் வந்து, நல்வழி காட்டி விட்டுப் போய் விடுகிறார்.

No comments:

Post a Comment