Thursday, June 13, 2013

இப்படித்தான் தியானமும் இருக்க வேண்டும்

தியானத்தில் என்னை ஜெயிக்க ஆள் இல்லே!'' என்று பெருமையாகச் சொல்லிக் கொள்பவள் சரஸ்வதி. அவளது கணவர் ஒரு புலவர்.
அவர் அவளுக்கு பாடம் கற்பிக்க எண்ணினார்.
அவளது தலையில் தண்ணீர் நிரம்பிய தட்டை வைத்து, ""சரஸ்வதி! அதோ! ஒரு ஊர்வலம் செல்கிறதே! அதனோடு இணைந்து கொள். தட்டில் இருந்து ஒரு சொட்டு தண்ணீர் சிந்தக்கூடாது. சிந்தினால், உன் தலையைத் துண்டித்து விடுவேன்,'' என்று எச்சரிக்கை விடுத்தார்.
சரஸ்வதியும் ஊர்வலத்தில் பங்கேற்றாள்.
ஊர்வலம் நான்கு முறை ஊரை வலம் வந்தது.
சரஸ்வதியின் தட்டிலிருந்து சொட்டு தண்ணீர் கூட கீழே விழவில்லை.
பின் இருவரும் பேசினர்.
""சரஸ்வதி! ஊர்வலத்தில் வாத்தியங்கள் முழங்கியதை ரசித்தாயா?''
""இல்லை''.
""மக்கள் ஊர்வலம் கண்டு ஆர்ப்பரித்தனரே! கவனித்தாயா?
""உஹூம்..''.
""ஓ...வாண வேடிக்கை நடந்ததே! அந்த வேட்டுச் சத்தமாவது காதில் விழுந்ததா?
""அது வேறு நடந்ததா!''
""பார்த்தாயா! எல்லாம் நடந்தது. ஆனால், எதுவுமே உனக்குத் தெரியவில்லை. உன் கவனம் முழுவதும் தட்டிலேயே இருந்தது., தண்ணீர் சிந்தினால் தலை போய்விடும் என்ற பயத்தில் உன் செய்கையில் ஒருமித்துப் போனாய். இப்படித்தான் தியானமும் இருக்க வேண்டும். நீ ஏதோ கடமைக்கு கண்ணைப் பொத்தி தூங்கி விட்டு, அதை தியானம் என்கிறாயா?'' என்றார்.
சரஸ்வதி இப்போதெல்லாம், தன் தியானம் பற்றி பெருமை அடிப்பதே இல்லை.

No comments:

Post a Comment