Thursday, June 13, 2013

இறைவனின் நாமத்தை பழிப்பது பாவம்

அந்த ஊரில் கோவில் திருவிழா நடைபெற்றுக் கொண்டிருந்தது. பக்தர்கள் அனைவரும் சேர்ந்து பஜனை செய்து இறைவனை வழிபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த இளைஞன், 'இவ்வாறு கூச்சல் போடுவதால் உங்களுக்கு என்ன கிடைத்து விடும்?' என்று அங்கிருந்தவர்களிடம் கூறி பரிகாசம் செய்தான்.

அதைக் கேட்ட முதியவர், 'தம்பி! இனிமை தரும் இறைவனின் நாமத்தை பழிப்பது பாவம். பகவானை விட அவரை துதித்து போற்றப்படும் திருநாமமே மிகவும் உயர்ந்தது. அந்த இறை நாமத்தால் ஆகாதது என்று எதுவும் கிடையாது' என்றார். 'பகவானால் ஆகாதது எதுவும் கிடையாது என்று கூறுகிறீர்களே!

அவன் நாமம் சோறு போடுமா?' என்றான் இறுமாப்புடன் அந்த இளைஞன். முதியவரிடம் இருந்து வெளிப்பட்ட குரல் உறுதியாக ஒலித்தது. 'நீ இறைவனை நினைத்து அவன் நாமத்தை பாடிக்கொண்டிருந்தால், சோறு கிடைப்பதென்ன? அந்த சோற்றை இறைவன் உனக்கு ஊட்டி விடவும் செய்வார்' என்றார்.

பக்தர்களை சோதித்து பார்க்கும், இறைவனை சோதிக்க விரும்பினான் இளைஞன். இறைவன் நாமத்தை ஜெபிப்பதற்காக வனத்திற்குள் புகுந்தான். ஏனெனில் காட்டில் ஆட்கள் நடமாட்டம் இருக்காதே!. வனத்தில் ஒரு மரத்தை தேர்வு செய்து அதன் மேல் கிளையில் போய் அமர்ந்து கொண்டான்.

கீழே அமர்ந்து இறை நாமத்தை ஜெபிக்கும்போது, அந்த வழியாக நடந்து செல்லும் யாராவது ஒருவர், இவன் மேல் பரிதாபப்பட்டு உணவு வழங்கிவிடக்கூடாதே!. மரத்தில் ஏறி அமர்ந்து கொண்டால், அமர்ந்திருப்பது யாருக்கும் தெரியாது. உணவும் கிடைக்காது. இறைவனை வெற்றி கொண்டு விடலாமே என்பது அவன் எண்ணம்.

மரத்தின் மேல் மறைவாக அமர்ந்து கொண்டு, 'இறைவனால் இனி எப்படி எனக்கு உணவளிக்க முடியும் என்று பார்க்கிறேன்' என்று கூறி விட்டு, இறைவனின் நாமத்தை உச்சரிக்கத் தொடங்கினான்.

அப்போது அதிகாலை நேரம்...... காலை உணவு நேரத்தின்போது அவனுக்கு எதுவும் பசியில்லை. அதனால் இறை நாமம் செய்வதை தொடர்ந்து கொண்டிருந்தான். மதிய வேளை தொடங்கியபோது அவனுக்குள் பசியின் தாக்கம் அதிகரிக்க தொடங்கியது.

ஆனாலும் இறைவனை வெல்லும் முனைப்பில் இன்று முழுவதும் இறை நாமத்தை உச்சரிப்பது என்று முடிவு செய்து அதில் மூழ்கினான். அந்த நேரம் பார்த்து வழிப்போக்கன் ஒருவன் உணவு மூட்டைகளுடன் அந்த வழியாக நடந்து வந்தான்.

மதிய நேரம் என்பதால் அவன் கொண்டு வந்த உணவு பொட்டலங்களில் ஒன்றை எடுத்து, இளைஞன் அமர்ந்திருந்த மரத்தின் அடியில் வைத்து சாப்பிட்டு விட்டு, மற்ற உணவு பொட்டலங்களை அங்கேயே விட்டுச் சென்று விட்டான். இறை நாமத்தில் மூழ்கியிருந்ததால், இளைஞனுக்கு இந்த விஷயம் தெரியவில்லை.

சிறிது நேரத்திற்கெல்லாம் கள்வர் கும்பல் ஒன்று அந்த மரத்தடியில் வந்து அமர்ந்தது. அவர்கள் எப்போதும் சந்திக்கும் மரத்தடி அதுதான். வழிப் போக்கன் விட்டுச் சென்றிருந்த உணவு பொட்டலங்களை பார்த்த கள்வர்கள், பசியின் காரணமாக அதனை சாப்பிட முயன்றனர்.

அப்போது கள்வர்களின் தலைவன், அவர்களை தடுத்தான். 'ஊரார் நம்மீது கடும் கோபத்தில் இருப்பார்கள். அவர்களில் யாராவது, இந்த உணவில் விஷம் கலந்து வைத்து விட்டு சென்றிருக்கலாம். ஆகையால் நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்' என்றான்.

கள்வர்கள் சுற்றும் முற்றும் பார்த்தபோது, மரத்தின் மேல் இளைஞன் அமர்ந்திருப்பதை பார்த்து விட்டனர். அவன்தான் உணவை வைத்திருக்க வேண்டும் என்று எண்ணி அவனை பிடித்து மிரட்டினர். அவன் ஒன்றும் புரியாமல் தடுமாறினான். 'எனக்கு சந்தேகமாக உள்ளது.

முதலில் இவனையே இந்த உணவை சாப்பிடச் சொல்லுங்கள்' என்றான் கள்வர் தலைவன். உணவை சாப்பிட முடியாது என்று மறுத்தான் இளைஞன். கள்வர்களுக்கு சந்தேகம் வலுத்து விட்டது. 'நம்மைக் கொல்வதற்காக இவன் தான் உணவில் விஷம் வைத்துள்ளான்.

அந்த உணவை எடுத்து அவன் வாயில் ஊட்டுங்கள்' என்றான் கள்வர்களின் தலைவன். கள்வர்களும் அவ்வாறே செய்தனர். இறைவனின் நாமத்தை உச்சரித்ததன் காரணமாக முதியவரின் வாக்குப்படி, அவனுக்கு உணவு ஊட்டப்படுகிறது. இறைவனின் செயலை எண்ணி உள்ளுக்குள் ஆனந்தக் கூத்தாடினான் இளைஞன். இப்போது உணவு அமிர்தமாக இருந்தது அவனுக்கு.

No comments:

Post a Comment