Wednesday, June 19, 2013

பொற்கோயில் .


பஞ்சாப் அமிர்தசரஸில் உள்ளது பொற்கோயில் .
கோயில் வளாகம் சுத்தம் என்றால் அவ்வளவு சுத்தம் . கோயில் முழுவதும் சொக்கத் தங்கத்தால் வேயப்பட்டிருக்கிறது . பொற்கோயிலின் நிழல் ' அம்ருத் சரோவர் ' என்ற தடாகத்து நீரில் விழுந்து, நீரோட்டத்தில் அது ஆடி, அசைந்து தரும் காட்சி காணக்கிடைக்காதது . கோயிலின் பிம்பம் விழும் அந்தத் தடாகத்து நீரை மிகவும் சுத்தமாகப் பராமரிக்கிறார்கள் . அதில் முழுக்குப் போடலாம் . ஆனால் சோப்பு, ஷாம்பு எதுவும் உபயோகிக்கக்கூடாது . யாராவது ஒரு சீக்கியர் தடாகத்தின் படிகளைத் துடைத்துக் கொண்டேயிருக்கிறார் . இந்தத் தடாகம் 15 -ம் நூற்றாண்டில் வெட்டப்பட்டதாம் .
' கர்பானி கீர்த்தன் ' என்ற பஜனைப் பாட்டு, ஸ்ரீ ஹரிமந்திர் சாஹிப் பொற்கோயிலின் கதவு திறந்ததிலிருந்து, இரவு மூடும் வரை இடைவிடாது ஒலித்துக் கொண்டேயிருக்கிறது . சீக்கியர்களின் வேதப் புத்தகமான ' ஸ்ரீ குரு கிரந்த் சாஹிப்' பை சகல மரியாதைகளுடன் பல்லக்கில் வைத்து, எல்லோரும் புடைசூழ, ' அகாலி தக்த் ' என்ற மேடையை சுத்தம் செய்து, விரிப்புகள் விரித்து சிறிய கட்டிலில் அமர்த்தி வைக்கிறார்கள் . பின்னணியில், குர்பானி பாட்டு, பஜனை ஒலிக்கிறது . ஒரு சீக்கியர், நாம் தரும் காணிக்கை பணத்தை வாங்கிக் கொண்டு
நமக்கு சர்க்கரைக் கட்டி, படம், புத்தகம் ஆகியவைகளை பிரசாதமாக அளிக்கிறார் . படி ஏறி மேலே செல்லும்போது, ஆண் பெண் அனைவரும் கட்டாயம் தலையை மூடிக் கொண்டிருக்க வேண்டும் . நுழையும்போதே மஞ்சள் கைக்குட்டைத் துணிகள் ஆண்களுக்கு அளிக்கப்படுகிறது . பெண்கள் புடவைத் தலைப்பாலோ, துப்பட்டாவினாலோ தலையை முக்காடு போட்டு மூடிக் கொண்டுதான் உள்ளே செல்ல வேண்டும் .
அங்கு,ஏழை, பணக்காரன் எல்லோரும் சரிசமமாக அமர்ந்து சாப்பிடும் ' குரு கா லங்கர் ' என்ற லங்கரில் ( சமையற்கூடத்தில் ) சராசரியாக 50,000 பேருக்கு மேல் ஒவ்வொரு நாளும் உணவருந்துகிறார்கள் . தட்டுகள், கிண்ணங்கள், சாப்பிடும் இடம் எல்லாமே மிக மிக சுத்தமாக இருக்கிறது . இத்தனை ஆயிரம் மக்கள் சாப்பிட்ட சுவடே தெரியாமல் உடனுக்குடன் சுத்தம் செய்யப்பட்டுவிடுகிறது . எல்லாமே ஃப்ரீதான் . முகலாய மன்னர் அக்பர் பாதுஷாவே இந்த லங்கரில் மக்களோடு மக்களாய் அமர்ந்து உணவருந்தி இருக்கிறாராம் .

No comments:

Post a Comment