Wednesday, May 8, 2013

கொடியேற்ற விழா என்னும் தெய்வீக நிகழ்வு

கொடியேற்ற விழா என்னும் தெய்வீக நிகழ்வு

நம்மூர் ஆலயங்கள் தோறும் வருடாந்தம் பிரம்மோத்ஸவம் ஆரம்பத்தில் கொடியேற்ற விழா நடைபெறுகின்றது. கொடியேற்றம் செய்ய வேண்டிய முறைகள் பற்றி ஆகமங்கள் பலவற்றைக் குறிப்பிடுகின்றன. ஆகமங்களின் வழிநின்று பிரம்மோத்ஸவத்தை ஆற்றும் ஆலயங்கள் அவற்றை அனுசரித்தே கொடியேற்ற விழாவை பேணுவதனைக் காணமுடியும்.

பிரம்மோத்ஸவம் அல்லது மஹோத்ஸவம் என்று அழைக்கப்பெறும் ஆண்டுப் பெருவிழாவில் முதல் நாள் நிகழ்வாக கொடியேற்றம் என்ற துவஜாரோஹணம் நடக்கிறது. இதற்கான ஆரம்ப நிகழ்ச்சிகள் முதல் நாளே ஆரம்பமாகி நிகழத் தொடங்கி விடுகின்றன. அந்த அந்த ஆலய சம்பிரதாயப் பிரகாரம் கணபதி ஹோமம் அல்லது விஷ்வக்சேன ஆராதனத்துடன் மூலதேவதா மற்றும் பிராம்மண அனுக்ஞை முதல் நாள் இடம்பெறும். தொடர்ந்து உற்சவமூர்த்தி மற்றும் அஸ்திரதேவரிடமும் அனுக்ஞை பெற்று பெருவிழாவை ஆரம்பிக்கும் முகமாகப் பிரார்த்தித்துக் கொள்வர்.

அடுத்து ஆலயம் அமைந்திருக்கும் கிராமத்தில் வசிக்கும் அசுரர்- பைசாசர்கள் போன்றோரால் பெருவிழாவிற்கு எந்த இடையூறும் உண்டாகாமல் இருக்க “கிராமசாந்தி” என்ற கிரியை செய்யப்பெறும். அடுத்து ஆலயம் அமைந்துள்ள இடத்தில் உள்ள குற்றங்கள் நீங்கும் பொருட்டு “வாஸ்து சாந்தி” செய்யப்பெறும்.

தொடர்ந்து மிருத்சங்கிரகணம் என்ற கிரியை இடம்பெறும். ஏழு கும்பங்கள் வைத்து அவற்றில் சுத்த- லவண- இக்ஷு- ஸூரா- சர்ப்பி- ததி- க்ஷீர (பால்) என்ற ஏழு கடல்களையும் ஆவாகிப்பர். பிரம்ம மண்டலம் முதலாக அக்கினி மண்டலம் ஈறாக ஒன்பது மண்டலங்களையும் வரைவர். இவற்றுடன் மண்வெட்டியையும் வைத்துப் பூஜை செய்த பின் பூசூக்தம் (Bhu Suktam) பாராயணம் செய்து பிரதான ஆச்சாரியார் மண்டியிட்ட வண்ணம் சர்வ வாத்திய கோஷம் முழங்க மண் வெட்டியால் மண்ணை மும்முறை எடுத்து தாம்பாளத்தில் சேர்த்து யாகசாலையில் கொண்டு சென்று வைப்பார். இது விவசாயத்திற்கு உதவும் மண்வெட்டிக்கு வழங்கப்பெறும் விசேட உபசாரமாகக் கொள்வர்.

இதனைத் தொடர்ந்து மஹோற்சவ யாகசாலையின் வாயு திக்கில் 16 பதங்கள் வரைந்து நடுவிலுள்ள 4 பதங்களில் சந்திர கும்பத்தை ஸ்தாபித்துப் பூஜை செய்வர். எஞ்சியுள்ள 12 பதங்களிலும் வைகர்த்தன் -விவஸ்தன்- மார்த்தாண்டன்- பாஸ்கரன்- ரவி- லோகப்பிரகாசன்- லோகசாட்சி- திரிவிக்கிரமன்- ஆதித்தன்- சூரியன்- அம்சுமாலி- திவாகரன் என்ற 12 சூரியரையும் ஆவாஹித்துப் பிரார்த்திப்பர். பசுப்பாலில் நெல்- எள்ளு- உளுந்து- பயறு- கொள்ளு- அவரை- கரும் பயறு- வெண்கடுகு- துவரை என்ற நவதானியங்களையும் இட்டு திக்பாலகர்களை பிரார்த்தித்து “ஓஷதி சூக்தம்” ஓதி பிரதான அர்ச்சகர் இடுவார். இவ்வளவு கிரியைகளும் கொடியேற்ற வைபவத்திற்கு முதல் நாள் செய்து வைப்பது வழமையாகும்.

கொடியேற்றத் திருநாள்

கொடியேற்ற நாளன்று புண்ணியாகவாசனம் முதலியன நிகழ்ந்த பின் “துவஜாங்குரம்” இடப்படும். துவஜஸ்தம்பத்தின் (கொடிமரம்) அடியில் அஷ்டதளபத்மம் வரைந்த பிரம்மாவைப் பூசித்து இந்த அங்குரார்ப்பணத்தை ஆற்றுவர். எனினும் கொடியேறிய உடன் இது விசர்ஜனம் செய்யப்பெற வேண்டும். ஒரே காலத்தில் ஒரே இடத்தில் இரு அங்குரங்கள் இருக்கக்கூடாது என்கிறது ஆகமம்.

தொடர்ந்து பிரதான அர்ச்சகர் தன்னை “பூதசுத்தி- அந்தர்யாகம்” என்ற ஆத்மார்த்தக் கிரியைகளால் தயார்ப் படுத்திக் கொண்டு ரட்சாபந்தனம் என்ற கங்கணம் கட்டிக் கொள்வார். ஒரு தாம்பாளத்தில் அரிசியை நிரவி அதில் தேங்காய் வைத்து அதன் மேல் மஞ்சள் பூசிய பவித்ரமுடிச்சிட்ட பருத்தி நூல்களை வைத்து அஷ்ட நாகங்களையும் வழிபட்டு தமக்கு இரட்சாபந்தனம் செய்த பின் இறை மூர்த்தங்களுக்கும் இரட்சாபந்தனம் சாற்றி விடுவார்.

இவற்றினை அடுத்து கொடியேற்றும் துணியில் வரையப்பெற்றுள்ள படத்திற்கு இறை உருவேற்றும் முகமாக “படபிரதிஷ்டை” செய்யப்பெறும். இது போலவே தம்பப் பிரதிஷ்டையும் அஸ்திரப் பிரதிஷ்டையும் பலிபீடப் பிரதிஷ்டையும் தனித்தனியே விஷேட ஆகுதிகள் வழங்கி ஹோமம் செய்து ஸ்நபன கும்பபூஜை செய்து ஆற்றும் வழக்கம் இருக்கிறது.

கொடிப்படம்

கொடித்தம்பத்தின் நீளத்தைப் போல இருமடங்கு நீளமாக கொடிச்சீலை அமைய வேண்டும். இக்கொடிச் சீலையை மூன்று பாகமாகப் பிரித்து அதில் முதற் பாகத்தை மேலும் மூன்று பாகமாக்கி நடுப்பாகத்தில் சற்சதுரம் வரைய வேண்டும். அதில் சுவாமிக்குரிய வாகனத்தையும் (ரிஷபம்- மயில்- எலி- யானை-கருடன்) அஸ்திரத்தையும் (திரிசூலம்- அங்குசம்- வேல் – சக்கரம்) வரைவதுடன் அதனைச் சுற்றி குடை- கொடி- இரட்டைச்சாமரை- வலப்புறம் சூரியன்- இடப்புறம் சந்திரன் -பத்மம்- சக்ரம் -சங்கு- மத்தளம் -தீபம் -தூபம்- ஸ்ரீவத்ஸம் – சுவஸ்திகம்- கும்பம் ஆகிய மங்கலப் பொருள்களை வரைதல் வேண்டும். கொடிச்சீலையின் மேற்பாகத்தில் பிரம்ம முடிச்சு இடப்பெற வேண்டும்.

சைவசித்தாந்த மரபுப்படி,

கொடிமரம்- பதியாகிய இறைவன்
கொடிச்சீலை- பசுவாகிய ஆன்மா
கொடிமரத்தில் சுற்றப்பெறும் தர்ப்பைக்கயிறு- பாசம் என்ற மலங்கள்
கொடிச்சீலை ஏற்றப் பயன்பெறும் கயிறு- திருவருட்சக்தி

என்று கருதப்படுகிறது. ஆக இறைவனுடன் பாசமும் பற்றும் அறுத்து ஆன்மா கலப்பதையே கொடியேற்ற உற்சவம் வெளிப்படுத்தும்.

கொடியேற்று முன் கொடிப்படத்தில் வரையப்பெற்ற உருவங்களுக்கு கண் திறக்கப்பட்டு (நயனோன்மீலனம்) கங்கணம் சாற்றப்படும். பூர்வ சந்தானம் மற்றும் பச்சிம சந்தானம் ஆகிய கிரியைகள் செய்யப்பட்டு “ஸ்பரிசாகுதி” நிகழும். இதன் மூலம் கொடிச்சீலையில் இறை சாந்நித்யம் ஏற்படச் செய்து தொடர்ந்து நடக்கிற பிரம்மோத்ஸவத்தில் அதனை வழிபடு பொருளாக மாற்றி இறையருட் செல்வமாக்குவர்.

குண்டத்தில் பூஜிக்கப் பெற்று ஆஹுதிகள் வழங்கப்பட்ட அக்கினியில் ஆதாரசக்தியையும் சுவாமியின் வாகனத்தையும் ஆத்ம- வித்தியா- சிவ தத்துவங்களையும் பூஜித்து மும்மூர்த்திகளையும் தத்துவேஸ்வரர்களையும் மூர்த்தி மூர்த்தீஸ்வரர்களையும் பூஜித்து தனித்தனியே மும்முறை ஆஹுதி செய்வர். தோடர்ந்து மூலமந்திர ஹோமம்- சம்வாத ஹோமம் இடம்பெறும். குண்ட சமீபத்தில் வைக்கப்பட்டுள்ள சாந்தி கும்பத்தில் அஸ்திர மந்திர ஜபம் இடம்பெறும். சிருக்-சிருவங்கள் என்ற நெய் விடும் பெரிய இரு கரண்டிகளையும் கைகளில் ஏந்தி நெய் நிரப்பி “சுவா” என்று அக்கினியில் சிறிது ஆஹுதி செய்து அவற்றைக் கையிலேந்தி சாந்தி கும்பத்தையும் பரிசாரகரின் உதவியுடன் எடுத்துக் கொண்டு நாடி நூல் வழியே கொடிப்படத்தை அடைந்து படத்தில் ஒவ்வொரு பாகத்திற்கும் முறையே “ஹா” என்ற ஓசையுடன் நெய் விடுவர். இதுவே ஸ்பரிசாகுதி என்பர்.

முழக்குக மங்கல முரசே

அடுத்து “பேரி தாடனம்” (Bheri thaadanam) என்ற கிரியை செய்யப்பெறும். இது உற்சவாசாரியார் முறைப்படி பேரிகை என்ற மேளத்தை பூசித்து மந்திரத்துடன் ஒலித்து இறைவனுக்கு செய்யப் பெறும் உற்சவத்தில் அனைத்து தேவர்களையும் எழுந்தருளச் செய்ய வேண்டும் சடங்காகும். ஈழத்திலும் தமிழகத்திலும் சிவாலயங்களில் பின்பற்றப்படும் பத்ததிகளின் படி,

1. “பிரம்மஜஜ்ஞானம்” வேதத்தால் பிரம்மதியானம் செய்து ஒரு முறையும்
2. “இதம் விஷ்ணு” வேதத்தால் விஷ்ணுவை தியானித்து இரு முறையும்
3. “த்ரயம்பகம்” வேதத்தால் ருத்ரனைத் தியானித்து மும்முறையும்
4. “வியோமசிதி” வேதத்தால் ஒரு முறையும்
5. “சகல புவன பூதிம்” என்ற மந்திரத்தால் இரு முறையும்
6. “பிரம்மேந்திர நாராயண’” என்ற மந்திரத்தால் மும்முறையும்

பிரதான குருக்கள் மேளம் அடித்து பின் வாத்திய காரரிடம் கொடுத்து “கணபதி தாளம்” வாசிக்கச் செய்வார். இதுவே “பேரீதாடனம்” என்பதாம். சங்ககாலத்திலேயே விழா ஆரம்பமாக இருப்பதை வள்ளுவன் முரசறைந்து அறிவித்ததாய் செய்திகளுள்ளமை இங்கு சிந்திக்கத்தக்கது.

அருட்கொடி கட்டினனே

தில்லை வாழந்தணருள் ஒருவரான உமாபதி சிவம் ஜாதி பேதமில்லாமல் தனது குருவாக மறைஞானசம்பந்தரைக் கொண்டதால் அவரை மற்றைய சிதம்பரத்து பிராமணர்கள் தள்ளி வைத்தனர். அவரது பூஜைப்பொறுப்பும் பறிக்கப்பட்டது. இந்நிலையில் சிதம்பரத்தில் உமாபதிசிவம் இல்லாமல் கொடியேற்றிய போது அக்கொடி ஏறாமல் நின்று விட்டது. அசரீரி அறிவுறுத்த உமாபதி சிவம் வரவழைக்கப்பட்டார். கொடிக்கவி பாடினார். கொடி எத்தடங்கலும் இன்றி பட்டொளி விசிப்பறந்தது.

“வாக்காலும் மிக்க மனத்தாலும் எக்காலும்
தாக்கா துணர்வரிய தன்மையனை –நோக்கிப்
பிறித்தறிவு தம்மிற் பிரியாமை தானே
குறிக்கும் அருள் நல்கக் கொடி”

இதனூடாக கொடியேற்றுதல் சாதாரண காரியமன்று என்பதும் இறையருட் துணையுடன் செய்யப்பெற வேண்டிய காரியம் என்றும் புலப்படும். கொடிப்படம் நமக்கு அஞ்சேல் என்று அபயம் காட்டும் இறைவனைக் குறிக்கிறது. பதாகை முத்திரை வடிவமாய் இறைவன் தனது வலது கரத்தை விரித்துக் காட்டினாற் போல இது அமைந்துள்ளது.

சமஸ்த தேவதா ஆவாஹனம்

கொடிப்பட பிரதிஷ்டையின் பின் கொடிப்படத்தை ஊர்வலமாகக் கொண்டு வந்து உற்சவ மூர்த்தியையும் அலங்கரித்து துவஜஸ்தம்பத்தின் அருகே எழுந்தருளச் செய்து புண்ணியாக வாசனம் செய்வர். ஸ்தம்பத்திற்கு நியாசபூர்வமாக ஆராதனை செய்த பின் சமஸ்த தேவதா ஆவாஹனம் என்பதனைச் செய்வர். இது அகில தேவர்களையும் கொடித்தம்பத்தில் அருள்முகமாக எழுந்தருள வேண்டுவதாகும்.

“ ஸ்ரீமத் சுராசுர முனிவர சித்த வித்தியாதர யட்ச ராட்சச கருட காந்தர்வ கின்னர கிம்புருஷ பூத பிரேத பிசாச சித்த யோகினி சாகினி டாகினி பிரம்மராட்சச விநாயக பூதனா ரேவதி ஸ்கந்த புரோசன நட்சத்திர நர மிருக பசு பட்சி ஸ்தாவர சங்கமங்களும்….” என்று இது நீண்டு செல்லும்.

இவ்வழியே மேல் ஏழு லோகங்கள்- கீழ் ஏழு லோகங்கள்- ஏழு அண்டங்கள்- அஷ்ட மஹா நாகங்கள்-மலைகள்- சப்த சமுத்திரங்கள்- அகில நதிகள்-ரிஷி கணப்பிரமுகர்கள்- சதுர் வேதங்கள்- தர்மசாஸ்திர சைவாகம உபநிஷதசித்தாந்த சாஸ்திர பஞ்சப்பிரம்ம ஷடங்க மந்திரங்கள் ஆதிய மந்திர தேவதைகளும்- ஒன்பது கோள்கள்- பத்துத் திசா தேவர்கள்- அஷ்ட வசுக்கள்- ஏகாதச ருத்ரர்- பன்னிரு சூரியர்கள்-என்ற திரியத்திரிம்சத் கோடி (முப்பத்து முக்கோடி) தேவர்கள் கூட்டங்களும்…

பதினைந்து பறவை மந்திரங்கள்- பதினாறு ஸ்வர மந்திரங்கள்- மஹா மந்திரங்கள்- உப மந்திரங்கள்- ஹுங்கார- பட்கார- ஸ்வாதாகார- ஸ்வாஹாகார- வஷட்கார- வெளஷட்கார என்பனவாய மனுக்கள்- மனவியல்புகள்- முக்குணங்கள்- அந்தக்கரணங்கள்- புறக்கரணங்கள்-ஐம்பொறிகள்- தச வாயுக்கள்- பத்து நாடிகள்- ஆறாதாரங்கள் போன்ற யாவற்றினதும் பெயர்களையும் அவற்றின் முக்கிய தொழிற்பாடுகளையும் சம்ஸ்க்ருதத்தில் சொல்லி

மேருவுக்கு தட்சண திக்கில் உள்ள இன்ன நாட்டில் இன்ன கிராமத்தில் ஸ்ரீமத் பரப்பிரம்மமான (வல்லி தேவசேனா ஸமேத ஸுப்ரம்மண்ய பரமேஸ்வரருக்கு) இத்தனை நாட்கள் நடைபெறவுள்ள மஹோத்ஸவத்தில் மங்கல சேவையின் பொருட்டு (ஸுப்ரம்மண்ய பரமேஸ்வரருடைய) ஆக்ஞையின் படி எல்லாத் தேவர்களும் இந்த கொடித்தம்பத்தில் குறித்த மஹோத்ஸவ காலத்தில் தத்தம் அங்கம்- ஆயுதம்- பத்னி- புத்திர- பரிவாரங்களோடு எழுந்தருளியிருக்க வேண்டும் என்று உற்சவாச்சாரியார் பிரார்த்திப்பார்.

பொங்கும் மங்கலம் எங்கும் தங்கிட கொடி

சமஸ்த தேவதா ஆவாஹனம் நிகழ்ந்த பின்னர் தசதானம்- நவக்கிரகப்பிரீதி- என்பவற்றைச் செய்து மூலதேவதா அனுக்கிரஹத்துடன் பகவானின் சேனாதிபதியைப் பிரார்த்தித்து ஸர்வ வாத்திய கோஷத்துடன் கொடியேற்றுவர்.

இது பற்றி முருகனுக்குகந்த குமாரதந்திரத்தின் ஸ்கந்தோற்ஸவ விதிப்படலம் 146 இவ்வாறு கூறும்.

ஆதௌ³ ஸ்ப்ருஷ்ட்வா ஸ்வயம் சான்யம் ப்ரேரயேத் ரோஹணாய வை |
பூர்வேந்து³ பஸ்²சிமாசாஸ த்⁴வ்ஜாக்³ர க³மநம் ஸு²ப⁴ம் ||

ஆச்சாரியார் முதலில் தாம் தொட்டு ஏற்றிய பின் பிறரைக்கொண்டு சரியாக நிலை நிறுத்த வேண்டும். கிழக்கு- வடக்கு- மேற்கு திசைகளில் கொடியின் நுனி சென்றால் சுபம் என்கிறது.

மேலும் இதே படலத்தின் 154வது சுலோகம்

“எந்த நாட்டில் கொடிமரம் இருக்கிறதோ அங்கு அரசு விருத்தியாகும்” (யத்ராஸ்தே த்⁴வ்ஜ யஷ்டிஸ்து தத்³யாஸ்²ரம் வ்ருத்³தி⁴ மாப்னுயாத்) என்கிறது.

இதே போலவே 155வது மற்றும் 156வது சுலோகங்களும் துவஜஸ்தம்பத்திற்கு அருகில் சென்றாலேயே மஹாபாவங்கள் கூட இல்லாதொழியும் என்கிறது.இவ்வாறே பிற சைவ வைஷ்ணவ ஆகமங்களும் கொடியேற்றத்தையும் கொடிமரத்தையும் சிறப்பித்துக் கூறுகின்றன.

கொடியேறிய உடன் ஸ்தம்பத்தில் ஆவாஹிக்கப்பெறும் மூர்த்தியை விசேஷ நியாசங்களால் பூஜித்து பல்வேறு திரவியங்களால் அபிஷேகித்து அலங்காரம் செய்து தீபாராதனை- ஸ்தோத்திரம் செய்து லாஜபுஷ்பாஞ்சலியும் செய்வர்.

கணபதி தாளம் முதலிய தாளங்களும் கீதங்களும்

ஸுர ஸுர க³ணபதி ஸுந்த³ர கேஸ²ம் ரிஷி ரிஷி க³ணபதி யக்ஞ ஸமானம்
ப⁴வ ப⁴வ க³ணபதி பத்³ம ஸ²ரீரம் ஜய ஜய க³ணபதி தி³வ்ய நமஸ்தே

என்று ஆரம்பித்து பிரபல கணபதி தாளம் பாடப்பெறும். இதன் பொருளை தமிழிலும் அழகான கவிதையாக,

”தேவாதி தேவ கணபதியே அழகிய திருமுடி கொண்டவரே
திறமிகு ரிஷிகள் கணபதியே யாகத்தலைவனை ஒத்தவரே
பிறவியழிக்கும் கணபதியே பத்ம சரீரமுடையவரே
வெல்க வெல்க கணபதியே வேண்டி உம்மை வணங்குகிறேன்”

என்று அமைக்கலாம்.

அடுத்து புஜங்காஞ்சித நிருத்தம் ஆடப்பெறும். உஜ்ஜனை ராகம் ஆலாபனை செய்யப்பெறும். தமிழ் வல்ல ஓதுவார் மூர்த்திகளைக் கொண்டு தக்கராகத்தில் அமைந்த பாசுரம் பாடவேண்டும். “க³ணானாம் த்வா..” என்ற வேதம் ஓதப்பெற்று கணபதி ஆவாஹிக்கப் பெறுவார்.

அடுத்து அந்தந்த மூலமூர்த்திக்குரிய வாகனத்தின் தாளம் இசைக்கப்பெறும். (மயூரம்- ரிஷபம்- கருடன்- சிம்மம்- மூஷிகம்- கஜம்). உதாரணமாக,

முருகன் கோயிலில் மயூரதாளம் இசைக்கப்பெறும்.
பண்- இந்தளம்
ராகம்- சாரங்கா
நிருத்தம்- மயூர நிருத்தம்
வேதம்- “நவோ நவோ பவதி…” என்று தொடங்கும் வேதம்

விஷ்ணு ஸ்தலங்களில் கருடதாளம். “கருட வாஹன பரசு தாரண சக்ர பாச தரம்…’ என்று தொடங்கி இசைக்கப்பெறும்.

இவற்றினை அடுத்து மஹா ஆசீர்வாதம் இடம்பெறும்.

“வாழ்க அந்தணர் வானவர் ஆனினம்
வீழ்க தண்புனல் வேந்தனும் ஓங்குக
ஆழ்க தீயதெல்லாம் அரன் நாமமே
சூழ்க வையகம் முந்தயர் தீர்கவே”

என்று ஆசி கூறப்படும்.

சந்தியாவாஹனம்

தொடர்ந்து அஸ்திர- பலிபீட பிரதிஷ்டை நிகழ்ந்த பின் இலங்கை வழக்கப்படி சுவாமி சர்வ வாத்திய கோஷத்துடன் மாடவீதிக்கு எழுந்தருள்வார். சுவாமியுடன் அஸ்திர தேவரும் பலிபீடமும் தனித்தமைந்த பல்லக்கில் கொண்டு செல்லப்படும். ஆலய கோபுர வாசலில் “ஸுமுகா” சொல்லி கட்டியம் கூறப்படும். இதற்குப் பெரிய கோயில்களில் கோபுர வாயிலுக்கு எதிரே “கட்டிய மண்டபம்’ என்ற ஒரு பிரத்யேக மண்டபம் ஸ்தாபிக்கப்பெற்றிருப்பதும் அவதானிக்கத் தக்கது.

இவ்வீதியின் ஒன்பது திசைகளிலும் சந்தியாவாஹனம் செய்யப்படும். இதனால் இதை “நவசந்தி ஆவாஹனம்” என்பது வழக்கு. திசை தோறும் நிற்கும் திசா நாயகர்களை உற்சவத்தின் பொருட்டு சாந்நித்யமாக்குவதே சந்தியாவாஹனம் ஆகும்.

கோபுர வாசலில் பிரம்ம சந்தியாவாஹனம் செய்யப்பெறும். நீளமான ஸ்தோத்திரங்கள் சொல்லப்பட்டு பிரம்மன் ஆவாஹிக்கப்படுவார்.

பங்கஜ ப்ரிய பரம காரண காரணாதி³ சதுர்முக²ம்
ஸுந்த³ரப்ரிய ஹேய ந்ருத்த ஹிரண்ய கர்ப⁴ பிதாமஹம்
பே⁴ரி மத்³த³ள முரஜ ஜ⁴ல்லரி ஸ²ங்க²காஹளக த்⁴வநிம்
கீ³த ந்ருத்த நிரந்தரம் இதி ப்³ரஹ்ம தாளமிதி ஸ்ம்ருதம் – தத்தத்
கீ³த ந்ருத்த நிரந்தரம் இதி ப்³ரஹ்ம தாளமிதி ஸ்ம்ருதம்”

என்று பிரம்ம தாளம் பாடப்படும். இதை தமிழில் மூலம் கெடாமல் தாளமாகவே

“பங்கய மேவு பரம காரண காரண முதல்வா நான்முகனே
இங்கித அழகின் பாவுடன் நிருத்த ஹிரண்ய கர்ப்பபிதாமகனே
அங்கிளர் மத்தள பேரிகை சல்லரி அரிய சங்கொலி எக்காளம்
எங்குமிகப் பொலி கீதம் இசைப்பது ஏத்திடு பிரம்ம தாளம் இதே – அதுவே
எங்குமிகப் பொலி கீதம் இசைப்பது ஏத்திடு பிரம்ம தாளம் இதே”

என்று அழகாக மொழி பெயர்க்கலாம்.

இதனைப் போலவே இந்திர- அக்கினி- இயம- நிருதி- வருண-வாயு- குபேர- ஈசான திக்குகளுக்கும் உண்டு. உரிய பலி அளித்து கற்பூர ஆரார்த்தி சமர்ப்பித்து தாம்பூலம் கொடுத்து போற்றுவர்.

பிரம்ம சந்திக்கு,
ராகம்- மத்யமாவதி
தாளம்- பிரம்மதாளம்
நிருத்தம்- கமலவர்த்தனம்
வாத்தியம்- கச்சபுடம்
தற்போது வாத்தியம் நடைமுறையில் இல்லை. நிருத்தமும் வர வர அருகி வருகிறது.
வேதம்- “பிரம்மஜஜ்ஞானம்…”
பண்- மேகராகம் அல்லது நாட்டை

இப்பண்ணில் முக்கியமாக “புலனைந்தும் …” என்று தொடங்கும் திருவையாறு மீதான மிக இரசனைக்குரிய அழகு கொஞ்சும் திருஞானசம்பந்தரின் தேவாரம் உள்ளது. நாட்ட ராகத்தில் திருவாய்மொழியில் 2ம் பத்து பத்தாம் பதிகமான நம்மாழ்வாரின் “கிளரொளி இளமை கெடுவதன் முன்னம்…” என்ற திருமாலிருங்சோலை மீதான சிறிய அரிய துதிப்பா உள்ளது. இவற்றினைப் பாடுவது சிறப்பு.

இவ்வாறே எல்லாத் திசைத் தேவர்களுக்கும் உரிய பூஜை செய்யப்படும். அவற்றிற்குரிய வகையில் பண்களை மனங்கொண்டு தமிழ் வேதம் பாடுவதும் பாடச் செய்வதும் அவசியம். எனவே அவற்றை மட்டும் முறையே தர விழைகிறேன்.

இந்திர சந்தி- காந்தாரம்
அக்கினி சந்தி- கொல்லி
யமசந்தி- கௌசிகம்
நிருதி சந்தி- நட்டபாடை
வருண சந்தி- சீகாமரம்
வாயு சந்தி- தக்கேசி
குபேர சந்தி- தக்கராகம்
ஈசான சந்தி- சாதாரி (சாலாபாணி என்கிறது பத்ததி)

நிறைவாக உள்ள ஈசான சந்தியில் “பூ⁴தநிருத்தம்” என்பதை சிறப்பாகச் செய்வது ஈழநாட்டு வழக்கு. தவில் வாத்திய காரர் ஒருவர் மேளத்தை வலது தோளில் ஏற்றி அதனை அடித்தவாறே ஒற்றைக்காலில் நின்று ஆடுவதை இந்நிருத்தமாகச் செய்த காட்டுவர். ஈசானத்திற்குரிய தாளம் சம்ஸ்கிருதத்தில் “ஈஸ² மஹத்கர..” என்று தொடங்கும்.

இதன் தமிழ் வடிவம்

“உத்தம ஈசன் ஒண்கர சூலம் உக்கிர வலிமை உடனானோன்
தத்தும் உடுக்கை கும்பக தாளம் தத்திரி கிடதோம் எனவே
நிர்த்தம் பிரமரம் வாத்ய தாளம் டிண்டிமி கொள் பூதநடம்
சத்யோஜாதம் வாமம் அகோரம் தத்புருஷ ஈசானம்
அதுவே-
சத்யோஜாதம் வாமம் அகோரம் தத்புருஷ ஈசானம்”

என்பதாக அமையலாம்.

இவற்றினைத் தொடர்ந்து சுவாமி வீதியுலா நிறைவெய்த பாததீர்த்தம் சமர்ப்பித்து, கும்பதீபம் கற்பூர தீபம் காட்டி, கட்டியம் சொல்லி இறைவனை சகல பரிவாரங்களுடன் யதாஸ்தானத்திற்கு எழுந்தருளச் செய்வதாக கொடியேற்ற உற்சவம் இடம்பெறும்.

இத்தகு பெரியதொரு திருவிழாவினைத் தொடர்ந்து, அன்று மாலை யாகாரம்பம் நடைபெறும். பின்னர் தோத்திருவிழா- தீர்த்தத் திருவிழா நடைபெற்று கொடியிறக்கம் செய்யப் பெறும் வரையான மஹோத்ஸவ காலத்தில், துவஜஸ்தம்பத்திற்கு விசேட பூஜை ஆராதனைகளும், நவதிக்பாலகர்களுக்கும் பலியும் காலைமாலை வேளைகளில் இடம்பெறும். அத்துடன் இவ்விரு வேளையும் முறைப்படி யாகசாலையில் யாகபூஜை செய்யப்படவதுடன் யாகசாலைக்கு முன் சுவாமி எழுந்தருளும் போது லாஜ புஷ்பாஞ்சலி செய்யப்பட்டு விசேட ஹோமங்களும் தீபாராதனைகளும் செய்வது வழக்கம்.

கொடியேற்றம் என்ற துவஜாரோஹணத்தின் பொருளுணர்ந்து காண்போம். நலம் பல பெறுவோம்.

இங்கே குறிப்பிட்ட விஷயங்கள் சைவாகம மரபை அதிகமாகப் பின்பற்றி எழுதியுள்ளேன். இதனிலும் இலங்கையில் ஆகம விதிப்படி நடைபெறும் ஆலயங்களில் பின்பற்றப்படும் விதிமுறைகளையே அநுபவ பூர்வமாக அர்ச்சக மரபில் வந்த நிலையில் சுட்டிக்காட்டியுள்ளேன். எனினும் இவற்றுக்கு ஆதாரம் ஆகமங்களே. ஆதலில் இது தமிழகத்தின் சைவாலயங்களுக்கும் பெரிதும் பொருந்தும். எனினும் தேசவழமை- ஊர்வழமை என்பனவும் குறித்த தேவாலய சம்ப்ரதாயம் சிற்சில இடங்களில் சில வேளைகளில் செல்வாக்குச் செலுத்தக் காணலாம்.

இந்த வகையில் சில கிரியைகள் முன் பின்னாக நடைபெறவும் வாய்ப்புகள் உள்ளன. உதாரணமாக குமாரதந்திரம் என்ற உபதந்திரம் கூட மூன்று வகையாக துவஜாரோஹணத்தை செய்து உற்சவம் ஆரம்பிக்கலாம் என்கிறது. இதையே பிற ஆகமங்களும் கூறும். அதாவது

த்⁴வஜாரோஹண பூர்வந்து பே⁴ரீதாட³ன பூர்வகம் |
அங்குரார்ப்பண பூர்வந்து த்ரிவிதா⁴: உத்ஸவா: ஸ்ம்ருதா: ||

கொடியேற்றத்தை உற்சவ ஆரம்பமாகக் கொள்வது ஒரு வகை இவ்வாறு செய்தால் அன்றிரவு அங்குரார்ப்பணமும் பேரீதாடனமும் செய்வர். அதாவது கொடியேறிய பின்பே இவை நடக்கும். இது வழக்கிலிருப்பதாகத் தெரியவில்லை.

இரண்டாவது பேரீதாடனத்தை ஆரம்பமாகக் கொள்வது. இப்படிச் செய்தால் பேரீதாடனம் செய்த பின் கொடியேற்றி அதன் பின்னரே அங்குரார்ப்பணம் செய்வர். இந்த வழக்கும் ஆகம சம்மதமே. ஆனால் பெரியளவில் வழக்கில் இருப்பதாக தெரியவில்லை.

மூன்றாவது அங்குரார்ப்பணத்தை ஆரம்பமாகக் கொண்டு அடுத்து பேரீதாடனம்- கொடியேற்றம் என்பன நடக்கும். இதுவே வழக்கிலிருப்பது. அழகானது. இந்த வழக்கின் வண்ணமே இக்கட்டுரை அமைந்துள்ளது.

No comments:

Post a Comment